அலிகார் அரசியல்...

அலிகார் பல்கலை கழகத்தின் மாணவர் சங்க கட்டட வளாகத்தில் மாட்டப்பட்டிருந்த முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்ய பரிஷத் மற்றும் இந்து யுவ வாஹினி உள்ளிட்ட இந்துத்துவா மாணவர் அப்புறப்படுத்தி கல்லூரிக்குள் கலவரத்தை தூண்டி இருக்கிறார்கள். அங்கு முஸ்லிம் மாணவர்களுக்கும் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

ஏபிவிபி மாணவர்களை தூண்டி விட்டு இதை யார் செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் எளிதானது. ஹிந்து யுவ வாஹினி மாணவர்களின் வன்முறை செயலை முதல்வர் ஆதித்யநாத் ஆதரித்து கூறியிருக்கிறார். 1947 பிரிவினைக்கு காரணமான மனிதருக்கு இந்தியாவில் மரியாதை செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார்.

அலிகர் நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் சத்தீஷ் கௌதம், அலிகர் பல்கலை கழக துணை வேந்தருக்கு கடிதம் எழுதி எப்படி எந்த சூழ்நிலையில் ஜின்னாவின் படம் மாணவர் சங்க கட்டடத்தில் மாட்டப்பட்டது என்று விளக்கம் கேட்டிருக்கிறார். பிரிவினைக்கு முன்னர் 1938 ஆம் ஆண்டு முதல் ஜின்னாவின் படம் அங்கு இடம்பெற்று இருக்கிறது. இந்த விபரம் இந்துத்துவாவுக்கு தெரியாதது அல்ல. இம்முறை அவர்கள் பெரும்பான்மையாக உ.பி சட்டமன்றத்தை ஆக்கிரமித்து இருப்பதால் இத்தகைய துடுக்குத்தனமான வேலைகளை இந்துத்துவா செய்யத் துணிந்துள்ளது. அலிகரில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட ஆதிந்யநாத் பிரிவினைக்கு ஜின்னாவே காரணம். ஜின்னாவின் புகழ்ச்சிக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று கூறி இருந்தார்.

இந்திய தரைப்படையின் முன்னாள் தளபதியும் இன்று மோடி அரசில் வெளியுறவு துறையில் இணை அமைச்சராக இருக்கும் வி.கே. சிங், ‘ஜின்னாவின் படம் சுவரில் தொங்குவதை நீங்கள் விரும்பினால் அவரது பிரிவினை கொள்கையை ஏற்க மறுத்த உங்கள் முன்னோர்களை அவமதிக்கும் செயல்’ என்று விமர்சித்து இருக்கிறார். ஜின்னாவின் படத்தை வைத்து நவீன அரசியல் செய்ய கிளம்பி இருக்கும் பாஜகவின் அரசியல் தந்திரத்தில் இருந்தும் சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய அரசின் மெத்தனத்தில் இருந்தும் நமது கவனத்தை திசை திருப்பும் பேச்சுகள் தான் இவை.

இந்தியாவின் வரலாற்றை இந்துத்துவா மாற்றி எழுத விளைகிறது. இந்திய விடுதலை போராட்டத்தின் புதிய வரலாறு காந்திக்கும் நேருவுக்கும் உள்ள பங்கை குறைத்து ஹெட்கேவர் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பெரிய பங்கு இருப்பதாக பாட புத்தகங்களை திருத்தி எழுதுகிறார்கள். ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு ஹல்திகாத்தியில் ராணா பிரதாப் சிங் தோல்வியடைந்தது பிடிக்கவில்லை. ராஜஸ்தான் பள்ளி பாட நாட்களில் ராணா பிரதாப் சிங் வெற்றி அடைகிறார். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட போதும் இதே லாஜிக்கை தான் கையாண்டார்கள். கடந்த காலத்தில் தவறாக நடந்தவைகளை தற்காலத்தில் சரிசெய்ய விரும்புகிறார்கள்.

