உள்ளூர் வரலாறுகள் – தாழை மதியவன்

‘ஊர்ப் பெயர்கள் : ஒரு வரலாற்று மூலம்’ எனும் ஆய்வு நூலில் முனைவர் கு.பகவதி மொழிவதைக் கேளுங்கள் : உலகில் வேகமாக வளர்ந்து வருமோர் ஆய்வு பெயராய்வு. இவ்வாய்வுத் துறை ஆட்பெயராய்வு இடப்பெயராய்வு என இரண்டாகப் பகுக்கப்பட்டு ஆராயப்படுகிறது.
இடப்பெயராய்வின் ஒரு பகுதியாக ஊர்ப் பெயராய்வு அமைகிறது. உலகின் பல பாகங்களிலும் விரைந்து நடைபெறுகின்ற இவ்வாய்வு தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் வேகம் பெறவில்லை. இவ்வாய்வின் சிறப்பு குறித்து பேராசிரியர் கி.நாச்சிமுத்து தரும் எண்ணங்கள் தமிழறிஞர்கள் பலரையும் செயல்படத் தூண்டும் வண்ணம் அமைகின்றன.
இவர் “மொழியில் உள்ள மற்ற சொற்களை விட நிலைப்பேறுடைய இச்சொற்கள் வரலாற்றோடு நேரடித் தொடர்பு கொண்டு பழமை எச்சங்களாக (Fossils Remains of The Past) நின்று மனித வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்கும் ஆற்றலுடையன என்ற சிந்தனையின் அடிப்படையில் இடப் பெயர்களை இட வரலாற்றின் காலப் பெட்டகம் (Time Capsules of Local History) என்று அழைக்கலாம்” என்று கூறுவார். (தமிழ் இடப் பெயராய்வு : பக் :1)
இக்கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. முழுமையான ‘ஊரும் பேரும்’ உருவாக்கப்படுமானால் அதில் எல்லா வித சங்கதிகளும் இடம் பெற்று விடும். அதை மிக விரிவாக எழுதிட வாய்ப்பில்லாதவர்கள் சிறிய பதிவுகள் செய்யலாம்.
எந்த ஆய்வுப் பணியானாலும் காலம், உழைப்பு, பொருட் செலவு ஆகிய மூன்றும் இல்லாமல் தொடங்க முடியாது. அதை செய்ய திட்டமிடுதலும் தேவையான தேடுதல்களும் களப்பணிகளும் கட்டாயம் வேண்டும்.
தற்கால எழுத்தாளர்கள் கணினியைத் தட்டியே கதையளந்து விடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அடுத்தவர் அதிசயிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் தலையணைகளைத் தந்து விடுகின்றனர். அந்தத் தலையணைகளுக்குள் இலவம் பஞ்சு இருப்பதில்லை தையல் கழிவுகளே நிரப்பப்படுகின்றன.
ஊர்களைப் பற்றிய சங்கதிகள் உயிரோட்டமாக இருந்தால்தான் சம்பந்தப்படவரின்றி பிறரையும் ஈர்க்கும்.
இன்று நம்மிடையே எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. எல்லாமே அரசியல் களங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றன. சிலவே மாறுபட்ட செயல் களத்தில் புதிய பார்வையுடன் செயல்படுகின்றன. புதிய பார்வையாளர்களின் பார்வை ஊர்ப் பெயராய்வு போன்ற துறைகளிலும் செல்ல வேண்டும்.
ஓர் ஆவணம் உருவாக்கப்பட்டு விடுமானால் அது காலப்பெட்டகமாகி விடும். சிறிய பணியோ பெரிய பணியோ செய்து முடித்து விடுவோமானால் அது கடந்த காலத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும். வருங்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும்.
பெயராய்வில் தொடங்கி மக்கள் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் தொழில்கள் என விரிவாக எழுதிச் செல்லலாம். தொல்குடிகள் வந்த குடிகள் கொள்வினை கொடுப்பினைகள் புலம் பெயர்தல்கள் என தொகுத்துக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறு எல்லா ஊர்களையும் பற்றிச் சொல்ல எனக்கு வாய்ப்பில்லை. தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான பேரூர் சிற்றூர்களைப் பற்றி எழுதி முடிக்கவும் நான் திட்டமிடவில்லை.
