குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

KuE1aEzநமக்கு மிகவும் அவசியமான அனைத்தையும் அல்லாஹ் இலவசமாகவே தந்திருக்கிறான். உதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்றைப் பாருங்கள். நாம் கூடியிருக்கும் ஒரு மண்டபத்தில் வெறும் நான்கு நிமிடத்திற்கு அல்லாஹ் ஆக்சிஜனை எடுத்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது நமது நிலை என்ன?
முதல் நிமிடம் எப்படியோ சமாளித்துக் கொள்வோம். இரண்டாம் நிமிடம் மிகவும் வேகமாக சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம். மூன்றாம் நிமிடம் மயங்க ஆரம்பித்து விடுவோம். அந்த நேரம் ஒருவர் வந்து “என்னுடைய சிலிண்டரில் கொஞ்சம் ஆக்ஸிஜன் உள்ளது. அதைத் தருகிறேன். அதற்குப் பகரமாக உங்களது வீட்டை தர வேண்டும்.” என்று சொன்னால் நாம் நிச்சயமாக அதற்குத் தயாராவோம். இல்லாவிட்டால் நான்காவது நிமிடத்தில் நாம் மரணித்து விடுவோம்.
எனவே இது போன்ற அத்தியாவசியமான விசயங்களை அல்லாஹ் இலவசமாகவே தந்துள்ளான். நமது குழந்தைகளும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருள்கள்தான்.
அண்மையில் குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கான ஒரு கருத்தரங்கை ஒரு பெண் மருத்துவர் நடத்தினார். அதில் கலந்து கொண்டோர் பிள்ளை பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனை இலட்ச ரூபாய்களையும் செலவளிக்கத் தயாராக இருந்தனர். இதை பார்க்கும் போது குழந்தை பாக்கியம் பெற்றுள்ளவர்கள், அல்லாஹ் தன் மீது எவ்வளவு அருள்பாலித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்ட அருள் மட்டுமல்ல அமானிதமுமாகும்.
அமானிதங்களாக நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்தக் குழந்தைகளை சரியாக வழி நடத்தி அல்லாஹ் அவர்கள் மூலம் எதை எதிர்பார்க்கிறானோ அதை அடையச் செய்வது நமது கடமையும் பொறுப்புமாகும். அத்தோடு, அது ஒரு குர் ஆனியக் கட்டளையும் கூட. அல்குர்ஆனிலே அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்.
முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
(சூரா தஹ்ரீம் : 06)
இங்கு அல்லாஹ் கற்கள் என்று குறிப்பிட்டிருப்பதில் மிகப் பெரியதொரு உண்மை மறைந்திருக்கிறது. நாம் ஒரு கடிதத்தை, விறகை, பெட்ரோல் ஆகியவற்றை தீமூட்டும் போது ஏற்படும் நெருப்பு ஒன்றாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அதன் வெப்பநிலை வித்தியாசமானதாகும். நாம் உச்சகட்ட வெப்ப நிலையை பெற வேண்டுமானால் கற்களைத்தான் பயன்படுத்த வேண்டும். எரிமலையைப் பாருங்கள்.
எனவே நமக்கு அல்லாஹ் வைக்கின்ற சவாலிலிருந்து நாமும் நமது பிள்ளைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பொதுவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 101 செல்சியஸ் வெப்ப நிலை உயர்ந்தால் தடுமாறும். அதுவே 102 செல்சியஸாக உயர்ந்தால் நமது தொழில்களை விட்டு விட்டு மருத்துவரை தேடி ஒடுவோம். 103 செல்சியஸாகினால் நம்மையே மறந்து விடுவோம். இப்படி இந்த வெப்பத்துக்கே நாம் இவ்வளவு பயப்படுகிறோம் என்றால் மறுமையில் காத்திருக்கின்ற 30 இலட்சம் செல்சியஸ் வெப்ப நிலைக்கு நாம் எவ்வளவு பயப்பட வேண்டும்? இந்த அல்குர்ஆன் வசனங்களை நாம் வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறோம். அதை நமது உள்ளத்தில் உணரத் தவறி விட்டோம்.
எனவே நமது பிள்ளைகளை முறையாக வழிகாட்டி வளர்த்து சுவர்க்கத்துக்கு கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை மட்டுமல்லாது அல்லாஹ் நமக்கு விதித்த கட்டளையாகும். சுவனத்துக்குச் செல்லும் பாதை இலகுவானதல்ல. அதனை நோக்கி நாம் உற்சாகமாக பயணிக்க வேண்டும்.
நமது பயணம் உலகம், மறுமை என இரண்டையும் கொண்டது. உலகத்தை விட்டு விட்டு மறுமையை மாத்திரம் கொண்டதல்ல நமது பயணம். எனவே இரண்டையும் வெற்றி கொள்ளக்கூடிய பயணத்துக்கு நமது குழந்தைகளை வழிப்படுத்த வேண்டும். நாம் “ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா வ ஃபில் ஆகிரத்தி ஹஸனா” (இறைவா! உலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே தந்து விடு) என்றுதான் சொல்கிறோம்.
உலகத்திலுள்ள மிகச் சிறந்ததையும் மறுமையிலுள்ள மிகச் சிறந்ததையும் அடைவதற்கான வழிகாட்டலைத்தான் நாம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இன்று பலர் விஞ்ஞானத்துக்கு மாற்றமானதாக இஸ்லாத்தைக் காண்கின்றனர். ஆனால் நாம் விஞ்ஞானத்தில் இஸ்லாத்தைக் காண்கிறோம். அல்குர்ஆனில் சூரா லுக்மானில் ஒரு தாய் தன் குழந்தைக்கு 2 ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்றும் மற்றொரு இடத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு 30 மாதங்கள் எனவும் வருகிறது. இவை இரண்டுக்கும் விளக்கமளிக்கும் தஃப்சீர் ஆசிரியர்கள் ஒரு தாய் 24 மாதங்கள் பாலூட்ட வேண்டும் மீதமுள்ள 6 மாதம் (24 வாரங்கள்) கருவறை உறவாகும் என விளக்குகின்றனர். ஆனால், 24 வாரங்களில் முதிர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தைகளையும் நாம் வளர்க்க முடியும் என்பதே அல் குர்ஆனின் கருத்தாகும்.
