முதல் சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான்..

திப்பு சுல்தானின் வாழ்க்கை மற்றும் ஆட்சி குறித்து சில தகவல்கள்.
1. திப்பு தான் வாழ்ந்த காலத்திலேயே பிரிட்டனில் அச்சம் தரும் இந்தியராக இருந்தார். அவர் இறந்த போது பிரிட்டனில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்கள் அதைக் கொண்டாடும் படைப்புகளை உருவாக்கியிருந்தனர். ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள திப்புவின் தலைநகரத்தை முற்றுகையிட்டதும், கொள்ளையடித்ததும், வில்கி காலின்ஸ் எழுதிய பிரபலமான “தி மூன்ஸ்டோன்” நாவலின் முதல் காட்சியாகும்.
2. பிரித்தானியர் இந்தியாவுக்கு வழங்கப் போகும் ஆபத்துகளை புரிந்து கொண்ட ஒரே இந்திய அரசர் திப்பு. இந்தியாவில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்காக நான்கு போர்களை நடத்தினார். அந்த அடிப்படையில் இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் போராளி என்று அழைக்கப்படுவார்.
3. உதுமானியப் பேரரசு மற்றும் ஃப்ரெஞ்ச் ஆட்சியாளர்களிடமும் தூதுக்குழுக்களை அனுப்பினார். அவர்களை நேச நாடுகளாக ஆக்கிக் கொண்டு இந்தியாவில் இருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்காக....
4. மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் திப்புவை கவர்ந்தது. துப்பாக்கி செய்பவர்கள், பொறியியலாளர்கள், கடிகார தயாரிப்பாளர்களை பிரான்சில் இருந்து மைசூருக்கு வரவழைத்தார். பின்னர் மைசூர் பகுதிகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தமது படைச் சூழலுக்கு ஏற்ற வெண்கல பீரங்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகளை சொந்தமாக மைசூரிலேயே தயாரித்தார். (“Make in Mysore”) (மேற்கத்திய தொழில் நுட்பத்தை மட்டும் பெற்றுக் கொண்டார். மேற்கத்தியராகவே அவர் மாறிப் போகவில்லை)
5. திப்பு பெருமளவில் புலி சின்னங்களைப் பயன்படுத்தினார் தனது ஆளுமை, வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காக. அவரது சிம்மாசனத்தில், அவருடைய நூல்கள், நாணயங்கள், வாள் மற்றும் அவரது சிப்பாய்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலிச்சின்னங்கள் பிரதிபலித்தன. அவர் இந்து மக்களின் பங்களிப்பை அவர்களின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக சூரியனுடைய வடிவத்தை பயன்படுத்தினார்.
6. திப்பு “குவாப் நாமா” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் தனது கனவுகளை பதிவு செய்தார். அவரது கனவுகளின் போக்கு, விளைவுகள், அறிகுறிகள், அடையாளங்கள் குறித்து தேடல் உள்ளவராகவும் அவர் இருந்தார்.
7. திப்பு ஒரு படையெடுப்பாளர் இல்லை. அவர் மண்ணின் மகன். அவரது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை தென் இந்தியாவில் பிறந்தது.
8. திப்புவின் முதல் மந்திரி பூர்ணா, ஒரு இந்து. அவரது நீதிமன்றத்தில் பல முக்கிய பிரமுகர்களாக இந்துப் பெருமக்கள் இருந்தனர்.
9. திப்பு சுல்தான் அவரது அரண்மனைக்கு அருகில் இருந்த ஸ்ரீரங்கபட்டினம் கோயில், சிறுங்கேரி மடம் உட்பட பல கோவில்களுக்கு தாரளமாக கொடை வழங்கினார். இந்து மதகுருமார்களை மரியாதையுடன் அழைத்தார்.