ஜகாத் – கூட்டு விநியோகம்

zakat-6-zakat1p

 – நிக்கத் பின்த் அசதுல்லாஹ், ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு.
சமூகத்தின் பொருளாதார நீதியை நிலை நாட்டுகிற வகையில் இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஒரு திட்டம்தான் ஜகாத். ஜகாத் வழங்கும் நிர்ணய அளவை எட்டும் வசதி பெற்றவர்களிடமிருந்து ஜகாத் பெறும் தகுதியுள்ளவர்களிடம் வழங்கும் அமைப்பைக் கொண்டதுதான் ஜகாத்.
இது இரண்டு விதமான பலன்களைக் கொண்டது வழங்குபவர்களுக்கு உளத்தூய்மையையும், நன்மைகளையும், பொருளாதார வளர்ச்சியையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தருகிறது. இரண்டாவது சமூகம் வறுமையின் பிடியிலிருந்தும், பொருளாதார பின்னடைவுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த இரண்டு அம்சங்களால் வசதியானவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இடையே உண்டாகும் உறவின் மூலம் வர்க்க பேதம் மறைந்து போகும். தேவையுடையவர்களின் உணவு, உடல் நலம் வீடு போன்ற அதி அதி அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதன் மூலம் திருட்டு வழிப்பறி கொலை போன்ற குற்றச் செயல்கள் உருவாகும் அடிப்படைகள் களையப்படுகிறது.
இஸ்லாம் ஏற்படுத்த விரும்பும் சமாதான சமநீதியான சமூகத்தின் நிர்மானத்துக்கும் ஜகாத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. ஜகாத் வழங்கப்பட வேண்டியோர் மற்றும் ஜகாத்தைப் வசூலித்து வழங்கும் பைத்துல் மால் அதன் சேவைகள் குறித்த ஒரு குறிப்பே இந்த கட்டுரை.
ஜகாத் ஏற்படுத்தும் நற்பன்புகள்
1. இறை நம்பிக்கையின் பிரதிபலிப்பு
தேவையுடையோருக்கு பொருளாதார உதவி செய்து தொழுது ஜகாத் வழங்குவோர் வாய்மையுடையோர் என்றும் இறைச்சம் உடையோர் என்றும் அல்லாஹ் சான்று பகர்கிறான்.
கஞ்சத்தனத்திலிருந்து காப்பாற்றும்
தானம் செய்யுங்கள் அது உங்களுக்கே நன்மை. கஞ்சத்தனத்திலிருந்து வெற்றி பெறுவார்கள் (64 : 16) என்று கூறுகிறாம் அல்லாஹ். தங்கம் வெள்ளி நாணயங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்கிறவன் பேரிழப்புக்குரியவன் என்கிறார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். கருமித்தனம் மிதமிஞ்சிய பொருளாதார ஆசை போன்ற இழிவான குணங்களிலிருந்து மனிதனை தூய்மைப்படுத்துகிறது ஜகாத்.
பதற்றம் அகலும்
தேவையுடையோருக்கு வழங்கப்படும் ஜகாத் அவர்களை தீய செயல்களிலிருந்து தடுக்கிறது. இமாம்களில் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் ஏழைகளின் கண்களில் பட்டுவிட்ட அதே பொருளை அவனுக்கு வழங்கி அவனது ஏக்கத்தை போக்க வேண்டும் என்கிறார்கள். இப்னு குதாமா அஷ்ஷரஹுல் கபீர்.
வர்க்க பேதம் ஓழியும்
ஜகாத் வழங்குவதற்கும் பெறுவதற்கு குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்து சமூகத்தில் பொருளாதார சம நீதியை ஏற்படுத்துகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறைந்து வர்க்க பேதம் ஒழிகிறது.
பொது அமைதி
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் சமூகத்தில் தோன்றும் சச்சரவுகள் நீங்கி பொருளாதார குற்றங்கள் குறைந்து பொது அமைதி உண்டாகும்.
வறுமை ஒழிப்பு
இறைவா! இறைநிராகரிப்பிலிருந்தும் வறுமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று துஆ செய்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்.
வறுமை ஒரு மனிதனை இறைவனை நிராகரிக்கும் மன்னிக்கப்படாத பெரும் பாவத்தை செய்யத் தூண்டும் அளவு கொடூரமானது.
ஆக வறுமை களையப்பட வேண்டிய ஒன்று. ஜகாத் வழங்குவதன் மூலம் அது களையப்பட வேண்டும்.
