அரசியலும் ராஜதந்திரமும்

arasiyaநபிமார்களின் வரலாற்றைப் பார்த்தாலும், இறுதித் தூதர் (ஸல்) அவர்களதும் ஸஹாபாக்களது வரலாற்றைப் பார்த்தாலும் அசத்தியம் கோலோச்சுவதும் அதற்கெதிராக சத்தியம் செயல்படுவதும் பிரபஞ்ச

நியதியாய் இருந்திருக்கிறது.
ஃபிர்அவ்னும், ஹாமானும், காரூனும், நம்ரூதும், உத்பாவும், உமையாவும், அபூ ஜஹ்லும், ஆது, சமூது கூட்டங்களும் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அடியார் களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தவர் கள்தான்.
அடியார்களின் அடிமைத் தனங்களில் இருந்து, அல்லாஹ்வின் அடிமைத்தனத்திற்கு மனித குலத்தை விடுவிப்பதென்பது அவனது கட்டளைகளுக்கு மதிப்பளித்து தனிமனித வாழ்வு முதல் சமூகங்களின் நாடுகளின் வாழ்வு வரை அத்தனையும் நீதி நேர்மை சமாதானம், சமத்துவம் கோலோச்சுகின்ற வாழ்வு நெறியை தோற்றுவிப்பதாகும்.
வறுமை, கண்ணீர், துன்ப, துயரங்கள், அநீதி, அக்கிரமம், பாகுபாடுகள் அத்தனையும் இனம் மதம் மொழி குலம் என்ற விதி விலக்கில்லாமல் அனைவருக்கும் தீமைகள் ஆகும், அதேபோன்றே சமாதானம், சமத்துவம், பொருளாதார சுபீட்சம், சமாதான சகவாழ்வு என்பவை இனம் மத மொழி குல நிற வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஆசைப்படும் நன்மைகளாகும்.
நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற அவற்றை இறைகட்டளைகள் எனும் உயர்ந்த சிந்தனையை மனித குலத்திற்கு முன்வைக்கின்ற, கருணையின் தூதை சுமந்து நிற்கின்ற சிறந்த சமூகமாகவே இஸ்லாமிய உம்மத் இருக்க வேண்டும், உலகின் நெருக்கடிகளில் இருந்து மறுமையின் சௌகரியங்களுக்கு மனித குலத்தை அழைத்துச் செல்கிற போராட்டம் என்பது தனிமனித, குடும்ப, சமூக, தேசிய, பொருளாதார, அரசியல், கலை கலாச்சார, பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களில் இன மத குல நிற மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிரான களத்தில் பங்கு கொள்வதாகும்.
மனித குலத்திற்கான மகத்தான தூதை சுமந்துள்ள உம்மத் நவீன யுகத்தின் நம்ரூதுகள், காரூன்கள், ஹாமான்கள், அபூஜஹ்ல்கள், உத்பாக்கள், ஆதுகள் சமூதுகளின் சதிவலைகளில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு உள்வீட்டில் தம் எதிரிகளுக்கே அரியணைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
மறுஉலகை மறந்து இவ்வுலக மாயைகளில் மாத்திரம் மதிமயக்கும் அம்சங்கள் கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என அனைத்திலும் உம்மத்தை ஆக்கிரமித்து மனித குலத்திற்கான மகத்தான செய்தியை மறக்கடிக்கச் செய்துள்ளது.
அழகிய உலகை அணுகுண்டுகள் கொண்டு அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள மனிதன் இன்று செவ்வாயில் வாழ்விடம் தேடுகிறான்... அங்கு ஆக்சிஜனும் நீரும் இருக்கிறதா என ஆய்வுகளை செய்கின்றான்.
நவீன ஜாஹிலிய்யத்தில், அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மனித குலத்திற்கு விமோசனம் ஏற்படுத்தித் தராமல், நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும், யுத்தங்களுக்கும், உள்வீட்டுச் சண்டைகளுக்கும் விண்ணிலும், மண்ணிலும், கடலிலும் விவேகமாக விரயமாக்கப்படுகின்றன மனிதர்களுக்கான அத்துனை வளங்களும்.
உலகெங்கும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் அத்தனை பிரதான சவால்களுக்கும் பின்னால் இருக்கின்ற பிரதான காரணம் உலக அரங்கிலும் உள்ளகங்களிலும் அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் கோட்டை விட்டிருப்பதாகும்.
நவீன ஜாஹிலிய்யத்தில் இருந்து சமூகங்களை விடுவிக்கின்ற கடமை முழு மனித குலத்திற்குமான மகத்தான தூது ஒன்றை சுமந்து நிற்கும் சமூகங்களில் சிறந்த சமூகத்திடம் இருக்கிறது.
அவ்வாறான ஒரு சத்தியப் போராட்டத்துக்கான பிரதான ஆயுதங்களை இஸ்லாமிய உம்மத் எதிரிகளிடமே எல்லா மட்டங்களிலும் எல்லா தேசங்களிலும் பறி கொடுத்து பரிதவிக்கிறது.
இஸ்லாமிய உம்மத்தின் தலைவிதி, ஆட்சியும் அதிகாரமும் பொருளாதாரமும் வெள்ளை மாளிகையிலும், கிரெம்ளினிலும், பீஜிங்கிலும், இன்று டெல்அவிவிலும் தீர்மானிக்கப்படுகின்றது.
அரசியலும் ராஜ தந்திரமும் இஸ்லாமியர்கள் பறிகொடுத்து பரிதவிக்கின்ற பிரதான ஆயுதங்களாகும்.
நாம் வாழும் நாட்டில் நமது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்..?
சொந்த மண்ணின் சோகங்கண்டு பொங்கி எழ மறுக்கும் உணர்வுகள்... வேறு எந்த மண்ணின் விடிவுக்காய் வீரியம் கொள்ளும்..!
ஊழலும் மோசடியும்,அநீதியும், அராஜகமும், கோலோச்சும் எதேச்சதிகாரமும் அசத்தியமே, அவை ஒழிதல் வேண்டும்!