கற்க கசடற, நிற்க அதற்குத் தக - 02

kkn

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 01
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிவைத் தேடி ஒருவன் பயணித்தால், அவன் திரும்பி வரும் வரை இறைவனின் போராட்ட வழியில் உள்ளான். திர்மிதி - 2647
● அப்படி என்றால், அறிவைத் தேடும் பயணத்தில் அவன் மரணித்து விட்டால், இறைதியாகியின் அந்தஸ்தை அடைவான் என்று அர்த்தம்.
சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 02
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிவு தேடி ஒருவன் பயணித்தால், இறைவன் அவனுக்கு சுவனத்திற்கான பாதையை எளிதாக்கித் தருகிறான். முஸ்லிம் - 2699
● இந்த நபிமொழி மூலம், அறிவுப் பாதையும் அதற்கான பயணமும் சுவனத்துக்கான பாதையும் பயணமும் என்கிறார்கள் நபியவர்கள்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 03
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிவைத் தேடி பயணிக்கும் ஒரு மாணவனுக்காக, அவனது அந்தச் செயலை பொருந்தி, வானவர்கள் தங்களது இறக்கைகளை விரிக்கிறார்கள்.
● வானவர்களின் இறக்கை விரித்தலுக்கு, அறிவு தேடும் மாணவன் முன்னால் வானவர்கள் பணிகிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அவனிடம் இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 04
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பரஸ்பரம் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் உறவாடல்கள் நிறைந்த சபைகளை, வானவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள், அங்கே இறையருளும் இறங்குகிறது.
● வானவர்கள் சூழ்ந்து கொள்ளும், இறையருள் இறங்கும் சபைக்கு ஈடு இணை இவ்வுலகில் இருக்க முடியுமா? சற்று யோசியுங்கள். இன்னொரு நபிமொழியில் அறிவுச்சபையை, பூந்தோட்டத்துக்கும் பழத்தோட்டத்துக்கும் ஒப்பிட்டு, அங்கே சென்று அறிவை மேய்ந்து கொள்ளுங்கள் என்றும் அண்ணலார் அறிவுறுத்துகிறார்கள்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 05
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிஞனுக்காக, தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட, ஏழு வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைவரும், அனைத்தும் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுகின்றனர்; தேடுகின்றன.

● ஏன்? மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக, ஓர் அறிஞன் தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்து விடுகிறான். அதற்குப் பிரதி உபகாரமாக, படைப்புகள் அனைத்தும் அவனுக்கு இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடவும், பிரார்த்தனை செய்யவும் இறைவன் ஏற்பாடு செய்ய வைத்துள்ளது எத்துனை சிறப்பு வாய்ந்தது.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 06
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அறிஞர்கள், இறைத்தூதர்களின் வாரிசுகள். அந்த இறைத்தூதர்கள், தங்கத்தையோ வெள்ளியையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அறிவையே அவர்கள் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். அதை ஆவலுடன் எடுத்துக் கொண்டவன், மாபெரும் நற்பங்கை எடுத்துக் கொண்டவனாகிறான்.

● பெரும் பெரும் பணக்காரர்களுக்கு வாரிசாக இல்லை, அரும் பெரும் குணக்காரர்களான இறைத்தூதர்களுக்கு அறிஞர்கள் வாரிசு என்றால், இதுவும் எத்துனை பெரிய பாக்கியம்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 07
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உலகில் ஒருவருக்கு இறைவன் நலவை நாடினால், மார்க்கத்தில் அவருக்கு அறிவை, ஞானத்தை வழங்குவான். ● புகாரி - 71

● நபிமொழி தெரிவிக்கும் செய்தி இதுதான் :
இறைவன் நமக்கு, நமது மனைவிக்கு, நமது பிள்ளைகளுக்கு நன்மை வழங்கியுள்ளானா? அது எந்தளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால், என்னிடம், எனது மனைவியிடம், பிள்ளைகளிடம் மார்க்க ஞானம் உள்ளதா, அது எந்த அளவு உள்ளது என்பதை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.

kkn2

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 08
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது, எனக்குப்பின் அறிவு முதிர்ச்சியும் நுட்பமும் நிறைந்தவர் நிற்கட்டும். ● முஸ்லிம் - 432
● ஆன்மிக வழிபாட்டுக்கு மாத்திரமல்ல, தமக்குப் பிறகு அரசியல் நிலைப்பாட்டுக்கும் கூட அறிவும் தீட்சண்யமும் நிறைந்த தோழர்களையே கலீஃபா தலைமைக்கு தேர்வு செய்ய, சாடை மாடையாக சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 09
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைவன் மனிதர்களிடமிருந்து அறிவை, ஞானத்தை ஒரேயடியாக பறித்து விட மாட்டான்.

அறிஞர் பெருமக்களை அவர்களது உயிர்களைக் கைப்பற்றுவதின் மூலமாகவே அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக அகிலத்திலிருந்து பறிப்பான்.
அப்போது சிறந்த அறிஞர்கள் எவரும் உலகில் இருக்க மாட்டார்கள். எனவே, மக்கள் ஒன்றும் தெரியாத அறிவிலிகளை தங்களை வழிநடத்தும் தலைவர்களாகத் தேர்வு செய்வார்கள்.
அவர்களிடம் போய் மனிதர்கள் வாழ்வு குறித்து கேள்விகளை முன் வைத்து விளக்கம் கேட்பார்கள். எவ்வித மார்க்க ஞானமுமின்றி அவர்கள், ஃபத்வாக்களை [தீர்ப்புகளை] வழங்குவார்கள். அவற்றின் மூலம் தாமும் வழிகெட்டு, பிற மனிதர்களையும் வழிகெடுத்து விடுவார்கள்.
புகாரி - 100
● இன்றைய எதார்த்தமான உண்மையை எவ்வளவு துல்லியமாக கணக்கு போட்டு நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 10
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கற்றறிந்த அறிஞருக்கும் கற்காத வணக்கசாலிக்கும் இடையில் உள்ள வேறுபாடு, எனக்கும் உங்களில் ஆகத் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்றதாகும். திர்மிதி - 2685

