ஃபலஸ்தீன்

gasaagaasagaaasa   திருடப்பட்ட தேசமும், மேற்காசியாவின் மீளாக் கொடுந்துயரமும்!

     "அரபு ஊர்கள் இருந்த இடத்தில் யூத கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அரபு ஊர்களின் பெயர்கள் கூட உங்களுக்குத் தெரியாது. அதற்கான

பூகோள நூல்கள் எதுவும் இல்லை என்பதால், உங்களைக் குறை சொல்ல முடியாது. மஹ்லுல் இருந்த இடத்தில் நஹ்லல் உருவாகியுள்ளது. ஜிப்டா இருந்த இடத்தில் கிப்புட்ஸ் உருவாகியுள்ளது. ஹுனைஃப்ஸ் இருந்த இடத்தில் சாரிட் உருவாகியுள்ளது. தல் அல்-ஷுமான் இருந்த இடத்தில் கெஃபர் யெனுஷுவா உருவாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இடங்களில், முன்னர் அரபுமக்கள் வாழ்ந்திராத இடம் என எதையும் சுட்டிக்காட்ட முடியாது" 

- இஸ்ரேலிய ராணுவத் தளபதியாகவும், பின்னர் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த மோஷே டாயன், ஏப்ரல் 4, 1969ல் இஸ்ரேல் தொழில்நுட்ப கல்விநிறுவனமான டெக்னியானில் ஆற்றிய உரையிலிருந்து
"அரபு மக்களை அகற்ற, பயங்கரம், படுகொலை, இழிவுபடுத்துதல், நில அபகரிப்பு, சமூக உதவிகளை தடுத்து நிறுத்துதல் என அனைத்து வழிகளையும் கையாள வேண்டும்"
- இஸ்ரேலிய அரசின் கோனிக் செயல் திட்டம் (இந்த ஆவணத்தை இஸ்ரேலிய ஹீப்ரு செய்தித்தாளான அல்-ஹமிஸ்மார் அம்பலப்படுத்தியது)
"யூதர் அல்லாதவர்களின் ஆயிரம் உயிர்கள்கூட, ஒரு யூதனின் விரல் நகத்திற்கு ஈடாகாது"
- டோவ் லையர், இஸ்ரேலின் யூத தலைமை மதகுரு
"இஸ்ரேல் மீதான அமெரிக்க அழுத்தம் பற்றி கவலைப்பட வேண்டாம். யூதர்களாகிய நாம் அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறோம். அமெரிக்கர்களுக்கும் அது தெரியும்"
- ஏரியல் ஷரோன், இஸ்ரேல் பிரதமர் (அக்டோபர் 3, 2001)
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ஈவிரக்கமற்ற, கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. ஃபாசிச-நாசிச (Fascism—Nazism)ஆதரவு மனோநிலையிலிருந்தும், அமெரிக்க-பிரிட்டிஷ் அடிமைத்தன மனோநிலையிலிருந்தும் இஸ்ரேலை ஆதரிக்கும் கூட்டங்களோ மாறுபட்ட கருத்தை பரப்புகின்றன. இதன் பின்புலத்தை விளங்கிக் கொள்ள இணையத்தை நாடிச் செல்பவர்களுக்கு, பாலஸ்தீனம் என்பதுதான் என்ன? பாலஸ்தீனம் என ஒரு நாடு உள்ளதா? என்பது குறித்து ஏமாற்றமும் குழப்பமுமே மிஞ்சும். ஏனெனில் அது ஒரு திருடப்பட்ட தேசத்தின் துயரக்கதை.
தங்களது தேசத்தைக் காணவில்லை என ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் பாலஸ்தீனர்கள் கதறுகிறார்களே, அது திரைப்படத்தில் வரும் கிணற்றைக் காணோம் எனும் நகைச்சுவையைப் போன்றது அல்ல! குண்டுவீசி கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனக் குழந்தைகளின் ரத்தச் சேற்றில் புதைந்து கொண்டிருக்கும் வரலாற்று உண்மை. gaasaaaஅதனால்தான், இஸ்ரேலின் பிரதமராக இருந்த கோல்டா மையர் (ஜூன் 15, 1969) சொன்னார்: "பாலஸ்தீனர்கள் என்பதாக எதுவும் இல்லை, அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை"
உண்மையில், 1947க்கு முன்னர் ஏடறிந்த வரலாற்றில் இஸ்ரேல் என்றொரு நாடு இல்லை...
