ஹிஜ்ரத் கற்றுத் தரும் படிப்பிணைகள்

ஹிஷாம் ராஜிக்

ஹஜரத கறறத தரம படபபணகள

மனிதர்களின் முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்த நிகழ்வு ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகிறது. ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இது பெருமானார் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றுபின் 13ஆம் ஆண்டுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதன் முக்கியத்துவம் காரணமாக இஸ்லாமிய ஆண்டுக் கணக்கை ஆரம்பிக்கும் எல்லையாக ஹிஜ்ரத்தை உமர் (ரழி) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

ஹிஜ்ரத்துக்கான காரணங்கள்
1. அல்லாஹ்வின் கட்டளை. நபி (ஸல்) அவர்கள் இந்த நிகழ்வை கனவிலும் கண்டார்கள்.
2. மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம் தேக்கநிலை அடைந்து குறைஷியரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தது.
3. ஒரு முன்மாதிரியான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் மக்காவில் இல்லாதது. அதிகாரம் உள்ளவர்களும், பழம் பெருமை பேசியவர்களும் இதற்குப் பெரும் தடையாக இருந்தார்கள்.
4. சிலை வணக்கத்தையும் தமது மூடப் பழக்கவழக்கங்களையும் பாதுகாப்பதன் மூலம் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத குறைஷிகள் தமது அரசியல், சமூக, பொருளாதாரம் தங்கள் கைகளை விட்டு போய்விடுமோ என்று பயந்தார்கள்.
5. அகபா உடன்படிக்கை மூலம் மதீனாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய அழைப்புக்கு பொருத்தமான தளமாக மதீனா அடையாளம் காணப்பட்டது.

மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் (இடப் பெயர்வு) நடைபெற்றதற்கான காரணிகள்
1. மதீனா மக்கள் அறிவில் ஆர்வமுடையோராகவும் எளிதில் புரிந்துகொள்வோராகவும் நியாயமானவர்களாகவும் திறந்தமனமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
2. மக்கா வாசிகளை விட மதீனா வாசிகள் கலாசார முன்னேற்றம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
3. மதீனாவில் யூத, கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததால் நபித்துவம் பற்றிய ஓரளவு அறிமுகமும் முந்திய வேதங்கள் பற்றிய அறிவும் இருந்தது. இதனால் இஸ்லாத்தை எடுத்துரைப்பது ஓரளவு இலகுவாக இருந்தது.
4. மதீனாவில் நீண்டகாலமாக மோதிக் கொண்டிருந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரிடையே சமாதானத்தை ஏற்படுத்திவைக்கக்கூடிய ஒரு சமாதானத் தூதர் தேவைப்பட்டார்.
5. மக்காவின் தலைமைத்துவத்துக்கு ஈடாக அல்லது அதனை விட மேலான ஒரு தலைமைத்துவம் தம்மிடையே உருவாக வேண்டும் என மதீனாவாசிகள் விரும்பினார்கள்.
6. நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவுடன் இரத்த உறவும் இருந்தது. நபியவர்களின் பாட்டனார் ஹாஷிம் கஸ்ரஜ் கோத்திரத்தில மணமுடித்திருந்தார்.

