நேர நிர்வாகம்

அபூ சாஃபியா

time-management
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை நீங்கள் எண்ணிக் கணக்கிட முடியாது.
(அல் குர்ஆன்- 14 : 34)
அல்லாஹ் உலகில் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிகவும் முக்கியமானது காலம்.
“காலத்தின் மீது சத்தியமாக!” “அதிகாலையின் மீது சத்தியமாக!” “இரவின் மீது சத்தியமாக!” என்று அல்லாஹ் தன் திருமறையில் காலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக பல வார்த்தைகளை, வசனங்களைக் கூறுகிறான்.
பொதுவாக இறைவன் ஒன்றின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான் என்றால் அல்லாஹ் சத்தியம் செய்கிற அந்த ஒன்றின் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு விளங்க வைக்கத்தான். சூரா அஸ்ர் குர்ஆனில் 103 வது அத்தியாயம். அதை “காலத்தின் மீது சத்தியமாக” என்றே ஆரம்பம் செய்கிறான். தொடர்ந்து
1. இறை நம்பிக்கை
2. நற்செயல்கள்
3. ஒருவருக்கொருவர் சத்தியத்தை பரிமாறிக் கொள்வது
4. பொறுமையை கை கொள்வது
இந்த நான்கு பண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறான்.
இமாம் ஃபக்ருத்தீன் ராஜி அவர்கள் இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதுகையில் “காலம்தான் எவ்வளவு விரிந்தது! இயத்தகு விந்தைகள் ஒவ்வொரு வினாடியும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் இஷ்டத்தையும் நஷ்டத்தையும் எதிர் கொள்கிறான். ஏற்றத் தாழ்வுகளைக் கடக்கிறான். சுகத்தையும் வளத்தையும் அனுபவிக்கிறான். பசியையும் பட்டினியையும் உணருகிறான்.” ஆக மனித வாழ்வின் தருணங்கள் மிகவும் விலை மதிப்புமிக்கவை. மேலும் இமாம் ராஜி இந்த சூரா அல் அஸ்ர் அத்தியாயத்தை ஒரு ஐஸ் வியாபாரியைப் பார்த்து புரிந்து கொண்டதாக விளக்கம் எழுதுகிறார்.
அந்த ஐஸ் வியாபாரி பரபரப்பான பாக்தாதின் சந்தை மைதானத்தில் உரக்கக் கூவிக் கொண்டிருந்தான். “மக்களே! என்மீது கருணை காட்டுங்கள்! என்னுடைய முதலீடு உருகிக் கொண்டிருக்கிறது! என் மீது கருணை காட்டுங்கள் என்னுடைய சொத்து உருகிக் கொண்டிருக்கிறது.” அவனது கூவலைக் கேட்ட போது எனக்கு அஸ்ர் அத்தியாயத்தின் தாத்பரியம் புரிந்தது. “காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆம்! அந்த ஐஸ் வியாபாரியைப் போலவே மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் (ஆயுள்) என்கிற சொத்தும் வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது.” அதனை வீணடித்து விட்டாலோ, தவறான வழியில் செலவழித்து விட்டாலோ மனிதனுக்கு நஷ்டம்தான். ஆனால் பெரும்பாலானவர்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உணராமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம் இன்றைய நவீன உலகில் மனிதர்கள் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.
ஆண்கள் பெண்கள் பெரியவர்கள் என்ற விதிவிலக்கில்லாமல் முஸ்லிம்களும் நேரத்தைப் பேணும் விஷயத்தில் மிகவும் பொடுபோக்குடையவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் காலத்தைப் பற்றிய வலியுறுத்தல்கள் நிரம்பிய கடமைகளை அதிகம் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.
குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய ஹஜ், குறிப்பிட்ட மாதத்தில் செய்ய வேண்டிய நோன்பு, காலம் குறித்து கணக்கிட்டு கொடுக்க வேண்டிய ஜகாத், நேரம் தவறாத தொழுகை, காலை மாலை (திக்ர்) இறைதியானம். இப்படி ஓவ்வொரு கடமைகளையும் காலம் தவறாமல், நேரம் தவறாமல் குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள முஸ்லிம்கள் நேர நிர்வாகத்தில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்?
நடைமுறை காலம் அப்படியா இருக்கிறது? நமது அருட்கொடையான காலங்களும் நேரங்களும் இண்டெர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், சாட்டிங், சினிமா, சீரியல் போன்றவைகளை பார்ப்பதிலும், ரசிப்பதிலும் கழிந்து கொண்டிருக்கிறது.
நேரத்திற்கு தொழுதோமா? குர்ஆனை ஓதினோமா? காலை மாலை திக்ர்கள் செய்தோமா? முன்னோடிகள் வரலாறு, இஸ்லாமிய நூல்கள், படிக்க வேண்டிய அவசியமான புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்தோமா? மனைவி மக்களோடு கூடி வாழ்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோமா? இவைகள் கேள்விகளாக மட்டுமே முஸ்லிம்களிடம் உள்ளது.
