அரசியல் சாசனம் வளருமா, தேயுமா?

                                                                                                                                                                                                            த. நீதிராஜன்
(ஆல் இண்டியா ரேடியாவில் வெளியான உரையின் எழுத்தாக்கம்)
நமது நாட்டின் வரலாற்றில் முக்கியமான தினங்களில் ஒன்று நவம்பர் 26. இந்தத் தேதியில்தான் நமது அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.
தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்காக ஒரு நாட்டின் மக்கள் உருவாக்கிக்கொள்வதே அரசியல் சாசனம். உலகில் பெரும்பாலான நாடுகள் தங்களுக்கு என தனியான அரசியல் சாசனங்களை வைத்திருக்கின்றன.
எழுதப்பட்டவை, எழுதப்படாதவை என்று அரசியல் சாசனங்களைப் பிரிப்பார்கள். இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சாசனங்கள் மன்னராட்சியையும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னால் நாம் பல அரசியல் சட்டங்களை கடந்து வந்திருக்கிறோம்.
கிழக்கிந்திய கம்பெனி எனும் இங்கிலாந்து நாட்டு வியாபார நிறுவனம் இந்தியாவில் 1612-ல் நுழைந்தது. படிப்படியாக அதன் ஆதிக்கம் வளர்ந்தது. 1757-ல் இந்தியாவின் ஆட்சியை அது கைப்பற்றியது. நூறு வருடங்கள் நீடித்தது அதன் ஆட்சி.
அந்த ஆட்சிக்கு எதிராக 1857-ல் நாடு தழுவிய முதலாம் சுதந்திரப் போர் எழுந்தது. அதனால் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை இங்கிலாந்து ராணிவிக்டோரியா ரத்து செய்தார். தானே நேரடியாக 1858 முதலாக இந்தியாவை ஆளத் தொடங்கினார். அவருக்குப் பிறகு 1901 முதல் 1910 வரை ஏழாம் எட்வர்ட், 1910 முதல் 1936 வரை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்களாக இருந்தனர். அவர்களுக்குப்பின் எட்டாம் எட்வர்ட் 11 மாதங்கள் மட்டும் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1947 வரை ஆறாம் ஜார்ஜ் ஆட்சி செய்தார். மொத்தம் நான்கு மன்னர்கள்.
ஆங்கிலேய மன்னராட்சி 1858 முதலாகப் பல சட்டங்களை இந்தியாவை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கியது. அவற்றில் 1919-ம் வருடத்து அரசியல்சட்டமும் 1935 - ம் வருடத்து அரசியல் சட்டமும் முக்கியமானவை. அந்த சட்டங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் தற்போதைய நமது அரசியல் சாசனம். உலகின் முக்கியமான நாடுகளின் அரசியல் சாசனங்களின் நல்ல அம்சங்களும் நமது அரசியல் சாசனத்தில் இருக்கின்றன.
ஆங்கிலேயர் காலத்து இந்தியாவில் சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. அவர்கள் மட்டும்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மாநிலங்களில் தேர்தல் நடக்கும். அதில் வெற்றி பெற்றவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்பார்கள்.
நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தானாகவே சபையின் உறுப்பினர்களாக மாறினார்கள். அவர்கள்தான் கணிசமாக இருந்தனர். அரசால் நியமிக்கப்பட்ட சிலரும் உறுப்பினர்களாக இருந்தனர்.
அரசியல் சாசனம் உருவாவதற்கு முன்பே பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்துபோனது. அதனால் அரசியல் சாசனச் சபையும் இரண்டாக உடைந்தது. இந்தியாவுக்கான அரசியல் சாசன சபையில் 299 பேர் இருந்தனர்.
அரசியல் சாசனத்தை தயாரிப்பதற்கான ஏழு பேர் குழு 1947 ஆகஸ்ட் 29-ல் தேர்வு செய்யப்பட்டது. டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் அதன் தலைவர் ஆனார்.

மெட்ராஸ் மாநிலத்தின் பங்கு
இந்திய அரசியல் சாசன வரைவுக்குழு உறுப்பினர்களில் மூன்றுபேர் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்தவர்கள். அவர்களின் பங்களிப்பை தனது உரையில் அம்பேத்கர் பாராட்டியுள்ளார். அரசியல் சாசன வரைவுக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசகராக செயல்பட்ட சர். பெனகல் நர்சிங் ராவ் என்னும் ஐ.சி.எஸ் அதிகாரியையும் அவர் பாராட்டியுள்ளார்.
இன்றைய ஆந்திராவில் பிறந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஒருவர். அவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தவர். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.
இன்னொரு உறுப்பினரான என். கோபாலசாமி அய்யங்கார் தஞ்சாவூரில் பிறந்தவர். சென்னையில் பிரஸிடென்சி கல்லூரி, மற்றும் சட்டக் கல்லூரிகளில் படித்தவர். பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியராகவும் சிறிது காலம் அவர் பணியாற்றியும் உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் அரசியல் சாசனப் பிரிவை உருவாக்கியதில் முக்கியமான பங்கு இவருக்கு உண்டு.
அரசியல் சாசன வரைவுக்குழு உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டதால், அவருக்குப் பதிலாக டி.டி. கிருஷ்ணமாச்சாரி என்று அழைக்கப்பட்ட திருவள்ளூர்தட்டை கிருஷ்ணமாச்சாரி இணைக்கப்பட்டார். அவர் சென்னையில் பிறந்தவர். கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தவர். அதில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவின் நிதியமைச்சராகவும் உயர்ந்தவர்.

