முஸ்லிம்களின் அறிவுப் பாதை...

இந்தியா குடியரசான காலத்தில் இருந்து மாறிவரும் கல்வி சமூக பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம் உம்மத்தின் நிலையை ஒப்பீடு செய்து எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் படித்த பொறுப்புமிக்க சமூகமாக உருவாக வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் வாழ்ந்த கல்வியாளர்கள் முஸ்லிம் வள்ளல் பெருமக்கள் தங்கள் சொத்துக்களை வக்ஃப் செய்து ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்கள்.
கல்வியைக் கொண்டு தான் உம்மத்தின் சமூக பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அன்றைய மூத்த தலைமுறை முழுமையாக உள்வாங்கியதின் விளைவுகள் தான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் வியாபித்து நிற்கும் முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள்.
வள்ளல்களின் தியாகத்தில் உருவான இத்தகைய கல்வி நிறுவனங்களிலிருந்து தான் கடந்த 70 ஆண்டுகளில் இலட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகி வந்துள்ளனர். உயர்ந்த பொறுப்புகளில் உலகம் முழுவதும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்கின்றனர்.
ஒரு தலைமுறை தங்களின் சொத்துக்களை நேரத்தை அறிவை தியாகம் செய்தது. 70 ஆண்டுகளில் ஓரளவிற்கு படித்த தலைமுறையாக இன்றைய முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது.
முஸ்லிம் உம்மத்தின் தேவைகளும் நெருக்கடிகளும் ஒவ்வொரு காலத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும்.
இன்றும் இனிவரும் காலத்திற்கும் முஸ்லிம்களில் படித்த பட்டதாரிகள் மட்டும் போதாது அறிவில் தனிச்சிறப்பு பெற்றவர்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.
முஸ்லிம் சமூகம் வெறும் பட்டதாரிகளை உருவாக்குவதை விட துறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்க வேண்டும்.
சமூக அரசியல் தளங்களில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் முஸ்லிம் சமூகம் தங்களது பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இதை கவனத்தில் கொண்டு உம்மத்தில் துறை சார்ந்த வல்லுநர்களை இஸ்லாமிய அறிவோடு உருவாக்கும் இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ள கல்லூரி தான் பைத்துல் ஹிக்மா.
சென்ற 16-2-2018 அன்று பாண்டிச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் கடுவனுர் கிராமத்தில் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்திற்காக நிலம் வாங்கப்பட்டு கட்டிடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
தமிழக முஸ்லிம்களின் அறிவுப் பாதையை சீர்படுத்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்
தொலைதூர பயணத்தில் ஒரு மைல்கல்... பைத்துல் ஹிக்மா.
பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் முஸ்லிம் உம்மத்தின் இன்றைய... எதிர்கால... தேவையின்
அடையாளமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் கட்டிடப்பணிகள் துவக்க நிகழ்ச்சி நிறுவனம் அமைய உள்ள புதுவை
மாநிலம் கடுவனுரில் நடைபெற்றது.
உலமாக்கள், நீதியரசர்கள், கல்வியாளர்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமுதாய புரவலர்கள்,
சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதகள் என முஸ்லிம் உம்மத்தின் வடிவமாக இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.
பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் முஸ்லிம்களிலும் பிற சமூககத்திலும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சட்ட வல்லுனர்களாக, அரசின் உயர் அதிகாரிகளாக, சிறந்த இதழியலாளர்களாக, சர்வதேச தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு தேவைப்படும் அறிவுப் போராளிகளை சமூகம் தன் செலவில் உருவாக்கினால் தான் அவர்களிடம் சமூக சிந்தனை மிகைத்திருக்கும்.
கட்டிடப்பணிகள் விரைந்து முடிவடைய
துஆ செய்யுங்கள்.
*********************
BAITHUL HIKMA
...............................
Jamiathul Hikma
Kaleefa Omar School of Law
Mahatma Gandhi School of Civil Service
Moulana Azad School of Journalism
Indo - Arab School of Business