ஜகாத் பெறத் தகுதியுடைய எட்டு பிரிவினர்
முதல் வகுப்பினர் :- ஏழைகள் – ஃபுகராக்கள்
எந்த வசதியும் இல்லாத பிறரிடம் வாய் திறந்து கேட்க் கூச்சப்படும் ஏழைகள்.
ஜகாத் அவர்களில் வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். நபிமொழி புகாரி
இரண்டாம் பிரிவினர் :- எளியவர்கள் (மிஸ்கீன்கள்)
பிறரிடம் கூச்சப்படாமல் தேவைகளைக் கேட்டு பெறுபவர்கள் எளியவர்கள். (இஸ்லாம் கையேந்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது.)
மூன்றாம் பிரிவினர் :-
ஜகாத் துறை ஊழியர்கள் (வல் ஆமிலீன அலைஹா)
நபியே! நீர் அவர்களுடைய செல்வத்திலிருந்து ஜகாத்தை கைப்பற்றும் (9 : 103) என்பது அல்லாஹ்வின் கட்டளை. ஜகாத்திற்காக பைத்துல் மால் ஒன்று நிறுவப்பட வேண்டும். ஜகாத்தை வசூலிக்கும் ஊழியர்களும் நியமிக்கப்பட வேண்டும். ஜகத் துறையில் பணிபுரிபவர்களே மூன்றாம் பிரிவினர். அஸ்த் கிளையைச் சார்ந்த லுத்பிய்யா என்பவரை பனீ சுலைம் குலத்தாரிடம் அனுப்பி ஜகாத்தை வசூலித்து வர அனுப்பினார்கள் அவர் திரும்பி வந்ததும் அவரிடம் கணக்கு வாங்கினார்கள் என்ற தகவல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்காவது பிரிவினர்:- இதயங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள்
(முஅல்லஃபதுல் குலூப்) எந்த மக்களிடமிருந்து இஸ்லாத்திற்கு உதவியும், ஆதரவும் ஏற்படுமோ அவர்கள். இதில் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதாவர்கள் என்ற பாடுபாடு இல்லை.
இதில் பல பிரிவினர் உள்ளனர்.
1. முஸ்லிம் அல்லாதாவர்கள் இவர்களுக்கு ஜகாத் வழங்குவதால் இவர்களும் இவர்களுடைய குடும்பமும் இஸ்லாத்தை தழுவக் கூடும்.
2. இவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே. இவர்களால் முஸ்லிம்களுக்கு தீமைகள் விளையும் என்றால் இவர்களின் தீமைகளை குறைப்பதற்காக ஜகாத் வழங்கலாம்.
3. இவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இஸ்லாத்தில் பிடிப்புடன் உறுதியாக இருக்க்ச செய்வதற்காக இவர்களுக்கு ஜகாத் வழங்கலாம் வசதியானவர்களாக இருந்தாலும்.
4. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் முக்கியஸ்தர்களுக்கு ஜகாத் வழங்கலாம். அதன் மூலம் அவர்களின் சக நண்பர்களும் உறவினர்களும் இதன் மூலம் கவரப்படும் வாய்ப்புகள் உள்ளது.
ஐந்தாம் பிரிவினர்:- அடிமை விடுதலைக்காக…
அடிமைத்தளையிலிருந்து விடுபட நிதியுதவி வேண்டி நிற்போர்.
ஆறாம் பிரிவினர்:- (அல் காரிமீன்)
கடன்பட்டோர் சொந்த தேவைகள், மனைவி மக்களின் தேவைகளுக்காக வாங்கியிர்ந்தாலும் சரி! மேலும் திருமணம், சிகிச்சை, அநாதைகள் பராமரிப்பு போன்ற நற்காரியங்களுக்காக கடன் வாங்கியிருந்தாலும் சரியே!
ஏழாம் பிரிவினர்:- அல்லாஹ்வின் பாதியில் உள்ளவர்கள் (ஃபீ சபீலில்லாஹ்)
அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவோர். அனைத்து நற்காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்களும் இதில் அடங்குவர் என்பது இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
எட்டாம் பிரிவினர் :- வழிப்போக்கர் (இப்னு சபீல்) பயணிகள், பயணத்தில் அல்லபடுவோர், பயணத்தில் தனது உடமைகளை தவற விட்டோர் ஆகியோர் இதில் அடங்குவர்.