ஈராயிரம் ஆண்டுகளாக ஏடறிந்த வரலாறு பதிவு செய்துவைத்திருக்கும் ஃபலஸ்தீனம் என்ற தேசமோ 1947க்குப் பிறகு இல்லை...
தெற்காசியாவின் தாளாக் கொடுந்துயரம் ஈழம் போல, மேற்காசியாவின் மீளாக் கொடுந்துயரமாக மாண்டு கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்..
இதன் பின்னணியில் இருக்கும் நீண்ட வரலாற்று விவரங்களுக்குள் செல்வது, ஒரு கட்டுரை என்ற அளவில் சாத்தியமில்லை என்பதால், நடப்பு விவரங்களின் பின்னணியை பரிசீலிப்போம்...
1.பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசத்திற்குள்ளேயே, பிரிந்துநின்று மோதி-முரண்பட்டுக் கொண்டிருந்த, காசா முனை (ஹமாஸ்)-மேற்குக் கரை (ஃபதா)ஆட்சியாளர்கள் மீண்டும் கைகோர்த்து, புதிய ஒன்றுபட்ட அரசை அமைக்க முடிவு செய்தது.
( ஜூன் 2ம் தேதி ஒருங்கிணைந்த அரசு பொறுப்பேற்றுக் கொண்டது; பாலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதமராக ரமி ஹம்தல்லா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். gasa13 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், காஸா பகுதியிலிருந்து அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 4 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை பதவியேற்பு விழா நடைபெற்ற மேற்குக்கரை நகரான ரமல்லாவுக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவில்லை. காஸாவுக்கும் மேற்குக் கரைக்கும் இடைப்பட்ட பகுதி இஸ்ரேல் வசமுள்ளது.
மேலும், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பதிலடியாக புதிய சட்டவிரோத யூத குடியேற்றம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரேல் ஜூன் 5ம் தேதி வெளியிட்டது. பாலஸ்தீன பகுதியில் 500 வீடுகளைக் கொண்ட யூதர்களின் குடியிருப்பை ஏற்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை இஸ்ரேல் வீட்டு வசதி அமைச்சர் உரி ஏரியல் வெளியிட்டார். “இந்த குடியேற்றgaasaa1 நடவடிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அரசுக்கு, இஸ்ரேல் அரசு தகுந்த பதிலடியை அளித்துள்ளது” என்று அமைச்சர் உரி ஏரியல் கூறினார்).
2. பார்வையாளர் அந்தஸ்துடன், உறுப்பினர் அல்லாத நாடாக, 1967க்கும் முந்தைய எல்லை வரையறுப்புடன் ஐ.நா.வில் இடம்பெற்ற பாலஸ்தீனம், அதை நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்தாக மாற்றுவதற்கான முயற்சியை மீண்டும் முன்னெடுத்தது.
3.ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள், சுன்னத் பிரிவு பழங்குடியினருடன் கைகோர்த்து கிலாஃபத் (இஸ்லாமிய பேரரசு) உருவாக்கியிருப்பதாக அறிவித்திருப்பது.
4.எகிப்தில் முகமது மோர்ஸி அரசு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு, "முஸ்லிம் சகோதரத்துவம்" பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டிருப்பது.
ஆகியவற்றின் பின்விளைவாகவும்,
இஸ்ரேல் படிப்படியாக செயல்படுத்தி வரும், பாலஸ்தீன அரபுக்களை, பாலஸ்தீன மண்ணிலிருந்து வெளியேற்றுவது என்ற ஜியோனிச செயல்திட்டத்தின் தொடர்ச்சியாகவும் இஸ்ரேல் தற்போது மூர்க்கமான, ஈவிரக்கமற்ற, கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
பாலஸ்தீன மண்ணிலிருந்து பாலஸ்தீன அரபுக்களை வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் 2 வழிகளை கையாண்டு வருகிறது. முதல் வழி அவர்களை வெளியேற்றுவது, இரண்டாவது வழி அவர்களை அடைப்பது.
