நோன்பின் இலக்கு!

muslim-children-pray
நோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் நோன்பின் பற்றிக் கூறுகையில் நோன்பின் இலக்கு தக்வா என்ற மன நிலையை அடைந்து கொள்வதுதான் என்று அல்லாஹ் சொல்கிறான்.
“நீங்கள் தக்வா கொண்டவர்களாக ஆகலாம் என்பதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது…..” (ஸூரா பகரா – 2:183)
எனவே நோன்பு ஓர் ஆன்மீகப் பரிசோதனை, ஒரு ஒழுக்கப் பயிற்சி. நோன்பின் உண்மை இலக்கு இது, தக்வாவை அடைந்து கொண்டால் நோன்பின் ஏனைய பயன்கள் எல்லாம் கிட்டும். அது தவறினால் ஏனைய அனைத்தும் வீண் போய்விடும்.
தக்வாவைப் புரிந்து கொள்ள இப்பிரபஞ்சத்தின் இருப்பு நிலைகளை அறிய வேண்டும். அது மூன்று வகைப் படுகிறது:
உயர்ந்த உன்னதத் தலைமை. அது ஏகனான இறைவனின் இருப்பு நிலை.
இரண்டாவது முற்றிலும் பணிந்த இழிந்த அடிமைப்பட்ட நிலை.
அது இயற்கைச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இயங்கும் சடப் பொருட்கள், மிருகங்களின் நிலை. மனிதன் தனது மன இச்சைகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டால் அவனும் மிருக நிலைக்குத் தாழ்ந்து போகிறான்.
இவ்விரு நிலைகளுக்கிடையே இன்னொரு தரமுள்ளது. அது பிரபஞ்சப் படைப்பாளனுக்கு அடிமையாக இருந்து கொண்டே உலகத்தின் மீதான தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பது என்ற இரண்டும் ஒன்றிணைந்த நிலையாகும்.
மனிதன் தனது உடலுறுப்புக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டால் அப்போது அவன் அந்த மூன்றாம் தரத்தை அடைகிறான்.
அவனது கண்ணும், காதும், கையும், காலும் எல்லா உறுப்புக்கள் மீதும், மன உணர்வுகள் மீதும் அவன் ஆதிக்கம் செலுத்தினால், அவற்றுக்குத் தலைவனானால் இப்போது அவன் தக்வாவைச் சம்பாதித்தவனாகிறான். அப்போது அவன் பூமியின் மீதான அதிகாரத்தைப் பெறும் தகுதி உடையவனாகிறான். இந்தத் தக்வாவையே நோன்பு உருவாக்க முனைகிறது.
நோன்பில் இரண்ட பகுய்திகள் உள்ளது.
ஒன்று உணவையும், குடிப்பையும் தவிர்த்துக் கொள்வது மட்டுமல்ல, அவற்றைத் தாராளமாகச் செலவு செய்து, தேவையுடையோருக்குக் கொடையாகக் கொடுப்பது நோன்பின் ஒரு பகுதி.
“வீசும் காற்றை விட இறைத்தூதர் நோன்பின் போது கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள்.” (ஸஹீஹ் புகாரி) மேலும் ஸகாத்துல் பித்ர் என்ற வரை இது மனிதர்களுக்கான நன்மையை நாடும் வாசல். மற்றொன்று நோன்பின் தெய்வீக வாசல். அது நோன்புடைய காலங்களில் துஆ, இரவு நேரத் தொழுகை, அல்குர்ஆன் ஓதுதல் என்பவையாகும்.
இவ்வளவு உயர்ந்த, சிறப்பான பண்புகளைக் கொண்ட நோன்பை பசித்திருப்பது, தாகித்திருப்பது என்பதோடு மட்டும் சுருக்கிக் கொண்டால் எவ்வளவு பெரும் அநியாயத்தை நாம் செய்தவர்களாவோம்.
பசித்திருப்பது, தாகித்திருப்பது என்பதைத் தாண்டி நோன்பில் இன்னும் நாம் செயல்படுத்த வேண்டிய ஏராளமான செயல்பாடுகள் உள்ளது. பயன்படுத்த முயல்வோமா?
