போபால் பேகம்கள் வரலாறு!

வரலாறு, உலக ஓட்டத்தின் ஓயாத தொடர் நெடும் பயணம். மனிதர்கள் தங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி.வாழும் மனிதர்களுக்கு, உயரத்தில் வாழ்ந்து, பாதாளத்தில் வீழ்ந்து, ஆறு போல சமதளத்தில் தவழ்ந்து மறைந்து போன மனிதர்களை நாயகர்களாக, துரோகிகளாக, எதிரிகளாக, முகம் தெரியாத முகங்களாக சித்தரித்துக்காட்டும் கண்ணாடி.
இந்திய வரலாற்றில் தடம் பதிந்து உயரப் பறந்து கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கொடி கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனி தனது பாதங்களை இந்தியா முழுவதும் ஆழமாகவும் அகலமகாவும் பரப்பிக் கொண்டிருந்த காலம்.
19 - 20 நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவின் போபால் சமஸ்தானத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆட்சி செய்த நன்னம்பிக்கை மிக்க பெண்களின் அரசியல் - ஆட்சி வரலாறு குறித்த தொகுப்பே இந்தக் கட்டுரை.
(இந்தியாவின் சுதந்திர தினம் 70 சுதந்திர தினம் கொண்டாடப்படுகிற இந்த தருணத்தில் இந்தியாவை எல்லா விதங்களிலும் மேம்படுத்தி சமூக நலன் காத்த முஸ்லிம்களின் மனித நேய கரிசணத்தை வாசிப்போம்.)
போபால் 1984 ஆம் ஆண்டு, யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் பூச்சிக்கொல்லி உற்பத்தி தொழிற்சாலை (தற்போது டவ் கெமிக்கல் கம்பெனி), மீத்தேல் ஐசோ சைனேட் என்னும் மிகப்பெரிய வாயுக்களின் கலவையை கசியவிட்டதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் மூலம் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போது சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்ற ஒரு நகரம்.
இந்தியாவின் பசுமையான நகரங்களில் ஒன்று போபால். இயற்கை மற்றும் செயற்கை ஏரிகளின் காரணமாக ஏரிகளின் நகரம் என அழைக்கப்படுகிறது. போபாலை வளர்த்தெடுத்து செழுமைப்படுத்திய ராணிகளின் பேகம்களின் காரணமாக 19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வெளியே அடையாளம் காணப்பட்ட ஒரு நகரமாக இருந்தது. பூபால் என்றும் இஸ்லாம் நகர் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட போபால் நகரின் தந்தை சர்தார் தஸ்த் முஹம்மது. அவ்ரங்ஜீப்பின் படையில் கமாண்டராக இருந்தவர். கொல்கோன்ட் மகாராணி கமலாபதிக்கு படை அனுப்பி உதவி செய்ததற்காக போபால் நகரத்தை கூலியாகப் பெற்று 1707ல் போபாலை உருவாக்கினார். போபால் இவரது அதிகாரத்தின் கீழ் போபால் வந்த பிறகு சுற்றுப்புறப் பகுதிகள் பலவற்றை போபாலோடு இணைத்து சமஸ்தானமாக மாற்றினார். இந்தியாவில் ஹைதராபாத்திற்கு அடுத்து பெரிய முஸ்லிம் சமஸ்தானம் போபால். இவரது மனைவி ஃபதஹ் பீபி இவரது பெயரில் கட்டப்பட்ட ஃபதஹ் கார் கோட்டை, நீர் நிலைக்கு இடையே இன்றுமுள்ளது. Dost Mohammad Khan Nawab of Bhopal
தஸ்த் முஹம்மதைத் தொடர்ந்து யார் முஹம்மது போபால் அரியணை ஏறினார். அவர் ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த மமூலா பாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். மமூலா பாய் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கணவனது மரணத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பு நேரடியாக வராவிட்டாலும் தனது பிள்ளைகளை ஆட்சியில் அமர்த்தி பின்னின்று இஅய்ங்கினார். சில போர்களின் கலந்து கொண்ட தகவல்களும் உள்ளது. தொடர்ந்து தஸ்த் முஹம்மது குடும்பத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சிக் கட்டிலில் ஏறி இறங்கினர்.
