ஹைதர் அலி

பிரபலமான மார்க்க அறிஞர் வலி முஹம்மது குல்பர்காவில் குடியேறி வாழ்ந்த நிலையில் அவருக்கு அலி முஹம்மது என்ற மகன் பிறந்தார். அலி முஹம்மது வளர்ந்து பெரியவரானதும் இந்தியாவின் வறண்ட வெப்பம் நிறைந்த ஊர்களை விடுத்து சற்றே குளிருள்ள பிரதேசத்திற்கு குடிபெயர எண்ணினார். அந்த நிலையில்தான் அவர் கோலார் மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தார். இன்றைய கர்நாடகத்தின் கோலார்தான் அது. அங்கு அலி முஹம்மதிற்கு நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அதாவது மார்க்க அறிஞர் வலி முஹம்மதுவுக்கு நான்கு பேரன்கள் பிறந்தனர். 1. முகம்மது இலியாஸ் 2. ஷேய்க் முகம்மது 3. இமாம் ஷேக் முகம்மது 4. பத்தே முகம்மது
மார்க்க அறிவும் மனித நேயமும் வீரமும் ஒருங்கே பெற்றவர் பதே முகம்மது. அவரின் வீரத்திற்கு பரிசாக புத்தி கோட்டா என்ற பகுதியை மைசூர் அரசு வழங்கியது. அத்துடன் அவருக்கு மைசூர் போர்ப்படை தளபதி என்ற பட்டமும் வந்தது. அரசிடம் தளபதி பட்டமும் அரசு நடத்த புத்திகோட்டாவும் பெற்ற இவருக்கு இரண்டு வாரிசுகள் பிறந்தனர். முதல் மகனாக சாபாஸ் இரண்டாவது மகனாக ஹைதர் அலியும் பிறந்தனர்.
அந்த நேரம் மைசூர் அரசை சிக்க தேவராயர் ஆண்ட காலம். 1704 ஆம் ஆண்டு சிக்க தேவராயரிடம் தளபதியாக இருந்த நஞ்சராஜ் தேவராஜ் என்ற இருவர் தேவன ஹல்லி எனும் பாளையத்தின் மீது முற்றுகைப் போரை நடத்திட பதே அலியின் மகன்களான சாபாஸ் அலியையும் ஹைதர் அலியையும் வேண்டினர். அதற்கேற்ப அந்த முற்றுகைப் போரில் போர் வியூகத்தை திறம்பட வகுத்தனர் இரண்டு சகோதரர்களும். அதில் ஹைதர் அலியின் திறமையைக் கண்டு நஞ்சராஜும் தேவராஜும் வியந்தனர். போரின் வெற்றிக்குப் பின்னர் நஞ்சராஜ் ஹைதரை மைசூர் தர்பாருக்கு அழைத்து வந்து பாராட்டினார். அத்துடன் ஹைதர் தலைமையில் ஒரு படைப்பிரிவு இயங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவுரங்க சீப் ஆட்சியின் கீழ்தான் சிக்கதேவராயர் ஆண்டு வந்தார். 1749 இல் சிக்க தேவராயர் மறைந்த பின் வாரிசாக வரவேண்டிய அவரது மகன் பேச இயலாத செவித்திறன் குன்றியவராக இருந்ததால் மன்னருக்குப் பிறகு அரசாட்சியை நஞ்சராஜும் தேவராஜும் ஏற்றனர். இந்த அதிகாரத்தில் தான் ஹைதர் அலியை தளபதியாக ஒரு படைப்பிரிவுக்கு அமர்த்தினர்.
மன்னர் இல்லாத அரசாட்சி இரு மந்திரிகளான ராஜூக்களின் கையில் இருந்தது. ஒருவரிடம் திரண்ட சொத்தும் மற்றவரிடம் படைபலமும் இருந்தது. இந்த இருவரும் மன்னரின் பேச இயலாத மகன் சார்பில் ஆட்சியை நடத்தினர்.
