சுதந்திரப் போராட்ட வீரர் கும்பகோணம் எஸ்.ஏ. ரஹீம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் முன்னணிப் பங்கு வகித்தனர். குறிப்பாக அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம்கள் இப் போராட்டங்களில் பெருமளவு பங்கெடுத்துக் கொண்டனர். கும்பகோணம் எஸ்.ஏ. ரஹீம் மற்றும் கே.எம். ஷெரீப், இராஜகிரி டான்ஸ்ரீ, டத்தோ உபயதுல்லா சாகிப் (நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றியவர்) அய்யம்பேட்டை கூ.அ. அப்துல் மஜீத், மன்னார்குடி பாவலர் எஸ்.எம். முகம்மது யூசுப், தஞ்சாவூர் ஏ. அலாவுதீன் மற்றும் எஸ்.எஸ். இப்ராகிம், நாகப்பட்டினம் ஏ.கே.எம். முகையதீன் மரைக்காயர் என இப்பட்டியல் மிக நீளமானது.
அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 1422ஆகும். இவர்களுள் சுதந்திரப் போராட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்த கும்பகோணம் எஸ்.ஏ. ரஹீம் அவர்களைப் பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - கல்வி :
கும்பகோணத்தில் தபால் - தந்தித் துறையில் அலுவலராகப் பணியாற்றிய ஷேக்தாவூது என்பாரின் மகனாக 1913ம் ஆண்டு எஸ்.ஏ.ரஹீம் பிறந்தார். இவர் தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை கும்பகோணத்
திலுள்ள பள்ளிகளிலேயே கற்றுத் தேறினார். அங்குள்ள பாணாதுரை உயர் நிலைப் பள்ளியில் இவர் பயின்று கொண்டிருந்த போது அப்பள்ளியின் தலைமையாசிரியராக கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் பணிபுரிந்தார். தேசிய சிந்தனையும், நாட்டுப்பற்று முடைய இவ்வாசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்ற போதே இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும், அதில் கலந்து கொண்டுள்ள தலைவர்களின் தியாக வரலாறு பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்லுவார்.
இது மாணவர்களிடையே தேசிய உணர்வை மேலோங்கச் செய்தது. அப்படி தேசிய உணர்வும். நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் பெற்றவர்தான் எஸ்.ஏ. ரஹீம் இதனால் அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. விடுதலைப் போரில் ஈடுபட வேண்டுமென்ற வேட்கை அதிகரித்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் அவர் தவறாது கலந்து கொண்டு அதில் உரையாற்றிய தலைவர்களின் பேச்சை ஆர்வமுடன் கேட்டு வந்தார்.
மேலும் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டம் அவரைப் பெரிதும் ஈர்த்தது. இந்திய நாட்டுச் செல்வங்களை இங்கிலாந்துக்கு கவர்ந்து சென்ற ஆங்கில ஆட்சியாளர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், கனரகப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வந்து இங்குள்ள சந்தைகளில் விற்பனைக்கு விட்டனர். இங்கிலாந்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்களில் அவற்றின் கொள்ளளவுக்குப் போதுமான சரக்குகள் இல்லாத சமயங்களில் கப்பல்களின் அடித்தளம் ஆடாமல் இருப்பதற்காக அவற்றில் மணலை நிரப்பிக் கொண்டு வருவது வழக்கம். எனினும், நாளாவட்டத்தில் மணலுக்குப் பதிலாக அங்கு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை ஏற்றிக் கொண்டு வந்து அதனை விற்பதற்காக இந்தியச் சந்தைகளுக்குக் கொண்டு வந்தனர்.
மேலும், நமது நாட்டிலுள்ள உப்பளங்களையும் ஆங்கிலேய ஆட்சியினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். எனினும், மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட இங்கிலாந்து உப்பை வாங்காது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பையே வாங்கினர். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட இங்கிலாந்து உப்பு தேக்கமுற்றது எனவே, ஆங்கிலேய அரசு இந்திய உப்புக்கு 240 சதவிகிதம் வரி விதித்தது. இதனால் உப்பு விலை உயர்ந்தது. உப்புக்குப் போடப்பட்ட இந்த வரியை மக்கள் ஏற்கவில்லை. உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்திஜி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தார். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய உப்புச் சத்தியாக்கிரகமாகும்.
