வளமான மண்

man 1
தமிழகத்தில் ஒரு காலம் இருந்தது. அப்போது முஸ்லிம்கள் ஒரு ஆரோக்கியமான சமுக இருத்தலைக் கொண்டவர்களாக இருந்தார்கள். கடல் கடந்த வாணிபம், அரசியல், ஆன்மீகம், பண்பாட்டு அரங்குகளைச் செழுமைப்படுத்தியது. தமிழக முஸ்லிம்களின் பொற்காலமாக அது இருந்தது. சதகத்துல்லா அப்பா போன்ற மார்க்க அறிஞர்கள், வள்ளல் சீதக்காதி போன்ற வணிகர்கள் அரசியல் - பொருளாதார தளத்தில் மேம்பட்டு இருந்தார்கள். உமறுப் புலவர் போல கலை - இலக்கிய அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று முஸ்லிம்கள் ஒரு ஆரோக்கியமான சமூக இருப்பின் அத்தனை கூறுகளையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய அறிவிப்புலத்திற்கு உரமூட்டினார்கள். ஏனைய நாடுகளை அப்படியே பெயர்த்தெடுத்து தமிழகத்தில் அதை “இஸ்லாமியக் கலாச்சாரம்” என்ற பெயரில் பொருத்தாமல் இங்குள்ள சமூக நிலைமைகளையும் வரலாற்று -கலாச்சார பின்புலத்தையும் கருத்தில் கொண்டு, இஸ்லாத்திற்கு முரணில்லாத இங்கிருந்த உள்ளூர் மரபுகளையும் சுவீகரித்து ஆரோக்கியமான உயிர் துடிப்புள்ள ஒரு சமூகம் உருவாக வழி சமைத்தார்கள். அத்தகைய முறையில் உருவான இஸ்லாமிய அறிவு கேரளத்திலும் கடல் கடந்து இலங்கை, மலேசியா, போன்ற நாடுகளிலும் தாக்கம் செலுத்தியதைக் காணலாம்.
உமறுப்புரவர் போன்ற இலக்கிய மேதைகள் தங்களது இலக்கிய திறனின் வாயிலாக தாங்கள் சார்ந்த மார்க்கத்துக்கும், அதே நேரம் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றினார்கள். இத்தகைய அறிஞர்கள் தொய்வில்லாது சீரிய முறையில் செயல்பட முஸ்லிம் செல்வந்தர்கள் புரவலர்களாக இருந்து சமூகத் தொண்டில் ஈடுபட்டார்கள்.
இவ்வாறு முஸ்லிம் சமூகம் அக்காலத்தில் இயல்பானதொரு வளர்ச்சியை அடைந்தது. இக்காட்சியை அப்படியே நம் காலத்தோடு பொருந்திப் பார்க்கவேண்டும். நம் சமூகத்தில் இன்று உலகத்தரமான மார்க்க அறிஞர்கள், அறிவாளுமைகள், அரசியல் ஆளுமைகள், கலை இலக்கிய மேதைகள் என்று எத்தனை பேர் உருவாகியிருக்கிறார்கள். அப்படியே உருவானாலும் அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் உருவாகியிருப்பார்கள். சமூகத்தின் அக்கறையும், போஷனையும், ஊக்குவிப்பும் இல்லாமல்; தேவையான அளவு ஆளுமைகள் உருவாக முடியுமா?
இன்று முக்கியமான கருத்து உருவாக்கத் தளமாக இருக்கும் ஊடகங்களில் முஸ்லிம்களின் பங்கு என்ன? ஊடக ஆர்வமுள்ள முஸ்லிம்களுக்கும் கூட வெவ்வேறு ஊடக நிறுவனங்களில் உதிரியாகச் சென்று பணியாற்றத்தான் முடிகிறது. “ஏனெனில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு தொலைக்காட்சி இல்லை. தினப் பத்திரிக்கை இல்லை. இருப்பதும் இஸ்லாமிய ஊடகமாகவே இருக்கிறது. இஸ்லாமிய பத்திரிக்கையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அவசியம் தான். ஆனால் அது மட்டுமே போதுமா? முஸ்லிம்கள் ஏன் சமூகத்தை மேம்படுத்தும் ஒரு நீதியான பத்திரிக்கை நடத்தக்கூடாது, தொலைக்காட்சி நடத்தக்கூடாது? ஊடகங்களின் விளிம்பில் நின்றுக்கொண்டு இன்னும் எத்தனை நாள் கத்திக் கொண்டிருப்பது? மற்ற ஊடகங்கள் தவிர்க்கும் முஸ்லிம்கள் மற்றும் பிற ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை முஸ்லிம்கள் காட்சி ஊடகம் மூலமாக மையத்திற்கு கொண்டுவரலாமே? கருத்துருவாக்கத் தளத்தில் இது ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கை இல்லையா?
முஸ்லிம் சமூகம் தற்காலத்தில் ஒரு மீளமுடியாத பண்பாட்டு வறட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. கலை இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் எல்லாம் ஏதோ இஸ்லாத்துக்கு அதிக தூரம் என்ற ஒரு பார்வை உள்ளது. எந்தவொரு சமூகத்தையும் பிற சமூகத்தினர் சில முன்முடிவுகள், முந்தைய தகவல்கள் மற்றும் கற்பிதங்களின் வழியாகத்தான் பார்க்கிறார்கள். புரிந்துணர்வில் ஏற்படும் இந்த இடைவெளி காலம் செல்ல தவறான புரிதலையும் இறுதியாக வெறுப்பையும் தான் விட்டுச்செல்லும். இதை உடைப்பதற்கு கலை இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் அவசியம். அதிலும் குறிப்பாக திரைப்படம் என்ற கலை வடிவமும் மிகுந்த பயனுடையது. முஸ்லிம் வாழ்க்கையை பிற மக்களிடம் நெருக்கமாக்குவதற்கு திரைப்படங்களை விட வேறு மார்க்கம் இல்லை.
இவ்வாறு ஆன்மீகம், அரசியல் பொருளாதாரம், பண்பாட்டு, அறிவுப் புலங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தாமல் முஸ்லிம் சமூகத்தில், முன்னேற்றத்தை விடுவோம் இயல்பான வளர்ச்சி கூட சாத்தியமில்லை. மண் வளமாக இருந்தால்தான் விளைச்சலும் செழிப்பாக இருக்கும். ஊடகங்கள், கலை இலக்கிய வடிவங்களில் பங்கேற்பின்மை, மார்க்கத்தை சூழலுக்குப் பொருத்தாமல் இருப்பது ஆகியவை நமது சமூக இருப்பு என்ற நிலத்தை மலட்டுத்தன்மையாக்கி விடும். மண்ணை திரும்பவும் வளமாக்க வேண்டிய காலம் தொடங்கியே நீண்ட நாட்கள் கடந்துவிட்டது. ஒரு போதும் செய்யாமலிருப்பதை விட தாமதமாகச் செயல்படுவது மேலானது. இப்போதாவது முஸ்லிம் சமூகம் கண் விழித்துக் கொள்ளுமா?