முஸ்லிம் முஹல்லாக்கள் பொறுப்பேற்க வேண்டும்

முஸ்லிம் சமூகம் தனது செழுமையான வரலாற்றிற்கு நீண்ட கால அல்லது தொடர் திட்டமாக தனது புதிய தலைமுறையினரை பயிற்றுவித்து அவர்களை மேம்படுத்திக் கொண்டே வர வேண்டும். காலத்திற்கு காலம் மாறி வரும் சூழல்களை உள்வாங்கி அதற்கு ஏற்ப தனது செயல் திட்டங்களை முஸ்லிம் சமூகம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று இன்பம் துய்க்கின்ற ஒன்றாக வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. பால் வேறுபாடில்லாமல் தனிமனித சுதந்திரம் எனும் சிந்தனையால் உருவாக்கப்படும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், நவீன அறியாமை மூலம் வாழும் இளைய புதிய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகப் பயிற்சி ஒன்றின் மூலம் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும். இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன்படுகின்றோம். இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டுப் பக்குவங்கள், மானுட வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு மனிதர்கள் இயைந்து செல்வதற்கு வழி செய்கின்றன.
இன்று நாம் இஸ்லாம் அல்லாத நாகரீக கலாச்சார பண்பாட்டு ஆதிக்க சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், குறிப்பாக வேகமாக ஊடுருவி செல்வாக்குச் செலுத்துகின்ற ஊடகங்கள், இணையச் செயல்பாடு, அலைபேசிகள், சமூக வலைத்தளங்கள், முகநூல் வட்ஸ்-அப், வைபர், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவை புதிய தலைமுறையினரை அவர்களின் சொந்த கலாச்சாரத்தை விட்டும் உலகமயமாக்கப்பட்ட மேற்கத்திய கலாச்சாரத்தின் கீழ் வேகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு ஏற்றார் போல் நவீனமாவதில் பிழையில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கத்திய ஐரோப்பிய, அமெரிக்க மயமாகி வருகிறோம் என்பதுதான் ஆபத்து.
நாம் காணும் அறிவியல், நவீன வளர்ச்சி நம் பாரம்பரியத்தையும், நமது வாழும் சூழலையும் அழித்து விடாது மேம்படுத்த வேண்டும்.
ஆனால் நவீனம் எனும் பெயரால் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்குமயமாக்கல் நமது உம்மத் எனும் சமூக கட்டமைப்பை சிதறடித்துள்ளது. ஜமாத் எனும் முஹல்லாக்களின் அமைப்பை சிதைத்துள்ளது. நமது குடும்பம் எனும் நிறுவனத்தின் அஸ்திவாரங்களை, கட்டுக் கோப்புக்களை ஆட்டங்காணச் செய்துள்ளது.
சினிமாத்தனமான காதல் கலாச்சாரம், சமூக கட்டுக் கோப்பு விழுமியங்களை சிதைக்கின்ற தொலைக் காட்சி தொடர் நாடகங்கள், விளம்பரங்கள் இவ்வாறு பலவிதமான மேற்குமயமான கலாச்சார உலகமயமாக்கலின் ஊடுருவல்கள் நமது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய மஸ்ஜித்கள் போன்ற சமூக மையங்கள் காலத்திற்கேற்ப பொறுப்பான பங்களிப்பினை செய்ய வேண்டும்.
இல்லையேல் வாழும் நமது இளம் தலைமுறை, வளரும் எதிர்காலத் தலைமுறை நம் கையை விட்டும் வெகு தூரத்தில் இருப்பார்கள். நாம் சொல்லும் எந்த செய்தியும் அவர்களின் காதுகளை எட்டாது. நாம் அணைப்பதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் அவர்கள் நம்மருகில் இருக்க மாட்டார்கள்.
முஹல்லாக்கள் என்ன செய்ய வேண்டும்?
பள்ளிவாசல்கள் பாரம்பரிய மரபு வழிகளுடன் குத்பாக்களோடு மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. இளம் தலைமுறையினரை மஸ்ஜிதுகளின் பக்கம் கவர்ந்திழுக்கின்ற நிகழ்ச்சிகளை கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை ஆன்மீக பண்பாட்டுப் பயிற்சிகளோடு வழங்குகின்ற முற்போக்கான திட்டங்களை மஸ்ஜிதுகள் செயல்படுத்த வேண்டும்.
இந்த நோன்பு காலத்தில் புதிய தலைமுறையினரை அதிகமதிகம் மையப்படுத்தி சிறப்பு நிகழ்வுகளை ஒவ்வொரு முஹல்லாவிலும் மேற்கொள்வதில் சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு சொந்த முஹல்லாவில், அருகில் உள்ள முஹல்லாக்களில் அல்லது முஹல்லாக்களின் தொடர்பற்று வாழும் முஸ்லிம் குடும்பங்களை சந்திப்பது அவர்களில் சஹர் செய்ய, நோன்பு திறக்க இயலாதவர்களை கண்டறிய நமது இளம் தலைமுறைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் “இப்தாருஸ் ஸாயிம்” அதாவது தேவையுடையோரை ஏழை எளியோரை சமூகத்தால் கண்டு கொள்ளப்படாதாவர்களை நோன்பு வைக்கச் செய்கின்ற நல்லறங்களை செய்ய முடியும். அதை நமது இளம் தலைமுறையினர் செய்யத் தூண்ட வேண்டும். இவைகள் கொண்டாட்டமாக தம்பட்டமாக இல்லாமல் எளிமையாக இறைப் பொருத்தத்திற்காக மட்டுமே செய்யப்பட வேண்டும்.
மேலும் முஸ்லிம் சமூகத்தின் பெண்பிள்ளைகள் மட்டுமன்றி ஆண் சிறுவர்களையும் இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பினை மஸ்ஜிதுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இளம் தலைமுறையினர் முஸ்லிம் சமூகத்தின், குடும்பத்தின் அடையாளங்கள் என்பதை ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களும் தங்களது வாழ்வியல் நடைமுறைகள் மூலம் உணர்த்த முஹல்லாக்கள் செயல் திட்டம் வகுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், உலமாக்கள், கல்விமான்கள், வர்த்தக சமூகத்தினர், இளைஞர், பெண்கள் அமைப்புக்கள் ஆகியவை புதிய தலைமுறை ஆண், பெண் இளைஞர்களை பள்ளிவாசல்களோடு இணைத்து இஸ்லாமிய விழுமியங்களோடு அவர்களை வார்த்தெடுக்கும் வழிவகைகளை கண்டறிந்து அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.