மனசே மனசே... உன் மாயமென்ன..?

அக்டோபர் - 10 என்றதும் உடனே நம் நினைவிற்கு வரவேண்டியது அன்று
தான் சர்வதேச மனநல நாள். இந்நாள் நமது ஐ நா சபையால் அங்கீகரிக்கப்பட்டு 1982ம் ஆண்டு முதல் இத்தினம் மனநல விழிப்புணர்வு தினமாக ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்நாளில் நாமும் நம்மனம் குறித்து சில தகவல்களை உள்வாங்கி வைத்துக் கொள்வது நமக்கு நல்லது தானே...!
இதையட்டித்தான் நமது இந்திய தேசத்தில் அக்டோபர் 4 முதல்10வரை மனநலவாரம் கொண்டாடப்படுகிறது நீங்களும் நானும் நினைப்பது போல் மனநலம் என்பது சர்வசாதாரணமான ஒரு விசயமல்ல. சொல்லப் போனால் நமது உடல் நலத்தை விட அதிகம் கவனிக்கப்பட வேண்டியதும் கண்காணிக்கப்பட வேண்டியதும் நமது மனநலம் தான் என்றால் அது மிகையல்ல..! இன்றைக்கு சர்வதேச அளவில் சுமார் 450 மில்லியன் மக்களும், இந்திய அளவில் சுமார் 35 கோடிப் பேரும், தமிழக அளவில் சுமார் 65 இலட்சம் பேரும் இம்மன நலத்தால் பாதிப்படைந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் பல புலம்புகின்றன.
இந்நிலையில்இன்றுவரைஅதற்காக நாம் என்ன செய்தோம்..? யோசிக்கையில் பூஜ்யமே நம் கண்முன் சிரித்துக் கொண்டு சுழல்கிறது. குறிப்பாக 15 வயது முதல் 45 வயதுவரையுள்ளவர்கள் தான் அதிகம் மன வியாதியால் பாதிக்கப்படுகிறார்களாம். இவர்கள்தான் இன்றைக்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள், கண்காணிக்கப்பட வேண்டியவர்களும் கூட...!
மன் என்ற மூலச் சொல்லிருந்து தான் மனசு என்ற சொல் பிறந்தது. பிறகு அதுவே மனுசன், மனுசி என்றாயிற்று. ஆக, மனசு உள்ளவனே மனுசன். அவனையே நாம் மனிதன் என்று அழைக்கிறோம். எனவே மனம் உள்ளவன்தான் மனிதன். அதாவது தன் (சுய)மனமும், தன் மானமும் உள்ள ஒருவன் தான் உண்மையான மனிதன் என்றால் அது மிகையல்ல என்ற பெயர்ச்சொல் வரலாற்றையும் நாம் இத்துடன் இணைந்தறிவது நமக்கு இன்னும் நல்லது.
மனிதமனம் அது மென்மையானதா.? இல்லை வன்மையானதா..? பதில் நம் உடலைப் பொருத்து, நம் சுற்றுச் சூழலைப் பொருத்து, நம் குடும்பத்தைப் பொருத்து, நம் செல்வச் செழிப்பைப் பொருத்து என பல்வேறு வகையான பொருத்தங்களைப் பொருத்தே நம் மனம் அவ்விரண்டில் ஒன்றாக அமையும்.
எனவே மனம் என்பது சுயமாக தன்னை ஒருபோதும் அது அமைத்துக் கொள்வதில்லை. அப்படி அதற்கு தன்னை அமைத்துக் கொள்ளவும் தெரியாது.
பொதுவாக நம்மில் பலர், பைத்தியம் பிடித்து தெருத் தெருவாக சுற்றுபவர்களை, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி உளறிக் கொண்டிருப்பவர்களை, ஆடைகளைக் கிழித்து விட்டுக் கொண்டு திரிபவர்களைத் தான் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, மனநல மருத்துவரை பைத்தியம் பிடித்தவர்கள் தான் பார்க்க வேண்டும் என்று விளங்கி வைத்திருப்பதும்முற்றிலும் தவறான ஒரு வழிமுறையே..!
சொல்லப்போனால் உண்மையில் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம். நமது கோபம், கவலை, விரக்தி, விரோதம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம்,பெருமை, பொறாமை, பொய்மை என ஏகப்பட்ட நமது தீயகுணங்களில் ஏதேனும் ஒன்று மிகைப்பதும் கூட நமது மனநல பாதிப்புகளில் ஒன்று தான் என்பது நம்மில் பலரும் விளங்குவதில்லை.
இந்தக் கோணத்தில் இப்போது சற்று நின்று நிதானமாக நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாமும் கூட ஏதோ ஒரு வகையில் பைத்தியகாரர்கள் தான் ஸாரி... மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்பது புரியவரும்.
