நீட் - (NEET Exam) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு

Image result for நீட் - (NEET Exam) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு
கல்வி பெறுவது அனைவரது உரிமை. யார் படிக்க வேண்டும். எதைப் படிக்க வேண்டும் என்று யாரும் குறுக்கே நிற்க முடியாது.
பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது கலெக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் குறிப்பாக டாக்டராக வேண்டும் என்பதுதான்.
ஆனால் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு வாய்க்கிறது என்ற கேள்விக்கு பதில் சூன்யம்தான். ஏழு கடல் ஏழு மலைதாண்டும் எட்டாக் கனியாகவே மருத்துவப் படிப்பு ஆக்கப்பட்டு இருக்கிறது.
யார் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள், அதிகாரத்தில் செல்வாக்கு உள்ளவர்கள், பணபலம் உள்ளவர்கள் மருத்துவம் படிக்கலாம். இந்த தகுதி இல்லாத ஒரு மாணவன் மருத்துவம் படிக்க விரும்பினால் அதற்கு சில தகுதிகள் முன் வைக்கப்படுகிறது. அவைகள் தகுதிகள் அல்ல, வடிகட்டி வெளியே தள்ளும் உத்தி.
அந்த உத்திகளில் ஒன்றுதான் நீட் “தகுதி” தேர்வு.
ஒரு மாணவன் மருத்துவம் படிக்க வேண்டுமானால் பத்தாம் வகுப்புத் தேர்வில் இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் மருத்துவம் படிக்கத் தகுதியான அறிவியல் பிரிவை எடுத்துப் படிக்க முடியும்.
பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவுகளில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுத்தால் மட்டும்தான் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற முடியும். (இந்த மதிப்பெண்களின் மதிப்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும்தான் செல்லும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில வேண்டுமானால் மதிப்பெண்களைத் தாண்டிய பெரும் (பணம்) மதிப்பு? அடிப்படைத் தகுதியாக முன் வைக்கப்படும்.)
இதுவரை இருந்த இந்த தகுதி இப்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. மருத்துவப் படிப்புக்கு +2 வில் அறிவியல் படிப்பில் தகுதி பெறுவதைத் தாண்டி நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.
பள்ளிக் கல்விப் பாடத்திட்டதை மாநில அரசே வடிவமைக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் பயின்று தகுதி பெறும் ஒரு மாணவன் எதற்காக மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத நிர்பந்திக்கப்பட வேண்டும்.
“கல்வி” மாநில மக்கள் பற்றியது. அதில் தேவையான அக்கறையை மாநில அரசுகள்தாம் காட்ட முடியும், செயல்பட முடியும். நெருக்கடிநிலை காலத்தில் ‘கல்வி’ மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது முதல் நீட் தேர்வு போன்ற சிக்கல் தொடர்ந்து வருகிறது.

தனியார் மருத்துக் கல்லூரிகளின் கொள்ளை லாபத்தைத் தடுக்கவும், தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் அதிகமான நுழைவுத் தேர்வுகள் எழுதும் சிரமத்தை குறைக்கவும் என மூன்று விஷயங்கள் நீட் தேர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட ஆல் இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ்(எய்ம்ஸ்), ஜிப்மர், பி.ஜெ.அய்.சண்டிகர் மற்றும் இராணுவ மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு பொருந்தாது. இந்த நிறுவனங்களில் சேர தனித் தேர்வு எழுத வேண்டும். தனக்கு கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு என்று மத்திய அரசு சொல்வதன் நோக்கம் என்ன?
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கொள்ளை லாபத்தை தடுக்கத்தான் நீட் தேர்வு என்பதும் உண்மை அல்ல. தனியார் கல்லூரிகள் கருப்புப் பணமாகப் பெறுவதை நீட் தேர்வு சட்டரீதியாக அங்கீகரித்திருக்கிறது.
5 லட்சமாக இருந்த கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 15 - 20 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இனிமேல் ஐந்து வருடத்தில் ஒரு கோடி ரூபாய் கட்ட முடிந்தவர்களால் மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும். மேலும் “ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரை நன்கொடை வசூலிப்பதாக” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. (இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாயின் லஞ்சத்தையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த “வியாபம்” ஊழலையும் நாடே அறியும்.) தரத்தை மேம்படுத்தத்தான் நீட் தேர்வு எனும் வார்த்தை மயக்கும் மருந்து. ஒரே ஒரு தேர்வின் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அது என்ன மந்திரமா? வேறொன்றும் இல்லை கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மக்களை மருத்துவப் படிப்பின் பக்கம் வரவிடாமல் தடுக்கும் தந்திரம்.
நகர்ப் புறங்களில் வசிப்போருக்கும், வசதியுள்ளவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் எதுவும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அனைவருக்கும் சமமான வாய்ப்பும் வசதியும் கிடையாது. ஆனால் போட்டி சமமானது என்பது எப்படி நியாயமாகும்?