மகாத்மா காந்திஜி 12.02.1930 அன்று குஜராத்தின் கடற்கரை நகரான தண்டிக்குப் பாதயாத்திரை மேற்கொண்டார். தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை நகரான வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் 13.04.1930 அன்று உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட கும்பகோணத்தைச் சார்ந்த சக்கரவர்த்தி அய்யங்கார், இராமலிங்கம் ஆகியோர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட எஸ்.ஏ. ரஹீமின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த விடுதலை வேட்கை மேலும் தீவிரமடைந்தது.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், தமிழ் மாகாணமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். மக்களைச் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுமாறு தூண்டினார். தீவிரச் செயல்பாடுகள் காரணமாக அவர் காங்கிரஸ் தலைவர்களின் அன்பையும், பாராட்டுதல்களையும் பெற்றார்.
குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியின் நேசத்திற்குரிய சீடராக விளங்கினார். ‘கும்பகோணம் என்றாலே அனைவருக்கும் மகாமகம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது கும்பகோணம் என்றால் மகாமகம் சட்டென்று என் நினைவிற்கு வருவது இல்லை. எஸ்.ஏ. ரஹீம் தான் நினைவுக்கு வருகிறார்’ என்று சத்தியமூர்த்தி ஒருமுறை குறிப்பிட்டாராம். அந்த அளவிற்கு ரஹீமின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
போராட்டங்கள்:
ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணிகள் புறக்கணிப்பு, நாகபுரி கொடிப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என காங்கிரஸ் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் ரஹீம் பங்கு கொண்டார். அதன் காரணமாகப் பலமுறை கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைக்குப் பின் திருச்சி. கடலூர், அலிப்பூர், பெல்லாரி, ஷிமோகா ஆகிய இடங்களில் சிறைவாசம் அனுபவித்தார்.
1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது திருச்சி -கோயம்புத்தூர் மார்க்கமாகச் செல்லும்பயணிகள் ரயிலை நொய்யல் - புகளூர் இடையே டைனமேட் வைத்துத் தகர்க்கத் திட்டம் தீட்டி அந்தப் பொறுப்பை எஸ்.எம். பாஜான் என்பவரிடம் ஒப்படைத்தார். எனினும் அவர் போட்ட திட்டத்திற்கு மாறாக அந்த நேரத்தில் பயணிகள் ரயில் வருவதற்குப் பதிலாக சரக்கு ரயில் வந்ததால் அது சேதமுற்றது. காவல்துறையினர் பாஜானைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்திய இராணுவத்தை போரில் ஈடுபடுத்தியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ரஹீம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசிற்கு எதிராகப் பேசிவந்தார்.  அதற்காக அவரும், அவரது நண்பர் சடகோபன் என்பவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இருவருக்கும் ஐந்து மாதம் கடும் காவல் தண்டனை விதித்தது. இந்த இயக்கத்தின் போது, திருவாடானையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களின் குடுபத்தினருக்கு உதவி செய்வதற்காக என்.இராமரத்தினம், குமாரவேலு, சொக்கலிங்கம் செட்டியார் ஆகியோருடன் இணைந்துநிதிதிரட்டி அக்குடும்பத்தினருக்கு வழங்கினார். 1938ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நன்னிலம், தாலுகா மாநாடு இவரது தலைமையில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்லீகிற்கும், காங்கிரஸ் கட்சிக்கு
மிடையே அரசியல் உறவுகள் சீர் கெட்டிருந்தன. இம் மாநாட்டில் உரையாற்றிய ரஹீம், முஸ்லிம் லீகையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் எரவாஞ்சேரி எனும் ஊரில் நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது, முஸ்லிம் லீக் கட்சியினர் அவரை வழி மறித்துச் சவுக்குக் கட்டைகளால் தாக்கினர்.
இதில் படுகாயமுற்று மயக்க மடைந்த அவரை இறந்து விட்டதாகக் கருதி அங்கிருந்த ஆற்றில் தூக்கியெறிந்தனர். ஆற்றங்கரையில் மயங்கிக் கிடந்த அவரை அப்பகுதியைச் சார்ந்த கிராம மக்கள் தூக்கி ஒரு மாட்டு வண்டியில் கிடத்தி கணபதி என்ற டாக்டரிடம் கொண்டு சென்றனர். அந்த டாக்டர் உரிய நேரத்தில் மேற்கொண்ட சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார்.
