உண்மையான கல்வி

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பான வரலாறு
இருக்கிறது.
கல்வி கலாச்சாரம் திருமணம் ஊர்விழாக்கள் உறவுகள் ஒன்றுகூடும் குடும்ப விழாக்கள்
பொருளீட்டும் வழிமுறைகள் உணவு மருந்து கட்டிடக்கலை தற்காப்புக் கலைகள் என்று
முஸ்லிம் வாழ்வியல் தொடர்பான அனைத்திற்கும் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம்
இருக்கிறது.
நமது முன்னோர்களின் பெருமைமிக்க வாழ்வை வரலாறை வழிகாட்டுதலை புத்தக
வடிவில் பதிவு செய்யும் ஆர்வம் அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்பிக்கும் ஆர்வம்
ஒரு சில ஊர்வாசிகளுக்கு மட்டுமே இருக்கிறது.
அத்தகைய ஒரு சிறப்பான வரலாறு கொண்ட ஊர் தான் கடலூர் மாவட்டம்
பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்). இந்த ஊரின் வரலாறு புத்தக வடிவில் தற்போது
பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான முயற்சி.
பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர் ஹமீது மரைக்காயர் அவர்கள் இந்த நூலை
தொகுத்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த மஹ்மூது பந்தர் என்ற அழகான கடலோர
ஆன்மீக நகரம் கடந்து வந்த பாதையை அதன் கலாச்சார அடையாளங்களை தக்க
தரவுகளோடு திரட்டி ஆவணப்படுத்தும் ஆழமான அவசியமான முயற்சியில் ஈடுபட்டு
அற்புதமான தொகுப்பாக வடிவமைத்துள்ளார்.
தமிழர் கடலின் (இந்தியப் பெருங்கடல்) தென்னிந்திய கரையோரப் பகுதிகளுக்கு இஸ்லாத்தின்
அறிமுகம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போதே நடந்துவிட்டது.
இறுதி வேதமான அல்குர்ஆனின் ஓரிரு வசனங்கள் இறங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே
இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய மக்கள் தான் தென்னிந்திய தமிழ் மக்கள். அதாவது
இன்றைய தமிழக முஸ்லிம்களின் முன்னோர்கள்.
பழவேற்காடு, மயிலாப்பூர், புதுப்பட்டினம், புதுவை, கடலூர், பரங்கிப்பேட்டை,
திருமுல்லைவாசல், பூம்புகார், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம்,
தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம்,
சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், மந்திரிப்பட்டினம், கட்டுமாவடி, மணமேல்குடி,
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், SPபட்டினம், தொண்டி,
நம்புதாழை, தேவிப்பட்டினம், பனைகுளம், அழகன்குளம், வேதாளை, புதுமடம்,
பெரியபட்டினம், கீழக்கரை, குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், குளச்சல் போன்ற
கடற்கரை முஸ்லிம் ஊர்கள் அனைத்தும் சர்வதேச துறைமுக நகரங்களாக விளங்கின.
வரலாறு முழுக்க மரக்கலங்களை வைத்து தமிழக விளை பொருட்களையும் உற்பத்திப்
பொருட்களையும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஏற்றுமதி செய்து பல நாட்டு வணிகர்களோடு

மக்களோடு அரசுகளோடு வணிக கலாச்சார ராஜீய தொடர்பு கொண்டிருந்த பெரு வணிக
சமூகம் தான் தமிழக கடற்கரையோர முஸ்லிம் சமூகம். அதாவது மரைக்காயர்கள்.
கி.பி.1600 வரை தமிழர் கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த மரைக்காயர்கள்
போர்ச்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கொள்ளையர்களின் ஊடுருவல்
காரணமாக தங்களது வணிக செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்பட்டது.
மாறும் உலகில் தங்களை தரம் உயர்த்திக் கொள்ளாத யாரும் எதுவும் காலத்தால்
பின்தங்கி தனது அடையாளத்தை இழந்துவிடும் என்பதற்கு தமிழக முஸ்லிம்களின் கடல்
வாணிபம் ஒரு எடுத்துக்காட்டு.
தமிழக முஸ்லிம்களின் சுதந்திரமான கடல் வணிகம் 1950 க்குப் பிறகு முற்றிலும் நின்று
போய்விட்டது.
தங்களுக்கு சமூக ரீதியாக பெருமை சேர்க்கும் மரைக்காயர் என்ற வரலாற்று
அடையாளத்திற்கும் அவர்களின் இன்றைய வாழ்விற்கும் பொருளீட்டும் முறைக்கும்
தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
தமது முன்னோர்கள் தமிழர் கடலின் ஆழ அகலத்தை அறிந்தவர்கள் என்ற செய்தியே
இன்றைய தலைமுறைக்கு புதிய ஆச்சரியமான செய்தியாக தெரிகிறது.
எந்த ஒரு சமூகம் தான் கடந்து வந்த பாதையை தனது முன்னோர்களின் வாழ்வை
வழிமுறையை அறிந்திருக்கவில்லையோ முன்னோர்களின் வாழ்வியல் அடிப்படையில்
தங்களது சமூக பொருளாதார முன்னெடுப்புகளை நகர்த்தவில்லையோ அந்த சமூகம்
தனது உயர்ந்த மதிப்பீடுகளை பாரம்பரிய அடையாளத்தை இழந்து இலக்கு இல்லாத
சமூகமாக மாறிவிடும்.
கடலில் மிதக்கும் துடுப்பு இல்லாத படகைப்போல காற்று அடிக்கும் பக்கமெல்லாம் படகு
ஓடுமே தவிர கரை தெரியாது. கரையை அடையவும் இயலாது.
கண்டதையும் காணாததையும் கல்வியாக கற்றுத்தந்து பிள்ளைகளை நவீன கால
அடிமைகளாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ கல்வி அமைப்புக்கு மாற்றாக
தான் பிறந்த மண்ணின் மக்களின் தனது மூத்தோர்களின் வாழ்வை வளரும்
பிள்ளைகளுக்கு முறையாக தக்க தரவுகளோடு கற்றுத் தருவதற்குப் பெயர்தான்
உண்மையான கல்வி.
இதை இன்றைய எந்தப் பள்ளிக்கூடமும் பாடப் புத்தகமும் கற்றுத்தராது. தாயும் தந்தையும்
அக்கறையுடைய சமூக தலைமையும் தான் கற்றுத்தர வேண்டும்.
வரலாற்றை பிள்ளைகளுக்கு கற்றுத்தாருங்கள். வாசிக்கத் தூண்டுங்கள். வரலாற்றோடு
தொடர்புடைய வாழ்வை அமைத்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள்.
மரபிலேயே வணிக ஆளுமை மிக்க நமது பிள்ளைகளை கடும் போட்டிகள் நிறைந்த
இன்றைய உலக வணிக கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தூண்ட வேண்டும். அவர்களின்
மரபார்ந்த ஆற்றலை முனைப்படுத்திட வேண்டும்.