கல்விச் சிந்தனை

கல்விச் சிந்தனை
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பாடத்திட்டத்தை 1.Obligatatory Sciences (கட்டாய அறிவியல்) 2. Optional Sciences (விருப்ப அறிவியல்) பிரித்துள்ளார்கள் என்பதையும் அவைகளில் என்னென்ன படிக்க வேண்டும் என்ற அவர்களுடைய அறிவுரையையும் கடந்த இதழ்களில் படித்தோம். அடுத்து

மாணவர்களுக்கான அறிவுரை
ஒரு மாணவன் தான் தேர்ந்தெடுக்கின்ற பாடங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதையும், எதன் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) விளக்குகிறர்கள்.

மாணவர்கள் தேர்வு செய்கின்ற பாடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
1. புகழத்தக்க அறிவு – கல்வி
இதில் அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, அவனது தன்மைகள், அவனது செயல்பாடுகள், அவனது படைப்புகள் போன்றவை உள்ளடங்கும்.
2. கண்டிக்கத்தக்க அறிவு – கல்வி
இதில் மாந்த்ரீகம், பில்லி, சூனியம், மாயவித்தை போன்ற அறிவும் அடங்கும். இவைகளைக் கற்றுக் கொள்வது கண்டிக்கத்தக்கது, படிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.

3. குறிப்பிடத்தக்க அளவில் விரிவான புகழத்தக்க அறிவு – கல்வி
இதில் குர்ஆனின் விளக்கம் தஃப்ஸீர், நபிமொழிகள், மார்க்கச் சட்டங்களான ஃபிக்ஹ், மொழியியல் மற்றும் இலக்கணம்.

