உளத்தூய்மை : பத்து அடையாளங்கள்

· சிலர் தன்னைப் பிறர் புகழும் போது சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள், ஏச்சு பேச்சுக்கள் வரும் போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி இரண்டையும் சமமாகக் கருதி தொடர்ந்து செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் கூட்டத்தில் இருக்கும் போது அமல்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்து விலகி நிற்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். தனிமையிலும், கூட்டத்திலும் இது போன்ற வித்தியாசம் காட்டாமல் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் வெளியே தலைமை பதவியை வெறுப்பது போல காட்டிக் கொள்வார்கள்; உள்ளே அது கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் உள்ளேயும் வெளியேயும் தலைமைப் பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். (தன் அளவில் அநீதமாக நடந்து கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்) பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் தன்னைப் பற்றி தன் சாதனைகளைப் பற்றி பிறரிடம் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். விதண்டாவாதங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் செயல்பாட்டில் ரொம்பவும் பின் தங்கி இருப்பார்கள். குறைவாகப் பேசி, ஆக்கப் பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் அதிகப்படியான நியாயங்களைக் கூறி பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களை விட முந்திக் கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் தமது கொள்கை - கோட்பாட்டில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி தமது பிரச்சாரப் பயணத்தில் இடறி விழுந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்பார்கள். ஆனால் தமது செயல்களுக்கான எந்தவிதப் பிரதிபலனையும் மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் இறைவன் வழங்கும் பிரதிபலனை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் மனிதர்கள் வழியாக சத்தியத்தை அறிந்து கொள்ள முயல்வார்கள். அந்த வகையில் தம்மை தனிமனிதர்களோடு பிணைத்துக் கொண்டு செயல்படுவார்கள். ஆனால் சத்தியத்தின் வழியாக மனிதர்களைப் புரிந்து கொண்டு, கொள்கையோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

· சிலர் தம்முடைய சின்னச் சின்ன சாதனைகளும் மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட்டு தம் பெயர் முன்மொழியப்படுவதையும் தம் சாதனைகள் வெளிப்படுத்தப்படுவதையும் விரும்புவார்கள். ஆனால் தம்முடைய பென்னம் பெரிய சாதனைகள் வழியாகக் கூட தம்பெயர் முன்மொழியப்படுவதை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

“இறைவன் மீது பயபக்தியுள்ள, போதுமென்ற மனோபாவத்தைக் கொண்ட, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவனையே அல்லாஹ் விரும்புகிறான்.”
நூல் : இப்னு மாஜா
இறைவா! எனது பார்வையில் என்னைச் சிறியோனாகவும் பிறர் பார்வையில் என்னை உயர்ந்தோனாகவும் வெளிப்படுத்துவாயாக!!