மாணவர்கள் நெஞ்சில் விஷம் கலக்கும் கர்நாடக கல்வித்துறை!

கர்நாடக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.கவை ஆட்சியில் அமர வைத்தனர். சுரங்க கனிம ஊழல் மற்றும் நில பேர ஊழல்களில் நாறிய அந்த அரசு கடைசியாக பாலுறவுக் காட்சிகளை சட்டமன்றத்தில் கண்டதாக அந்தக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கண்டனத்திற்கு ஆளாகினர்.

அரசியலிலும் ஒர் நிலையற்ற காட்சியாக மாறி மாறி முதல்வர்கள் அங்கு வருவதும் போவதுமாக உள்ளனர். அது போகட்டும் அது அவர்களின் அரசியல் உள் விவகாரம். ஆனால் எதிர்கால தலை முறையான பள்ளி மாணவர்கள் மனதில் விஷத்தை கலக்கும் செயலைத் தான் நம்மால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

 

அரசியல் சாசனச் சட்டம் தன் முகப்பிலேயே அனைத்து சமயத்தைச் சார்ந்தவர்களையும் இந்தியர்கள் என்கிறது. ஆனால் சமீபத்தில் கர்நாடக கல்வித்துறை பள்ளி நூலகங்களுக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் ஒரு நூலை வாங்கிட வற்புறுத்தியது. அதன் பெயர் "பாரதிய ஹப்பா ஹரிதினகளு அதாவது ஆங்கிலத்தில் கூற வேண்டுமென்றால் திணிஷிஜிமிக்ஷிகிலி ளிதி மிழிஞிமிகிழிஷி எனவும் இந்திய புனித விழா நாட்கள் என்று தமிழிலும் கூறலாம். நல்ல புத்தகம்தானே இந்தியாவில் கொண்டாடப்படும் புனித விழாக்கள் பற்றி மாணவர்கள் அறிவது தவறல்லவே என கேட்கத் தோன்றும். இந்திய பண்டிகை நாட்கள் என நீங்கள் தினசரி காலெண்டரைத் திருப்பினால் சமய பேதமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து சமய விழாக்கள் பற்றிய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த முறையில்தான் அந்த ரூ.500 விலையுள்ள 640 பக்கமும் கொண்ட அந்தக் கன்னட நூலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதில் முழுக்க முழுக்க இந்தியரின் புனித விழா நாட்களில் ஒரு சார்பினரின் விழாக்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

அதாவது இந்துக்கள் மட்டும் தான் இந்தியர்கள் மற்ற சமயத்தை பின்பற்றுவோர் இந்தியர்கள் இல்லை என்ற உணர்வை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும் விஷமம் செய்துள்ள இந்த நூலை அங்குள்ள கல்வித்துறை வாங்கிட கட்டாயப்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கர்னாடகத்தில் பழங்குடிகள் அதிகம். அவர்களின் சிறு தெய்வ வழிபாடுகள் முற்றாக இடம் பெறவில்லை. இஸ்லாமியர்களின் புனித நாட்கள், பௌத்த, சமண, சீக்கிய, ஃபார்சிகளின் புனித நாட்கள் எதற்கும் இந்திய புனித நாட்கள் என்ற இந்த நூலில் அறவே இடம் இல்லை. இந்த நிகழ்வு தற்போது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது விரைவில் அங்கு ஒர் பிரச்சனையாக வெடிக்கும் என நாம் நம்பலாம்.!