ரமழான் விழுமியங்களை வளர்ப்பதற்கான காலம்

எம்.என்.இக்ராம் நளீமி
ஆன்மீகம் என்பது மனித வாழ்வின் அடிப்படையான ஒரு பகுதி. ஆனால், ஆன்மீகத்தையே முழுமையாக போதிப்பதாகச் சொல்லும் மதங்கள் மனித வாழ்விற்கு அதனைக் கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளன. மதங்கள் மனிதர்களுக்கு மதத்தை உண்டுபண்ணி அவனை மதபக்தனாக, தீவிர இயல்பு கொண்டவனாக மாற்றிவிட்டன. ஆன்மீகம் என்பது மென்னுணர்வுகளுடனும் திறன்களுடனும் தொடர்பானது. அதனை இன்று மதங்களிடம் எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. எனவே, மதத்தை சாராதஆன்மீகம் (Spiritual without being religious) குறித்து சிந்திக்க வேண்டும் என்று பேசுகின்ற ஒரு காலப்பகுதியில் ரமழான் நம்மை எதிர்நோக்கியுள்ளது.
ரமழானை சுருக்கமாக விளக்கினால் அது ஆன்மீகப் பாசறை என்று கூறலாம். அதற்கு பிரதான காரணம் விரதம் என்கின்ற நோன்பு முப்பது நாட்கள் அதில் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நோன்பைச்சூழ இஸ்லாத்தின் பெரும்பாலான ஆன்மீக வணக்க வழிபாடுகளும் ஒன்று திரண்டுள்ளன. அதன் மூலம் மனித மனம் செப்பனிடப்படுகிறது. அவனது நடத்தை சீர்படுத்தப்படுகிறது.
அந்த மாதத்தில் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் நல்லதோர் மாற்றத்தை ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தான் அல் - குர்ஆன் “ஈமானைபெற்றவர்களே! உங்களுக்கு முன்பிருந்தோர் மேல் கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணுதலுள்ளவர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” என குறிப்பிடுகிறது.
நோன்பு அனுஷ்டிக்கப்படும் ரமழான் காலப்பகுதி தனிமனிதன், சமூகம், உலக அளவில் சிறந்த மாற்றங்களை உண்டுபண்ணுகின்ற காலப்பகுதியாகக் காணப்படுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு ஹதீஸ்களில் மிகவும் விரிவாக விளக்கியுள்ளார்கள். உதாரணமாக “ரமழானின் முதல் இரவில் சைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. ரமழானின் ஒவ்வொரு தினமும் இரவு வேளையில் ஒரு அழைப்பாளர் நன்மையை விரும்புபவனே நீ முன்னேவா. தீமையை விரும்புபவனே நீ அதனை நிறுத்திக்கொள் என்று அழைப்பார். அதன் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து பலரை விடுதலை செய்வான்”. என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதனை விளக்கிக் காட்டுகின்றார்கள்
இங்கு பிரதானமாக நோன்பும் ஏனைய இபாதத்களும் இணைந்து மனிதனை நல்லவனாக மாற்றுகின்ற பணியைச் செய்கின்றன என்றே விளக்கப்படுகிறது. அவனில் உள்ள தீமைகள் களையப்படுகின்றன. இது சமகாலத்தில் தனிமனித அளவிலும் சமூக அளவிலும் இடம்பெறுவதாக இந்த ஹதீஸ்களில் விளக்கப்படுகின்றன.
ரமழானில் இந்த ஏற்பாட்டிற்கான பிரதான காரணம் இக்காலப் பகுதியில் இறைவேதங்கள் அனைத்தும் உலகிற்கு இறக்கப்பட்டமையாகும். அவற்றின் பிரதான பணியும் நன்மையை வாழவைப்பதும் தீமையை அகற்றுவதுமாகும். வேதங்கள் ரமழானில் இறங்கியதாக ஹஸன் தரத்திலான ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. (ஜாமிஉஸ் ஸஈர், அல்பானி,2377). அல்-குர்ஆன் ரமழானில் தான் இறக்கப்பட்டது என்பதை அல்-குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. அந்தக் காலப்பகுதி அனைத்து விவகாரங்களும் தீர்மானிக்கப்படுகின்ற காலமாக, அமைதியின் காலமாக இருப்பதாக அந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்தப் பின்னணியுடன் ரமழானும் நோன்பும் அதில் காணப்படுகின்ற இபாதத்களும் எந்த அளவுதூரத்திற்கு அணுகப்படுகின்றன என்பதனைப் பொருத்துத்தான் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவுகளை நாம் காணலாம். துரதிஷ்டவசமாக பெரும்பாலும் இபாதத்கள் அனைத்தும் பொருளற்ற கிரியைகளாகவும், சட்குகளாகவும் மாத்திரம் மாறிப்போன ஒருகாலப் பகுதியில் நாம் வாழ்கிறோம். அவை கடமைக்காகவும் பக்திப் பரவசத்திற்காகவும் நிறைவேற்றப்படுகின்ற அளவு அவற்றால் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்த கவனம் காணப்படுவது மிகவுமே அரிதாகக்காணப்படுகிறது.
இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நேரடியாகவே பேசியிருப்பதை நாம் ஹதீஸ்களில் அவதானிக்கலாம்.“ யார் பொய் பேசுவதையும் பொடுபோக்குத்தனத்தையும் அவற்றின்படி செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர்தான் உண்பதையும் குடிப்பதையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எத்தகைய தேவையும் கிடையாது”. அதேபோன்று “நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் பாவங்களில் ஈடுபடவோ, சச்சரவுகளில் ஈடுபடவோ, மோசமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொள்ளவோ வேண்டாம்.
நீங்கள் நோன்புடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் யாராவது உங்களுக்கு ஏசினால் அல்லது உங்களுடன் சச்சரவுப்பட்டால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறுங்கள்”. என நபியவர்கள் கு குறிப்பிட்ட ஹதீஸ்கள் புகாரியில் பதியப்பட்டுள்ளன. இவை தவிர இந்தக் கருத்துக்களைப் பேசுகின்ற ஏராளமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
இந்த ஹதீஸ்களை சட்டக் கண்ணோட்டத்தில் அணுகிய முன்னைய இமாம்கள் இவை இபாதத்களின் முழுமைநிலை குறித்துப் பேசுகின்ற ஹதீஸ்கள் என குறிப்பிட்டார்கள். எனினும் அவர்களில் இமாம் கஸ்ஸாலி, அவ்ஸாஈ, இப்னு ஹஸ்ம், இப்றாஹீம் அன்நகஈ… போன்ற பலரும் கூட இபாதத்களது நோக்கங்கள் நிவேற்றப்படாத போது அவை அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதில்லை,
குறிப்பாக நோன்புடன் தொடர்புபடுத்தி அவை நோன்பை முறிக்கும் என்ற கருத்தையும் அக்காலப் பகுதியிலேயே கொண்டிருந்தனர். நாம் வாழுகின்ற இந்தக் காலப் பகுதியில் இது குறித்து நாம் ஆதாரம் சொல்லிப் பேசவேண்டிய அவசியம் இல்லாத அளவு தெளிவான விடயங்களாகக் காணப்படுகின்றன. எல்லா காரியங்களும் அவற்றின் வெளித் தோற்றங்களுக்கப்பால் அவற்றின் இலக்குகளோடும், விளைவுகளோடும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்ற இக்காலப்பகுதியில் இபாதத்களின் விளைவுகள் ஒருவரது தனிப்பட்ட, சமூக வாழ்வில் பிரதிபலிக்காத போது அவற்றுக்கு எந்தப் பொருளும் கிடையாது. மாத்திரமல்ல, அவை மறுமையிலும் கூட அவருக்கு பிரயோசனத்தை அளிக்கமுடியாது என்பதனை மிகச் சாதாரணமாகவே எம்மால் விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கின்றது.
இம்முறை நாம் எதிர்பார்த்திருக்கும் ரமழானை பண்பாட்டு மாற்றத்திற்குரிய அடிப்படையாக, ஆன்மீகத் திறனை விருத்திசெய்து கொள்வதற்கான ஒரு காலப்பகுதியாக பயன்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுக் கொள்வதற்கான தேவைகாணப்படுகிறது. இஸ்லாமும் அதன் போதனைகளும், கிரியைகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில் அதன் போதனைகளும் கிரியைகளும் உலகப் பொது விழுமியங்களையும் மானிடத்திற்கான நற்பண்புகளையும் விருத்தியாக்குவதை இலக்காகக்கொண்டவை என்பதை உலகரியச் செய்யவேண்டுமாயின் நாம் இந்தவிடயத்தை கவனத்தில் எடுப்பது மிகவும் அவசியமாகும்.