45 ஆண்டு காலம் மைசூர் அரசை மந்திரிகள் ஆண்ட நிலையில் தேவன ஹல்லியில் தன் வீரம் செறிந்த போரை நடத்திய கடமை தவறாத ஹைதர் அலி படைத்தலைவராக ஆனவுடன் நீண்ட காலமாக நஞ்ச ராஜும் தேவராஜும் ஆட்சியில் மைசூர் எந்தவிதமான ஏற்றத்தையும் காணாத நிலையில் அவர்களுக்குப் பின் ஹைதர் அலியின் கைகளுக்கு ஆட்சிப் பொறுப்பு தானாகவே வந்து சேர்ந்தது. நடந்தது இதுதான்.
ஆனால் பல ஆங்கிலேய வரலாற்றாளர்கள் வளம் கொழித்த மைசூர் அரசை ஹைதர் அபகரித்தார் என்று தவறான வரலாற்றை பதிவு செய்துள்ளனர். 45 ஆண்டுகால அமைச்சர்களைத் தொடர்ந்து அரசுரிமை மாற்றம் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலிக்கு கிடைத்ததே உண்மை.
நீண்ட காலம் பாலூட்டும் தாய் இன்றி தவித்த குழந்தை தாயைக் கண்டது போல் ஹைதர் அலியைக் கண்டதும் மக்கள் ஓடோடி வந்து அவரை ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டனர். மைசூர் புத்துணர்ச்சி பெற்றது.
மைசூர் அரசுரிமை இல்லாத நாடு ஏதேனும் கட்டப் பஞ்சாயத்து செய்து குழப்பத்தை உண்டாக்கி தங்கள் சார்பில் யாரேனும் ஒரு பிரதிநிதியை வைத்து மைசூரை கபளீகரம் செய்யலாம் என்ற வெள்ளையர்களின் எண்ணத்தை ஹைதர் அலி தவிடு பொடியாக்கியதை வெள்ளையர்களால் தாங்க இயலவில்லை. எனவே வல்லடியாக ஹைதர் மீது பழி தூற்றினர். மேலும் அதிகாரம் இழந்த சிலரும் இதற்கு தூபமிட்டனர்.
மைசூர் அரசுக்கு ஹைதர் அலி பணியாற்ற வந்தவர் தவிர, பதவி வெறிபிடித்து ஆட்சியைக் கைப்பற்றியவர் அல்லர். கமாண்டர் இன் சீப்பாக மைசூர் அரசுக்கு உட்பட்ட சிறு சிறு அரசுகளை அவர் ஒற்றுமைப்படுத்தி பிறர் தலையிடா வண்ணம் காத்தார். அவரவர் எல்லையை விரிவுபடுத்த நினைத்த ஆதிக்க மனப்பான்மை கொண்ட பாளையங்கள், சிற்றரசுகள் ஹைதரின் வருகையால் திணறின.
சரியான வாரிசுரிமை இல்லாமல் நாளொரு மேனியாக தேய்ந்து வந்த மைசூர் அரசுக்கு ஹைதரின் வருகை புதுத் தெம்பை அளித்தது. அத்துடன் தருணம் பார்த்து மைசூரை விழுங்கத் துடித்த கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தது.
1759 இல் மராட்டியப் பேரரசு மைசூர் மீது படையெடுத்தது. இதை மதியூகத்தாலும் வீரத்தாலும் எதிர்கொண்டு மராட்டியரின் கொட்டத்தை ஹைதர் அடக்கினார்.
நாளுக்கு நாள் ஹைதரின் கை ஓங்குவதை சகிக்காத மைசூர் விதவை ராணி தன் எடுபிடி குண்டு ராவ் என்பவரைத் தூண்டி கலகம் செய்ய முற்பட்டார்.
இவற்றை ஹைதர் அலி முந்தைய அமைச்சராக இருந்த நஞ்சராஜா உதவியால் வென்றார். தன்னைக் கொல்ல முயன்ற குண்டு ராவின் சதியில் இருந்து மீண்டார்.

ஹைதர் அலி தலைமை தளகர்த்தராகவும் ஆட்சியை நிர்வகிப்பவராகவும் மட்டும் இல்லை. மிகப்பெரிய சமஸ்தானத்தை பங்கு போடக் நினைத்த மராத்தியரும் மற்றும் ஹைதராபாத் நிஜாமும் குழப்பம் விளைவித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இயலாமல் போக குறுக்கே இருந்த ஹைதரை நினைத்துப் பொறுமினர். அதேவேளை ஊமை அரசனும் அவனின் தாயும் மாளிகையில் சொகுசாக இருந்தாலும் ஆட்சி அதிகாரம் தங்கள் கை மீறிப் போனதால் அவர்களும் ஒரு புறம் கலகத்தை புகைய விட்டனர்.