1816 முதல் 1819 வரை போபால் ஆட்சியாளராக இருந்தவர் நவாப் நசீர் முஹம்மது கான். 1818 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கம்பெனியின் ஒப்புதலுடன் நசீர் தனி ராஜ்ஜியமாக போபாலை மாற்றினார்.
1819 இல் நசீர் மரணித்தார். (கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது) அவரது மரணத்திற்குப் பிறகு போபாலின் முதல் ராணியாக பேகமாக ஆட்சிக்கு வந்தவர் குத்சியா பேகம்.
இந்த சமஸ்தானத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அதற்கு முன்பு ஆட்சி அதிகாரங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் 1829 முதல் 1926 வரை தொடர்ச்சியாக ஏறக்குறைய நூறு ஆண்டுகள் அரசிகள், பேகம்களின் நேரடி அதிகாரத்தின் கீழ் போபால் வளர்ந்தது.
வணிக முக்கியத்துவம் இல்லாத வறண்ட நிலத்தில் அவர்கள் வெட்டிய ஏராளமான சிறு ஏரிகளினால்தான் அது நகரமாக மாற முடிந்தது. அவர்கள் உருவாக்கிய பல்வேறு சந்தைகளும் நகரத்தை அப்பகுதியின் மையமாக ஆக்கின. பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த சிந்திகள் பெருவாரியாக போபாலில் குடியேறினார்கள். அவர்கள் இந்நகரத்தை ஒரு வணிகத் தலைநகரமாக ஆக்கினார்கள்.
பேகம்கள் தங்களது தெளிவான அணுகுமுறையால் அரசின் பொருளாதார சமூக, மக்கள் நல மேம்பாட்டுக்கு வழி வகுத்தார்கள். கலையம்சமுள்ள கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றால் இன்றும் போபால் கம்பீரமாக உள்ளது.
காலனித்துவ அரசின் நவீன திட்டங்களை ஆர்வத்துடன் அமுல்படுத்திய போதும் இஸ்லாமிய விழுமியங்களை ஒட்டியே அதை அமைத்துக் கொண்டார்கள் என்பது தனிச்சிறப்பு.
பேகம்கள் தங்களுக்கான தனித்த ஆளுமையோடு சுய அடையாளத்தைப் பேணி ஆட்சியாளர்கள் என்ற அடையாளம் தவிர்த்து எளிமையான வாழ்க்கை முறையை கையாண்டார்கள்.
போபால் பெரும்பாலும் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த நிலம் என்றாலும் நல்லிணக்கத்தோடு நடந்து கொண்டார்கள் பேகம்கள். தங்களது அரசவையில் இந்து அமைச்சர் ஒருவருக்கு எப்போதும் பொறுப்பு வழங்கினார்கள்.
பலம் வாந்ந்த பக்கத்து ஆட்சியாளர்கள், சொந்தத்தில் உள்ள ஆட்சியில் உரிமை கோரிய ஆண்கள், பெண்கள் என்பதால் பிரிட்டிஷார் துவக்கத்தில் காட்டிய எதிர்ப்பு அனைத்தையும் ராஜ தந்திரத்தோடு எதிர் கொண்டு நிலையான ஆட்சியை வழங்கியவர்கள் பேகம்கள். அவர்கள் ஒவ்வொருவராக, போபாலிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஏற்படுத்திய வளர்ச்சிப் பணிகள் அவர்களோடு பயணித்து அறிவோம்.