மேற்காணும் மூன்று அம்சங்களும் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கின்ற மாணவனுக்கு அவசியம் என்பதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மேற்கூறப்பட்ட இந்த மூன்று விஷயங்களை இன்றைய நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்து எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நமது கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
கல்வியை கற்கின்ற ஒரு மாணவன் தனது அறிவாக, கல்வியாக தனது மூளைக்குள் செலுத்த வேண்டியது என்ன தெரியுமா? எதைத் தெரியுமா? அவனைப் படைத்த அல்லாஹ்வையும் அவனது தன்மைகளையும்தான்.
தன்னைப் படைத்த அல்லாஹ்வைப் பற்றி ஒரு மாணவன் தெரிந்து கொள்கின்ற போது முதல் அறிதலாக அல்லாஹ்வை பற்றிய ஞானம், அறிவு அவனுக்குள் செல்கின்றது அதனால் அவன் பண்படுத்தப்பட்டவனாகவும், பக்குவப்படுத்தப்பட்டவனாகவும், இறையச்சமுடையவனாகவும் மாறிவிடுகிறான். அவன் எப்படி மாற முடியும்? என்ற கேள்வி எழலாம்?
பொதுவாக புதியதாக ஒரு பொருளைப் பார்க்கும் போது, ஒரு சொற்பொழிவைக் கேட்கும் போது, ஒரு மனிதரைச் சந்திக்கின்ற போது ஒரு நல்ல எண்ணம் நமது மனதில் ஆழமாக பதிந்து விடும்.
புதியதாக பார்க்கப்படுகின்ற விளையாட்டுக்களில் தொடங்கி நல்லது கெட்டது என அனைத்து விஷயங்களிலும் அனைவருக்கும் அனுபவம் நிறைந்திருக்கும்.
அதன் அடிப்படையில் ஒரு மாணவன் முதலாவதாக அல்லாஹ்வை அறிந்து கொள்கிறான் என்றால் அல்லாஹ்வைப் பற்றிய அன்பும் ஆதரவும் அவன் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
இதுவும் கூட நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளில் இருந்துதான் எடுத்திருக்கிறார்கள் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு 40 ஆம் வயதில் நபிப் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் தொழுகை கடமையாக்கப்பட்டது மிஃராஜில்தான். நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நடந்த போது வயது 53.
நபிப்பட்டம் கிடைத்த பின் 13 வருடங்கள் மக்காவிலும், 10 வருடங்கள் மதீனாவிலும் இருந்தார்கள். மக்காவில் இருந்த 13 ஆண்டுகளில் இஸ்லாமிய கொள்கை சம்பந்தமானவைகள்தான் அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டது. மதீனாவிற்கு சென்றபின் ‘சட்டங்கள்’ உள்ளடக்கிய வசனங்கள் இறங்கின.
சுருக்கமாகச் சொன்னால் ஹிஜ்ரத் நிகழ்விற்கு பின்தான் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற வணக்கங்களும், அதற்கான சட்டங்களும் அருளப்பட்டன. அப்படி எனில் மக்காவில் நுபுவ்வத்திற்குப் பின் 13 ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபிகளுக்கு என்ன போதித்தார்கள் தெரியுமா?
ஏகத்துவத்தை மட்டும்தான், ஏகத்துவம் என்பது ‘எனது எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து தருவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனவே அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவோ வணங்குகின்ற ஸ்தானத்தில் வைப்பதோ கூடாது; அனைத்தையும் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்று என்று நம்புவது மட்டுமல்ல அதன் வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் ஏகத்துவ நெறி.
இந்த ஏகத்துவ நெறியைத்தான் 13 ஆண்டுகள் நபி (ஸல்) ஸஹாபாக்களுக்கு போதித்தார்கள்.
ஒரு மனிதர் திருடினார். நபி (ஸல்) அவர்கள் நீ ஏன் திருடினாய்? என்று கேட்டார்கள். செல்வத்தை வைத்துத்தான் எதுவும் செய்ய முடியும் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நமது தேவைகளை பூர்த்தி செய்வது செல்வமல்ல” படைத்த அல்லாஹ்தான் பூர்த்தி செய்கிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை” என்று கூறினார்கள். அதை செவிமடுத்தபின் ஏற்பட்ட சிந்தனை உணர்வின் உந்துதலால் அந்த மனிதரின் வாழ்வு மாறிப் போனது.
அன்றாடம் நாம் ஓதுகின்ற துஆவையும் சற்று கவனித்துப் பாருங்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்கின்ற வரை ஓதப்படுகின்ற துஆவை சற்று மீண்டும் அசைபோட்டுப் பாருங்கள். எல்லா துஆவிலும் “அல்லாஹ்விற்கே புகழனைத்தும் – அல்ஹம்துலில்லாஹ்” என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.
சாப்பாடு கொடுப்பது நமது தாயாக, மனைவியாக இருந்தாலும் சப்பிட்டு முடித்த பின் அதைக் கொடுத்த அல்லாஹ்விற்குத்தானே நன்றி செலுத்துகிறோம்.
அல்லாஹ் என்பவன் யார்? அவனது தன்மைகள் என்ன? என்பது போன்ற அல்லாஹ்வை பற்றிய அறிவை, ஞானத்தை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு 13 ஆண்டுகள் பயிற்றுவித்ததால்தான் உலகமே வியக்கும் அதனினும் மேலாக பின்வந்த மக்களுக்கு முன்னோடிகளாக ஸஹாபாக்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) என்னும் ஆசிரியர் தோழர்கள் என்கிற மாணவர்களுக்கு அல்லாஹ்வின் ஞானத்தை பயிற்றுவித்த வழியில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் மாணவர்களின் முதல் அறிவாக, கல்வியாக, “அல்லாஹ்வைப் பற்றிய ஞானம்” இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
இரண்டாம் நிலையில் கண்டிக்கத்தக்க கல்வியை வைக்கிறார்கள்.
ஒரு மாணவனுக்கு எது தேவை, எது அவசியம் என்று தெரிகின்ற அளவுக்கு அவனுக்கு எது தேவை இல்லை; எது கூடாது என்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.
ஒரு மாணவன் எந்த சூழ்நிலையிலும் தெரியக் கூடாத, அதே நேரத்தில் அந்தக் கல்வியை கற்பது கண்டிக்கத்தக்கது என்ற அடிப்படையில் சில விஷயங்களை இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.
அதில் பில்லி சூனியம் மாந்த்ரீகம் மாயாஜாலம் போன்ற படிப்புகள் ஒரு மனிதனை ஒரு குடும்பத்தை ஒரு சமூகத்தை கெடுக்கின்ற, கெடுக்க நினைக்கின்ற கருத்துக்கள் அடங்கியவை. அந்த விஷயங்களை எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் கற்றுக் கொள்ளக் கூடாது.
மூன்றாம் படித்தரத்தில் குர் ஆன் விளக்கம் ஹதீஸ் மொழியியல் இலக்கணம் மார்க்கச் சட்டங்கள் போன்ற விஷயங்களை வைக்கிறார்கள்.
இதன் விளக்கங்களை கடந்த இதழ்களில் படித்திருப்போம். கல்வியை கற்கச் செல்கின்ற ஒரு மாணவன் அல்லாஹ்வையும் அவனது தன்மைகளையும் தெரிந்து கொள்வதன் மூலம் இறையச்சம் உடையவனாக மாறிவிடுகிறான். தனது ஈருலக உயர்விற்கு எது தடையாக அமையும் என்பதை அறிந்து உணர்ந்து அதை விட்டும் விலகி நிற்கிறான்.
இந்த சூழலில் ஒரு மாணவனின் மனதில் நன்மை நல்லது மட்டுமே குடி கொண்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக குர்ஆன் ஹதீஸ் மார்க்கச் சட்டங்களை மொழியியலை இலக்கணத்தைப் படித்தால் அது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விடும்.
படிப்பை முடித்து விட்டு தக்வாவின் மூலம் கிடைத்த நல்ல பண்புகளைக் கொண்டு மருத்துவராக பொருளியல் நிபுணராக வியாபாரியாக பொறியாளராக இந்த சமூகத்திற்குள் அவன் வருகிற போது அவனால் சமூகமும் சமூகத்தால் அவனும் இரு உலகிலும் பலன் பெறுவார்கள்.
யாரையும் கெடுக்காத கெட்ட எண்ணம் இல்லாத நல்ல சிந்தனையோடு அவன் இந்த சமூகத்திற்குள் பணியாற்றுகின்ற போது அவனது நிலையும் அவன் சார்ந்திருக்கின்ற சமூகமும் உலகமும் எந்த அளவிற்கு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதை யோசித்தாலே உடலெல்லாம் புல்லரிக்கின்றது. (அல்ஹம்து லில்லாஹ்)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கருத்திற்கு இணங்க நமது குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களையும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் உலகம் உயர்வடைய வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன்.