அல்லாஹ் மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தரப்போவதில்லை... இப்போது தரப்பட்டுள்ள வாழ்க்கையை திட்டமிட்டு ஒழுங்காக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையின் மறுபக்கமான மறுமையில் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : இறுதித் தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை அளிக்காத வரை மனிதனின் கால்கள் நகர முடியாது.
1. உனது ஆயுளை எவ்வாறு செலவிட்டாய்?
2. உன் இளமையை எவ்வாறு கழித்தாய்?
3. செல்வத்தை எவ்வழியில் ஈட்டினாய்?
4. செல்வத்தை எவ்வழியில் செலவழித்தாய்?
5. உன் அறிவை எச்செயலுக்காக பயன் படுத்தினாய்?
நூல் : திர்மிதி
இந்த ஐந்து கேள்விகளும் ஒரே கேள்வியை மையப்படுத்தியே இருக்கிறது. மனிதனுனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாளின் நேரத்தையும், காலத்தையும் மிகச் சரியாக பயன் படுத்தினானா? இல்லையா? என்பதே அந்தக் கேள்வி.
ஏனெனில் மனித வாழ்வு என்பது நேரத்தில்தான் அர்த்தப்படுகிறது. உலகில் மனிதன் தனது நேரத்தை சரியாக பயன்படுத்தினால் மறுமையில் வெற்றி காண்பான். இல்லையெனில் பெரிய நஷ்டத்தில் இருப்பான். ஆனால் இன்றைய நவீன உலகில் “நேரம் என்பது பிரதான மூலதனமாக மாறியுள்ளது.” One Minute Management குறித்து மிகவும் உசார் நிலை காணப்படுகிறது. நேரத்தை முதலீடு செய்து மிகப் பெரும் லாபம் அடையும் பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இத்தனைக்கும் முஸ்லிம்களிடம் நேர நிர்வாகம் (Time Management) என்பது மிக அற்பமான விஷயமாக காணப்படுகிறது. எனவே காலமும் நேரமும் இறைவனின் அருள் வளம் மிக்கது. அதனை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர்களும் பயன் பெறுகின்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அது போல் ஆரோக்கியமும் ஓய்வும் பெரும் அருள் (நிஃமத்) ஆகும். அதனை நற்காரியங்களில் பயன்படுத்த வேண்டும். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆரோக்கியமும் ஓய்வும் இரு பெரும் அருள்களாகும். இந்த இரண்டிலும் மக்கள் கவனமற்று இருக்கிறார்கள்.
நூல் : புகாரி
இந்த நபி மொழிக்கு விளக்கம் அளிக்கும் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்)... “ஒரு பொருளை சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவனைப் போலத்தான்” ஆரோக்கியத்தை ஓய்வையும் அலட்சியம் செய்பவர்கள் என்றார்கள்.
நூல் : ஃபத்ஹுல் பாரி
நேர நிர்வாகம் Time Management குறித்து கூறும் மிக சிறந்த நபிமொழிகளில் ஒன்றாக கீழ் வரும் நபிமொழியைக் கூறலாம். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்திற்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. முதுமை வரும் முன் இளமை
2. நோய் வரும் முன் ஆரோக்கியம்
3. வறுமை வரும் முன் வசதி
4. வேலை வரும் முன் ஓய்வு
5. மரணத்திற்கு முன் வாழ்வு என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஹாகிம்
காலத்தைப் பற்றி இறைவனும் இறைத் தூதர் (ஸல்) அவர்களும் எவ்வளவு அழகாக கூறியுள்ளார்கள். சிலர் சடவாத உலகில் காலம் பொன் போன்றது ( Time Is Gold ) என்பார்கள். ஆனால் பொன்னை இழந்தால் மீண்டும் பெறலாம். ஆனால் காலத்தை இழந்தால் ஒரு போதும் திரும்பப் பெறமுடியாது. உயிர் போனால் எப்படி திரும்ப வராதோ அது போன்றதே காலமும் நேரமும். ஆகவே காலம் உயிர் போன்றது(Time is Life.)
ஒரு முஸ்லிமின் ஆயுளைப் பொறுத்த வரை அவனது வாழ்க்கையே வணக்கமாகும். வணக்கம் என்பது இறைவனிடம் தன்னை ஒப்படைப்பதாகும். எனவே ஒரு முஸ்லிமுக்கு முன்னால் பல்வேறு பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அவற்றை சரியாக நிறைவேற்ற வாழ்வை ஒழுங்குபடுத்தி நேரத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்...
வெற்றி பெறுவது உறுதி.