நவாப் குத்சியா பேகம் (1801 - 37)
Qudsia Begum nபோபாலில் பேகம்களின் தொடரான நூறாண்டு கால ஆட்சிக்கு வித்திட்டவர் குத்சியா பேகம். இவர் 1801 இல் பிறந்தார். இவரது தந்தை நவாப் கௌஸ் முஹம்மது கான். 1817 இல் நவாப் நாசர் முஹம்மது கானை திருமணம் செய்து கொண்டார். 1819 இல் இவரது கணவர் கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு கணவரது மூன்றாம் நாள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு போபாலின் ராணியாக 1819 ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்தார். இந்திய முஸ்லிம்கள் வரலாற்றில் முதல் பெண் ஆட்சியாளரும், போபால் சமஸ்தானத்தின் முதல் பெண் ஆட்சியாளரும் இவர்தான்.
இலக்கு லட்சியம் எல்லோருக்கும் இருக்கும். அதை அடைய தகுதிப்படுத்திக் கொள்பவர்களால் மட்டுமே தங்களது துறைகளில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். ஆசைக்காக எதையும் அடைய நினைப்பவர்கள் வேர் பிடிக்காத மரங்கள் போல் சேதாரத்தோடு சரிந்து போவார்கள்.
குத்சியா பேகம் முதல் வகை, ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அவர் அதற்கு ஏற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். குதிரையேற்றம், ஆயுதங்களை பயன்படுத்தும் முறைகளைக் கற்றுத் தேறினார். கொந்தளிப்பான நேரங்களில் ஆட்சியை ஆளுமை செய்யும் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னாட்களில் பல போர்க்களங்களில் கலந்து கொண்டு எதிரிகளுக்கு தன் வலிமையை உணர்த்தினார்
அவருடைய ஒரே மகள் சிக்கந்தர் பேகத்தை அடுத்த ஆட்சியாளராக உருவாக்க சிறுவயதில் இருந்தே அவரை பயிற்றுவித்தார். இரண்டு வயதிலேயே மகளை ஆட்சியாளராக அறிவித்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவராக இருந்தார். மக்கள் இலகுவில் தன்னை நெருங்கும் வகையில் இயல்பாக இருந்து மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முறையிட வழியமைத்தார். மத பேதமில்லாமல் அனைவரையும் ஒன்று போல் நடத்தினார்.
போபால் ரயில் நிலைய கட்டுமானத்திற்கு தனது சொந்தப் பணத்தை வழங்கினார். போபால் நகரம் முழுவதும் இலவசமாக தண்ணீர் வழங்கும் குழாய் அமைத்தார். நிரந்தர நன்மையாக எப்போதும் இலவசமாக மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்தத் திட்டம் போபால் இந்திய அரசின் கீழ் வரும் வரை நடைமுறையில் இருந்தது.
பள்ளிவாசல்கள் அமைத்தார், செராய் எனப்படும் ஓய்வு விடுதிகள் அமைத்தார், சாலைகள் அமைத்தார். பல தொண்டு காரியங்கள் வழியாக மக்களால் விரும்பப்படும் ஆட்சியாளராக தன்னை வரலாற்றில் பதிய வைத்துக் கொண்டார் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆட்சியாளர் குத்சியா பேகம்.
குத்சியா பேகம் மஸ்ஜித் 1833 ஆம் ஆண்டு அவரால் கட்டப்பட்டது, நகருக்கு மத்தியில் அமைந்த அந்த பள்ளிவாசலைச் சுற்றி கடை வீதிகளை அமைத்தார்.
அவர் கட்டிய கௌஹர் மஹால் என்ற அரண்மனை இந்து மற்றும் முகலாய கட்டிடக்கலையின் அமைப்பில் உள்ளது. இப்போது முறையான மறுசீரமைப்புக்குப் பிறகு இன்றும் கலை மற்றும் கைவினை கண்காட்சிக்கான ஒரு பிரபலமான இடமாக இது விளங்குகிறது.
