இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனைகள்.

islamic-wallpapers
இஸ்லாமிய பாடத்திட்டம் எப்படி இருந்தது? அதை பயிற்றுவிப்பதால் மாணவனும் அவன் சார்ந்திருக்கின்ற சமூகமும் எந்த அளவிற்கு பண்பாடும், நாகரீகமும் அடையும் என்பதை கடந்த மாதங்களில் பார்த்தோம்.
இஸ்லாமிய பாடத்திட்டத்தை மையமாக வைத்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கல்வித் திட்டம் இப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறார்கள். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பாடத் திட்டத்தை இரண்டு வகையாக பார்க்கிறார்கள்.
1. கட்டாய அறிவியல் (Obligatory Science)
கட்டாய அறிவியல் என்பது அனைவரும் அவசியம் தெரிந்தே ஆக வேண்டிய விசயங்களை, செய்திகளை குறிப்பிடுகிறார்கள்.
1. மார்க்க அறிவியல் (Religious Science)
இஸ்லாம் அறிவு சார்ந்த மார்க்கம் மட்டுமல்ல! அறிவியல் சார்ந்த மார்க்கமும் கூட! இன்னும் சொல்லப்போனால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பல குர்ஆனிலும் நபிமொழிகளிலும் சொல்லப்பட்டவைதான்.
சூரியன், சந்திரன் சுழலும் விதம், ஒரு மனிதனின் உடலில் நடக்கின்ற ஏராளமான விஷயங்கள், கருவறை மர்மம் என இன்றைய அறிவியல் எதையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மகிழ்கிறதோ அவைகளை எல்லாம் சுமார் 1436 ஆண்டுகளுக்கு முன்பே திருமறை தெளிவுபடுத்தியுள்ளது.
நபிகளாரின் வாக்கை மட்டுமே தனது ஈமானின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த நல்லோர்களின் காலம் கடந்து சென்ற பின், தனது அறிவை வைத்து ஒவ்வொன்றையும் உரசிப்பார்க்க பயணப்பட்டதால் அறிவு சார்ந்த அறிவியலின் முன்னோடியாக திருமறையும் நபிகளாரின் பொன் மொழிகளும் அமைந்திருக்கின்றன.
கேன்சர் மற்றும் அல்சருக்கான மருந்து சுரக்காயில் உள்ளது என (Times of India News‎ ஆகஸ்ட் 10, 2016) இன்றைய அறிவியல் கூறுகிறது. சுமார் 1436 ஆண்டுகள் பின்னோக்கி நபிகளாரின் வாழ்வில் பயணிக்கத் தொடங்கினால் “நபி (ஸல்) அவர்கள் சுரக்காயை விருப்பி சப்பிட்டிருக்கிறார்கள்” என்ற செய்தியை பார்க்கிறோம்.
அறிவியலின் அடிப்படை கூட இல்லாத காலத்தில் வாழ்ந்த நபிகளாரின் விருப்ப உணவுகளில் ஒன்றான சுரக்காய், இன்றைய மிகப்பெரும் நோய்களுக்கான மருந்து என்பதை பார்க்கின்ற போது, நபிகளாரின் ஒவ்வொரு செயலும் அறிவியலாகவே இருந்திருக்கிறது என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். சுப்ஹானல்லாஹ்…
“இறக்கைகளை விரித்துக் கொண்டும், மடக்கிக் கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் செல்லும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? ரஹ்மானை (அல்லாஹ்வை)த் தவிர (வேறு எவரும்) அவைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை.” என்ற 67 வது அத்தியாயத்தின் 19 வது வசனம் கி.பி. 810 – 887 ஆண்டு வாழ்ந்த அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் (ரஹ்) செவியில் விழவே அது ஆராய்ச்சிக்கு அவரைஅழைத்துச் சென்றது.
“இறக்கைகளை விரித்துக் கொண்டும், மடக்கிக் கொண்டும் மேலே ஆகாயத்தில் செல்லும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா” என்ற வசனம் இப்னு ஃபிர்னாஸ் அவர்களை உறுத்த ஒரு நாள் இவர் செய்த வேலை என்ன தெரியுமா?
“தனது உடலை இறக்கைகளால் மூடிக் கொண்டு சிறகுகளை ஓரங்களில் கட்டிக் கொண்டு பறக்க முற்பட்டார்கள். முடியவில்லை… முடிந்த வரை செய்தார்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்க ஆரம்பித்தார்கள்.”
810 – 887 ஆண்டுகளில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் அவர்களின் முயற்சியின் பயிற்சியின் அடிப்படைகளைக் கொண்டுதான் 1871 – 1948 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தார்கள்.
விமானத்தைக் கண்டு பிடித்தவர்களை பாராட்டுகின்ற போற்றுகின்ற அதே நேரம் அதற்கான அடித்தளத்தை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் (ரஹ்) அவர்களை இந்த சமூகமும் உலகமும் ஏன் மறந்து போனது தெரியவில்லை?
ஆனால் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் (ரஹ்)அவர்களின் முயற்சியை கௌரவிக்கும் வகையில் ஈராக் தலைநகர் பாக்தாதில் “இப்னு ஃபிர்னாஸ் விமான நிலையத்தில்” அவர் பறப்பது போன்ற உருவத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
திருமறையின் ஒரு வசனம், திருத்தூதரின் ஒரு விருப்ப உணவு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்து சக்தியாகவும், நோய்களுக்கு மருந்தாகவும் ஆகும் எனில் ஒவ்வொரு வசனம் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை முறை ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால்… சுப்ஹானல்லாஹ்…
அதனால்தான் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பாடத்தின் முதல் அம்சமே இஸ்லாமிய அறிவியலை கட்டாய பாடமாக அமைத்துள்ளார்கள்.
2. மார்க்க அறிவியல்
மார்க்க அறிவியலோடு சேர்த்து அதற்கு துணையான பாடமாக அமைந்திருக்கின்ற மொழியியல் (Linguistics) மற்றும் இலக்கியம் (Literature) கற்றுக் கொள்வது கட்டாயம் என வலியுறுத்துகிறார்கள்.
மொழியியல் மற்றும் இலக்கியம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
நபிகள் நாயகம் பிற மொழிகளை கற்றுக் கொள்வதை வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒரு மொழியை கற்றுக் கொள்கிற போது அதன் இலக்கண, இலக்கியம் மிக உயர்ந்த இடத்தைப் பெறுகிறது.
எனவே ஒரு மாணவர் மார்க்க அறிவியல், மொழியியல், இலக்கியம் போன்ற பாடங்களை கற்றுக்கொள்வது அவசியத்திலும் அவசியம் என இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.