ஜின்னாவின் புகைப்பட அரசியல்

பாஜகவினரும் ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரும் அலிகர் பல்கலை கழகம் மாணவர் சங்க அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்து அங்கு மாட்டப்பட்டிருந்த முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படத்தை கழட்ட வேண்டும் என்று தகறாறு செய்து படத்தை சேதப்படுத்தினார்கள். இதனையடுத்து இந்த அமைப்பினருக்கும் பல்கலை கழக மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு வந்தது. உடனே வந்த காவல்துறை வம்பு செய்ய வந்தவர்களை விட்டுவிட்டு மாணவர்களை அடித்தார்கள். இதனையடுத்து இந்துத்துவ அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இந்த விவகாரத்தில் தலையிட்டு 2018 இந்திய அரசியலில் ஜின்னாவுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் இந்தியாவில் ஜின்னாவுக்கு மரியாதை செய்ய முடியாது என்றார்கள். இந்த சம்பவம் நடக்கும் போது இதை பற்றி சட்டமன்றத்தில் பேசுவதற்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை.
ஜின்னா 80 வருடங்கள் முன்னர் கூறிய கருத்தை இந்த சம்பவம் உண்மைப்படுத்தி விட்டது. தேர்தல் அரசியல் இந்தியாவில் முஸ்லிம்களை நிரந்தர சிறுபான்மை மக்களாக மாற்றி விடும் என்ற அச்சத்தை ஜின்னா 1930 களிலேயே கூறினார். 1930 களில் ஜின்னா கணித்துச் சொன்னது இந்தியாவின் முதல் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றங்களின் தேர்தலில் தெரிந்து விட்டது. அங்கத்துவ அரசியலில் மட்டுமில்லாமல் நிர்வாக கட்டமைப்பு, நீதித்துறை, காவல்துறை, பாதுகாப்புத்துறை, உளவுத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் முஸ்லிம்கள் சிறுபான்மை என சுருங்கி விட்டனர். வாக்கு வங்கி அரசியலில் முஸ்லிம்கள் அனைத்து அரசியல் சக்தியையும் இழந்து விடுவார்கள் என்று ஜின்னா கவலைப்பட்டார்.
அலிகர் பல்கலை கழகத்தில் ஜின்னாவின் படம் அதே இடத்தில் 80 ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது. இந்த படம் அவர் அலிகார் பல்கலை கழக மாணவர் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்த சமயம் மாட்டப்பட்ட புகைப்படம் அது. ஜின்னாவின் படத்தை பிரச்சனையாக்குவதன் மூலம் இந்திய அரசியல் என்பது பெரும்பான்மை வகுப்புவாதம் என்றும் சிறுபான்மை அடங்கிப் போக வேண்டும் என்பதையும் மற்றொரு முறை முஸ்லிம்களுக்கு உணர்த்தியிருக்கிறது. ஜின்னா இந்த பெரும்பான்மை அரசியல் கண்டு தான் வேதனைப்பட்டார். எச்சரிக்கையானார். முஸ்லிம்கள் தங்கள் சிறுபான்மை அடையாளம் காரணமாகவே அனைத்து அதிகாரத்தையும் இழந்து நிற்கிறது.
மும்பையின் உயர்குடி சமூகத்தில் பிறந்த ஜின்னா ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் கட்சியில் தான் சேர்ந்தார். 1906 ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாதாபாய் நவரோஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக ஜின்னா நியமிக்கப்பட்டார். காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்கும் இடையில் 1916 ல் ஒரு ஒப்பந்தம் உருவாக ஜின்னா காரணமாக இருந்தார். அப்போது அவர் “நான் ஒரு வலிமையான காங்கிரஸ்காரன், இந்து - முஸ்லிம் என்ற பாகுபாட்டில் எனக்கு விருப்பம் இல்லை” என்று கூறினார்.
ஜின்னா காங்கிரஸ் கட்சியில் இணைந்து 9 ஆண்டுகள் கழித்து தான் காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். கோகலேயின் மிதவாத காங்கிரஸ் கொள்கையை காந்தி பின்பற்றினார். 1920 ல் காந்தி ஒத்துழையாமை (Non- Cooperation) போராட்டத்தை நடத்தினார். ஜின்னா இதனை விரும்பவில்லை. மக்களை திரட்ட மதத்தை கருவியாக பயன்படுத்துவதையும் ஜின்னா எதிர்த்தார். காங்கிரஸ் கட்சிக்குள் ஜின்னாவின் எதிர்குரல் தோல்வி அடைந்தது. இதன் காரணமாகத்தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இருந்தாலும், இந்து - முஸ்லிம் ஐக்கியத்துக்காக உழைத்தார்.