"பாலஸ்தீன மக்களை வெளியே விரட்டியடியுங்கள்". "பாலஸ்தீனர்கள் ஒருபோதும் திரும்பாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்" என இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன் கூறியதிலும்; "நிலங்களில் நாம் குடியமர்ந்த பிறகு, கண்ணாடிக்குடுவையில் அடைபட்ட கரப்பான் பூச்சிகளைப்போல அங்குமிங்கும் அலைக்கழிவதைத் தவிர அரபுக்களுக்கு வேறுவழியிருக்காது" என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதி ரஃபேல் இட்டன் (நியூயார்க் டைம்ஸ், ஏப்ரல் 14, 1983) கூறியதிலும் வெளிப்படுவது அதுதான்.
முதல் வழியைக் கையாண்டு பாலஸ்தீன மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சம். இன்று பாலஸ்தீன சுயாட்சி பிரதேசம் என்று அறியப்படும் மேற்குக்கரை, காசாமுனை பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே தொகைதான்.
"மேற்குக்கரை, காசாமுனை பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள்" என்ற சொல்லாடல் வியப்பாகக் கூடத்தோன்றலாம். அதற்காக சில புவியியல் விவரங்கள்:
காசா முனை என்பது, மத்தியத்தரைக்கடலின் கிழக்கு கரையோரம் அமைந்துள்ள துண்டு நிலம். 41 கிலோமீ்ட்டர் நீளம், 6 முதல் 12 கிலோமீட்டர் அகலம் கொண்ட, 365 சதுரகிலோமீட்டர் பரப்பு. (ஒப்பீட்டுக்காக சொல்வதென்றால், 426 சதுரகிலோமீட்டர் பரப்புகொண்ட சென்னை நகரம் இதைவிட பெரியது). மக்கள் தொகை சுமார் 20 லட்சம். தென்மேற்கில் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு எகிப்துடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. மற்றபடி புவியியல் ரீதியாகவும் முழுமையாக இஸ்ரேலின் ஆக்டோபஸ் பிடியில்தான் காசாமுனை உள்ளது. ஐ.நா. காசாமுனையை இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதி என்றே குறிப்பிடுகிறது.
மேற்குக் கரையை எடுத்துக்கொண்டால், அதுவும் தனியே அமைந்துள்ள ஒரு துண்டு நிலம். காரணம், காசாமுனைக்கும், மேற்குக் கரைக்கும் நடுவே இஸ்ரேல் நிலப்பரப்பு உள்ளது. கிழக்கு ஜெருசலேமையும் உள்ளடக்கி, 5640 சதுரகிலோமீட்டர் பரப்பு கொண்டது. வடமேற்கில் சாக்கடல் அமைந்துள்ளது. மேற்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் இஸ்ரேல் சூழ்ந்துள்ளது. கிழக்கில் ஜோர்டான் ஆற்றோரமாக ஜோர்டான் அமைந்துள்ளது. ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பகுதி என்பதாலேயே மேற்குக் கரை என அழைக்கப்படுகிறது.
இந்த மேற்குக்கரை மூன்றாகக் கூறுபோடப்பட்டு, 18 சதவீத பரப்பு மட்டுமே, முழுமையாக பாலஸ்தீனர்களின் குடிமை, பாதுகாப்பு நிர்வாகத்தில் உள்ளது. 21 விழுக்காடு பகுதி பாலஸ்தீனத்தின் குடிமை நிர்வாகத்திலும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு கீழும் உள்ளது. 61 விழுக்காடு பகுதி முழுமையாக இஸ்ரேலின் குடிமை, பாதுகாப்பு நிர்வாகத்தில் உள்ளது. இந்த கொடூர ஏற்பாட்டுக்கு ஆஸ்லோ உடன்படிக்கை என்று பெயர்.
மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் வசமுள்ள ஜெருசலேம் பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக, சர்வதேச சமூகத்தின் குரலையும், ஐ.நா. தீர்மானங்களையும், அமெரிக்காவின் கோரிக்கைகளையும் கழிவறைக் காகிதம் போல குப்பையில் வீசிவிட்டு, சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை தொடர்ந்து அமைத்து வருகிறது இஸ்ரேல்.
