தொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்

“ஹய்ய அலஸ் ஸலாஹ் - ஹய்ய அலல் ஃபலாஹ்” - “தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!” - இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான்!

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ()
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (23: 1-2) இந்த இறை வசனத்திலும், தொழுகையும் வெற்றியும் இணைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். அப்படியானால் தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? நாம் ஐந்து வேளைத் தொழுவதால் வெற்றி அடைந்து விடுவோமா? நமது வாழ்க்கையில் நடக்கும் தோல்விகளுக்கு நாம் தொழாதது தான் காரணமா?
நாம் தொழுதும், வாழ்க்கையில் வெற்றி அடையவில்லையெனில், அப்பொழுது அது மறுமையில் அடையும் வெற்றியைத் தான் குறிக்கிறதா? ஆனால் ஃபலாஹ் என்பது ஈருலக வெற்றியையும் குறிக்கும் சொல்லாயிற்றே!
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தவறாது தொழுதார்களே அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றி தானே! நபித்தோழர்கள் தவறாது தொழுதார்களே, அவர்களும் இவ்வுலகில் வெற்றி அடைந்தார்கள் தானே! இது போன்ற கேள்விகளுக்கு விடை காணுவதற்கு முதலில் நாம் 'ஃபலாஹ்' என்ற சொல்லின் பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃபல்லாஹ் என்ற சொல்லின் பொருள்:
விவசாயி, உழவர், வேளாளர் போன்றவற்றை குறிக்கும்.
ஃபலஹ என்பது : உழுதல், பயிரிடுதல், செழிப்பாக்குதல், மகிழ்ச்சி, வெற்றி போன்றவற்றை குறிக்கும். இதை வைத்து ஃபலாஹ் என்பது விவசாயம், மகிழ்ச்சி,வெற்றி ஆகிய மூன்று பொருள்களையும் சேர்த்து குறிக்கும் சொல்லாக நாம் பார்க்கலாம்.
ஒரு விவசாயி, ஒரு விதையை விதைத்து அது பயிரான பிறகு அந்த பயிரை அறுவடை செய்கின்றபோது மகிழ்ச்சி அடைகின்றான்.
அது போன்று, ஒரு இறை நம்பிக்கையாளன், இறைவனுக்கு அடி பணிந்து ஐந்து வேளைத் தொழுவதினால் எண்ணிலடங்கா நன்மைகளை அறுவடை செய்கின்றான். இதுவே அவனது ஈருலக வெற்றியாகும்!
அடுத்து - “யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ, அவர் தீனை நிலை நிறுத்தியவராவார்" என்ற நபிமொழியை நாம் முன்னதாகவே கூறியிருந்தோம் அல்லவா? இதில் 'தீன்' என்ற சொல்லின் பொருள் மார்க்கம், அல்லது வாழ்க்கை நெறி என்று சொல்லலாம்.

ஆக தொழுகை என்பது வாழ்க்கையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட ஒரு சடங்கல்ல. அது நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஓர் அற்புதமான இபாதத்!
இதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டு, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது தமது ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:
“உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! யார் தன் தொழுகையைப் பேணுகின்றானோ, அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ, அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ, அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்க கூடியவனாகவே இருப்பான்!” (மிஷ்காத்)
எனவே, தொழுகைக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அடிப்படையாக கொண்டு, தொழுகை வாழ்க்கையோடு எப்படியெல்லாம் தொடர்புடையது என்பதையும் அது எப்படி வெற்றியைப் பெற்றுத் தருகின்றது என்பதையும் நாம் இப்போது பார்க்கலாம்.
சான்றாக:
· தொழுகை, சுத்தத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் ஆகியவை தொழுகைக்கு மிக அவசியம். இந்த சுத்தத்தை நாம் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அது வெற்றியை தருமா? தராதா?

· தொழுகை, நேரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?
· தொழுகை, நல்லொழுக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நல்லொழுக்கத்துடன் இருப்பது நமது வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? தராதா?
· தொழுகை, ஜகாத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தர்மம் செய்வது வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? தராதா?
· தொழுகை, ஒற்றுமையைக் கற்றுத் தருகின்றது. வாழ்க்கையின் வெற்றிக்கு ஒற்றுமை அவசியமா? இல்லையா?
· தொழுகை, தலைமைக்குக் கட்டுப்படுவதின் அவசியத்தை கற்றுத் தருகின்றது. வாழ்க்கையின் வெற்றிக்கு அது அவசியமா? இல்லையா?
· தொழுகை, பொறுமையோடு இணைக்கப்பட்டுள்ளது. பொறுமை என்பது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதைக் குறிக்கும். அவ்வாறு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா?மாட்டார்களா?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்........
இனி மனித வாழ்வின் வெற்றிக்குத் தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் தொழுகை எவ்வாறு தனக்குள் பிணைத்து வைத்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக அலசுவோம்.
இன்ஷா அல்லாஹ்......