ஷரீஅத்தும் பாதுகாப்பும்

umma
இந்த தென்பாண்டிச் சீமையின் தலைநகராகிய நெல்லை நகர் இதுவரை வரலாற்றிலே கண்டிராத ஒரு ஊர்வலத்தை இன்று கண்டது. இஸ்லாத்தின் உயர்வு ஒன்றே இன்னுயிரின் விலை என்று முனைத்த உணர்வோடு மூண்டெழுந்த பேரணியாக

அது காட்சி தந்தது!
அல்லாஹ்வே எல்லாப் புகழுக்கும் உரியவன்!
ஆக, ஒரு சமுதாயம் இன்று தன்னை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது – தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் சமுதாயம் உயிரினும் மேலாக எதைக் கருதுகிறதோ – அதைக் காப்பாறுவதற்குத் தன் உயிரையும் கொடுக்க சித்தப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்றுதான் இன்றைய பேரணி உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
‘அல்லாஹூ அக்பர் - அல்லாஹ் பெரியவன்’ என்ற உச்சாடனத்தை உரக்கக் குரல் எழுப்பி அவர்கள் நடைபோட்டு வந்தார்கள். இது அல்லாஹ்வின் அடிமைகளின் கூட்டம் – அவனுடைய அடியார்களின் கூட்டம். ஆனாலும் அல்லாஹ்வைக் கேட்டால் ‘என்னுடைய பிரதிநிதிகள்’ கூட்டம் என்கிறான்.இந்த உகத்திலே என்னுடைய பிரதிநிதிகளாக மனிதர்களைப் படைத்தேன் (கலீஃபத்துல்லாஹ் அல் அர்ழ்) என்கிறான்.
இறைவனால் மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றுத் தந்த அருள் வேதம் 6666 வசனங்களைக் கொண்டது – அது வெறும் தத்துவமாக அமைந்து விடாமல் அதற்கு விளக்கவுரையாக – நடைமுறையாக அந்த அருள் வேதத்தின் பொருளை எப்படி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் நடத்திக் காட்டலாம் என்பதற்கு – அல்லாஹ்வே சான்று கொடுத்துச் சொன்னது போல – ‘அழகிய முன் மாதிரி’ அண்ணலெம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகாலம் நடமாடிய போது – தெருவிலே சென்ற போது – குடும்பத்திலே உறைந்த போது – சமுதாயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது – வணிகத்தை நடத்திய போது – வாளேந்தக்கூடிய நிகழ்ச்சிகளெல்லாம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட போதுஒரு சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக – ‘ஆடும் சுட்டு விரல் கண்டு ஆடிற்று இவ்வையகம்’ என்று சொல்லுமாப் போல அவர்கள் எதை நினைக்கிறார்களோ அதை செய்து முடிப்பதற்கு ஆயிரமாயிரம் தொண்டர்கள் – ‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ஆவி உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர்கள் உயர்ந்து விட்ட காலத்திலே அவர்கள் சொல்லிச் சென்ற நடைமுறைகள் – அவர்கள் எடுத்துக்காட்டிய நீதிகள் – திருக்குர் ஆனின் அடிப்படையில் நபியவர்கள் விளக்கி உரைத்த போதனைகள் ஆகியவைகளின் தொகுப்புக்களையெல்லாம் சேர்த்துதான் – ஷரீஅத் என அறியப்படுகிறது. வேதத்தின் 6666 அருள் வசனங்களையும், பெருமானார் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாக எடுத்துரைத்த நெறிமுறைகளை – வழிமுறைகளை – அவர்கள் கண் முன்னால் ஒரு நிகழ்ச்சி நடந்து அந்த நிகச்சி மார்க்கத்திற்கு முரண் இல்லை என்ற நிலையில் அவர்கள் ஏதும் சொல்லாமல் அனுமதித்திருக்கிறார்கள் – அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற தத்துவங்களை இணைத்து வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தொகுப்புக்குப் பெயர்தான் “ஷரீஅத்”.AIUMB-BAREILY7
ஷரீஅத் என்றால் செப்பனிடப்பட்ட பாதை என்று பொருள்.
