முஸ்லிம் கொடை வள்ளல்கள்

வாள் முனையில் மதம் மாற்றினார்கள். இந்துக்களை வஞ்சித்தார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடும் வரலாற்றுக் கூச்சல்கள் இஸ்லாமிய அரசர்கள் மீது சுமத்தப்படுவதுண்டு. அன்று சில நேரங்களில் குறிப்பிட்ட சாரார் மீது கடும் நடவடிக்கை பாய்வதுண்டு. அது காரணத்துடன் இருப்பவை. மதமாச்சரியத்துடன் ஆட்சி நடத்தியவர்கள் என்ற குப்பைக்கு உதவாத

கூப்பாடுகள் ஓளரங்சீப் தொடங்கி, திப்பு சுல்தான் வரை முஸ்லிம் அரசர்கள் மீது வீசப்படுவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை நீங்களே காணுங்கள்.
உஜ்ஜையினிலுள்ள ஜகதாம்புவிஷில் சங்கர் மந்திர் எனும் சிவதளம், கவிகாத்தியில் உள்ள அம்பரார்த் மந்திர், காசி ஆலயம் மற்றும் சீக்கியர்களின் குருத்துவராக்கள் பலவற்றுக்கு ஜாகீர்கள் (பத்திரங்கள்) வழங்கி ஆவணமாக பதிவு செய்து தந்தவர் ஒளரங்சேப். மேலும் சோமநாதர் ஆலயங்களுக்கு மானியம் தந்தார். தமிழக திருப்பனந்தாள் மடத்தில் இருந்த குமரகுருபர் தாம் இயற்றிய சகலகலா வல்லி மாலை எனும் பக்தி நூலை ஓளரங்சேப் தர்பாரில் அரங்கேற்றம் செய்ய முன் வந்து சம்மதித்தவர் ஓளரங்சேப்.
காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தந்த சன்னதம் (செப்பு ஆவணம்) ஒன்றில் “பிற சமயத்தவரின் வழிபாட்டிடங்களை பாதுகாப்பதில் உயிர்த்தியாகம் செய்தாகிலும் காத்திட முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பொறித்துள்ளார்.”
மைசூர் புலி திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப்பட்டனம் அரண்மனைக்கு அருகில் உள்ள அரங்க நாதர் ஆலயத்திற்கு ஏராளமான பூசைப் பொருட்கள் தங்கம் வெள்ளியிலான தாம்பாளம், விளக்குகள் வழங்கியுள்ளார். அரண்மனைக்கு எதிரில் கோயில் என்பதால் காலை பூசை மணி கேட்கும் போது தன் காலை உணவை உண்ணும் வழக்கத்தை இளமை முதல் மரணிக்கும் வரை தொடர்ந்தார். இன்றும் திப்பு வழங்கிய பூசை பொருட்கள் அவர் நினைவாக பயன்படுத்தப்படுகிறது.
கோவை குறிச்சி செல்லாண்டி அம்மன் கோயிலுக்கும், சேலம் மின்னக்கல் கோபால கிருஷ்ணர் கோயிலுக்கும் கொடை அளித்துள்ளார். சதுரங்கப்பட்டண ரங்க நாதர் கோயில் தேரை செப்பனிட்டுத் தந்ததால் தேரோட்டம் தொடங்கி வைக்க அக்கோயிலின் அன்றைய தக்கார் லிங்கராசு உடையார் திப்புவின் தர்பாருக்கு வந்து அழைப்பு விடுத்தார்.
சீரங்கப்பட்டண கணக்கு ஏட்டின் படி ஆண்டு ஒன்றிற்கு மைசூர் நாட்டின் அறநிலையங்கள், இந்து கோயில்களுக்கு அக்கால உயர்மதிப்பு நாணயம் 2,13,959 வராகன்கள் மானியம் தரப்பட்டுள்ளன.
அதே ஆண்டில் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு 20,000 வராகன்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அப்போது முஸ்லிம்கள் 10% இந்துக்கள் 90% என மக்கள் தொகை இருந்தது.
பல ஆலயங்களுக்கு வெள்ளிப் பிரசாத தட்டு, தாம்பாளம், பஞ்ச பாத்திரம் எனப்படும் தீர்த்த பாத்திரங்கள் கரண்டி, ஊதுபத்தி செருகும் தண்டுகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
நஞ்சன் கூடு சிவன் கோயிலுக்கு விலை உயர்ந்த மரகதலிங்கம் தரப்பட்டு அது இன்றும் பாதுஷா லிங்கம் என்ற பெயரில் அம்மனுக்குப் பக்கத்தில் பூசை செய்யப்படுகிறது.
மைசூம் மேலக்கோட்டை நாரயணசாமி கோயிலுக்கு 12 யானைகள் தந்துள்ளார். மைசூர் இராமனுஜர் குளத்தை செப்பனிட்டு பக்தர்கள் நீராட செப்பனிட்டுத் தந்தார். பாபா புதன்கிரி எனும் ஊரிலுள்ள தத்தாத்ரி பீடத்திற்கு இருபது இருபது சிற்றூர்களின் வருவாயை மானியம் தந்துள்ளார். புஷ்பகிரி மடத்திற்கு 2 சிற்றூர்கள் தானம் தந்தார்.