திப்புவின் தந்தையார் ஹைதர் அலி பகதூர் கான் இரண்டாம் மைசூர் போரைத் தொடங்கினார். ஏனெனில் நாற்புறமும் நிஜாம், மராத்தியர், பறங்கியர் என மைசூர் அரசை குறிவைத்து கலகம் ஏற்படுத்திட முனைந்தனர். அத்துடன் ஹைதர் ஃபிரான்சுடன் நட்பு பாராட்டியதால் ஃப்ரான்சின் ஆளுகைக்குள் இருந்த மாஹி பகுதியை மராத்தியரிடம் இருந்து மீட்க வேண்டிய அரசியல் கடமைக்காக இப்போரை நடத்த உத்தேசித்தார். இளம் திப்பு சுல்தானின் அபரிமிதமான வீரத்தை வெளியுலகம் அறியச் செய்தது இந்த போர்க்களம்தான்.
இரண்டாம் மைசூர் போரில் களமாக இருந்தது நம் தமிழ்நாடு பகுதிதான். ஆம் திருவண்ணாமலைப் பகுதிக்கு பின்புறமுள்ள செங்கம் நிலமே போர்க்களப் பகுதி.
இன்றைய ஆற்காடு தொடங்கி பாண்டி வரை ஒரு வளையமாக அரை வட்ட வடிவில் தங்கள் படை முகாம்களை பறங்கியர்கள் அமைத்திருந்தனர். இவற்றை தகர்த்து வாலாட்டும் மராத்தியர்களை, துரோக புத்தி கொண்ட நிஜாம் படையை களத்தில் புறமுதுகிட்டு ஓடச் செய்வதே போரின் இலக்கு. 1782 பிரிட்டிஷார் மறக்க முடியாத ஆண்டு. ஆம் அமெரிக்க ஐக்கிய குடியரசு அக்காலம் தான் தோன்றியது.
வெள்ளையர்களுக்கெதிராக அவர்களின் ராஜ வலிமையைக் கண்டு அஞ்சாமல் எதிர்க்குரல் தந்தவர் ஹைதர் அலி பகதூர் கான் சாஹிப். அடிப்படையில் ஒரு வீரனாக வாழ்வைத் தொடங்கிய இவர் மைசூரையே ஆளும் வகைக்கு படிநிலையாக உயர்ந்தவர் பச்சை இந்தியர். குதிரைப் படையை வழிநடத்துவதில் தனித்திறன் பெற்றவர். எத்தகைய குதிரையாக இருந்தாலும் அதனைப் பழக்கி களம் காணச் செய்வார். 1755 ஆம் ஆண்டு மைசூர் அரசு திருச்சியை முற்றுகையிட்டது. அப்போரில் இவரின் திறமையைக் கண்டு திண்டுக்கல்லுக்கு பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் மைசூர் அரசை ஆளும் முன்பு இவர் தமிழகத்து திண்டுக்கல்லை நிர்வகித்தவர். 1757 இல் அதாவது டெல்லி பகதூர்ஷா தலைமையில் புரட்சி தோன்றிய நூறாண்டுக்கு முன்பு யூசுப் கான் எனும் மருதநாயகத்துடன் போர் புரிந்துள்ளார்.

இப்போரின் தருணத்தில்தான் யூசுப் கானோடு நட்போடு இருந்த பிரஞ்சு தளபதிகளின் ஆளுமையும் அணுகுமுறையும் நட்புடன் பழகும் பாங்கும் இவரைக் கவர்ந்தன. இவர்களோடு ஆத்மார்த்தமாக பழகினார். இந்த நட்பு இவர் தலைமுறை பின்பற்றியது. ஆம் தம் தந்தையின் வழிப்படி பின்னாளில் திப்புவும் பிரான்சியர்களுடன் நட்பு பூண்டவராக விளங்கினார்.