‘ஷரீஅத்’ என்ற அரபிச் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று அரபி அகராதிகளைத் துருவித் துருவி ஆரய்ந்து பார்க்கும் போது இன்னொரு அழகான விளக்கம் அங்கே கிடைக்கிறது.
பாலைவனத்திலே தாங்க முடியாத தாகத்திலே துடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், அந்த தாகத்தினாலே இறந்து விடுவானோ என்ற உணர்ச்சி மேலிட்டு – எங்காவது ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று அவன் தேடித் தேடி பார்க்கும் போது ஒரு வழித்தடம் தென்பட்டு – அந்த வழித்தடத்திலே அவன் நடைபோட்டுப் பார்க்கும் போது அங்கே ஒரு சோலைவனம் தென்பட்டு அங்கிருந்த நீரூற்றில் நீர் அருந்திய காரணத்தாலே உயிரூட்டமே ஏற்பட்டால், அந்த நீரோட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்ற அந்த வழித்தடத்தை அவன் எப்படிக் கருதுவான்? – பாலைவனத்திலிருந்து சோலைவனத்திற்கு நடத்திச் செல்லும் அந்தப் பாதைக்குத்தான் ‘ஷரீஅத்’ என்று அரபி அகராதியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
உலகம் எந்த வழியில் நடப்பது என்று தேம்பித் தவிக்கிறது. யார் வழி நடத்திச் செல்வது என்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தங்களை வழி நடத்திச் சென்ற தலைவர்கள் எல்லாம் இன்று தடுமாறிய நிலை கண்டு மனித சமுதாயமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. யாரெல்லாம் போதி மரத்தின் அடியில் ஞானம் பெற்றவர்கள் என்று கருதப்பட்டார்களோ – அவர்கள் தங்களது தனி வாழ்வில் எவ்வளவு போக்கிரிகளாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு இன்று திகைத்து நிற்கிறது.
இப்படிப்பட்ட உலகத்திற்கு இறைவேதத்தின் அடிப்படையில் பெருமானார் (ஸல்) அவர்கள் வழி வகுத்துத் தந்த வழித் தடத்திற்குப் பெயர்தான் ‘ஷரீஅத்’.
என்னுடைய சகோதர சமுதாயத்து மக்களையெல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நாங்கள் ஷரீஅத்படி நடக்க விரும்புகிறோம் என்று சொன்னால், ஏதோ மனித சமுதாயத்தை விட்டும் அப்பாற்பட்டவர்களாக நீங்கள் நடத்தக்கூட்டிய வாழ்க்கைக்கு முற்ற முற்ற முரண்பட்டவர்களாக இருக்க விரும்புகிறோல் என்ற பொருள் அல்ல!Youth-Ki-Awaaz31
நாங்கள் நல்வழியில் நடக்க விரும்புகிறோம். எங்கள் கண் முன்னால் தெரியக்கூடிய வழி; எங்கள் முன்னோர்கள் நடந்து சென்ற வழி; அந்த வழி ஈருலகத்திலும் எங்களுக்கு ஈடேற்றம் தரும் வழி; எங்களை சீராக நடத்திச் செல்லும் நேரான வழி என்ற உள்ள உறுதி எங்களுக்கு இருக்கிறது.
இந்த வழியிலே நீங்களும் வாருங்கள் என்று அழைப்பது எங்கள் கடமை என்றாலும், நிர்ப்பந்திப்பது எங்கள் கடமை அல்ல. ஏன்? அல்லாஹ்வே தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ‘இந்த செய்தியை எடுத்துரைப்பதுதான் உங்கள் கடமை நிர்ப்பந்திப்பது அல்ல’ என்று இறைவன் எச்சரிக்கிறான்.
இஸ்லாமியப் பிரச்சாரம் பரவலாகிய போது “லகும் தீனுகும் வலிய தீன்.” என்ற வசனத்தை குர்ஆனிலே கூறி முஹம்மது நபியவர்கள் மூலம் “உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்று கூறுமாறு இறைவன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குக் கூறினான்.
