பரிமாறப்படும் உதவியே சமூகத்தின் பலம்!

ஒரு சமூகத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் வருகின்றபோது அந்தச் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கடமையாக ஆகிவிடுகின்ற பல்வேறு விஷ
யங்கள் இருக்கின்றன.
சிலருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கியிருப்பான், சிலருக்கு களத்தில் குதித்து உழைக்கும் உடல் பலத்தை, துணிவை வழங்கியிருக்கின்றான், சிலருக்கு சிறந்த மொழியாற்றல், எழுத்தாற்றல் பேச்சாற்றலை வழங்கியிருக்கின்றான், அதிலும் சிலருக்கு பன்மொழிப் புலமை கிடைக்கப் பெற்றிருக்கிறது.
இன்னும் சிலருக்கு பிறருடன் நல்ல முறையில் உரையாடும் ஆளுமை செல்வாக்கு பரந்த அளவில் தொடர்புகள் கிடைக்கப் பெற்றிருக்கும், சிலரிடம் கூட்டங்கள் சந்திப்புக்கள் நடத்துவதற்கான இட வசதிகள் இருக்கும், சிலரிடம் அறிஞர்களை உலமாக்களை புத்திஜீவிகளை செயல்பாட்டாளர்களை அழைத்துச் செல்ல வாகன வசதிகள் இருக்கலாம்.
இளம் தலை முறையினரிடம் நவீன தகவல் தொழில் நுட்ப அறிவு இருக்கிறது, சிறந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் திறனும் நுட்பங்களும் இருக்கின்றன, சிறந்தமுறையில் மேலாண்மை செய்யும் நிர்வாக பண்புகள் இருக்கின்றன, துறைசார் நிபுணர்களிடம் பல்வேறு எதிர்பார்க்கப்படுகின்ற வளங்கள் இருக்கின்றன.
இன்னும் பலரிடம் அல்லாஹ் செல்வத்தை தந்து வைத்திருக்கின்றான், இவ்வாறு பல்வேறு தரப்புக்களிடமும் பல்வேறு அருள் பாக்கியங்களை அள்ளி வழங்கியுள்ளான் அல்லாஹ்.
கூட்டுச் சமூக வாழ்வில் தத்தமது பங்களிப்புக்களை தத்தமது சக்திகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் செய்தேயாக வேண்டும். இது அவரவர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செய்வதல்ல. ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
அல்ஹம்துலில்லாஹ், தமது சிரமத்திற்கும், கடினமான சூழலுக்கும் குறை நிறைகளுக்கும் மத்தியில் மிகப் பெரும் தியாகங்களோடு பலர் களத்தில் சிறந்த பங்களிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும் தேவைகளும் கடமைகளும் இருக்கின்றன அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்த சமூகங்களில் உள்ள எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், நீதி நியாயத்திற்காக குரல் கொடுப்போர் ஆகியோரை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு தோள் கொடுப்பதும் மிகவும் அவசியம்.
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற உயரிய பணிகளுக்கு தாராளாமாக உதவுங்கள், இயன்ற பங்களிப்பினை கட்டாயம் நாம் செய்ய வேண்டும், இல்லையேல் நிச்சயமாக காலம் கடந்து கை சேதப்படுவோம் அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள், அமானிதங்கள் பற்றி பதில் கூற கடமைப் பட்டுள்ளோம்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அறிவு, ஆற்றல்கள், இயல்புகள், உள்ளுணர்வுகள், திறமைகள், பலம், பலவீனம், வளங்கள்...
வளரும் வாழும் கற்கும் சுற்றுச் சூழல்கள், சந்தர்ப்பங்கள், வசதி வாய்ப்புக்கள், குடும்ப சமூக பொருளாதார காரணிகள் என ஒவ்வொ
ருவரும் பெற்றவைகள், கற்றவைகள், பட்டவைகள்..
ஒவ்வொருவரும் வாழ்வில் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள், தேடல்கள், தேவைகள், ஆசைகள்.... ஒவ்வொருவர் மீதுமுள்ள பொறுப்புக்கள், சுமைகள், எல்லாமே வேறுபட்டவைகளாக இருக்கின்றன...
ஒவ்வொரு ஆன்மாவும் தனித்துவமான ஒரு காரணியின் மூலம் அல்லாஹ்வின் அருளை, கருணையை, பாவமன்னிப்பை, சுவனத்தை அடைந்து கொள்ள முடியும்..
ஒவ்வொரு ஆத்மாவையும் அவற்றின் சக்திக்கு ஏற்பவே எல்லாம் வல்ல அல்லாஹ் சோதிக்கின்றான், எல்லோரையும் எல்லா நிலையிலும் அங்கீகரிக்க காத்திருக்கின்றான்...
முழுமையாக நம்மை நாம் ஒவ்வொருவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்..!
அல்லாஹ்வின் கருணையின் மீது அருளின் மீது எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்!
“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;)
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைவனை மறுத்து நிராகரிக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (ஸுரத்துல் பகரா 2: 286)”