தனிமனித உரிமை ஜனநாயகப் பண்புகள் சமதர்ம சிந்தனை புரட்சிகர எண்ணங்கள் கொண்ட பலவற்றால் பிரான்சுக்காரர்களிடம் நட்பும் மேற்காணும் எந்தப் பண்பும் இல்லாத வெறும் வர்த்தக சிந்தனை மட்டுமே கொண்ட ஆங்கிலேயர்களிடம் வெறுப்பும் இயல்பாகவே ஏற்பட்டதால்தான் திப்பு சாகும் வரை வெள்ளையர்களிடம் வெறுப்பாகவே இருந்தார்.
அத்துடன் சீரங்கப்பட்டனத்து மதராஸாவில் பயின்ற திப்பு அரபி, உருது, கன்னட மொழிகளுடன் பிரெஞ்ச் மொழி கற்க தனி ஆசிரியரை ஹைதர் ஏற்பாடு செய்தார். இதன் காரணமாக பிரெஞ்ச் மொழியில் மிகுந்த புலமையுடன் கடிதம் எழுதும் அளவுக்கு திப்பு சிறந்து விளங்கினார்.
1767 - 69 வரை இரண்டாண்டுகள் முதல் மைசூர் போர் நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயருடன் நிஜாம் செய்த ஒப்பந்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தான். நிஜாம் தன்னுடைய ஹைதராபாத் நகரில் ஆங்கிலேயர் படைப்பிரிவை வைத்துக் கொள்ளும் உரிமை தந்தார். இந்திய மண்ணில் இருந்த நிஜாம் என்ற ஒரு அரசு இந்தியாவில் இருந்த மற்றொரு மைசூர் அரசை தாக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது. ஏனெனில் ஹைதராபாத்தில் தங்கள் படைப்பிரிவை வைத்துக் கொண்டு மைசூர் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தனர் ஆங்கிலேயர்கள். அவர்களின் இந்த சூது புத்தியைக் கண்டு கொதித்தார் ஹைதர் அலி. அத்துடன் அவர்களுக்கு இடமளித்து வந்த நிஜாம் மீது இயல்பாக கோபம் இருந்தது. இப்படி சுற்றி இருந்தவர்களால் ஹைதர் அலிக்கு மேலும் மேலும் சிக்கல் அதிகரித்த நேரத்திலும் அதையெல்லாம கண்டும் காணாமல் இருந்து வந்தார் அவர்.
இது போன்ற ஒரு அரசியல் குழப்பத்தில் ஒரு முடிவை எட்ட ஹைதரோடு ரகசிய உடன்பாடு செய்து கொண்டது ஹைதராபாத் நிஜாம் அரசு. இருவரும் ஆங்கிலேயர் மீது திடீர் தாக்குதல் தொடுக்க முடிவு செய்தனர்.
அரசியல் சதுரங்க விளையாட்டு இந்தியாவில் நடைபெற்ற நேரத்தில் அமெரிக்காவில் புதிய குடியரசு தோன்றியதன் காரணமாக காலனி நாடுகள் மீதான பிரிட்டனின் கைப் பிடி நழுவத் தொடங்கியது.
இதன் காரணமாக இன்னொரு காலனியை தங்கள் நாட்டுப் பண்டங்களை கடை விரிக்க விற்பனைக் களமான மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா சாதகமானது இங்கே கடை விரிக்க கலகம், குழப்பம், யுத்தம் என்ற மூன்றையும் செய்திடவும் கிழக்கிந்திய கம்பெனி தயாரான நிலையில் தங்கள் வலையில் வலிய வரும் நிஜாம் அரசை எதிர்கொள்ள முதலாம் மைசூர் போரை ஆர்வத்தோடு எதிர்கொண்டது கம்பெனி. கிழக்கிந்திய கம்பெனி தங்கள் பகாசுர பசிக்கு இடையூறாக ஹைதர் இருப்பதை விரும்பவில்லை. ஏனெனில் ஹைதர் 1761 இல் மைசூர் அரசின் சர்வவல்லமை பெற்றவராக மட்டும் இருந்திடவில்லை. புட்லூர், கொங்கு மண்டலம், இன்றைய கோவை , மங்களூர் , கொச்சி, பாலக்காடு முதலிய பகுதிகளை வெற்றி கொண்டு தம்முடைய மைசூர் அரசை விரிவாக்கினார். சிதறுண்ட பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நிலப் பரப்பை உருவாக்க காத்திருந்தனர். ஆனால் அந்த திருப்பம் ஏற்படவே இல்லை.