நீங்கள் வணங்குவதை நான் வணங்குவதில்லை, நான் வணங்குவதை நீங்கள் வணங்குவதில்லை என்று ஒரு பிரகடனத்தையே முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் வெளியிடச் செய்தான்.
மார்க்கத்திலே நிர்ப்பந்தம் இல்லை. உண்மை எது – பொய் எது என்பது தெளிவாகிவிட்ட பிறகு அந்த உண்மையின் வழி நடப்பது அறிவுள்ள மனிதனின் கடமை; தான் முன்னேற வேண்டுமென்று ஆசைப்படுவது மனிதனின் கடமை.
யார் தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறார்களோ- யார் ஒரே இறையை நம்பி இருக்கிறார்களோ – யார் அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்துகள் (சமுதாயத்தவர்கள்) என்று தங்களை இனம் காட்டிக் கொள்வதிலே பெருமிதம் கொள்கிறார்களோ அவர்கள் பின்பற்ற வேண்டிய திருச்சட்டம் – அவர்களுக்கு அளிக்கப்பட்ட சட்டம் – உலகத்தினுடைய பொதுமைச் சட்டமாக இருந்தாலும் முஸ்லிம்கள் கடைப்பிடித்தே தீரவேண்டிய சட்டம் – முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறோமே தவிர இந்த நாட்டிலே பொதுச் சட்டமாக இஸ்லாமியச் சட்டத்தை பிரகடனப் படுத்துங்கள் என்று கோரியது உண்டா?
இந்தியாவிலே வாழக் கூடிய மக்களுக்குப் பொதுவான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்கிற 44- வது பிரிவை புரட்டிப் புரட்டிப் பார்க்கக்கூடிய மேதைகளே! நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டு வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருப்பவர்களே உங்களைக் கேட்கிறேன் – இந்த 44-க்கு அடுத்த 45-வது பிரிவு முக்கியமானதா இல்லையா?
அல்லாமா இக்பால் ஒரு முறை சொன்னார் : ‘நான் வாழ்க்கையின் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள சைத்தானின் சீடனாகவும் இருக்க வேண்டியதாயிற்று’ என்று! இறைவனின் திருவிளையாடலை நாம் கணக்கிட முடியாது.
இன்று ஷரீஅத் என்றால் என்ன என்று சொல்லிக் காட்ட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். என்னுடைய உழுவலன்பவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் – சந்திக்கும் போதெல்லாம் தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் – இப்போது ‘ஷரீஅத்’ என்றால் என்ன? என்று கேட்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
எது சரியோ? அதுதான் ஷரீஅத் ‘சரீரத்தில் எது அத்துப்படியாகி விட்டதோ அதுதான் ஷரீஅத்’என்பேன். நான் இப்போது உங்களைப் பார்க்கும் போது முகமன் கூறுகிறேன் இதுதான் ஷரீஅத்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்க்கும் போது அவனுக்கு அழகான வாழ்த்துக் கூறுங்கள் என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். அப்படி வாழ்த்துக் கூறினால், கேட்டவர் அதை விட அழகான வார்த்தைகளைக் கொண்டு பதில் மொழி கூற வேண்டும். இது 1400 வருஷத்திற்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவிதப் பிரச்சனைகளிலும் அவனுக்கு வழிகாட்டக்கூடிய நடைமுறை எதுவோ அது எல்லாம் ஷரீஅத்.
உதாரணமாக ஒன்றைச் சொன்னேன். அன்று வெள்ளிக் கிழமை என்னுடைய விரல்களைக் காட்டினேன். இந்த விரல்களில் என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். என்ன என்று கேட்டார்கள். நகம் இருக்கிறதா பாருங்கள் என்றேன். கத்திரிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள் ஏன் கத்திரிக்கப்பட்டிருக்கிறதுஎன்று தெரியுமா? விரல்களில் வளரக்கூடிய நகங்களைக் கத்திரிப்பது சுன்னத், ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலே இதுவும் ஒன்று. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பெருமானார் (ஸல்) அவர்கள் உண்டாக்கிய சுன்னத் மாத்திரம் அல்ல, நபிமார்களின் தந்தை என்று சொல்லக் கூடிய ஹஸரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் சுன்னத்.
