மர்யம் ஜமீலா -முஸ்லிம்களின் மீள்எழுச்சியின் முன்னோடி

அப்துர்ரஹ்மான்,
உயர்கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

நமது சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் சிந்தனையாளர், மர்யம் ஜமீலா (1934& 2012). முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டு மாயின், முதலில் அது வீழ்ச்சி அடைந்தது எப்படி என்ற புரிதல் வேண்டும். அத்தகைய புரிதலைப்பெற மர்யம் ஜமீலா அவர்களின் எழுத்துக்களை வாசிப்பது தான் முதல்படி. மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்து ஆழமான வாசிப்பால் ஸ்லாத்தை ஏற்றவர் மர்யம் ஜமீலா அவர்கள், தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் முஸ்லிம் சமூகத்திற்காக அறிவார்ந்த ரீதியில் செயல்பட்டுள்ளார். இந்த முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தியுள்ளார். ‌உலகின் அத்துணை அறிவுகளையும் அணுஅணுவாய் ஆராய்ந்துள்ளார்.

இவர் ஆராய்ச்சியின் அளவு கோல், இஸ்லாம். இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் கருத்துக்களையும், இஸ்லாத்திற்காக உழைத்த உயர் நீத்த உத்தமர்களையும் அங்கீகரித்துள்ளார். இஸ்லாம் குறித்த அவரது ஆழமான புரிதல் களை மாற்று வடிவத்தில் முன்வைத்துள்ளார். அதேசமயம் இஸ்லாமிய தலைவர்களின் ‌வழிகாட்டுதலில் இருந்த இடைவெளிகளையும் இனங்கண்டு, தன்னுடைய விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல பேர் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணத்திற்கு பிறகு சில குழந்தைகளுக்கு தாயான சூழலிலும்கூட இவரின் எழுத்துப் பணி அதிகமாக எழுச்சிப் பெற்றிருக்கிறது. இவரின் கணவர் மௌலானா முஹம்மது யூசுப் கான் இவருக்கு பேருதவி செய்திருக்க வேண்டும். சரியான வாழ்க்கை துணைதான், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயன்தரக் கூடிய சரியான வாழ்வு அமைந்திட அடித்
தளமாக இருக்கிறது. இது மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்விலும் வெளிப் பட்டிருக்கிறது.
மர்யம் ஜமீலா அவர்களின் உன்னதமான பங்களிப்புகளை பற்றி பேராசிரியர் முனிர் வஸ்தி அவர்கள் “MARYAM JAMEELAH: A PIONEEROF MUSLIM RESURGENCE” என்கின்ற இந்த சிறு ஆய்வுக்கட்டுரையில் விவரித்து வெளியிட் டுள்ளார். இது மர்யம் ஜமீலா அவர்கள் மீது மிகுந்த மரியாதையையும் வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது ஒருவகையான கரிசனமும் ஏற்படுகிறது. இது இந்த சமூகத்தின் எழுச்சிக்கான பணிகளில் கவனம் செலுத்திட தூண்டுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு பெண் ஆளுமை, “மர்யம் ஜமீலா”. மர்யம் ஜமீலா அவர்களின் படைப்புகளை சிறியதாக வாசித்தாலே, ஒவ்வொரு நொடியும் சிந்தனையில், சொல்லில், செயலில் என அனைத்திலும் அறிவு ரீதியான அணுகுமுறை வெளிப்படும்போது, மர்யம் ஜமீலா அவர்களை அதிகமாக வாசித்து அறிய ஆர்வமும் தேடலும் கொள்வோர் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குவார்கள், இன்ஷா அல்லாஹ். புரட்சியின் முதல் படியே வாசித்தல் தானே! மேலும் இன்றைய முஸ்லிம்களின் நிலையை காணும்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, இந்த முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை கூர்த்தீட்டிட, செழுமைப்படுத் திட, வடிவமைத்திட, செயல்திறன் கொண்ட தாக மாற்றிட பல நூறு ‌மர்யம் ஜமீலாக்கள் தேவை. பெண் சிந்தனையாளர்களால் செதுக்கப்பட்ட சமூகம் நமது பாரம்பரியமிக்க முஸ்லிம் சமூகம். வல்ல ரஹ்மான் நம்‌ ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பெண் புரட்சியாளரை பெண் சிந்தனையாளரை உருவாக்கிட அருள் புரிய வேண்டும். ஆமீன்.