இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும் - 1

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்

islamic-banking
இஸ்லாமிய வங்கி குறித்த சிந்தனைகள் பேச்சுக்கள் உலகம் முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்தியாவிலும் தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லிம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முஸ்லிம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லிம் வங்கிகளை ஏற்படுத்த வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. பல்வேறு விதிகள் மற்றும் சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளன.
மேலும் இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை.
இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறை குறித்த விழிப்புணர்வு பெறுவதும் மற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதும் அவசியம். இஸ்லாமிய வங்கியின் வரவு குறித்து பெரு மகிழ்ச்சியடைவது வெற்று வாய்ச்சவடால்களால் ஆகப் போவது ஒன்றுமில்லை. படிக்கும் நமது தலைமுறைகளை இஸ்லாமிய பொருளாதாரம் படித்த அறிவாளுமைகளாக உருவாக்குவது நமது பொறுப்பு. வட்டியிலிருந்து மனித சமூகத்தை மீட்டு பொருளாதார சுரண்டலிலிருந்து காப்பாற்றி நிம்மதியான வாழ்ஒழுங்கை மனிதர்களுக்கு அமைத்துத் தருவது முஸ்லிம்களின் கடமை. சென்ற நடைமுறையில் உள்ள வங்கியின் வட்டிப் பரிவர்த்தனை குறித்து பார்த்தோம். அதற்கு மாற்றாக தீர்வாக அமையும் இஸ்லாமிய பொருளாதாரம் - இஸ்லாமிய வங்கி குறித்த அறிமுகமே இந்தக் கட்டுரை. (பாக்ஸ்)

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகள் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து “இஸ்லாமிய பொருளியல்” எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. முஸ்லிம்கள் ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக்கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும், விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.
குர்ஆனும், ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த மாபெரும் இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர். இபாதத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக ஃபிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர். வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முன்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் ஆய்வுகளும், கருத்துக்களும், தீர்ப்புக்களும் சட்டத்துறை நூல்களில் இடம்பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஒரு அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப்பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.
நாளுக்கு நாள் நவீனமடைந்துவரும் உலகம் அறிவுத்துறைகளிலும் புதுப்புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர்அறிவுத்துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப்பெரும் அறிவுத்துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். அது போன்றே இஸ்லாமிய சட்டத்துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக பெயர் சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத்துறையாக உருவம் பெற்றது.
இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்தன.

இத்தருணத்தில் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் அப்போதிருந்த முஸ்லிம் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டி அடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு மாற்றாக வட்டி அடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம் செய்து வைத்தனர். அறிஞர்களான அன்வர் குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசினார்கள். இவர்களைத் தொடர்ந்து 1950களில் இச்சிந்தனைக்கு மவ்லானா அபுல் அஃலா அல்-மவ்தூதி உயிர்கொடுத்தார். பேரறிஞர் முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும், 1955இலும், 1957இலும், 1962இலும் இது தொடர்பாக அவர்எழுதினார். முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர்முஹம்மத் உவைஸ் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அல்-நஜ்ஜார், பாக்கிர்அஸ்-ஸத்ர்ஆகியோர் எழுதிய நூல்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.

அதுவரை அறிஞர்பெருமக்களின் தனிநபர்சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது. இதன் ஓர்அங்கமாக இது பற்றி விவாதிப்பதற்காக கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது. இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளாதார அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளாதாரம் பற்றி மேலும் பேசவும், எழுதவும், உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது.
பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண் டனில் நடைபெற்றது. இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன. இவ்வகை வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank. பின்னர் 1975இல் Dubai Islamic Bankநிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்குழுவொன்று இதனை நிறுவியது. பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும், சூடானிலும் அமையப்பெற்றது. இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance Houseஐ உருவாக்கியது. தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்த், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார்வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 1981ஆம் ஆண்டு பாக்கிஸ்தானும், ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம் செய்தன.
இஸ்லாமிய பொருளியல் என்ற பகுதி தோற்றம் பெற்றதன் மூலம் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன அவையாவன:
1. தனி அறிவுத்துறை
தனியான இஸ்லாமிய பொருளியல் நூல்களும், பத்திரிக்கைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும் சுயமான அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. பாரம்பரிய பொருளியல், வர்த்தகம் பற்றி எழுதுகின்ற ஆய்வுப் பத்திரிக்கைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்போது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.
2. ஆய்வு முயற்சிகள்
பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறையில் நலம் தரும் ஆய்வு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர்கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.
3. பல்கலைக்கழக பாடப் பிரிவுகள்
பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், பெரும் கல்லூரிகளிலும் உள்ள பாடப் பிரிவுகளில் ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளாதாரம் பெற்றுள்ளது. மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும், இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளாதார சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டப் படிப்புகளை வழங்கிவருகின்றன. பாக்கிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன.
பிரிட்டனில் உள்ள Loughborugh University இத்துறையில் தனிப் பிரிவை தன் பாடத் திட்டத்தில் புகுத்தியுள்ளது. லண்டனில் அமையப்பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்ளமோ பாடப்பிரிவு ஒன்றை நடத்துகின்றது.
4. பல்கலைக்கழக ஆய்வுகள்
பெரும் எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்கள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
5. இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்
இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் உருவாக்கம் இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய டெவலெப்மெண்ட் வங்கியின் கீழ் இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூல்களை இதுவரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இஸ்லாமிய பொருளாதாரத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. அரபியிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தியும் பணிபுரிந்து வருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டு வரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வொரு இதழும் பெரும்பாலும் இத்துறைசார்ந்த கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கத்தக்கது.
தொடரும்…