ஆக, முஸ்லிம்களின் கை விரல்களைப் பாருங்கள், நகங்களைக் கத்திரித்திருப்பார்கள். ஏன் என்று அது வளர்ந்தால் அதில் அழுக்கு சேரும். அந்த அழுக்கு சேர்ந்த கையால் உணவு உண்டால் அது உள்ளே சென்று விஷமாகும். உடல் நிலை சீர்கெடும். ஆகவே நகங்களைக் கத்திரிக்கிறோம் என்று சொல்ல மாட்டார்கள்.
தாடி வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள், ‘டிஃப்தீரியா’ என்ற ஒரு வியாதி இருக்கிறது. திடீரென்று குளிர்ச்சி இந்தத் தாடையிலே பட்டு விடுமானால், அந்த வியாதி ஏற்படும். தாடியை வைத்திருப்பவர்களுக்கு இந்த ‘டிஃப்தீரியா’ ஏற்படுவது இல்லை. இந்த விளக்கங்களையெல்லாம் முஸ்லிம்கள் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏன் தாடி ? வைத்திருக்கிறீர்கள் என்றால் இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் வைத்திருந்தார்கள் என்பார்கள்.
ஆக ஒரு முஸ்லிமுடைய அங்க அவயங்களின் அசைவும் ஷரீஅத்தின் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது!
ஒரு மனிதன் ஒழுக்கமிக்கவனாக – உண்மையானவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது பேணக்கூடிய எல்லா வழிமுறைகளின் தொகுப்பே ஷரீஅத் என்று சொல்லும் போது அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இவ்வளவு நாட்களாக இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை என்கிறார்கள். இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு – இது ஒரு அறை கூவல்.
ஆண்டவன் மனிதனுடைய இயற்கையெல்லாம் தெரிந்து அவனுடைய குணதோஷங்களையெல்லாம் புரிந்து ஒரு தீர்ப்பு இதன் விளைவுகளையெல்லாம் கணக்கிட்டு அவன் வரையறுத்து இருக்கக்கூடிய ஷரீஅத் சட்டத்திலே ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு இன்னொரு பகுதியைப் புறக்கணித்து – தனக்கு ஏற்றவைகளையெல்லாம் மதித்து நடப்போம் – ஒவ்வாதவைகளையெல்லாம் என்று நடப்பார்களேயானால் ஷரீஅத்தின் பூரணப் பலனை யாரும் பெற முடியாது. அந்த நிலை இன்று இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களுக்கு என தனியார் சட்டம் – முஸ்லிம் பர்ஸனல் லா இருக்கும் நிலையில் – கை விடப்பட்ட மற்ற பெண்களுக்கு வழி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் – இந்தியன் கிரிமினல் புரஸீஜர் கோடின், 125 – 127 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்து, விளக்கம் கொண்டு வந்த போது – முஸ்லிம் சமுதாயம், தன்னுடைய சந்தேகத்தை வெளியிட்டது.
ஆனால் அப்போது இந்தச் சட்டம் முஸ்லிம்கள் தனியார் சட்டத்தில் தலையிடாது என்ற வாக்குறுதி அரசு சார்பிலே பாராளுமன்றத்திலே தரப்பட்டது.
அந்த சட்டப் பிரிவுகளின் படி, ஒரு கணவன் தன் மனைவியை விவாக விலக்கு அளித்த பின்னரும் கூட, அவள் மறுமணம் செய்யும் காலம் வரை அல்லது உயிர் வாழும் காலம் வரை சம்ரட்சணை தர வேண்டும் என விதிக்கப்பட்டது.
சில கணவர்கள் அதை எதிர்த்து வாதாடிய போது, இவ்வாறு ஜீவனாம்சம் பெறும் பெண், ஒழுக்கங்கெட்டு நடப்பாளானால், அந்த மாஜி கணவன், ஜீவனாம்சத்தை நிறுத்திக் கொள்ளலாம் என திருத்தம் சேர்க்கப்பட்டது.