2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் பரப்புரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா “நீட் தேர்வு தமிழகத்தின் பொருளாதார சமூகக் கூறுகளை கவனிக்கவில்லை. இங்கே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவ படிப்பு படிக்க இயலாமல் போகும் என்பதால் நீட் தேர்வை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது” என்று அறிவித்தார்.
2010-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும். மேலும் “பொது நுழைவுத் தேர்வு கவர்ச்சிகரமானது என்றாலும், அது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே காணப்படும் பிளவை, தகுதி என்ற பெயரில் மேலும் ஆழப்படுத்தும்” என்றார்.
எனவே நீட் தேர்வு தேவை என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் வசதி வாய்ப்பில் கீழிருப்போரை மேலே வரவிடாமல் தடுக்கும் தந்திரமே.
1925 வரை தமிழகத்தில் சமஸ்கிருதம் அறிந்தவர்களே மருத்துவம் படித்து டாக்டராக முடியும். அதன் பிறகு நீதிக் கட்சியின் சார்பில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த பனகல் அரசர் ராமராயநிங்கார் "மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை' என உத்தரவிட்டு, அனைத்து சமூகத்தவரும் டாக்டராகும் வாய்ப்பை உருவாக்கினார். அதன் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக மருத்துவ கல்லூரிகளில் நுழைந்தார்கள். 69% இடஒதுக்கீடும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு உதவியது.
சமூக நீதியை ஏற்படுத்திய இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் நுழையும் முஸ்லிம்கள். தாழ்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்களை வடிகட்டவே நீட் தேர்வு.
இப்போது வரை மாநில அரசு மருத்துக கல்லூரிகளில் 15% இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது இனிமேல் மொத்த இடங்களையும் மத்திய அரசு ஆக்ரமிக்கும் செயலாகவே நீட் தேர்வு அமையும்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை விட மாநில அரசின் பாடத்திட்டம் மோசமானது இல்லை. ஏறக்குறைய ஓரளவுக்கு சமமானதே! ஆனால் பயிற்றுவிப்பு முறைகளில்தான் வித்தியாசம். பொதுவாக பொது நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் மாடல் கேள்விகளே.
தமிழகத்தில் 1978 வரை பள்ளிக் கல்வி முறை பயிற்றுவிப்பதும், பயிற்சி பெறுவதுமான ஆரோக்கியமான கல்வி முறையாக இருந்தது. அன்று மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினாலும், பாடப் புத்தகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதன் பிறகு தனியார், மெட்ரிக் பள்ளிகளின் வருகை மாணவர்களை கேள்விகளுக்கு பதிலை மட்டும் படித்து மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றியது. சென்டம் எடுப்பதை நோக்கியே பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மாணவர்களை தள்ளினார்கள். 100 க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவது அதிகமானது. ஆனால் மாணர்களின் திறன் மிகவும் மோசமான நிலைக்குப் போனது.
பாடப் புத்தகத்தின் எந்தப் பகுதியிலிருந்து கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க இவர்களால் இயலாது. இந்தக் குறைதான் தமிழக மாணவர்களை பொது நுழைவுத் தேர்வுகளில் தடுமாற வைக்கிறது.
அடுத்து மிக முக்கியமாக நீட் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எழுத முடியும். தமிழகத்தில் பனிரெண்டாம் தேர்வெழுதும் 8 லட்சம் மாணவர்களில் 3 லட்சம் பேர் மட்டுமே ஆங்கில வழி படிப்பவர்கள்.
எல்லோரும் ஆங்கிலத்தில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என்றால் ஆங்கில வழி கல்வி பயிலாத 5 லட்சம் மாணவர்களில் நிலை என்ன? அவர்களை வடிகட்டவே இந்த நீட் தேர்வு.
மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் தரமான மருத்துவர்கள் சமூகத்தின் உருவானார்கள். எளிமையான வழிமுறைகளில் தரமான மருத்துவம் கிடைத்தது.
மருத்துவத்துவத்தின் அல்லது மருத்துவர்களின் தரம் குறையக் காரணம் மருத்துவம் முதலீடு சார்ந்த லாபம் தரும் தொழிலாக மாற்றப்பட்டதுதான். நீட் தேர்வின் மூலம் லாபம் அடைபவர்கள் சமூக, பொருளாதார, அதிகார அடுக்கில் மேலிருப்பவர்கள்தான்.
மருத்துவர் ஆவதே என்று எண்ணும் ஒடுக்கப்பட்ட மக்களை வடிகட்டு வெளியே தள்ளும் நீட் நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. மக்கள் இதை புரிந்துகொண்டு அனைத்து மக்களிடமும் இதை பரவலாக்க வேண்டும்.