ஜகாத் கடமையாகும் செல்வங்கள்
ஒரு பொருளில் ஜகாத் கடமையாவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. முதலில் அப்பொருள் வளர்ச்சியடையக் கூடியதாகவும், இலாபம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தேவையை நிவர்த்தி செய்வதற்காக உள்ள பொருட்களில் கடமையாகாது.
கால்நடைகள்
அன்று ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகள் முக்கிய்மான செல்வங்களாக விளங்கின. இந்த கால்நடைகள் வேலைக்காக இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்படிருப்பின் அதில் ஜகாத் கடமையாகும். மேலும் அவைகள் தானாக சென்று மேய்ந்து வருவதாக இருக்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான நிலங்களில் விளையும் தாவரங்களை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் மேய்ந்திருந்தால் அவைகளில் ஜகாத் கடமையாகும். நபிமொழி- நஸயீ.
தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி ஆகிய கனிமப் பொருட்கள் அன்று நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த அடிப்படையிலேயே இவற்றில் ஜகாத் விதியாயிற்று. எனவே தான் இதை நாணயங்களின் ஜகாத் கூறுவார். வெள்ளியைப் பொறுத்த வரை ஒவ்வொரு 200 திர்ஹம்களிலும் 6 திர்ஹம் ஜகாத் கொடுக்க வேண்டும். நபிமொழி திர்மிதி.
இன்றைய சூழலில் கரன்சி நோட்டுகள் பொன் மற்றும் வெள்ளியின் இடத்தை வகிக்கின்றன. கரன்சி நோட்டுகளை வளர்ச்சித் திட்டத்தில் முதலீடு செய்யாமல் சேமித்து வைத்தாலும் அதற்கு ஜகாத் செலுத்தியாக வேண்டும்.
“அநாதையின் பொருளை வியாபாரத்தில் ஈடுபடுத்துங்கள். இல்லையேல் அதை ஜகாத் சாப்பிட்டு விடும்.” நபிமொழி- திர்மிதி.
எனவே பணத்தை மக்கள் வெறுமனே சேமித்து வைக்காமல் பயனளிக்கும் செயல்பாடுகளில் முத்லீடு செய்ய இந்த நபிமொழி தூண்டுகிறது.
வணிகச் சரக்குகள்
வணிகப் பொருட்களில் ஜகாத்தின் நிசாபை ஒருவர் ஒரு வருடம் வரை உடமையாக்கி வைத்திருந்தால் அதில் 2.5 சதவீதம் ஜகாத் கடமையாகும். இதுவரை கூறப்பட்ட மூன்று வகைகளும் அசையும் பொருட்களில் அடங்கும். இவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜகாத்தின் நிசாபை மொத்த செல்வத்தோடு கணக்கிட்டால் குறைவாக இருக்கும்.
அல்லாஹ்வின் இந்த ஏற்பாடு சமூக பொருளாதார நீதியை மனித சமூகத்தில் நிலை நாட்டி மனித சமூகத்தில் அமைதியை நிலை நாட்டும்.
பயிர்களும் பழங்களும்
நபி (ஸல்) அவர்கள் நிலம் வெளிப்படுத்துகிற பொருட்களில் ஜகாத் உண்டு என தெரிவித்துள்ளார்கள். அறுவடை செய்யப்படும் நேரத்தில் ஜகாத் கடமையாகிவிடும்.
(விவசாயம்) பயனளித்தால் அவற்றை தாரளமாக புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கை கொடுத்து விடுங்கள்.
6 : 141
இந்த நான்கு வகை பொருட்கள் நபியவர்களது காலத்தில் பயன் தருவதாக இருந்தன. அவற்றில் ஜகாத் வழங்கும் முறைகள் கடமையாக்கப்பட்டன. காலப்போக்கில் புதிய தொழில்களும் தொழில் துறைகளும் வர்த்தக முறைகளும் உருவாகியுள்ளன. இவற்றில் மேற்கண்ட நான்கு பொருட்களைக் கொண்டு ஜகாத் முறை பின்பற்றப்படும்.