மக்கள் அனைவரும் இரவு உணவு உண்டனர் என்ற செய்தி வந்த பின்னரே அவரும் உண்பார் என்கிற அளவுக்கு மக்களின் மேல் கரிசனம் உள்ளவராக இருந்தார்.
1837 ஆம் ஆண்டு நவாப் குத்சியா பேகம் மரணித்தார் அதுவரை அவரே ஆட்சியாளராக இருந்தார்.
நவாப் சிக்கந்தர் பேகம் (1818 - 30 ளிநீt 1868)
1863 ஆம் ஆண்டு மே ஆம் தேதி the illustrated  london news பத்திரிக்கை the begum of bhopal என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் : போபால் நகரம் சுத்தமான நகரம், அதன் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது, இருண்ட பிறகு எண்ணெய் விளக்குகள் மூலம் தெருக்களில் வெளிச்சம் ஏற்றப்படுகிறது என்று போபால் நகரம் குறித்தும் அதன் ஆட்சியாளர் குறித்தும் நல்லம்சங்கள் குறிப்பிடப்பட்டன.

sikkander her minister
அந்த ஆட்சியாளர் போபாலின் முதல் ராணி குத்சியா பேகத்தின் ஒரே மகள் நவாப் சிக்கந்தர் பேகம். இவர் 1844 ஆம் ஆண்டு போபாலின் இரண்டாவது பெண் ஆட்சியாளராக அரியணை ஏறினார். இவரும் தாயின் தடத்தில் தொடர்ந்து பயணித்தார்.
சிறந்த நிர்வாகியாகவும், மக்கள் நல விரும்புகிறவராகவும், நல்ல முஸ்லிமாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
சிக்கந்தர் பேகம் (சிக்கந்தர் என்ற பெயர் அலென்ஸாண்டர் தி கிரேட் அல்லது சிக்கந்தர் துல்கர்னைன் என்ற பெயரின் அரபி வாசகம்) பெயருக்கு ஏற்றார் போல் துணிச்சலானவர். அனைத்து தற்காப்பு கலைகளிலும் கற்றுத் தேறியவர். பல போர்களில் கலந்து கொண்டார்.
சிறுவயது முதலே பட்டை தீட்டப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட அவர் அரசு நிர்வாகத்தை தனது சீரான சிறப்பான அணுகுமுறைகளால் மேம்ப்படுத்தினார். 1835 ஏப்ரல் 18 இல் ஜாஹாங்கிர் முஹம்மது கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் போபாலின் மூன்றாவது பெண் ஆட்சியாளராக இருந்த ஷா ஜஹான் பேகம்.
இவர் வருவாய் மற்றும் வர்த்தகத்துறைகளை சீராக்க சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். நிலங்களுக்கு எல்லை நிர்ணயித்தார். உள் மாவட்டங்களில் தொடர்ந்து பயணம் செய்து விவசாயிகளின் நிலைமையை ஆராய்ந்தார். விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தினார். விவசாயிகளை அரசு அதிகாரிகளின் பிடுங்கலிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
போபாலை 3 மாவட்டங்களாகவும் 21 பர்கானாக்களாகவும் பிரித்தார். மக்களே முன் வந்து விருப்பத்துடன் கொடுக்கும் வகையில் வரி வசூலிக்க புதிய விதிகளை உருவாக்கினார். சாலைகள் போடப்பட்டு எல்லா ஊர்களும் தலை நகர் போபாலோடு இணைக்கப்பட்டது.
மௌலவி ஜமாலுத்தீன் கான் சாஹிப் அவர்களுக்கு முதன்மை அமைச்சர் பதவி அளித்தார்.
ஒழுக்க நெறிமுறைகளை கண்டிப்புடன் பேணுபவராக இருந்தார். சிறந்த நிர்வாகியாகவும், நுணுக்கமான சிந்தனையுள்ளவராகவும், தனித் திறன் கொண்டவராகவும், நீதியானவராகவும் இருந்தார். அரசியல் விவாதங்களில் இஸ்லாமியக் கோட்பாடுகளை பேணுபவராக இருந்தார்.
