முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உயர், உச்சநீதிமன்றம்

supreme-court1

தற்போதுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளில், ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பது வேதனை அளிப்பதாக, கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், விரைவில் இஸ்லாமிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் கலிபுல்லா மற்றும் இக்பால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்று விட்டனர். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. இவ்வாறு இஸ்லாமிய நீதிபதிகள் இல்லாமல் உச்சநீதிமன்றம் இருப்பது, கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதன் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் இது இரண்டாம் முறை.
நீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி இக்பால் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியும், நீதிபதி கலிபுல்லா ஜூலை 22-ஆம் தேதியும் ஓய்வு பெற்றனர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் நீடித்தும் வரும் நிலையில், இப்போதைக்கு இஸ்லாமியர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றங்கள் அளவிலும், தற்போது இரண்டே இஸ்லாமியர்கள்தான் நீதிபதிகளாக உள்ளனர். பீகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மன்சூர் அகமத் மிர்சா ஆகியோரே அவர்கள். இவர்களில் இக்பால் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். நீதிபதி மன்சூர் 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையிலேயே, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான கே. ஜி. பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாட்டு நீதிமன்றங்களில், மதம், மொழி மற்றும் இன அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தற்போதுள்ள 28 நீதிபதிகளில் 7.5 சதவீதத்தினர் மட்டுமே இஸ்லாமியர்கள். அவர்களில் நீதிபதிகள் எம். இதயத்துல்லா, எம்.ஹமீதுல்லா பக், எம்.எம்.அகமதி, அல்தமாஸ் கபீர் ஆகியோர் மட்டுமே தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் ஆளுராக இருந்த பாத்திமா பீவிதான், உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் இஸ்லாமிய நீதிபதியாவார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி எஸ்.எஸ்.எம். குவாத்ரி ஓய்வு பெற்றதற்குப் பின், செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு நீதிபதி அல்தமாஸ் கபீர் நீதிபதியாக நியமனம் செய்யப்படும் வரை இரண்டரை ஆண்டு காலம் உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத நிலை இருந்தது. அதற்கு முன்பு 1988-ஆம் ஆண்டு காலகட்டத்திலும் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாமல் இருந்துள்ளனர்.
அதேநேரம் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் அதிகப்படியாக தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி அப்டப் அலாம், நீதிபதி இக்பால், நீதிபதி கலிபுல்லா என ஒரேநேரத்தில் நான்கு இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

மாநில வாரியாக பார்த்தோமானாலும் உயர்நீதிமன்றங்களிலும் முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் அரசு புள்ளிவிவரப்படியே 34.2 விழுக்காடு முஸ்லிம் மக்கள்தொகையைக்கொண்ட அங்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் உள்ள 19 நீதிபதிகளில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
68.3 விழுக்காடு முஸ்லிம்களை கொண்ட ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே முஸ்லிம்கள் . இதில் ஒருவர் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.
24 உயர் நீதிமன்றங்களில் கேரளா மாநிலத்தில் மட்டுமே அதிக முஸ்லிம் நீதிபதிகள் உள்ளனர். 35 நீதிபதிகளில் 5 முஸ்லிம் நீதிபதிகள் உள்ளனர். ஆனால் அதுவும் குறைவான பிரதிநிதித்துவமே ஆகும். 27 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக்கொண்ட கேரளாவில் 9 உயர்நீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம் நீதிபதிகள் இருக்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 37 இடங்களில் இருவர் முஸ்லிம் நீதி பதிகளாக இருக்கவேண்டும். இங்கு ஒரு முஸ்லிம் நீதிபதி கூட இல்லை. பல மாநிலங்களில் முஸ்லிம் நீதிபதிகள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.
முஸ்லிம்கள் குறைவாக உள்ள மேகாலயா, ஹிமாச்சல் பிரதேஷ் , சத்தீஷ்கர் ஒரிஸ்ஸா மாநிலங்களில் மட்டுமல்ல அதிகமாக உள்ள அஸ்ஸாம், ஜார்கண்ட், மத்தியப்பிரதேஷ் தமிழ் நாடு, பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் குறைவாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல தமிழக முஸ்லிம் சமூகமும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிட்டு நீதித்துறையை நோக்கி தமது தலைமுறைகளை தயார் செய்ய வேண்டும்.