இன்று விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. இருப்பினும் அதனால் 26 வாரங்களில் பிறந்த குழந்தைகளைத்தான் தப்பிப் பிழைக்கச் செய்ய இயலும். அப்படியே 26 வாரங்களில் பிறந்த குழந்தைகள் தப்பிப் பிழைத்தாலும் கூட அவர்களில் 50, 60 சதவீதமானவர்கள் கேள்வி, பார்வை போன்ற குறைகளுடனேயே தப்பிப்பிழைக்கும்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அல் குர்ஆன் 24 வாரங்களில் பிறந்த குழந்தையும் தப்பிப் பிழைக்க முடியும் என்று சொல்கிறது. எனவே விஞ்ஞானம் இன்னும் வளர வேண்டியுள்ளது. இதுதான் அல் குர்ஆனின் தரம்.
பிள்ளைகளுக்கு வழி காட்டும் போது சில புரிதல்கள் நமக்கு அவசியம். இன்றுள்ள பெரும் பிரச்சனை பிள்ளைகளை நாம் புரிந்து கொள்ளாமைதான். பிள்ளைகள் பற்றிய அறிவு விளக்கம் இல்லாமையினால் நாம் அவர்களை அங்கீகரிக்காமல் இருக்கிறோம். இதனால் நாம் அவர்களை மதிப்பதில்லை. இதனை சமூகம், பாடசாலை, மதரஸா, பள்ளிகள் என எல்லா இடத்திலும் பார்க்கிறோம்.
ஒரு பிள்ளை ஏன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறேன் : கடந்த மாதம் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் தலையின் சுற்றளவை அளக்கச் சொன்னேன். அவர் தலையின் சுற்றளவு 42 சென்டி மீட்டர் என்றார். அப்போது அங்கிருந்த ஒரு நான்கு வயது குழந்தையுடைய தலையின் சுற்றளவு எவ்வளவு இருக்கும் என்று கேட்டேன். குறைந்தது 25 சென்டி மீட்டராவது இருக்கும் என்று சொன்னார்.
பின்னர் குழந்தையின் தலையுடைய சுற்றளவை அளந்து பார்க்கச் சொன்னேன். என்ன ஆச்சர்யம்! குழந்தையுடைய தலையின் சுற்றளவு 42 சென்டி மீட்டராகவே இருந்தது. இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அந்த 25 வயதுடைய மாணவியினதும் 4 வயதுக் குழந்தையினதும் மூளை ஒரே அளவாகத் தான் இருக்கிறது.
பிள்ளைகளுக்கு 4 வயது என்றாலும் நமக்கு 40 வயது என்றாலும் மூளை ஒரே அளவுதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் குழந்தைக்குரிய மரியாதையை கொடுப்போம்.
இன்னுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மனித உடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று இடுப்புக்கு மேலுள்ள பகுதி. மற்றொன்று இடுப்புக்கு கீழுள்ள பகுதி. ஒரு வளர்ந்த மனிதனின் இந்த இரு பகுதியும் சம உயரத்தையுடையதாக இருக்கும். ஒரு குழந்தையைப் பொருத்தவரை மேல் பகுதி மொத்த உயரத்தில் 65 - 70 சதவீதமாகவும் கீழ்பகுதி 30 - 35 சதவீதமாகவும் காணப்படும்.
இதில் முக்கிய விசயம் என்னவென்றால் ஒரு பிள்ளையிடைய மற்றும் வளர்ந்த ஒருவருடைய உடலின் மேல்பகுதியும் சம உயரத்தையுடையதாகவே இருக்கும். இந்த மேல்பகுதியில்தான் மனிதனின் முக்கிய உறுப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன.
எனவே குழந்தைகள் நம்மை விடவும் உயரத்தில் குறைந்தவர்களாக இருந்த போதும் உடலின் முக்கியமான உறுப்புக்களைக் கொண்டிருக்கிற மேல் பகுதி சமமாகவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு நம்மைப் போன்றே குழந்தைகளுக்கும் பிறக்கும் போதே ரூஹ் ஊதப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உயரத்தில் குறைந்தவராக இருந்தபோதும் குழந்தையையும் ஒரு பெரிய மனிதனாகவே பார்க்க வேண்டும்.
நமது வீட்டில் ஒரு குழந்தை முக்கியமான ஒரு பொருளை உடைத்து விட்டது என்றால் நாம் என்ன செய்ய செய்வோம்? நிச்சயமாக அந்த குழந்தையை ஏசுவோம், அடிப்போம். குறைந்தது முகத்தையாவது சுளித்துக் கொள்வோம். இதே வேலையை குழந்தையின் தந்தை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரை ஏசுவோமா? அடிப்போமா, முகத்தை சுளிப்போமா? இல்லை. ஒரு குழந்தை உடைத்தால் ஏச்சு. தந்தை உடைத்தால் எதுவுமில்லை. இது நியாயமா?
எந்தக் குழந்தையும் வேண்டுமென்றே ஒரு பொருளை உடைப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளை குழந்தைக்கும் தந்தையைப் போன்றே மூளையும் மரியாதையும், ரூஹும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.
மருத்துவர் முஸ்தஃபா ரயீஸ், எம்.டி, இலங்கை