ஹிஜ்ரத் ஒரு திட்டமிட்ட பயணம்
ஹிஜ்ரத் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது உயிரைக் காத்துக் கொள்வதற்காக தப்பியோடிய ஒரு திடீர் முயற்சி அல்ல. அது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு விவேகமான செயல்பாடு. இதற்கு சான்றாக பல்வேறு விஷயங்கள் இருக்கிறது.
• ஒரு முழுமையான சமுதாய அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பல இடங்களை நபியவர்கள் தேடி இறுதியில் மதீனாவையே அதற்காகத் தேர்வு செய்தார்கள்.
• மதீனாவுக்குச் செல்லும் முன்னர் அங்கிருந்து வந்தவர்களோடு (அகபா) உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதோடு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக அனுப்பி வைத்ததார்கள். இது மதீனாவில் ஒரு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் முன்னேற்பாடாக அமைந்தது.
• ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை நபி (ஸல்) காத்திருந்தார்கள்.
• ஹிஜ்ரத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அபூ பக்ர் (ரழி)அவர்களுக்கு நபியர்கள் பொறுப்பு அளித்திருந்தார்கள்.
• ஓரிறைக் கொள்கையை மறுத்த குறைஷிகளின் அடைக்கலப் பொருட்களை ஒப்படைப்பதற்கு அலி(ரழி)அவர்களை நியமித்தார்கள்.
• அப்துல்லாஹ் பின் உரைகத் எனும் முஸ்லிம் அல்லாத ஒரு தேர்ச்சி பெற்ற வழிகாட்டி ஒருவரை ஹிஜ்ரத்தின் போது நியமித்தார்கள்.
• குறைஷியருடைய நடவடிக்கைகளை அறியவும் உணவைப் பெற்றுக்கொள்ளவும் முன்னேற்பாடாக அஸ்மா (ரழி) அவர்கள் பொறுப்பளிக்கப்பட்டார்கள்.
• உணவு கொண்டுவருவோரின் பாதச் சுவடுகளை அழிப்பதற்காக ஆமிர் பின் ஸுஹைரா எனும் இடையர் நியமிக்கப்பட்டார்.
• நேரடியாக மதீனாவுக்குச் செல்லாமல் தவ்ர் குகையில் தங்கினார்கள். பின்பு அங்கிருந்து புதியதொரு பாதையில் மதீனாவை நோக்கிச் சென்றார்கள்.

ஹிஜ்ரத்தின் முக்கியத்துவம்
1. இஸ்லாமிய சட்டங்கள், வழிபாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
• அதான் (பாங்கு), கிப்லா மாற்றம்
• ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகள்
• ரமழான், நோன்பு, ஸகாத், ஹஜ்...
2. இஸ்லாமிய தஃவா முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
• வேதக்காரர்களை நோக்கி பிரச்சாரம் பலமாக முன்னெடுக்கப்பட்டது.
3. சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டமை.
• அவ்ஸ், கஸ்ரஜ் உறவு, முஹாஜிர், அன்ஸார் பிணைப்பு, வேதக்காரருடனான உறவு
4. இஸ்லாமிய அரசு ஒன்று உருவாக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி அரசியல் தலைவராகவும் மாறி மதீனாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்யும் நிலை தோன்றியது. குர்ஆன், ஸுன்னா அரசியல் அமைப்பாக மாற்றம் பெற்றது.
5. குர்ஆன் எதிர்பார்க்கும் முன்மாதிரியான முஸ்லிம் உம்மத் உருவாக்கப்பட்டது.
6. முஸ்லிம்களுக்கிருந்த கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமாக இஸ்லாத்தைப் பின்பற்றும் சூழல் உருவாக்கப்பட்டது.

ஹிஜ்ரத் உணர்த்தும் படிப்பினைகள்
1. நபி (ஸல்) தன்னிகரற்ற தலைமைத்துவம் ஹிஜ்ரத்தில் வெளிப்படுகின்றது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள்.
2. சில விஷயங்களை இரகசியமாகவும் இராஜதந்திரமாகவும் நடத்த வேண்டும். தனது ஹிஜ்ரத்தை நபியவர்கள் இறுதிவரை இரகசியமாக வைத்திருந்தார்கள்.
3. ஏதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார்கள். தவ்ர் குகையில் தங்குதல், பாதையை மாற்றுதல்.
4. ஸஹாபாக்களின் ஈடிணையற்ற தியாகத்தை இது பறைசாற்றுகின்றது. அலீ (ரழி)அபூ பக்ர் (ரழி)
5. திட்டமிடல் என்பது இஸ்லாத்தில் இன்றியமையாதது. இதனை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் எப்போதும் கடைப்பிடித்துள்ளார்கள்.
6. அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைத்தல். தவ்ர் குகை சம்பவம்.
7. இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பு அஸ்மா(ரழி)