தனித்தனியே உள்ள இரண்டு துண்டு நிலங்களான மேற்குக்கரை, காசாமுனை இரண்டும் சேர்ந்து பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த இரண்டு துண்டு நிலங்களும் திறந்தவெளி சிறைச்சாலைகள் என்பதைத் தவிர வேறில்லை. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், 2010ல் இப்படிக் குறிப்பிட்டதற்காக இஸ்ரேலின் கடும் கண்டனத்திற்கு ஆளானது இங்கு நினைவு கூறத்தக்கது.
காசாமுனை, மேற்குக்கரை இரு பகுதிகளிலுமே தனியாக நாணயம் எதுவும் கிடையாது; இஸ்ரேலிய, எகிப்திய நாணயங்களே புழக்கத்தில் உள்ளன. ஐ.நா.வில் இறையாண்மை கொண்ட நாடு என்ற அந்தஸ்தும் கிடையாது. பாலஸ்தீனத்திற்கு என்று ராணுவமோ, கடற்படையோ கிடையாது. போராடும் மனஉறுதியும், எதிரிகளை நோக்கி வீசுவதற்கு கற்கள் மட்டுமே உண்டு; கூடுதலாக ஹமாஸ் போராளிகளிடம் ராக்கெட்டுகள் உண்டு. இஸ்ரேலிடம் உள்ள ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்களுடன் ஒப்பிட்டால், இவற்றை "தீபாவளி ராக்கெட்டுகள்" என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.
பாலஸ்தீன பொருளாதாரம் எப்படி இருக்கிறது? 2007ம் ஆண்டு உலக வங்கி அறிக்கையின்படி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது. 2005ம் ஆண்டு இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீன ஆணையத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட "நகர்வதற்கும், அணுகுவதற்குமான ஒப்பந்தத்தை" காலில்போட்டு மிதித்து விட்டு, 700கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலைகளை பாலஸ்தீனர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது இஸ்ரேல். எனவே பாலஸ்தீனர்கள் வர்த்தகம் செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது. இதனால் முற்றாக அவர்கள் சர்வதேச உதவியை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டு உலகவங்கி மீண்டும் சுட்டிக்காட்டியபடி, இடைக்கால ஒப்பந்தம் மதிக்கப்பட்டு தடைகள் நீக்கப்பட்டிருந்தால், பாலஸ்தீனத்தின் பொருளாதாரம் மேம்பட்டு, வேலைவாய்ப்புகள் 35 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கும்.
இந்த பின்னணியிலிருந்து நடப்பு பிரச்சினையை அணுகுவோம்:
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள, சட்டவிரோத யூதக்குடியிருப்பான கஷ் எட்சியோனில் (Gush Etzion) இருந்து 2 யூதச் சிறார்களும், ஒரு பதின்ம வயது இளைஞரும், ஜூன் 12ம் தேதி காணாமல் போகின்றனர். அவர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ குற்றம்சாட்டுகிறார். அதற்கான ஆதாரங்களை தருமாறு ஐ.நா. கேட்டும், அப்படி ஆதாரம் எதையும் தரஇயலாத நிலையில் இஸ்ரேலின் கூற்று மீது ஐயம் எழுகிறது. அதேசமயம், யூதர்கள் கடத்தப்பட்டதற்கு எந்த பாலஸ்தீன அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும்கூட ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட நாடுகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், யூதச்சிறார்கள் கடத்தலுக்கு கண்டனம் தெரிவித்து, அந்த சிறார்கள் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
யூதச் சிறார்கள் கடத்தலுக்கு சற்று முன்னதாக 2 பாலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலியர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அது கண்காணிப்பு கேமரா, துப்பாக்கிக் குண்டுகள், சிஎன்என் தொலைக்காட்சி கேமரா பதிவு மூலம் உறுதி செய்யப்படுகிறது. இதுஒருபுறம் என்றால், யூதச் சிறார்கள் கடத்தலைத் தொடர்ந்து மேற்குக்கரை முழுவதும் பாலஸ்தீனக் குடியிருப்புகள், அலுவலகங்களில் இஸ்ரேல் படையினர் இரவு நேரங்களில் தேடுதல் வேட்டையை கட்டவிழ்த்து விடுகின்றனர். சொத்துகள், கணினி நெட்ஒர்க்குகள் சேதப்படுத்தப்படுகின்றன. வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுகிறது.