அலிகர் பல்கலை கழகம் மஜாஸ், ராஹி மாசூம் ரஸா, அலி சர்தார் ஜாஃபரி மற்றும் குன்வர் பால் சிங் போன்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் முகம்மது ஹபீப், இர்ஃபான் ஹபீப் மற்றும் சதீஷ் சந்திரா போன்ற வரலாற்று ஆய்வாளர்களையும் பல்துறை விர்ப்பணர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியது. இந்த பல்கலை கழகத்தை நிறுவியவர் சர். செய்யது அகமது கான். இவர் 1888 ல் ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது, ‘ நான் ஒரு முஸ்லிமாக இருப்பதில் அக்கறை உள்ளவன்.திருக்குர்ஆனை பின்பற்றி வருகிறேன். குர்ஆன் முஸ்லிமும் கிறித்தவரும் நட்புடன் இருக்கும் படி அறிவுறுத்துகிறது. எனவே நாம் கிறித்தவர்களோடு நட்புறவை வளர்க்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்தியாவில் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசு அமைவதற்கு சர் செய்யது அகமது கான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்துக்கள் எண்ணிக்கை பலம் கொண்டு ஆதிக்க சக்தியாக உருவாகி விடுவார்கள் என்று அன்றே அச்சத்தை வெளிப்படுத்தினார். கிறித்தவர்களிடம் தப்பி இந்துக்களின் கைகளில் முஸ்லிம்கள் சிக்கி விடக்கூடாது என்றும் முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தார். இந்தியாவுக்கு ஜனநாயகம் நல்லதல்ல. பொருத்தமுடையதும் அல்ல. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் தன்மையுடையதும் அல்ல என்று வெளிப்படையாக விமர்சித்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சர் செய்யது அகமது கான் செய்த எச்சரிக்கை இன்று இந்திய அரசியலில் உண்மையாகி இருப்பதை காண முடிகிறது.

aligar 8

இரண்டு முக்கிய நிகழ்வுகள் 1906 ஆம் ஆண்டு நடந்தது. அக்டோபர் மாதம் நவாப் ஆகா கான் தலைமையில் ஒரு முஸ்லிம் குழு வைஸ்ராய் லார்டு மிண்டோவை சந்தித்தது. அந்த குழு சமூகத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் 35 முஸ்லிம்கள் கையொப்பமிட்ட ஒரு நினைவு குறிப்பொன்றை வைஸ்ராயிடம் அளித்தது. அக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களை ஆண்ட இனத்தின் வாரிசுகளாக வைஸ்ராய் வரவேற்கிறார். இந்த குழு வைஸ்ராயிடம் மிக முக்கியமானதொரு கோரிக்கையை முன் வைக்கிறது. அதாவது, எண்ணிக்கை பலத்தை மட்டும் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியலை மதிப்பீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறது. வைஸ்ராய் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகத்தின் அனைத்து உறுப்புகளிலும், எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் முக்கியத்துவம் மற்றும் கௌரவத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று அவ்வப்போது முஸ்லிம் தலைவர்கள் கேட்க விளைந்தார்கள்.

ஜனநாயகத்தின் மீது ஏற்பட்ட அச்சம் தான் பிரிவினைக்கான நெருப்பை மூட்டியது. புகழ்பெற்ற உருது கவிஞர் ஜோஸ் மலிஹாபதியின் (Josh Malihabadi) சுய சரிதையான யாதோன் கி பாராத்தை படிப்போர்க்கு ஒரு விசயம் தெளிவாக விளங்கும். ஜவஹர் லால் நேருவுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்த போதும் பிரிவினைக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1958 ல் அவர் பாகிஸ்தானுக்கு புலம் பெயரும் நெருக்கடிக்கு ஆளானார். இந்து பெரும்பான்மை உடைய நாட்டில் தனது முஸ்லிம் அடையாளம் தொலைந்து போகும் என்று அச்சப்பட்டார். அதே 1906 டிசம்பரில் ஒரு இளம் புத்திசாலியான பாரிஸ்டர் எம்.ஏ. ஜின்னா என்கிற முகம்மது அலி ஜின்னா கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் தாதாபாய் நவ்ரோஜியின் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டார்...
அடுத்த இதழில்