எதிர்க்கட்சி-ஜனநாயகம்-வலிமையான அரசு...

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியார் 1961 ஆம் ஆண்டு சுதந்திரா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் 1961 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதி, ‘தான் தொடங்கி இருக்கும் புதிய கட்சிக்கு ஆதரவு அளிக்கும் படி’ கேட்டார். காங்கிரசுக்கு எதிராக வலிமையான எதிர்க் கட்சியை உருவாக்கவே ராஜாஜி சுதந்திரா கட்சியை தொடங்கினார். காங்கிரசு கட்சி ஜவஹர்லால் நேரு என்ற தனி நபர் செல்வாக்கில் இருப்பதாகவும் அரசியல் பொருளியல் கொள்கைகளில் காங்கிரசுக்கு மெய்யுணர்வு இல்லை என்பதாகவும் ராஜாஜி உணர்ந்திருந்தார்.
காங்கிரசு கட்சிக்கு டாடா குடும்பம் பெரிய அளவில் பொருளாதார உதவிகளை செய்து வந்தது. இதை ராஜாஜி நன்கு அறிந்து இருந்தார். அதனால் டாட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதி அதில், ‘ஆளும் காங்கிரசு கட்சியின் அரசியல் செயல்பாடுகளுக்கும் தேர்தல் செயல்பாடுகளுக்கும் நீங்கள் நிதி உதவி அளிப்பது நியாயமானது. எனினும், ஆளும் கட்சி எடுக்கும் தவறான நடவடிக்கைகளுக்கு தடை போட்டு சரி காண உதவும் ஒரு கட்சிக்கும் பொருளாதர உதவிகள் செய்வது நியாயமான சரியான நடவடிக்கையாகும். காங்கிரசுக்கு உதவிகள் செய்வதுடன் சுதந்திரா கட்சிக்கும் நிதியளிப்பது ஒரு தேசப்பற்றுள்ள கடமையே ஆகும். ‘வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயக அரசு என்பது இல்லை’ என்று குறிப்பிட்டார்.
சுதந்திரா கட்சிக்கு நிதி உதவி செய்வதென்று டாட்டா முடிவெடுத்தார். இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் வழியாக உண்மையான ஜனநாயகத்தை இந்திய அரசியல் வளர்க்கிறது. இரண்டு கட்சிகளும் தீவிர வலதுசாரியாகவோ தீவிர இடதுசாரியாகவோ இருக்காது என்று டாட்டா நம்பினார். அன்று பிரதமரான நேருவுக்கு டாடா ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பலமிக்க காங்கிரசு கட்சிக்கு எதிராக பொறுப்புடைய பலமிக்க எதிர்க்கட்சி ஒன்று இல்லாமல் இருப்பதை குறித்து தனக்கு கவலை இருப்பதாக தெரியப்படுத்தினார்.