இந்த தேடுதல் வேட்டையின்போது 560 பாலஸ்தீனர்கள் கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண், மனநிலை பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள், சிறார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கேற்ப பாலஸ்தீனர்கள் மீதான யூதர்களின் தாக்குதலும் அதிகரிக்கிறது.
ஆனால் பாலஸ்தீன சிறார்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றியும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்கள் பற்றியும் ஐ.நா.வோ அதன் உறுப்பு நாடுகளோ ஒரு முணுமுணுப்பைக் கூட வெளியிடவில்லை. பெரும்பாலான ஊடங்களும் அதே நிலையைத்தான் கடைப்பிடித்தன.
பாலஸ்தீனம் என்பது ஒரு தனிநாடு எனில், அதற்குள் வேறொரு நாட்டுப் படைகள் போய் எப்படி இவ்வளவு அக்கிரமங்களை நிகழ்த்த முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படவில்லை.
காணாமல் போன மூன்று யூத சிறார்களும் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக ஜூன் 30ம் தேதி கண்டெடுக்கப்பட்ட பின்னரோ, பாலஸ்தீனர்களின் நிலை பயங்கரத்தின் பிடியில் சிக்கியது. பாலஸ்தீனச் சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறான். இஸ்ரேல் ராணுவம் காசாமுனைப் பகுதியில் வான்வழித் தாக்குதலையும், பிறகு தரைவழித் தாக்குதலையும் தொடங்குகிறது. மூன்று வாரங்களில், ஜூலை 22 வரை, ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 604 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்; 3,700 பேர் படுகாயமடைந்தனர். ஐ.நா. பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்தனர். தரைவழித் தாக்குதலை தொடங்கிய பிறகு, ஜூலை 22 வரை, இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த 27 பேர் கொல்லப்பட்டனர்.
காசா எங்கும் மரண ஓலம்; கை, கால்கள், முகம், தலை சிதைந்த பாலஸ்தீனக் குழந்தைகளின் சடலங்கள்; கதறும் பெற்றோர்கள்; அடைக்கலம் கிடைக்காததால் எதிர்காலத்தை இடிபாடுகளுக்கிடையே தேடும் பாலஸ்தீன இளைஞர்கள்; சொற்களின் வர்ணணைகளுக்கு அப்பாற்பட்ட, மனிதகுலத்தின் மனச்சாட்சியை உலுக்கும் கொடூரங்கள்.
விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து பாலஸ்தீனத்தை தகர்த்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். பாலஸ்தீன மக்களால் ஆட்சிப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினரும் ராக்கெட் வீசித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இதுவரை ஒரு இஸ்ரேலியர்கூட (பொதுமக்கள்) உயிரிழக்கவில்லை. இந்த கடும் தாக்குதலின்போதே இதுதான் நிலை என்றால், மற்ற நாட்களில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலியர்களுக்கு என்ன பாதிப்பு நேர்ந்துவிட்டது? அல்லது இனியும்தான் என்ன பாதிப்பு நேர்ந்துவிடப்போகிறது.
இந்த உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் பாதிப்புக்கு உள்ளாவது உங்களுக்குத் தெரியவில்லையா என கேட்கும் உலக நாடுகளின், ஊடகங்களின் நேர்மையை என்னவென்று சொல்வது? பாலஸ்தீனம் என்ற தேசத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனிநாடு உருவாக்கிய ஜியோனிஸ்டுகள், எஞ்சியிருக்கும் பாலஸ்தீனப் பிரதேசங்களிலும் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமைத்து, அம்மக்களை துன்புறுத்தி வருகிறார்களே, அது யாருடைய மனசாட்சிக்கும் எட்டவில்லையா?
அறநெறிகளுக்கு இடமில்லை; வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற இந்த நிலையை ஏற்றால், அது மனிதகுலத்திற்கே பேரழிவை ஏற்படுத்தி விடாதா?
பாலஸ்தீனப் பிரச்சினையில் உலக நாடுகளின், ஊடகங்களின் இந்த இரட்டை நிலை தொடர்பான வினாக்கள் ஒருபுறம் இருக்கட்டும், அரபுலகின் மௌனம் எதைக் காட்டுகிறது என்ற கேள்விக்கும் நமக்கு விடை தேவைப்படவில்லையா?
                                                                                                                                                                               - ப.ரகுமான்