தில்லி ஜும்ஆ மஸ்ஜிதின் பால் ஈர்க்கப்பட்ட சிக்கந்தர் பேகம் 1847 ஆம் ஆண்டு மோதி மஸ்ஜித் என்னும் பெயரில் அதே போன்ற ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். இன்றும் அந்த பள்ளிவாசல் நல்ல நிலையில் உள்ளது. வெண்மையாக பளபளப்புடன் காணப்படுவதன் காரணமாக இந்த பள்ளிவாசல் ‘முத்து மஸ்ஜித்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
ஷாஹி மஹால், இந்திய - இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைகளின் விந்தையான கலவையில் இவரது காலத்தில் கட்டப்பட்ட மற்றொரு முக்கியமான கட்டிடமாகும்.
ஒருமுறை சிக்கந்தர் பேகம் வருகை தந்த போது தில்லி ஜும்ஆ மஸ்ஜித் கதவுகள் மூடப்பட்டு இருப்பதைக் கண்டார். பின் இவருக்காக ஆங்கில அதிகாரிகள் பள்ளிவாசலைத் திறந்து விட்டனர்.
போபாலின் அரசியல் முகவரான கேப்டன் ஹட்சின்சனுக்கு இந்த தகவலை எழுதி அனுப்பி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
மீண்டும் ஜும்ஆ மஸ்ஜித் திறக்கப்பட்ட போது உள்ளே சென்று தொழுது துஆ செய்த முதல் நபர் சிக்கந்தர் பேகம்.
இந்தியாவிலிருந்து ஹஜ் செய்யச் சென்ற முதல் நபர் நவாப் சிக்கந்தர் பேகம் அவர்கள் தான். 1863 ஆம் ஆண்டு ஆயிரம் நபர்களை தன்னுடைய சொந்த செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற தன்னுடன் அழைத்து சென்று ஹஜ் செய்து விட்டு திரும்பினார்.
தான் ஹஜ் செய்த வரலாற்று நிகழ்வைத் தொகுத்து எழுதியவர் அதில் ஆசியாவில் வாழும் முஸ்லிம் பெண்கள், காலணித்துவம், உலக வரலாறு குறித்தும் எழுதியுள்ளார். 1868 ஆம் ஆண்டு மரணித்தார்.
நவாப் ஷா ஜஹான் பேகம்

sh jahan begum
போபால் மாகாணத்தின் இரண்டாவது பேகம் சிக்கந்தர் பேகத்தின் மகள் ஷா ஜஹான் பேகம். 1838 ஜூலை 29 இல் போபாலுக்கு அருகில் உள்ள இஸ்லாம் நகரில் பிறந்தார்.
போபாலின் மூன்றாவது ஆட்சியாளராக அவரது ஆறாவது வயதில் 1844 இல் அறிவிக்கப்பட்டார். 1844 - 60 வரையும் பின்பு இரண்டாவது முறையாக 1868 - 1901 தனது மரணம் வரையிலும் போபாலின் ஆட்சியாளராக இருந்தார்.
1855 இல் வாகி முஹம்மது கான் என்பரை திருமணம் செய்தார். 1867 இல் இவரது கணவர் மரணித்தார். இவர்களது மூத்த மகள் தான் போபாலின் நான்காவது நவாப் பேகம் சுல்தான் கைகுஸ்ர் ஜஹான் பேகம். முதல் கணவர் மரணத்திற்குப் பின்பு முடங்கி விடாமல் சித்தீக் ஹசன் கான் என்பரை 1871 இல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
1860 இல் இவரது தாய் சிக்கந்தர் பேகத்தை பிரிட்டிஷ் அரசு போபால் நவாபாக அங்கீகரித்தது. 1868 இல் இவரது தாய் மரணித்த பிறகு இவர் போபால் நவாபாக அறிவிக்கப்பட்டார்.