மைசூரை ஆண்ட மன்னர்கள் பலரும் சிருங்கேரி மடத்திற்கு பல்வேறு நன்கொடைகள் தொடர்பான அரசு முத்திரை பதித்த செப்பேடுகள் 200 க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் 30 சன்னத செப்பேடு திப்பு தந்தவை. ஹைதர் அலி 3 சன்னது தந்துள்ளார். 1793 ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ஜகத் குரு என்று மரியாதையுடன் திப்பு சங்கராச்சாரியாரை மதித்து எழுதிய கடிதம் மைசூர் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த பீடத்தின் கருவறையில் இருந்த தங்கத்தலான சாரதா தேவி சிலையை மராத்திய அரசன் “பரசுராமபாவ்” என்பவன் அடியோடு பெயர்த்துச் சென்றதை திப்பு சுல்தான் போராடி அந்த சிலையை மீட்டு வந்து மீண்டும் அதே கருவறையில் நிறுவ உதவினார்.
திர் காந்தேஸ்வர கோயிலில் நவரத்தினம் பதிக்கப்பட்ட ஆராதனைத் தட்டு சாமிக்கு மரகதக் கல் பதிக்கப்பட்ட பொன் ஆரம். ஷிமோகா அருகில் ஸ்மார்த்த பிராமனர்களின் குட்லி சிருங்கேரி மடம் ஒன்றுள்ளது. மராத்தியர்கள் இதனை தாக்கி கொள்ளையிட்டனர். மடத்தலைவர் மராத்திய பேஷ்வாவினர் மதவிலக்கம் செய்வதாக பயமுறுத்தினார். பேர்ஷ்வா பயந்து நட்ட ஈடாக 4 இலட்சம் வராகனைத் தந்தார்.
1790 ஆம் ஆண்டு வாக்கில் தமிழக பகுதிகள் சிலவற்றின் மீது படையெடுத்து வந்த போது காஞ்சிபுரம் அருகில் வந்த நிலையில் கோயில் ஒன்று கட்டி முடிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து அதன் நிர்வாகிகளை அழைத்துக் கேட்டார். உரிய உதவிகள் குறித்த காலத்தில் கிடைக்காததே வேலைகள் நிற்பதற்கு காரணம் என்றனர். உடனே தன்னுடன் வந்த கருவூல அதிகாரியிடம் சொல்லி 10,000 வராகன் உதவிடக் கூறி உத்தரவிட்டார்.
மலபார் முற்றுகையின் போது குருவாயூர் கோயில் முற்றுகைக்கு ஆட்பட்டது. புரோகிதர்கள் மிரட்சியாகி மூலவரை அங்கிருந்து எடுத்து வேறிடம் சென்று பாதுகாத்தனர். இந்த தகவல் திப்புவின் செவிகளுக்கு வந்தது. தம்மைத் தவறாகப் புரிந்து கொண்ட புரோகிதர்களை அழைத்து கடிந்து கொண்டதுடன் உடனே தம் முன்பே மூலவரை கருவறைக்குள் வைத்திட உத்தரவிட்டார். பின்னர் சிலை வைக்கப்பட்டதும் குருவாயூர் தாலுக்கா பகுதியின் வரிவசூலை கிருஷ்ணன் கோயிலுக்கே சேர வேண்டும் என உத்தரவிட்டார். திப்பு இறக்கும் வரை குருவாயூர் கிருஷ்ணனே வரிவசூலை அனுபவித்தார்.
திப்பு ஆண்ட பொற்காலத்தில் அவரின் ஆட்சி எல்லைக்குள் இருந்த இந்து கோயில்களின் கொடையாளராகவும், ஆன்மீக மடங்களின் காவலராகவும், பழங்கோயிகளை செப்பனிட்ட தர்ம சீலராகவும் மட்டும் இருக்கவில்லை. இந்து சமய பூசல்களை தீர்த்து வைக்கும் நீதிமானகவும் விளங்கினார்.
மைசூரின் மேலக்கோட்டை நாரயணன் கோயில் பழமையானது. புகழ்பெற்றது. இக்கோயிலில் மூலவர் நாரயணனுக்கு வடகலை நாமமா? தென்கலை நாமமா? என்ற சர்ச்சை வலுத்தது. பிரச்சனை திப்பு சுல்தானிடம் வந்தது. பிரச்சனை கிளப்பியவர் ஆஞ்சி சாமய்யா என்ற திப்புவின் ஒற்றைப் படைத் தலைவர் தன் அதிகார பலத்தால் தான் சார்ந்த முறையை வலுவில் திணிக்க முயன்றதே பிரச்சனைக்கு காரணம் என்பதை விசாரணையில் உணர்ந்தார் திப்பு. பின்பு எவ்வித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் இருவித முறைகளையும் அகோயிலில் பின்பற்றிட உத்தரவிட்டார். இதனால் வைணவர்களிடையே பெருங்கலவரம் தவிர்க்கப்பட்டது.
கடப்பா மாவட்டத்தில் புலி வஸ்ட்லா என்ற ஊரில் கிறித்தவ தேவாலயம் புதுப்பிக்க உதவினார். தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் இணக்கத்தோடு வாழ வழியமைத்து தந்த நல்லிணக்கப் பேரரசர் திப்பு சுல்தான் கூச்சல்காரர்கள் சொல்வது போல் அவர் மதவெறியர் அல்ல.
க. குணசேகரன்.