கற்க கசடற, நிற்க அதற்குத் தக - 01

educ

■ குர்ஆன் ஒளியில் அறிவின் சிறப்பு ■

 ஒன்று : அறிவு இறை அன்பளிப்பு.

 "அல்லாஹ் தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டோர் ஆவர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. " [அல்குர்ஆன் - 02 : 269] ●

செல்வம் வழங்கப்பட்டோரே செழிப்பானவர் என்று உலகம் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால், அறிவு எனும் இறை அன்பளிப்பு வழங்கப்பட்டோரே ஏராள நன்மைகள் வழங்கப்பட்டவர் என்கிறது குர்ஆன். இதையே அறிவுடையோர் எல்லாம் உடையார் என்று தமிழ்ப் பழமொழி இயம்புகிறது. மனித அன்பளிப்புகளையே எவ்வளவு பத்திரப்படுத்தி பாதுகாக்கிறோம். அறிவு இறை அன்பளிப்பு. எந்தளவு பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் யோசியுங்கள்.

 ■ இரண்டு : அறிவு இறை அருட்கொடை.

"அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்". [அல்குர்ஆன் - 02 : 282] ● பொதுவாக இறையருட்கொடை ஒருமுறைதான் வழங்கப்படும். மீண்டும் அது வழங்கப்படாது. எனவே அதைச் சரியாக பயன்படுத்திக் கொள் என அன்னை ஆயிஷா [ ரளி ] வுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மூன்று : அறிஞர்களுக்கு ஈடில்லை.

"அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று (நபியே) நீர் கேளும். அறிவுடையோரே நல்லறிவு பெறுவர்".[அல்குர்ஆன் - 39 : 09]

 ● இருளும் ஒளியும் சமமாக முடியுமா? பார்வையுள்ளவனும் பார்வையில்லாதவனும் சமமாக இயலுமா? அதுபோல அறிவாளியும் அறிவிலியும் சமமாக முடியாது.

நான்கு : அறிஞர்களின் இதயங்களில் குர்ஆன்.

 "இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் அவை இருக்கின்றன ".[அல்குர்ஆன் - 29 : 49]

அகில உலக வழிகாட்டியான அல் குர்ஆனை அல்லாஹ் அறிஞர்களின் இதயங்களில்தான் பாதுகாத்து வைத்துள்ளான்.இதைவிட அறிஞர்களுக்கு வேறென்ன சிறப்பு வேண்டும் சொல்லுங்கள்.

ஐந்து : இஸ்லாமை அறிஞர்களே அறிவர்.

education 

"அல்லாஹ்வையும் அறிவில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை வேறு எவரும் அறிய மாட்டார்கள் ".[அல்குர்ஆன் - 03: 07]

 ● மனித குல நெறியான சத்திய இஸ்லாமை அறிஞர்கள்தான் அறிய முடியும் என்றால் அந்த அறிவைத் தேடுவது எவ்வளவு அவசியம் என்பதை அறிவோம்.

 ■ ஆறு : அறிஞர்களே நீதியை நிலைநாட்டுவர்.

 "தன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று அல்லாஹ்வும் வானவர்களும் நீதியை நிலைநாட்டும் அறிவுடையோரும் உறுதி கூறுகின்றனர்". [அல்குர்ஆன் - 03 : 18] ●

நீதி செத்த பாம்பாகக் கிடக்கிற உலகில், அறிஞர்கள்தான் அதை உயிர் கொடுத்து எழுப்பக்கூடியவர்கள் என்கிறான் படைத்த இறைவன்.

ஏழு : அறிஞர்களே உண்மையைப் பிரித்தறிவர்.

 " பாதுகாப்பு, பயம் பற்றிய செய்தி கிடைத்தால், அதைப் பரப்புகின்றனர். அதை இறைத்தூதரி டமும் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றி ருந்தால், ஆய்வு செய்யும் அறிஞர்கள் அதை அறிந்து கொள்வார்கள்." [அல்குர்ஆன் - 04 : 83]

பொய்த் தகவல்களும் வதந்திகளும் பரவி அதனால் உலக சமூகமே சீரழிந்து சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருக்கிற இன்றைய மீடியா உலகில் உண்மைகளைப் பிரித்தறியக் கூடியவர்கள் அறிஞர்களே என்கிறது இந்த திருக்குர்ஆன் வசனம்.