மனைவியை ரத்து செய்த பிறகும், ஜீவனாம்சம் தருவது பற்றிய பிரச்சனை வந்த போது, கணவன் – மனைவியை ரத்து செய்து விட்டாலும், அந்த ஆண் கணவனாகவும், அந்த பெண் மனைவியாகவும் கருதப்படுவார்கள் என விளக்கம் தரப்பட்டது.
பேராசிரியர் காதர் முஹ்யித்தீன் அவர்கள் ஒன்றை தொட்டுக் காட்டினார். அதை நான் விட்டு விட நினைத்தேன். யாரோ ஒரு நடிகர் சொன்னாராம். நடிகையின் கருவிலே உருவாகி வரும் குழந்தைக்கு நான் தகப்பன் என்று. பத்திரிக்கை நிருபர்கள் கேட்டார்களாம், நீங்கள் தகப்பன் என்கிறீர்கள் – அவள் தாய் என்கிறாள், அப்படியானால் உங்கள் இருவருக்கும் உள்ள உறவு? இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். “கருவின் தந்தை நான், அந்தப் பெண் என் மனைவி” என்று சொல்வதைத் தடுத்து நிறுத்தக் கூடிய அந்த சக்தி எது? புரிந்து கொள்ள வேண்டுமா?
ஒரு மனைவி இருக்கும் போது மற்றொரு மனைவியை முடித்துக் கொண்டால், அவன் சிறைச்சாலையில் அடைக்கப்படுவான் என்ற மனிதனின் சட்டம் இருக்கும் காரணத்தால் இன்னொரு கருவில் வளரக் கூடிய கருவுக்கு தான் தந்தை, அவள் தாய் என்று சொல்லாமல், தான் கணவன் – அவள் மனைவி என்று சொல்லாமல் தடுக்கிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டாமா?sci
இப்போது அந்தச் சரித்திரம் தொடர்கிறது : இவர்கள் இந்நாட்டினுடைய மாடல்கள். நம்முடைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டுகள். இவர்கள் பெயர்களிலெல்லாம் நற்பணி மன்றங்கள் எப்படிப்பட்ட பணிகள் இந்த நாட்டிலே தொடரும் என்பதற்கான அறிகுறிகள்.
இவைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்து ஒரு ஆணும் பெண்ணும், கணவன் மனைவியாக வாழ ஒருப்பட்டு விடுவார்களானால் – கணவன் மனைவிக்கு கொடுதே தீர வேண்டிய மஹர் என்னவென்று விதித்து – அந்த இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ ஒருப்பட்டிருக்கிறார்கள் என்று சமுதாயத்திலே அங்கீகரிக்கப்பட்ட இரு சாட்சிகளை முன்னிலைப்படுத்தி நடத்தக்கூடிய ஷரீஅத்தின் அடிப்படையிலான திருமணம் ஹலாலான – சட்ட சம்மதமான குழந்தைகள் இந்த நாட்டிலே பிறக்க துணை செய்கின்றன. ஆனால் மனிதனுடைய சட்டம் ஹராமான (தடுக்கப்பட்ட வழியில்) குழந்தைகள் பிறக்க வழி செய்கின்றன!
இன்னொன்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!
யாரோ இரண்டு பேர் ‘ஒரு வாழ்க்கை’ நடத்தி விட்டு – என்ன நீங்கள் இப்படி வாழுகிறீர்களே என்று கேட்டால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் - என்று கூறினால், - அல்லாஹ்வை சாட்சியாக வைத்துத் திருமணம் செய்து கொண்டோம் என்றாலும் கூட ஷரீஅத்தின்படி அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
அவர்கள் சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாக இருப்பதால் சமுதாயத்தில் வாழும் இருவரை சாட்சிகளாக வைத்து திருமணம் செய்து கொண்டால்தான் அந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்பது ஷரீஅத். தோழர்களே! ஷரீஅத்தின் எந்தக் கோணத்தை எடுத்து விவாதிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? எதைக் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லுகிறீர்கள்?