அரசியல் சாசன வரைவுக் குழு 1947 நவம்பர் 4-ம் தேதி தனது அறிக்கையை அரசியல் சாசன சபையில் சமர்ப்பித்தது. அதன் மீது நடந்த விவாதத்தில் 7635 திருத்தங்கள் தரப்பட்டன. விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு அவற்றில் 2473 ஏற்கப்பட்டன.
நமது அரசியல் சாசன சபையின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள்.
நிறைவாக 1949 நவம்பர் 26- ல் தான் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1950-ல் ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் சாசனம் செயல்படத் தொடங்கியது. மக்களாட்சி பிறந்தது. குடியரசு இந்தியா பிறந்தது.
இந்திய நாட்டில் அதிகபட்ச அதிகாரம் படைத்தது இந்திய அரசியல் சாசனம்தான். நாடாளுமன்றத்தை விட அதிக அதிகாரம் படைத்தது அது. நமது நாடாளுமன்றத்தால் அரசியல் சாசனத்தை திருத்த முடியும். ஆனால் ரத்து செய்ய முடியாது.
இந்திய அரசியல் சாசனம் தான் உலகத்திலேயே மிகப் பெரியது. ஆரம்பத்தில் இதில் 22 பகுதிகள், 395 சட்டக் கூறுகள், எட்டு அட்டவணைகள் இருந்தன.
சுதந்திர இந்தியாவில் 101 முறை அரசியல் சாசனம் திருத்தப்பட்டுள்ளது. தற்போது அரசியல் சாசனம் 25 பகுதிகள், 448 சட்டக்கூறுகள், 12 அட்டவணைகள் மற்றும் 5 பிற்சேர்க்கைகளைக் கொண்டதாக அது மாறியுள்ளது.
1976 - ல் சாசனத்தில்செய்யப்பட்ட திருத்தம் மிக முக்கியமானது. அதன் மூலம் சோசலிசமும், மதச்சார்பின்மையும் நாட்டின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டன.
நமது அரசியல் சாசனத்தை நமது நாடாளுமன்றம் அடிக்கடி திருத்தவே செய்கிறது. ஆனாலும் நினைத்தபடி எல்லாம் நமது சாசனத்தை திருத்திவிட முடியாது.
நமது அரசியல் சாசனத்தின் அடிப்படையான கட்டமைப்பை குலைக்காமல்தான் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு என்றால் என்ன என்பதையும் அது வரையறை செய்துள்ளது.
• உச்சபட்ச அதிகாரம் படைத்தது அரசியல் சாசனமே.
• அரசாங்கத்தின் குடியரசு மற்றும் ஜனநாயக வடிவமைப்பு
• அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மை
• மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை தனியாகப் பிரித்து பராமரித்தல்
• அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தன்மை
இவையே அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. இதை பாதிக்காமல் எந்த திருத்தத்தையும் நமது நாடாளுமன்றம் செய்யலாம் என்று வழிகாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அரசியல் சாசன வரைவுக் குழுவில் பெண்கள் இல்லைதான். ஆனாலும் அரசியல சாசன சபையில் பெண்கள் இருந்தனர். சென்னை மாநிலத்திலிருந்து தேர்வான அம்மு சுவாமிநாதன், தாட்சாயிணி வேலாயுதன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். பெண் உரிமைகளை மட்டுமல்ல, நாட்டின் பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவாதித்தனர் அவர்கள். அவற்றில் பல ஏற்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து போய் அரசியல் சாசன சபையில் இன்னொருவரும் ஜொலித்தார். அவர் கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் என மக்களால் அழைக்கப்பட்ட முகம்மது இஸ்மாயில். மதச்சார்பின்மைக்கும் இஸ்லாமியர் உரிமைகளுக்கும் அவர் குரல் கொடுத்தார். இந்தியாவின் ஆட்சி மொழிக்கு தமிழை பரிந்துரைத்தார். தேர்தல்முறை, நாடாளுமன்ற தொகுதிகளில் இடஒதுக்கீடு பற்றிய விவாதங்களை எழுப்பினார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களுக்கு ஊடாக இயங்கியது அரசியல் சாசன சபை. அந்த நேரத்தில் ஜனநாயகத்துக்கான நம்பிக்கைச் சின்னமாக அவர் திகழ்ந்தார்.
எட்டுத் திக்கு விவாதங்களால் உருவான ஜனநாயக ஆவணம் நமது அரசியல் சாசனம்.
அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முதல் நாள் சபையின் முன்பாக டாக்டர் அம்பேத்கர் உரையாற்றினார். அதில் “எவ்வளவுதான் சிறந்த அரசியல் சாசனத்தை உருவாக்கினாலும் அதனை நல்லமுறையில் அமலாக்கவில்லையென்றால் பயனில்லை” என்றார். சாதிகள் சமூகத்துக்கு விரோதமானவை. ஆயிரக்கணக்கான சாதிகளாக நாடு பிரிந்து கிடக்கும்வரை இந்தியர் என்ற தேசிய உணர்வு வளராது என்றும் எச்சரித்தார் அவர்.
இந்தியாவின் ஜனநாயகம் வளர்வதற்கு நமது சாசனம் பெரிதும் உதவியுள்ளது. இனியும் அது உதவுமா என்பது அதை நாம் வரும்காலங்களில் எப்படி கையாளப்போகிறோம் என்பதில் இருக்கிறது.
( நவம்பர் 26 அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்)