 ■ எட்டு : அறிஞர்களே அல்லாஹ்வுக்குப் பணிவர்.

 "வேத ஞானம் வழங்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால், அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவார்கள். எங்கள் இறைவன் தூயவன்.எங்கள் இறைவனின் வாக்குறுதி உறுதியாக நிறைவேறும் என்று கூறுவார்கள். அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர்.அது அவர்களுக்குப் பணிவை அதிகப்படுத்துகிறது.                                        "[அல்குர்ஆன் - 17 : 107]

வெறும் உலகறிவைத் தெரிந்து கொண்டதால் மமதை தலைக்கேறி எங்கள் தேசத்தில் சூரியன் மறைவதே இல்லை எனத் தருக்கித் திரிகிற உலகில், உண்மையான இறையறிவைப் பெற்றவர்கள் பணிவெனும் இறக்கையைத் தாழ்த்துவார்கள் என்கிறான் இறைவன்.

 ■ ஒன்பது : அறிஞர்களே அல்லாஹ்வை அஞ்சுவர்.

 " அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. "[அல்குர்ஆன் - 35 : 28]

இறையாற்றல்களை அவன் மகத்துவங்களை உணர்ந்தவர்கள்தான் எதார்த்தத்தில் இறைவனை அஞ்சிவாழ்வார்கள் இல்லையா?

பத்து : அகிலத்தின் ஆசிரியராக அண்ணல் நபி(ஸல்).

 "இறைத்தூதர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் துய்மைப் படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் கற்றுத் தருவார். "[அல்குர்ஆன் - 02 : 151]

 ● பள்ளிக்கூடமே போகாமல் உலகுக்கே பாடம் பயின்று தந்த நபியவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக அடையாளப்படுத்தும் நபிமொழியே அறிவின் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஒன்று.

 ■ பதினொன்று : கற்றவரின் அந்தஸ்து உயரும்.

 "உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும் கல்வி ஞானம் வழங்கப்பட்டோருக்கும் இறைவன் பதவிகளை உயர்த்துவான்" [அல்குர்ஆன் - 58 : 11] ●'கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற பழமொழி கூட இந்தப் பின்புலத்தில் தான் உருவாகி இருக்க வேண்டும்.

●'பனிரெண்டு : அறிவால் நாயும் அந்தஸ்து பெறும்.

 " நீங்கள் பயன்படுத்தும் பாத்திரத்தில் நாய் தண்ணீர் அருந்தினால், அதை ஏழு முறை கழுவிக் சுத்தப்படுத்துங்கள். அதில் முதல் தடவை மண்ணால் தூய்மை செய்யுங்கள்". [புகாரி] என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், நாம் வளர்க்கும் நாய், சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடி வரும் பிராணிகளைப் புசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது. வேட்டையாடப்பட்ட பிராணிகள் இறந்து போனாலும் பிரச்சனை இல்லை. என்ன காரணம்? பொதுவான நாய்கள் வேட்டை நாய்களுக்கும் இடையில் வேறுபாடு என்ன?

 ■ அவை சாதாரண நாய்கள்.இவை பயிற்றுவிக்கப்பட்ட [ கற்பிக்கப்பட்ட ] நாய்கள். எனவேதான் இந்தச் சிறப்பும் மகிமையும். [அல் குர்ஆன் - 05 : 04]

 ● வேட்டைக்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய், சிறுத்தை போன்றவை விலங்குகளில் உயர்ந்தவையாக நம்பிக்கைக்கு உரியனவாகக் கருதப்படுகிறது. ஆனால், இதைக்கற்றுக் கொள்ளாத பிற மிருகங்கள் இந்தச் சிறப்புகளை அடைய முடிவதில்லை . அறிவால் ஐயறிவு மிருகங்களே உயர்வு பெறுகிற போது, ஆறறிவு படைத்த மனிதன் இன்னும் அதிக அளவில் உயர்வடைவான் என்பது வெள்ளிடை மலை அல்லவா..!

இன்னும் கற்போம்...