இப்ராஹீம் நபி காட்டித் தரும் அழகிய வாழ்க்கை நெறி!

நீருக்குள் அடங்கிப் போகாமல் மேல் எழும்பும் நீர்க் குமிழிகள் போல சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில கேள்விகள் மேலெழுந்து வந்து கொண்டே இருக்கும்.
எதற்காக வாழ்கிறேன், யாருக்காக வாழ்கிறேன், என்னை உருவாக்கியன் யார், எதற்காக உருவாக்கினான், அவன் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதில்களின் ஆழம் தெரியாமல் மனிதர்கள் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள்.
இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் தேடல்களின் ஊடாக “இறைவன், பிரபஞ்சம், உலகம், மனிதன், வாழ்வு, மரணம், வழிபாடுகள்’’ என மனிதனின் தேடலில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளான் இறைவன். உலகப் பொதுமறை குர்ஆனில் உள்ள இப்றாஹீம் நபியின் வரலாற்றுச் செய்திகளை தொகுத்துப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கை குறித்த தெளிவைப் பெறுவது நிச்சயம்.
மனித வாழ்வின் அளவுகோல்கள், மதிப்பீடுகள், கணிப்பீடுகள் என எங்கும் எதிலும் எப்பொழுதும் இறைவன் முதன்மைப்படுத்தப் படுகின்றவனாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை நெறி என்பதை மனித சமூகத்துக்கு வாழ்ந்து காட்டினார் இப்றாஹீம் நபி.
இப்றாஹீம் நபி சொல்வார் “எனது வாழ்வும் மரணமும், வணக்கமும் வழிபாடுகளும் அகிலங்களின் இரட்சகனான இறைவனுக்கு உரியனவாகும்.” திருமணம், குடும்ப வாழ்வு உள்ளிட்ட வாழ்வின் அத்தனை செயல்பாடுகளும் இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்ராஹீம் நபியின் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளும் சோகங்களும், வெற்றிகளும், ஏற்றங்களும் கடந்து போக வேண்டிய அடுத்த கட்ட நகர்வுகளே. அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து செல்பவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கு இப்றாஹீம் நபி அவர்களது வாழ்க்கை ஒரு கண்ணாடி.அவர் மட்டுமல்ல இறைக்கட்டளைக்கு இணங்கிப் போகும் மனைவி, இறைச் சோதனையை இன்பமுடன் ஏற்ற மகன் என அவரைச் சுற்றி இருந்தவர்களும் மனித சமூகத்திற்கு பாடமாகிப் போனார்கள். இறைவனும் அவர்களது நடைமுறைகளை அங்கீகரித்து அதற்கு “இப்றாஹீம் நபியின் மார்க்கம்” என்று சான்று வழங்கினான்.
இப்றாஹீம் நபி அவர்கள் முன் மொழிந்த மார்க்கம் தான் முஹம்மது நபி அவர்களால் இஸ்லாம் என்ற பெயரில் சத்தியமார்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்றாஹீம் நபியின் வாழ்க்கை சொல்லும் அடிப்படை ஒன்றுதான்
உலகத்து இரட்சகனை ஆய்ந்தறிந்து கொள்!வாழும் காலம் முழுவதும் அவனுக்காக துணிந்து நில்! தேடலின் ஊடாக, சிந்தனை வழியாக இறைவனை அறிவோம்! அவனுக்கானதே வாழ்க்கை என்பதை உணர்ந்து எதையும் கடந்து செல்வோம்!நமது இலக்கு இறைவனை இன்முகத்துடன் சந்திப்பதே!