ஜகாத் குழு அமைப்பின் செயல்பாட்டு முறைகள்
தற்காலத்தில் முஸ்லிம்கள் வாழுகின்ற ஒவ்வோர் ஊரிலும் இறை இல்ல்லங்களை அடிப்படையாகக் கொண்டு முஹல்லாக்கள் (தனி பிராந்தியங்கள்) அமைக்கப்படுகின்றன. திருமணம், இறப்பு போன்ற காரியங்களில் இந்தக் கட்டமைப்புகளின் செயல்பாடுகள் யாவருக்கும் திப்ருதியளிக்கும் வகையிலேயே அமைகின்றன. ஆனால் கட்டாயக் கடமையான ஜகாத் விஷயத்தில் இக்கட்டமைப்பு செயல்படா அமைப்புகளாகவே இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு முஹல்லாவிலும் வாழும் வறுமைப்பட்டோரின் பொருளாதாரச் சூழலில் எவ்வித ஏற்றத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.
ஒவ்வொரு முஹல்லா அமைப்பிலும் ஜகாத் நிதியை வசூலிக்க தனி ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த ஊழியர்கள் தங்களுடைய முஹல்லாவில் ஜகாத் குறித்த விளக்கங்களை மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஜகாத்தை முறையாக வழங்காத வசதி படைத்தோர் அந்த முஹல்லா கட்டமைப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டும். இறைவன் கூறுகிறான் நபியே! அவர்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தை கைப்பற்றுவீராக! 9:103 முதல் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் நடைமுறைப்படுத்தியதும் இது போன்ற வழிமுறையைத்தான் என்று வரலாறு வழிகாட்டுகிறது.
பைத்துல் மால்
முஹல்லாக்களில் முறையாகத் திரட்டப்பட்டஜகாத் தொகை மொத்தமாக அந்த ஊரின் பொது நிதிக் கருவூலம் என்கிற பைத்துல் மாலின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இது ஏழைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பயனளிக்கும்.
பைத்துல் மால் அமைப்பின் செயல்முறை
செல்வந்தர்களின் ஏற்றத் தாழ்வுகளை கவனிக்க வேண்டும். முஹல்லாக்களால் கணக்கெடுக்கப்பட்ட வறியவர்களின், ஏழைகளின் நிலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
பைத்துல் மால் அமைப்பில் ஜகாத் தொகை மட்டுமின்ரி சதகா தொகையையும் சேமிக்க வேண்டும். ஆனால் ஜகாத் வறிய்வர்களுக்கு மட்டும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பெறப்பட்ட ஜகாத் மற்றும் சதகா தொகைகள் தனித்தனியாக முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். தகுந்த முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
ஊரின் தகவமைப்புகளை கருத்தில் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் “ஓராண்டுத் திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பைத்துல் மாலின் சேவைகள்
• வேலை வாய்ப்பு
வறுமையில் வாடக்கூடிய மக்களுக்குத் தொழில் முனைவுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டும்.
• கல்வி
மக்களிடையே கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இவ்வமைப்பு முழு வீச்சில் செயல்படவும், ஏழை மாணவர்கள் திறமை மிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது.
• மருத்துவம்
மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட, மருத்துவ செலவுக்கு சிரமப்படும் மக்களின் துயர் துடைக்க பைத்துல் மால் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
• ஒழுக்கப் பயிற்சி
வளரும் தலைமுறை ஏழ்மையாலும், வசதியாலும் சமூக சீர்கேடுகளின் பக்கம் சாய்வதைத் தடுக்க முறையான மார்க்க அறிவும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
• வட்டியில்லாக் கடன்
சுய வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் அதி அவசியத் தேவைகளுக்கு வட்டியற்ற கடன் வழங்க வேண்டும்.
• நெருக்கடி கால நிதி
கடும் பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள், இஸ்லாத்திற்கு எதிரான செய்பாடுகள் ஆகியவற்றை சமாளிக்க பைத்துல் மாலின் நிதி பயனப்டுத்தப்பட வேண்டும்.
முடிவுரை
இஸ்லாமிய பொருளியலில் முக்கியமான அம்சமாக ஜகாத் விளங்குகிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாகவும் ஜகாத் திகழ்கிறது. செல்வம் தனிமனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல! பல கோடி ஏழைகளின் உரிமைகளையும் உள்ளடக்கியது. குர்ஆன் ஜகாத் குறித்து பேசும் போது ஏழைகளுக்கு அவர்களின் உரிமையை கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறது. ஜகாத் வழங்குவதன் மூலம் சமூகத்தில் வசதியானவர்களின் கையில் இருக்கும் ஏழைகளின் உரிமைகள் நீதியாக நிறைவு செய்யப்படுகிறது. சமாதான சமநீதியான சமூக உருவாக ஜகாத் வழி செய்கிறது. அதை நோக்கி பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்வின் உதவி எப்போதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உண்டு.