நிகழ்ச்சி தெரியுமா? இரண்டு வாரங்களுக்கு முன்னாலே ‘தராசு’ என்ற பத்திரிக்கையிலே ஒரு செய்தி வந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊர். அந்த ஊரிலே வீட்டை விட்டு ஒரு இளம் பெண்ணும் ஒரு இளம் இளைஞனும் என்ன மனிதாபிமானம்? மனிதாபிமானம் என்பது ஒழுக்கத்திற்கு உடன்பட்டதாக இருக்கக் கூடாதா?
ஆகவே, ஷரீஅத்தைப் பற்றி யார் எந்தத் துறையிலே விவாதிப்பதாக இருந்தாலும் அது திருமணமாக இருக்கட்டும் – சொத்துரிமையாக இருக்கட்டும் – பிரிவினையாக இருக்கட்டும் அல்லது ஆண்டவனை நம்பக்கூடிய அடிப்படையாக இருக்கட்டும் – வாழ்க்கையிலே எந்த முனையிலும் ஷரீஅத் விதித்திருக்கக்கூடிய திட்டமாக இருக்கட்டும், இந்நாட்டு பேரறிஞர்களை நாங்கள் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம் எதைப் பற்றி விவாதிக்கவும் நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?
எங்கள் மதத்தில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்க மதத்தில் இன்னின்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்ல நீங்கள் தூண்டலாமா? அது நிம்மதியை ஏற்படுத்துமா?
சகோதர சமுதாயத்து பெருமக்களே! தயவு செய்து எங்கள் வழியிலே எங்களை நடக்க விடுங்கள். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையெல்லாம் யார் இதை நம்பியிருக்கிறார்களோ அவர்களுக்குரியது என்று சொல்லுகிறோம்.
அது இந்த நாட்டின் அடிப்படை (Fundamental Rights) என்று சொல்லக்கூடிய 25 –வது பிரிவு எங்களுக்கு அளித்திருக்கிறது. இந்த நாட்டிலே நாங்கள் விரும்பக்கூடிய மதத்தைப் பின்பற்ற – அதை ஏற்று நடக்க – இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்ய – அடிப்படை உரிமை – வழங்கப்பட்டிருக்கிறது. இதை மறந்து விடாதீர்கள்.
இந்த அடிப்படை உரிமையையே மாற்றக்கூடிய அளவுக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிக்குமானால், அந்த தீர்ப்பை மாற்ற வேண்டுமே தவிர, அடிப்படை உரிமையை மாற்ற முடியாது. இதை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த அடிப்படையில்தான் இந்த நாட்டு பிரதமரிடத்திலே அகில இந்திய ஷரீஅத் போர்டின் சார்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் தரப்பட்டிருக்கக்கூடிய விஷமங்களையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு சின்ன திருத்தம் – நீங்கள் இயற்றி இருக்கக்கூடிய 125, 127, பிரிவு என்ன சொன்னாலும் அது முஸ்லிம் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தாது என்ற திருத்தமும் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி இருந்தாலும் முஸ்லிம்கள் அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள் என்ற திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும்.
நம்முடைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், முச்லிம்களின் தனியார் சட்டத்திலே தலையிடுவதில்லை என்று இந்த அரசுக்கு இருக்கக்கூடிய நீண்ட நெடிய கொள்கையை மேலும் வலிமையாக நாங்கள் பின்பற்றுவோம் என்ற உறுதியை தொடர்ந்து வழங்கினார்.
மேலும் அகில இந்திய மூமின்களின் மாநாட்டிலே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு முஸ்லிம்களின் தனியார் சட்டத்திலே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடுவது உண்மையானால், அதைப் பற்றி தக்க திருத்தம் கொண்டு வருவது பற்றி நாங்கள் யோசிக்கிறோம் என்று பிரதமர் ராஜீவ்காந்தி சொன்னார்.