-நூல் : நோன்பு ஒரு பயிற்சியும், போராட்டமும் – கலாநிதி அப்துல்லாஹ் தர்ராஸ்
தமிழில் ;: உஸ்தாத் மன்சூர் நளீமி, இலங்கை.

• ரமழானைப் பயன்படுத்துவோம்
• புனித ரமழான் நம்மை வந்தடைய இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! சென்ற ரமழான் முடிந்து ஒரு மாதம் கழிந்தது போன்று உள்ளது. இப்போது வந்துள்ள ரமழானும் மின்னல் வேகத்தில் நம்மை விட்டும் விலகிச் சென்றுவிடும்.
• நாம் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரமழான் நம்மிடம் வரும்போது அதற்கான தயார் நிலைகள் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மிடம் முக்கியமான இரண்டு தயார் நிலைகள் இருக்க வேண்டும்.
• மன நிலை மற்றும் செயல் ரீதியான தயார் நிலை முதலில் நாம் ரமழானை அடைந்து கொள்ள இப்போதிலிருந்தே அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
• ரமழானுக்கு முன்னால் நமக்குள் தோன்ற வேண்டிய எண்ணங்கள்:
• நமது உள்ளத்தில் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை இருக்க வேண்டும்.
• "எனது அடியான் ஒரு நன்மையைச் செய்வதாகப் பேசினால் அவனுக்கு அதனை ஒரு நன்மையாக எழுதுகிறேன்" எனும் ஹதீஸுல் குத்ஸி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறுகிறது. இதனை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
• குர்ஆனை விளங்கி பலமுறை ஓதி முடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம்.
• முந்தைய பாவங்களை விட்டும் நீங்கி விடுதல் என்ற உண்மையான மன உறுதி.
• அதிக நன்மைகளைச் செய்தல்
• நடத்தைகளில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி.
• இந்த மார்க்கத்திற்காக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும்.
• செயல் சார்ந்த தயார் நிலைக்கு கீழ்வரும் சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
• ரமழான் தொடர்பான சிறந்த நூல்களை வாசித்தல்.
• நோன்புடன் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கான தப்ஸீர் விளக்கங்களை கற்பது.
• ஈமானிய அமர்வுகளை நடத்தி கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது.
• நன்மைகளுக்கான சேமிப்பு என்னும் செயல் திட்டத்தில் ஏழைகளுக்கு நோன்பு நோற்பதற்கான வசதி செய்து கொடுப்பதற்காக நமது மனதை தயார் செய்து அதற்கான பொருளாதாரத்தை திரட்டி செலவிடுவது .
• தஃவா ரீதியான அனைத்து செயல்பாடுகளுக்கும் ரமழான் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும்.
• ரமழான் அன்பளிப்பு : இது நோன்பாளியின் தஃவா ரீதியான அன்பளிப்பாகும். ரமழான் பற்றிய ஒரு குறிப்பு, ரமழான் பற்றிய ஆடியோ, வீடியோ சிடிக்கள், ரமழான் பற்றி உணர்வு தரும் வார்த்தைகள் பதித்த புதகங்கள், மிஸ்வாக் ஆகியவைகள் அடங்கிய ஒரு அன்பளிப்பை முஸ்லிம் சகோதரர்களுக்கு அவர்களையும் ரமழானுக்கு தயார் படுத்துவது.
• வாரத்தில் ஒருநாள் குடும்பத்துக்கான தர்பியாவை ஏற்பாடு செய்வது.
• ஈமானிய, தர்பியா ரீதியான சொற் பொழிவுகளை பள்ளிவாசலில் ஏற்பாடு செய்வது.
• இனி வருகிற ஒவ்வொரு நிமிடமும் ரமழானின் மீதான தாகத்தை உங்களுக்குள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். ரமழான் என்ற விருந்தாளியின் வருகைக்காக உங்கள் உள்ளங்களைச் சுத்தப்படுத்தி வையுங்கள்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)