இக்கட்டுரைத் தொடரில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் ஊர்களை மட்டுமே எழுத திட்டமிட்டுள்ளேன். அவையே நூறைத் தாண்டும், இருநூறை எட்டிப் பிடிக்கும்.
இதுவரை நான் அறிந்த வரை முஸ்லிம் ஊர்களைப் பற்றிய நூல்கள் வெளிவந்தவை பத்துக்கும் குறைவாகவே இருக்கும்.
1960 – களில் பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் தம்முடைய ஊரான தொண்டி மாநகரைப் பற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார்.
அதன் பின் எங்காவது ஒரு நூல் ஊரைப் பற்றி வந்திருக்கலாம், என் கவனத்துக்கு கிடைக்கவில்லை.
காரைக்காலைப் பற்றிய ஒரு சிறு நூல் வெளியானது. முழுமையான ஊர்க் கதை பேசும் நூலாக வெளியாகாவிட்டாலும் மூத்த எழுத்தாளர் மானா மக்கீனால் மூன்று ஊர்களையும் ஆட்களையும் பேசும் நூல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்று குமரி இலங்கைத் தொடர்புகளைக் ஊறுவது, மற்றொன்று கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்களைப் பறை சாற்றுவது, மூன்றாவது நீடூர் நெய்வாசல் உறவுகளை உரத்துக் கூறுவது. முழுமையான ஊர்க்கதையாக நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 2003 இல் நம்புதாழை கிராமம் பற்றி ‘பூந்தாழைப் பூங்காற்று’ நூல் வெளியானது.
இவ்வகை நூல்கள் தமிழகமெங்கும் ஐம்பதாண்டுகளில் நூறு நூல்களாவது வெளியாகி இருக்க வேண்டும். விரல் எண்ணிக்கையிலேயே தமிழ் எழுத்தாளர்கள் ஊரைப் பற்றிய நூல்களை எழுதி முடித்திருக்கும் போது முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் எம்மாத்திரம்?
எதிர்பாராத விதமாக தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் ஊர்க் கதைகளைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளனர்.
ஆங்காங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு ஊர்களைப் பற்றிய சுவையான வரலாறுகளை நூல்களாகப் பதிவிடலாம். இந்த ஏற்பாடு சின்னஞ்சிறு உலகம் பற்றி தமிழுலகம் தெரிந்து கொள்ள எடுத்து வைக்கும் கூட்டாஞ் சோற்றுப் பயணம்.
இந்தப் பயணத்தில் பேராசிரியர் கேப்டன் அமீர் அலி அவர்களால் ‘இளையான்குடி வரலாறு’ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈழத்து எழுத்தாளர் மானா மக்கீன் எழுதித் தொகுத்த ‘முத்தான முத்துப்பேட்டை’யும் மானாவே எழுதிய ‘புதிய வெளிச்சங்கள்’ எனும் தஞ்சை அய்யம் பேட்டையைப் பற்றிக் கதைக்கும் நூலும் வெளியாகின.
ஒரு முறை உவமைக் கவிஞர் சுரதா சொன்னார் : திருவாரூர் தேருக்கு மட்டும் வரலாறில்லை. எங்கள் தெருப் பிள்ளைகள் ஓட்டும் சிறு தேருக்கும் வரலாறுண்டு.
எனவே சாம்ராஜ்யங்களுக்கும் சாம்ராட்களுக்கும் மட்டுமே வரலாறு உண்டு என எண்ணாதீர்கள். சாதாரண இல்லத்துக்கும் சாமான்யருக்கும் வரலாறு உண்டு எனக் கருதி சிற்றூர்களின் புகழைக் கூற வாருங்கள். எந்த ஒரு ஊருக்கும் ஒரு புகழாவது இருக்கும். ஏதாவது சிறு புகழுக்குரியவர் இருக்கதான் செய்வார். மௌனங்கள் கலையும்.
எனவே எனக்கு நீங்கள் உங்கள் ஊர் பற்றிய செய்திகளை எழுதி அனுப்புங்கள். அவற்றை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வேன்.
இதற்கிடையில் அடுத்தடுத்து எனக்குத் தெரிந்த ஊர்களைப் பற்றிய சங்கதிகளைத் தருவேன். அவை பழவேற்காட்டிலிருந்து தேங்காய் பட்டினத்தையும் தாண்டும். புவனகிரியிலிருந்து கிருஷ்ணகிரியையும் எட்டிப் பிடிக்கும். ஊர்வலம் தொடரும்…