கியூபாவிடம் கற்போம்

cuba
யுனெஸ்கோவின் உலகக் கல்வி தர வரிசைப் பட்டியலில் இப்போதெல்லாம் முதல் இரண்டு மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றைப் பிடித்துவிடுகிறது கியூபா. ஆனால் 1959- ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசு பதவி ஏற்றபோது கியூபாவின் எழுத்தறிவு 52% மட்டுமே. அந்த நிலையிலிருந்து முன்னேறி இன்று 99.7% எழுத்தறிவு பெற்ற நாடாகக் கியூபா மிளிர்கிறது. அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளின் குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்கும்போதே கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியது.
கியூபாவில் கல்வி என்பது பெற்றோர்களின் கவலை அல்ல. பிறந்த குழந்தையின் சுகாதாரமும் கல்வியும் அரசின் பொறுப்பு ஒவ்வொரு மாணவருக்கும் அரசே கல்வி அளிக்கிறது. குழந்தைகள் பள்ளி செல்லும் வயது ஆறு. தாய்மொழியான ஸ்பானிஷில் மட்டுமே கல்வி. தொடக்கப்பள்ளிப் படிப்பு ஆறு ஆண்டுகள். புத்தகம், நோட்டு, வீட்டுப்பாடம், பரீட்சைக்கு இடையிலான போராட்டம் அல்ல அது. மருத்துவக் குழுக்கள் இல்லாத கல்வி நிறுவனங்கள் இல்லை. பள்ளிக்கூடம் போகாத குழந்தை என்று யாரும் கிடையாது.
1961-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மக்கள் எழுத்தறிவு இயக்கம்’ மூலம் 22% மக்களுக்கு மட்டுமே தரமான கல்வி வாய்ந்திருந்த அக்காலகட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் கல்விப் புரட்சியாளர்கள் (Educational Revolutionaries) மூலமாக 817 எழுத்தறிவு மையங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி புகட்டப்பட்டது. இன்று தொடக்கக் கல்வியில் நுழையும் 100 கியூபா குழந்தைகளில் உயர்நிலைப் பள்ளி இறுதி படிப்பை முடிப்பவர்கள் 99 பேர். இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தைகள் 46, பெண்குழந்தைகள் 27 என்பதே இன்றைய நிலை.
மருத்துவம், ஆசிரியர் பயிற்சி, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு இப்படி எதைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும் விவசாய உற்பத்தியில் நேரடி பயிற்சிபெறும் பட்டயம் (Diplomads) ஒரு ஆண்டு பயிற்சி கட்டாயம். சர்க்கரை உற்பத்தி, நிக்கல் உட்பட ஏழு உலோகத்தாதுக்கள், மீன் பிடிப்பு, சோளம், கேழ்வரகு உற்பத்தி ஆகியவற்றில் கியூபா முதலிடத்தில் இருப்பதன் ரகசியம் இந்தக் கல்வி முறையே!
கலந்துரையாடுதல் (discustura), விவாதித்தல் (Dialogueo) முறைகளுக்கே கியூபாவின் வகுப்பறைகளில் முன்னுரிமை தரப்படுகிறது. முக்கியமாக, மனப்பாடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பள்ளி இறுதி ஆண்டில் ஒரு மாணவர் மின்சார நிலையம், மருத்துவமனை நலப் பணி, உள்ளூர் விவசாய உற்பத்தி பணி, துப்புரவு, தொழிலகப் பணி எனப் பல நேரடி உழைப்பு சான்றுகள் பெற்று நாட்டின் உழைப்பில் ஒரு அங்கமாய்த் தன்னை உணரும் கல்வியை நினைத்துப் பாருங்கள்!
பட்ஜெட்டில் கல்விக்கு கியூபா ஒதுக்குவது 13%, இந்தியா சென்ற வருடம் ஒதுக்கியதோ 3%. அங்கே 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என பல அற்புதங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தனியார் சந்தையின் வியாபாரமாகக் கல்வி மாறிப்போன பிறகு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் என்பது நம் நாட்டில் என்ன சாதித்து விடப்போகிறது? புதிய கல்விக் கொள்கை பற்றித் தீவிர விவாதங்கள் நடக்கும் நமது சூழலில் கியூபாவிடம் கற்க நமக்கு ஏராளம் உள்ளது.
ஆயிஷா நடராஜன்.