சிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமிய பெண் எழுத்தாளர்கள்.

தாஜுல் உலூம் மானா மக்கீன்(இலங்கை)
சிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி நான் எழுதுவதை விட அந்த உயர் நிலைக்குப் போன இலங்கைப் பெண்மணி ஒருவரே அழகாகவும் அருமையாகவும் பதிப்பது பொருத்தமாக அமைந்திருக்கும்.
எவ்வாறாயினும் மூத்த எழுத்தாளர் என்ற வகையில் சிகரம் தொட்டவர்களைப் பற்றி ஒரு சில குறிப்புகளை தகவல்களை வழங்க வேண்டும் என்பது அவன் ஒருவனது எண்ணப்படியும் திட்டப்படியும் நடக்கிறது.
சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும் அங்கே சங்கிலித் தொடராகப் பெண்களின் நூல் வெளியீடுகள்!
கடந்த ஏப் 02 ஆம் தேதி, நீர் கொழும்பு அல் – ஹிலால் கல்லூரியில் திருமதி வஸீலா என்பாரின் சிறுகதைத் தொகுதி “மொழியின் மரணம்” அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூல் ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளோட்டம் விடப்பட்ட ஒன்றுதான். சென்னை பூவரசு வெளியீட்டகம் பதிப்பித்து விழாவும் நடத்தியுள்ளது. இந்தச் சிறுகதைத் தொகுதிக்காக திருமதி வஸீலாவுக்கு உலகப் பல்கலைக் கழகம் (அமெரிக்கா) பரிசு வழங்கியிருப்பது ஒரு பெரும் சிறப்பாகும்.
மற்றொருவர் திருமதி நுவைதா மதீன், இவரது கவிதைத் தொகுதி கல்லொழுவை என்னும் இடத்தில் பிரபல அல் – அமான் உயர் கல்விக் கூடத்தில் ஏப்ரல் 06 இல் நடந்துள்ளது. ‘குடிபெயரும் கனவுகள்’ என்ற மகுடத்தில் வெளியான நூலின் வெளியீட்டுக்கு பிரதம விருந்தினராகச் சிறப்பித்தவர் ‘மன்னார் மைந்தன்’ எனப்படும் ‘வர்த்தக கைத் தொழில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்’ அவர்களாகும்.
மூன்றாவதாக இன்னுமொரு கொழும்பு பெண்மணி நாவலாசிரியை ஜரீனா முஸ்தஃபாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றும் கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் ஒரே நேரத்தில் ஏப்ரல் 22 இல் கொழும்பு ஹிதாயா பாடசாலையில் வெளியீட்டு விழா கண்டது. இவ்வைபவத்திற்கும் மன்னார் மைந்தர் அமைச்சர் றிஷாத் அவர்களே பிரதம அதிதியாகச் சிறப்பித்தார். இவ்வாறாக தமிழ்ச் சிறுகதையாளர்களாக, கட்டுரையாளர்களாக, கவிதாயினிகளாக ஆய்வெழுத்தாளர்களாக அதிகமதிகம் பரிணமித்து விட்டவர்கள் இலங்கை இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களே!
தமிழகமோ மற்றும் மலேசியா - சிங்கப்பூரோ இவ்விடயத்தில் பின் தங்கிப் போய்விட்டது மறைக்க முடியாத உண்மை.
என்னிடம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர், அருமைச் சகோதரர் பேராசிரியர் பெருந்தகை மு.சாயபு மரைக்காயர் அவர்களது “இலக்கிய உலகம்” என்ற 1997 ஆம் ஆண்டுத் தொகுப்பு உள்ளது. இதில் 321 ஆண் – பெண் முஸ்லிம் எழுத்தாளர் நாமாவளி தொகுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர் எனக் கணக்கிட்டால் வெறும் 13 பேர் மட்டுமே!
இவ்வாண்டு நூற்றாண்டு காணும் மூத்த எழுத்தாளர் சித்தி ஜூனைதா பேகம் முதற் கொண்டு கடந்து சென்ற நாகூர் – சென்னை நாவலாசிரியை ஜெய்புன்னிஷா, ஹைதராபாத் ஃபாத்தி முத்து சித்தீக், காரைக்கால் பேராசிரியர்கள் சா.நசீமா பானு, அ. சவ்தா உம்மாள், மதுரை கமருன்னிசா, முதலியோர் இப்படியலில் உள்ளனர். இதற்குப் பிறகு சல்மா, ரஹீமா, பாபநாசம் எ.ஜாஹிதா பானு, காரைக்கால் என்.நூர் ஃபாத்திமா, முனைவர் மை.ஃபரீதா பீவி ஆகியோர் தங்களை அடையாளமிட்டுள்ளனர். விஷேடமாக இன்னொரு சிறுமி இப்பொழுது இளங்குமரி! எவ்வாறாயினும் அவர் நமது பேராசிரியர் பெருந்தகை சாயபு மரைக்காயர் தம்பதியினரின் ஆளுமைகளைக் கொண்டு செல்ல பிறந்திருக்கும் ஃபாத்திமா யாஸ்மீன் தான் பதிமூன்றாம் வயதிலேயே கவிதை நூல் வழங்கியவர்!
இந்த அளவில் 21 ஆம் நூற்றாண்டு பிறந்து 17 ஆம் ஆண்டுகள் ஆகிப் போன 2017 இல் தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் நிலைமை என்ன எனப் பார்த்தால் எண்ணிக்கை ஒன்றும் பெரிய அளவில் கூடிவிடவில்லை. அதே வேகத்தில் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பெருந்தொகையானவர்களைப் பார்க்க முடிகிறது. சிகரம் தொட்டு விட்டார்கள் எனப் புகழ வேண்டியிருக்கிறது. இதில் அஞ்சலட்டை கவிஞர்களும் பல்கிப் பெருகியுள்ளனர். அவர்களை இந்த வைபவத்தில் மறந்து விடுவோம்.
என் சக்திக்கு அப்பாலும் சென்று வந்திருக்கும் சிறுகதைத் தொகுதிகள் எத்தனை? நாவல் என்ற புதினங்கள் எவ்வளவு? கவிதைத் தொகுதி எண்ணிக்கை முதலியவற்றை ஆய்வு செய்துள்ளேன்.