● அபூ தாவூது நூலின் இன்னொரு அறிவிப்பில், கற்றறிந்த அறிஞருக்கும் கற்காத வணக்கசாலிக்கும் இடையில் உள்ள வேறுபாடு, பூரண நிலவுக்கும் ஏனைய நட்சத்திரங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்றதாகும் என்று வந்துள்ளது. அதாவது, ஆலிமுக்கும் ஆபிதுக்கும் இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு போன்றது.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 11
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரவில் சில மணித்துளிகள் பரஸ்பர அறிவுத் தேடலில் ஈடுபடுவது, இரவு முழுக்க நின்று வணங்குவதை விடச் சிறந்தது. தாரமீ
● அதாவது, இரவில் ஒரு மணிநேரம் அறிவைத் தேடும் பணியில் ஈடுபட்டால், இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும்.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு -12
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மார்க்க ஞானமுள்ள அறிஞர், ஷைத்தானைப் பொறுத்த வரை, ஆயிரம் ஆபித் [வணக்கசாலி] களை விட கடுமையானவர். திர்மிதி
● ஏன் தெரியுமா?
ஒருவன் வணக்க வழிபாட்டில் ஈடுபடுகிற போது அது அவனளவில் தனிமனித மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், ஒருவன் மார்க்க ஞானம் பெறும் போது, அது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். எனவேதான், ஆபித்களை விட ஆலிம்கள் ஷைத்தானுக்கு கடுமையானவர்களாகத் தெரிகிறார்கள்.

kkn4

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 13
■ ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் உள்ளே நுழைகிறார்கள்.

● அங்கே ஒரு பக்கத்தில் ஒருசிலர், வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

● இன்னொரு பக்கத்தில் இன்னும் சிலர், அறிவுத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இரு சாராரையும் சற்று நேரம் நின்று கவனித்த நபியவர்கள்,

"அந்தக் குழுவினர், இறைவனைப் பிரார்த்திக்கின்றனர், வேண்டுதல் புரிகின்றனர். இறைவன் நாடினால், அவர்கள் வேண்டியதைத் தரலாம். அல்லது தராமல் போகலாம்.

ஆனால், இந்தக் குழுவினர், தாமும் நல்லவற்றை கற்று, பிறருக்கும் அவற்றைக் கற்பித்துத் தருகின்றனர். இவர்களே சிறந்தவர்கள்.

■ நான் உலகிற்கு ஓர் ஆசிரியனாகவே அனுப்பப் பட்டுள்ளேன்."
என்று கூறிவிட்டு, அவர்களோடு போய் அமர்ந்து கொண்டார்கள். ● மிஷ்காத், இப்னு உமர் (ரளி).

● தியானச்சபையை விட அறிவுச் சபையை நபியவர்கள் தேர்வு செய்ததின் மூலம், அறிவின் சிறப்பை நாம் உணர முடிகிறது.

சுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 14
■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

● செல்வம் வழங்கப்பட்ட ஒருவன், அதை உரிய முறையில், சரியான வழியில் தான தர்மம் செய்கிறான்.

● அறிவு வழங்கப்பட்ட ஒருவன், அதைப் பிறருக்கு கற்றுத் தருவதோடு அதன்படி செயல்படவும் செய்கிறான். இந்த இரண்டு நபர்கள் மீது தவிர, வேறு யார் மீதும் பொறாமை கொள்ள அனுமதி இல்லை.
புகாரி - 73
● கல்வி விஷயத்தில் பொறாமை மட்டுமல்ல, பேராசையும் படலாம். ஏனெனில், இறைவா! எனது அறிவை அதிகப்படுத்துவாயாக! [அல் குர்ஆன் - 20 : 114] என்று நபியவர்களைப் பிரார்த்திக்குமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.
இப்படியாக...
அறிவு பற்றி நூற்றுக்கணக்கான நபிமொழிகள் இடம் பெற்றுள்ளன. நபிமொழிக் கிரந்தங்களில் கிதாபுல் இல்ம் அல்லது பாபுல் இல்ம் [கல்வி பற்றிய பாடம்] இடம் பெறாமல் இல்லை.

● புகாரி நூலில், வஹீ [வேத வெளிப்பாடு], ஈமான் [இறை நம்பிக்கை], இரண்டையும் அடுத்து பாபுல் இல்ம் இடம் பெற்றுள்ளது. இதேபோல ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழிக் கிரந்தங்களிலும் கல்வி பற்றிய பாடம் பதிவாகியுள்ளது.

● ஃபத்ஹுர் ரப்பானியில் கல்வி பற்றிய 81 நபிமொழிகள்,
● ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் 67 நபிமொழிகள்,
● தர்ஙீப் வத் தர்ஹீபில் 140 நபிமொழிகள்,
● மஜ்மூவுஸ் ஸவாஇதில் கல்வி பற்றி 84 பக்கங்கள்
● முஸ்தத்ரக்கில் 44 பக்கங்கள்,
● ஜம்உல் ஃபவாயிதில் 154 நபிமொழிகள்.
இன்னும் கற்போம்…