அதுமட்டுமல்ல... நமது மனதில் அன்பு, பாசம், சேவை, ஈகை, தர்மம்,மன்னிப்பு, அனுசரிப்பு என ஏகப்பட்ட நேர்மறையான பண்புகளும் உண்டு. ஆனால், அவையும் கூட அளவை மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் இதுவும் கூட இன்னொரு வகையான மனநல பாதிப்பு தான் என்றால் அது நமக்கு சற்று என்ன பேராச்சிரியமாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மை அது தானே...! ஒருவர் அவர் தன்னிடம் இருப்பதையெல்லாம் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தால் நாம் அவரை என்னவென்று எடுத்துக் கொள்வோம்...? எந்தவொரு சராசரி மனிதனும் அப்படிச் செய்வதில்லையே... அதனால் தான் கூறுகிறோம் இவனும் ஒரு மனநோயாளி என்று...! இவ்விடத்தில் இறைமறை வசனம் ஒன்றை வாசித்து வைத்துக் கொள்வது நமக்கு ரொம்பவும் நல்லது : “உன் நடையில் (மிகவேகமோ, அதிக தாமதமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்!” (அல்குர்ஆன் : 31:19)
“அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (உனது)மறுமை வீட்டைத் தேடிக் கொள்; எனினும், இந்த உலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதிக்கப்பட்ட பங்கை நீ) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய (அறவே) விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை” (அல்குர்ஆன் : 28:77) ஆக, நேர்மறையும், எதிர்மறையும் இப்படி ஒன்றையன்று மோதிக் கொண்டிருக்கையில் இவற்றை நாம் எப்போது சரி செய்யப்போகிறோம்...? எப்படி சரி செய்யப் போகிறோம்...? என்பதில் தான் நமது எதிர்கால நல்வாழ்வே நங்கூரமிட்டிருக்கிறது.
முன்னதாக நமது மனநலம் எவ்வாறு பாதிப்படைகிறது என்றும் நாம் சற்று திரும்பிப் பார்க்கவேண்டியதிருக்கிறது. ஏனெனில், சரிகள் சரிகளாக வேண்டுமானால், முதலில் தவறுகள்களையப்பட வேண்டும். பிறகு தானாகவே சரிகள் சரியாகிவிடும் என்பது எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தனிமை, தோல்வி, விரக்தி, பயம், சுய மரியாதைக்குறைவு, உறவுகளின் திடீர்மரணம், விவாகரத்து, வன்முறை,வேலையின்மை, தீராநோய், பாலுறவு
திருப்தியின்மை, தொடர் வறுமை, தவறான தொடர்பு, மது, வட்டி, கடன் தொல்லை, என எண்ணற்ற பல்வேறு காரணங்களினால் ஒருவரின் மன நிலை பாதிப்பு அடையலாம். இது தவிர திடீர் விபத்து, மூளைக்காயம், தொற்று நோய், மரபணு மாற்றம், குடும்பப் பாரம்பாரியம் போன்றவைகளினாலும் ஒருவரின் மன நிலை பாதிக்கப்படலாம். எனவே முதலில் நாம் கவனிக்க வேண்டியது அவரின் மனநிலை பாதிப்புக்கு மிகச்சரியான காரணம் எது என்று கண்டுபிடிப்பதுதான்.
சிலவற்றை ஓரளவு நம்மால் கண்டு பிடித்து விடமுடியும். எனினும் அதற்கென்றுள்ள மனநல மருத்துவர்களால் அவற்றை மிகத்துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கூறகிறோம் மன நல மருத்துவரை பார்ப்பதும், அவரிடம் ஆலோசனை பெறுவதும் ஏளனமான, கேவலமான,
வெட்கப்படத்தக்க, மறைத்து வைக்கப் பட வேண்டிய ஒரு செயலல்ல..! இதை முதலில் நம் சமூகத்தினர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது
உடலில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால், உடனே நாம் உடல் நல மருத்து வரைப் போய் பார்ப்பது போல் தான் நமது மனதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், உடனே நாம் மனநலமருத்துவரைப் போய் பார்க்க வேண்டும்.
இந்நிலை இங்கு ஏற்படாத வரை மனநோய்கள் இங்கிருந்து நீங்குவதென்பது நிச்சயமற்ற ஒன்றுதான். நமது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இந்த மனநோய்கும் நன்கு பொருந்தும். இதிலிருந்து நாம் விடுபட சில இலகுவான வழிகள் உள்ளன. அவற்றில்ஏதேனும் ஒன்றை நாம் கடைப்பிடித்தாலே போதும் பெரும்பாலான மனநோய்கள் நம்மை விட்டுநகன்று விடும்.
இதோஅவற்றில் சில...
*நல்ல எண்ணங்களை, நேர்மறைச்சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
*இறைவனின் முழு படைப்புகள் மீதும் அன்பு செலுத்திப் பழக வேண்டும்.
*யாரையும், எப்போதும் கருணைக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.
*எதையுமே நாம் இலகுவாக, ஈசியாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
*கோபங்களை அடக்கி, மன்னிப்பை மனதார வெளிப்படுத்த வேண்டும்.
*ஒருவருக்கொருவர் எப்போதும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
*நமக்கான சுற்றுப்புறச் சூழ்நிலைகளை இனிமைப் படுத்த வேண்டும்.
*எங்கேயும், எப்போதும் நடுநிலையை சரிவர பேணிப் பாதுகாக்கவேண்டும்.
* உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை தினசரி செய்து வரவேண்டும்.
*திக்ர், தியானங்களை அனுதினமும் விடாது அதிகப்படுத்த வேண்டும்.
நிறைவாக இறைமறை வசனம் ஒன்று நம் மனதைக் குறித்து நிறைவாகக் கூறிச் செல்கிறது. அந்த ஓரிரு வசனங்கள் மட்டும் இப்போதைக்கு நமக்கு போதுமானது. இதோ அவை..!
ஆன்மாவின் மீதும், அதை ஒழுங்கு படுத்தியவன் மீதும் சத்தியமாக அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆன்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். ஆனால், எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்து விட்டான். (அல்குர்ஆன் : 91:7-10)
எனவே நமது நஃப்ஸ் எனும் ஆன்மா பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உட்பட்டது என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது.
வாருங்கள்...
தூய மனங்களைப் போற்றுவோம்...!
தீய மனங்களை மாற்றுவோம்...!