Chiththi junaitha-aachima
வராதிருப்பவை : அதன்படி சிறுகதைத் தொகுதி 21 நாவல் என்ற புதினம் 12 இன்னும் நூலுருவில் கவிதைத் தொகுப்பு 30 கட்டுரை நூல்களில் ஆய்வு நூல்களாக ஆறும் பொது விடயங்களைக் கொண்ட கட்டுரை நூல்கள் 6 வந்துள்ளன.

குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டிய ஓர் ஆய்வுத் தகவல் “அனார்” என்ற திருமதி இஸ்ஸத் ரிஹானா முகம்மது அஸீம் தனது “ஓவியம் வரையாத தூரிகை” க்காக இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்ற பெண்மணியாகவும், தமிழகக் ‘காலச் சுவடு’ மூலம் எனக்கு கவிதை முகம் காட்டிய பெண்மணியாக திகழ்கிறார்.
இவரைப் போல ஒரு ஃபஹீமா ஜஹான் காலச் சுவடு தமிழியல் பதிப்பகம் மூலம் அண்மையில் சென்னையில் “இக்சா” மையத்தில் நூல் வெளியீட்டு விழாவை நடத்தி விட்டார். இன்றைய பொழுதில் அனைவருக்கும் மூத்தவராக – முதியவராக இருப்பவர் பேராதனை ஷர்புன்னிசா அவர்களை! (1934 இல் பிறந்தார் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்) தமிழக முஸ்லிம் சஞ்சிகைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.
குறிப்பாக திருச்சி ரசூல், மதனியும் அன்று நடத்திய ‘ஷாஜஹான்’ இதழ். இப்பொழுது அவரை நினைக்கும் நேரத்தினுங் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய வரலாற்றுக் கதைகளை சிங்களத்தில் நூலாகக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளார்.
மேலும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளப் பெண்மணிகளில் சிலர் ஆய்வெழுத்தாளர்களாகவும் பரிணமித்திருப்பது விஷேசமாகும். மலையகத்தைச் சேர்ந்த ஒரு லரீனா அப்துல் ஹக் இரு ஆய்வு நூல்களையும், அதே மலையகம் மரீனா இல்யாஸ் ஒன்றையும், பஷீரா வாஸிம் இன்னொன்றையும் வழங்கியுள்ளனர்.
இச்சுருக்கமான ஆய்வை முடிக்கும் முன் உங்களுக்கு ஒரு நல்ல தகவல் ஆங்கிலப் புலமை மிக்க ஸுலைஹா என்ற சகோதரி “பட்டுப் பூச்சியின் பன்னுகைப் போலும்” என்ற தலைப்பில் ஆங்கில வழியாக தமிழுக்கு கவிதைகளின் தொகுப்பொன்றை வழங்கியுள்ளார்.
இதிலே முதல் பகுதி இலங்கை கவிஞர்களின் ஆங்கில கவிதைகள் பெரும்பாலும் சமீபத்திய போர் ஏற்படுத்திய அவலங்கள் நிமல் சோமரத்ன, பெஸில் பெர்ணண்டோ, கமலா விஜயரத்ன சிங்களக் கவிஞர்களின் தமிழ் சமூக அனுதாபங்களை அவதானிக்கலாம். மற்றும் பலஸ்தீனக் கவிதைகள், ஆஃப்ரிக்க, ரஷ்ய, இந்திய, அமெரிக்கக் கவிஞர்களின் கவிதைகள் திருமதி ஸூலைஹாவின் மொழியாக்க முயற்சியைப் பாராட்டி வரவேற்க வேண்டும். நல்லது புனைக் கதை, புதினம், கவிதை, கட்டுரை நூல்களைத் தந்தவர்களின் பட்டியலை இன்னொரு இதழில் தர விழைகிறேன்.