எதரககடச 1
‘நாடு விடுதலை அடைந்தது முதல் இதுநாள் வரையில் (1948-1961) ஒரு கட்சி ஆட்சி நாட்டுக்கு நல்லதையே செய்து இருக்கிறது. நாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முறையான வளர்ச்சிக்கு நாட்டிலுள்ள ஆற்றலையும் இயற்கை வளத்தையும் பயன்படுத்துவதில் கவனமாக செயல்பட்டு வந்திருக்கிறது’ என்று நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். தொடர்ச்சியான உறுதியான அரசு இல்லாமல் இது சாத்தியமில்லை.
இருப்பினும், தனிக் கட்சி ஆட்சியின் ஆதிக்கம் தொடர்ந்தால், சிக்கல்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் காரணிகள் எதிர்காலத்தில் உண்டாகும் என்பதை நீங்களும் கூட ஒப்புக்கொள்வீர்கள். என்னதான் ஒரு சிறந்த கட்சி சிறந்த ஆட்சியை கொடுத்து வந்தாலும் இறுதியில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவார்கள்.மேலும், அரசியல் சமூகத்தில் உள்ள சில சக்திகள் காங்கிரசு கட்சியின் கொள்கைகளில் முரண்படுவார்கள். அவர்களது கொள்கைகளை வெளிப்படுத்தும் வழிகளை தேடுவார்கள்’ என்று கடிதத்தில் எழுதினார்.
“நாட்டின் நலன்கருதி காங்கிரசை எதிர்ப்போருக்கு உறுதியான எதிர்க்கட்சி ஒன்று இல்லாமல் போனால், அவர்களது அரசியல் வெறுமையாகிப் போகும். நாட்டுக்கு அவர்களால் கிடைக்கும் சேவைகள் கிடைக்காமல் போகும். அல்லது கம்யூனிஸ்டு கட்சிக்கோ அல்லது தகுதியில்லாத தீவிரவாத கட்சிக்களுக்கோ அவர்களது சேவைகள் போகும் என்று குறிப்பிடும் டாட்டா, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை நாட்டு நலனுக்காக வேண்டி ஒழித்துக்கட்டும் முயற்சிகள் தவிர்க்க முடியாதது” என்று முடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொருத்தமான மாற்று சுதந்திரா கட்சி என்கிறார் டாடா.
தனிமனித உரிமைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செய்யும் சேவைகளுக்கு மேலாக,காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக இருக்க பொருத்தமானது சுதந்திரா கட்சி தான்.இக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாகப் பார்க்கையில் பழமைவாதிகளாக தோன்றினாலும் பிற்போக்கு வாதிகளாகவோ(க்ஷீமீணீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) மதவெறியர்களாகவோ(நீஷீனீனீuஸீணீறீ) தீவிர வலதுசாரிகளாகவோ(மீஜ்tக்ஷீமீனீமீ க்ஷீவீரீலீtவீst) இருக்க மாட்டார்கள்’என்றும் டாட்டா கடிதத்தில் குறிப்பிட்டார்.மேலும்,காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நிதி கொடுத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதுடன் குறைந்த அளவாக சுதந்திரா கட்சிக்கும் நிதி கொடுக்க டாடா குடும்பம் முடிவு செய்துவிட்டதாக கடிதம் மூலம் நேருவுக்கு தெரியப்படுத்தினார்.
ஏறக்குறைய உடனடியாகவே நேரு டாடாவுக்கு பதில் எழுதினார். அனுபவங்கள் ஊடாக தனது கருத்துகளை மாற்றிக்கொள்ள விரும்பினாலும் காங்கிரசு கொள்கை நாட்டுமக்களுக்கு நன்மையாக இருக்கும் வரையில்,அந்த கொள்கைகளை நான் பின்பற்றியே ஆகவேண்டும் என்று எழுதினார்.சுதந்திரா கட்சிக்கு நிதி உதவி வழங்க விரும்பினால் கொடுக்க உங்களுக்கு தாராளமான சுதந்திரம் உண்டு.ஆனால்,நீங்கள் நம்புவது போல்,சுதந்திரா கட்சி பலமான எதிர்க்கட்சியாக உருவாகும் என்று நான் கருதவில்லை.சுதந்திரா கட்சி அடுத்த பொது தேர்தலிலேயே ஏமாற்றத்தை தரும் என நான் கருதுகிறேன்.அவர்களிடம் இந்திய பெரும் சமூகத்துக்கான சிந்தனையும் இல்லை,அவர்கள் அறிவு ஜீவிகளில் ஒருபகுதியாகவும் இல்லை’.என்று நேரு கூறி இருந்தார்.
நேரு தனது கொள்கைகளின் நியாயத்தை வலியுறுத்தும் போதும் கூட டாடாவுக்கு மிக்க மரியாதை தந்து பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.பலமான எதிர்க்கட்சிக்கு டாட்டா நிறுவனம் நிதி அளிக்கும் போது வேறு சில இந்திய பிரதமர்கள் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கலாம்.1961 ஆம் ஆண்டு நேருவுக்கும்-டாடாவுக்கும் இடையில் நடந்த கடிதப் பறிமாற்றம், நரேந்திர மோடியின் பாஜக பலமிக்க சக்தியாக இருக்கும் இன்றைய இந்திய அரசியல் சூழலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
நேருவுக்கு டாடா எழுதிய கடிதம் போன்று,இந்திய ஜனநாயகத்தின் பரந்துபட்ட நலன்கள் பற்றியோ பாஜக போக ஏனைய கட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பது பற்றியோ அம்பானி அல்லது அதானி மோடிக்கு கடிதம் எழுதுவதை நினைத்துப் பார்க்க முடியுமா?நிச்சயமாக முடியாது.

எதரககடச 4
ஜே.ஆர்.டி.டாடா போன்று அரசியல் மதிநுட்பமும் நேர்மையான துணிச்சலும் உடைய தொழில் அதிபர்கள் யாரும் இன்றைய நாட்களில் இல்லவே இல்லை.அதுபோல்,பிரதம மந்திரி, அவரது கட்சி, அவரது அரசு சரியாக இருக்கிறது அல்லது சரியாக இல்லை என்பதை வெளிப்படையாகக் கருத்து சொல்லும் துணிச்சல் உடைய தொழிலதிபர்கள் யாரும் இன்று இல்லை.
அரசியலில் ஜனநாயகத்தை பெரிதும் மதித்து நடந்து அன்று நேரு கம்பீரமாக ஆரோக்கிய அரசியல் நடத்தினார். அவரைப் போலவே பலம் வாய்ந்த ஆட்சியாளராக இன்று மோடி ஒரு கட்சியை வழிநடத்துகிறார். ஆனால் அரசியலில் மோடி செய்யும் ஆதிக்கத்தை நமது ஜனநாயகத்தால் தாங்க இயலாது. பாஜகவுக்கு மாற்றாக பிளவுகள் இல்லாத (அதுபோல் பரம்பரை இல்லாத) நம்பிக்கை அளிக்கக்கூடிய எதிர்க்கட்சியை வழிநடத்தும் ஆற்றலும் கவர்ச்சியும் யாருக்கு இருக்கிறது? அந்த கட்சிக்கு நிதியுதவி செய்யும் துணிச்சல் யாருக்கு உள்ளது?
இந்த கேள்விக்கான பதில்,”வலிமையான எதிர்க்கட்சி இல்லாமல் சிறந்த ஜனநாயக அரசு இல்லை”என்று நீண்ட காலத்துக்கு முன்பு ராஜாஜி சுட்டிக் காட்டிய பதிலையே சார்ந்து இருக்கிறது.
ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர். தமிழில் : ஜி.அத்தேஷ்