ஆனால் ராஜீவ்காந்தி அவர்களுக்கு மரியாதையோடு தெரிவித்துக் கொள்கிறேன்
உலக இஸ்லாமிய சரித்திரத்தின் மிக முக்கியமான கட்டத்தில் நீங்கள் பொறுப்பு ஏற்றிருக்கிறீர்கள். இந்தியாவில் வாழக்கூடிய இஸ்லாமியர்கள் 15 கோடி என்று சொன்னால் விடுதலை பெற்ற எத்தனையோ நாடுகளில் வாழும் எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் எண்ணிக்கையைக் கொண்டவர்கள் இந்திய இஸ்லாமியர்கள். அவர்கள் ஓராயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக அனுபவித்து வரும் இந்த உரிமை 150 ஆண்டுகளாக – ஆறாயிரம் மைல்களுக்கும் அப்பாலிருந்து வந்திருந்த ஆங்கிலேயர்கள் கூட அளித்திருந்த இந்த உரிமை – நமது நாடு விடுதலை பெற்று நமக்கு நாமே சுதந்திர சாசனத்தையும் அரசியல் சாசனத்தையும் வகுத்தளித்து விட்ட பிறகும் கூட 37 ஆண்டுகளாக இந்த சமுதாயம் அனுபவித்து வரும் ஒரு உரிமையை சுப்ரீம் கோர்டின் ஒரு தீர்ப்பு பறிக்கிறது – அந்தத் தீர்ப்பை பெற்றவரே – அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்ட பிறகும் கூட – இஸ்லாமிய சமுதாயமே ஒட்டுமொத்தமாக இந்த பிரகடனப்படுத்தி விட்ட பிறகு – அதன் அடிப்படையில் திருத்தம் செய்ய நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போது – இவர்கள் காட்டக்கூடிய சல சலப்புக்கு நீங்கள் அஞ்சி விடாதீர்கள். நீங்கள் இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகம் பாடுபடவேண்டியதில்லை.
ஒரே இறைவனை நம்பி – உலகத்தின் உத்தமராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழுகின்ற திருக்கூட்டம் – 15 கோடி மக்களைக் கொண்ட கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளபடி திருத்தங்களைக் கொண்டு வாருங்கள். உலகத்திலே எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் வாழக்கூடிய இஸ்லாமியர்களை விட உத்தம இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் – உலகத்திலே உயர்வான இஸ்லாமிய சின்னமான குத்பு மினார் நம் நாடாகிய இந்தியாவில் தான் இருக்கிறது! எந்த இஸ்லாமிய நாட்டிலும் கட்டப்பட்டிராத அழகுக் கூடம் தாஜ்மஹால் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. இதுவரை இதை விட உறுதிமிக்க கோட்டை இதுவரை கட்டப்படவில்லை என்று சொல்லபடும் செங்கோட்டையைக் கட்டியவர்கள் – இந்திய இஸ்லாமியர்கள்தான். அந்தச் செங்கோட்டையில் ஏறித்தான் இந்திய சுதந்திரக் கொடியை பாரதப் பிரதமர்கள் ஏற்றிவைக்கிறார்கள்.
நாங்கள் முஸ்லிம்கள் என பிரகடனப்படுத்துகிறோம். எங்கள் குர்ஆன் ஷரீஃபின் ஒவ்வொரு எழுத்தின் மீதும், அதன் கருத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மேலும் நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தனை போதனைகள் மீதும் உறுதி கொண்டிருக்கிறோம். நாங்கள் ஷரீஅத் சட்டத்தின் வரம்புகளுக்குட்பட்டு நடந்து கொள்வோம் என உறுதி கொள்கிறோம்
எங்கள் சமுதாயத்தில் வேரூன்றி இருக்கிற ஷரீஅத்திற்கு விரோதமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் களைந்தெறிவோம். ஷரீஅத் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம் என உறுதி கொள்கிறோம்.
அதைப் பதுகாப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பொருனாலும் உயிரினாலும் எந்த தியாகத்தை செய்ய நேரினும் – எல்லா விதமான தியாகங்களையும் செய்ய உறுதி கொள்கிறோம். அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்வானாக!
யா அல்லாஹ்! உன்னையே நாங்கள் நம்பி இருக்கிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்களைக் காப்பாற்றி அருள்வாயாக! எங்களுக்கு வெற்றியைத் தந்தருள்வாயாக!.