பிரிவினை எதிர்ப்பு:
1940ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து இயக்கங்கள் நடத்திய போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பிரமுகர்கள் அக்கோரிக்கையைத் தீவிரமாக எதிர்த்துப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். எஸ்.ஏ. ரஹீம் அந்தப் பிரச்சாரங்களில் முன்னணியில் இருந்தார். 24.04.1942 அன்று திண்டுக்கல் அருகிலுள்ள சின்னாளப்பட்டியில் நடைபெற்ற பிரிவினை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதுவே, தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் பிரிவினை எதிர்ப்பு மாநாடாகும். பின்னர் 12.07.1942 அன்று கும்பகோணத்தில் ஒரு மிகப் பெரிய பிரிவினை எதிர்ப்பு மாநாட்டை காங்கிரஸ் கட்சியிலிருந்த முஸ்லிம்கள் நடத்தினர். அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கே.எம். ஷெரீப் சாகிப். சென்னை மாகாண பார்லிமெண்டரி காரியதரிசி நாகப்பட்டினம் ஏ.கே.எம். முகையதீன் மரைக்காயர்,மதுரை முகம்மது மௌலானா சாகிப். வடஆற்காடு ஜில்லா போர்டு உபதலைவர் வி.எம். உபயதுல்லா சாகிப் ஆகியோர் கலந்து கொண்டு பிரிவினையை எதிர்த்து உரையாற்றினர். இம் மாநாட்டை எஸ்.ஏ.ரஹீம் முன்னின்றுநடத்தினார்.
அந்தக் காலகட்டத்தில் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி முஸ்லிம் லீகின் தனி நாடு பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக நேர்ந்தது. இராஜாஜியின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸிலிருந்த முஸ்லிம் பிரமுகர்கள் எதிர்த்தனர். எஸ்.ஏ.ரஹீம். இராஜாஜியின் இந்தப் போக்கைக் கண்டித்து ‘ஓட்டைப்படகு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
நூல்கள்:
தேசிய உணர்வையும், நாட்டுப் பற்றையும் வலியுறுத்தும் விதமாக “இந்தியா என் வீடு, விடுதலை முழக்கம், வழிகாட்டிய உத்தமர் மாவீரன் வரலாறு, கொடியின் கதை” ஆகிய நூல்களையும் ரஹீம் எழுதியுள்ளார். ‘புத்தரின் அடிச்சுவட்டில்’ என்ற இன்னொரு நூலையும் எழுதி வெளியிட்டார்.
பண்பு நலன்கள்:
தனது நலன், குடும்ப நலன் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் 19 வயதிலேயே அவர் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். உயர்ந்த லட்சியவாதியாகவும், தியாகத்தின் சின்னமாகவும் விளங்கினார். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். இவரது எழுச்சியூட்டும் உரை கேட்டு மக்கள் மெய்சிலிர்த்தனர். ‘இறந்த பிணமும் இவரது பேச்சைக் கேட்டு உயிர்பெற்று எழும்’ என்று கூறத்தக்க அளவிற்கு அவரது உரை வீரியத்துடன் இருந்தது.
குடும்பம்:
தனது 33வயதில் அதாவது 1946ஆம் ஆண்டு (அப்போது காங்கிரஸிலிருந்த சில தேசிய முஸ்லிம்கள் செய்தது போல்) இவர் ராஜம் என்ற இந்துப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு
தனது மனைவியை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகள் தற்போது தனது கணவருடன் சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

முடிவுரை:
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தியாகங்கள் பல செய்த எஸ்.ஏ.ரஹீம் 1945ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். (அந்தக் காலகட்டத்தில் பலர் காங்கிரஸிலிருந்து விலகி வேறு கட்சிகளில் சேர்ந்தனர்) சில ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிர அரசியலிருந்து விலகி பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1985 ஆம் ஆண்டு தனது 72வது வயதில் காலமானார்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமுஸ்லிம்களின் வீர வரலாறு இந்திய வரலாற்றுப் பக்கங்களில் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக முஸ்லிம்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்
தில் பங்கு பெறவேயில்லை என்ற தவறான எண்ணம் பிற சமய மக்களிடையே மட்டுமல்ல முஸ்லிம்களிடையேயும் இருக்கிறது. இந்தத் தவறான எண்ணமும் கருத்தும் போக்கப்பட வேண்டும். அதற்கு இது போன்ற கட்டுரைகள் துணை செய்யும் என நம்புகிறேன்.
ஆதார நூல்கள்:
1. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - வி.என். சாமி
(வெளியீடு: பாவலர் பதிப்பகம், 37, குருவிக் காரன் சாலை, மதுரை 625009. தொலைபேசி எண்: 0452 4512250)
2. விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள் -செ.திவான்
(வெளியீடு: சுஹைனா பதிப்பகம், 106/85, திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை - 627002)
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561