ஷாஜகான் பேகம் அவரது பெயரைக் கொண்ட முகலாய ஷாஜகன் போன்று கட்டிடக்கலை மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1871 ஆம் ஆண்டு தாஜுல் மஸ்ஜிதை கட்டினார். தாஜ்மஹால் போல் உலகின் மிகச் சிறந்த கட்டிடங்களில் ஒன்று தாஜுல் மஸ்ஜித். தாஜுல் மஸ்ஜித் ‘நவீன இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் அதில் நூலகம், ஆராய்ச்சி மையம் மற்றும் ஒரு அரபு பாடசாலை மதரஸா ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. தொடர்ந்து பாடசாலைகள், சிராய் (ஓய்வு இல்லங்கள்), நூலகம் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவைகளை ஏற்படுத்தினார்.
இறைநம்பிக்கை உள்ளவராகவும் படிப்பார்வம் உள்ளவராகவும் இருந்தார்.
போபாலில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டங்களை இயற்றினார். இந்து சொத்துகளை பாதுகாப்பதற்கான ஒரு இந்து சொத்து அறக்கட்டளை நிறுவினார். போபாலின் வரலாற்றை “தாஜுல் இக்பால்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தமாக எழுதி ஆவணப்படுத்தினார்.
அவர் போபால் நகரில் பின்வரும் முக்கிய சேவைகளை அறிமுகப்படுத்தினார் : - 1862 ஆம் ஆண்டில் அஞ்சல் அமைப்பு முறையை கொண்டு வந்தார். முதல் தபால் ஸ்டாம்பை அவர் வெளியிட்டார்
அரசு சார்பில் ஹிவிஞிகிஜிஹிலி என்ற பத்திரிக்கையை 1871 இல் ஆரம்பித்தார்.
1885 இல் ஹோசாங்காபாத் மற்றும் போபால் இடையே ரயில்வே சேவை கொண்டு வந்தார்.
ஷா ஜஹானபாத்தில் ஹைட்ரோ பவர் யூனிட் ஆரப்பித்தார்.
முதன் முதலாக தொழில் துறை கொள்கைக்கான ப்ளு பிரிண்ட் கொண்டு வந்தார். uk
மோட்டியா தலாப், நூர் மஹால் ஏரி, முன்ஷி ஹுசைன் கான் தலாப் ஆகிய மூன்று ஏரிகளை அமைத்தார்.
இங்கிலாந்த், லண்டனில் இருந்து 30 மைல் தூரத்தில் உள்ள கீஷீளீவீஸீரீ நகரத்தில் 1882 இல் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஷா ஜஹான் பள்ளிவாசல் கட்டுவதற்கு பொருளாதாரத்தை வழங்கினார்.
தனது தாய் மற்றும் பாட்டியின் வழியில் மக்களின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். விவசாயத்திற்கு அடிப்படையான பாசன வசதிகள் செய்து கொடுத்தார்.
அலிகார் நகரில் உள்ள அலிகர் யுனிவர்சிட்டி என்றறியப்படும் முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி நிறுவப்படுவதற்கு தாராளமாக பங்களிப்பு செய்தார்.
அவர் அலிகர் முஸ்லிம் யுனிவர்சிட்டியில் சுல்தான் ஜஹான் விடுதி, நஸ்ருல்லாஹ் விடுதி, உபைதுல்லாஹ் விடுதி ஆகிய 3 விடுதிகள் கட்டியுள்ளார்.
சவூதி அரேபியா மக்காவில் போபால் மக்கள் தங்குவதற்கு அறைகளை கட்டினார். இன்று, ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் போபால் முஸ்லிம்கள் இலவசமாக இந்த அறைகளில் தங்கலாம்.