1937 ஐக்கிய மாகாணத்துக்கு தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மாகாணம் என்பது இன்றுள்ள உத்தர் பிரதேசமும் ஜார்கண்ட்டும் இணைந்த பகுதி. காங்கிரஸ் இந்த தேர்தலில் பங்கெடுத்தது. முஸ்லிம் லீக்குடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது. முஸ்லிம்களுக்கான 60 தொகுதிகளில் 9 ல் போட்டியிட்டது. ஒன்றில் கூட வெற்றிப்பெற வில்லை. அதே நேரம் பொது தொகுதிகளில் மிகச் சிறப்பான வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க முஸ்லிம் லீக்கின் உதவி காங்கிரசுக்கு தேவையில்லாமல் போனது. காங்கிரஸ் தன் விருப்பம் போல் ஒரு அரசை அமைத்து கொண்டது. எதிர்கட்சி இருக்கைகளில் ஏராளமாக இந்துக்களும் முஸ்லிம்களும் இருந்தார்கள்.
ஐக்கிய மாகாண சட்டசபையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டே முஸ்லிம்கள் இடம்பெற்று இருந்தனர். முஸ்லிம்களுக்கு பெரும்பான்மைவாதம் என்ற அச்சுறுத்தலை இது ஏற்படுத்தியது. காங்கிரஸ் இந்து வாக்குகளை ஒன்று திரட்டியது. அதில் 70 விழுக்காடு வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. அதே நேரம் முஸ்லிம் வாக்குகள் பல கட்சிகளுக்கு சிதறிப் போனது. யூனியனிஸ்ட் பார்ட்டி, முஸ்லிம் இண்டிபென்டன்ட் பார்ட்டி மற்றும் க்ரிஷாக் மற்றும் சில சிறிய கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை சிதறடித்தன. முஸ்லிம் லீக் ஒன்று தான் இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வாக்குகளை பெற்றது. அதுவும் 10 % விழுக்காடு வாக்குகள் தான். இந்த சூழ்நிலையில் தான் காங்கிரஸ் எந்த ஒரு முஸ்லிம் கட்சியுடனும கூட்டணி இல்லை என்றது.

இது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜம்யியத் முஸ்லிம்கள் எழுதுகிறார்கள். முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்த சமயத்தில் பெருங் கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகின. ஏராளமான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் உடைமைகள் சூரையாடப்பட்டன. இதன் பிறகு இங்குள்ள முஸ்லிம் மக்களிடத்தில் முஸ்லிம் லீக் செல்வாக்குப் பெற்றது. இதன் காரணமாக முஸ்லிம் லீக் இதர முஸ்லிம் கட்சிகளை வீழ்த்தியது. காங்கிரஸ் ஆக சொற்பமான முஸ்லிம் ஓட்டுகளையே வாங்க முடிந்தது.
1946 ல் இந்தியாவை கைகழுவி வெளியேற பிரிட்டிஷ் முடிவெடுத்து இருந்தது. அப்போது, முஸ்லிம் வாக்குகள் ஜின்னாவின் பக்கம் திரும்பி விட்டது. மேலும் ஜின்னா வட இந்தியாவில் பழங்குடியின கட்சிகளுடனும், பட்டியல் சமூக கட்சிகளுடனும் உடன்படிக்கை செய்து கொண்டார். முஸ்லிம் லீக் 80 விழுக்காடு முஸ்லிம் ஓட்டுகளை பெற்றது. இது தான் காங்கிரசுக்கு அச்சம் தந்தது.
நிரந்தர சிறுபான்மை:
மத்திய சட்டசபையில் 1938 ல் ஜின்னா பேசும் போது தான் நிரந்தர பெரும்பான்மை நிரந்தர சிறுபான்மை என்ற கருத்தை வெளிப்படுத்திப் பேசினார். 1937 ல் நடந்த மாகாண சட்டசபை தேர்தல்களில் 7 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. இதை ஜின்னா குறிப்பிட்டு பேசும் போது, “ இது ஜனநாயகமான பெரும்பான்மை இல்லை. இது, நிரந்தரமான இந்து பெரும்பான்மை. இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்பட முடியாது. இது, ஜனநாயகம் என்ற முறையை கேலி செய்வது போல இருக்கிறது. இது, இங்கிலாந்து நாட்டுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். இந்த முறையை இங்கு நிறுவும் போது அது தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியை நீங்கள் பார்க்கிறீர்கள். இதன் விளைவு என்ன? நிரந்தர இந்துப் பெரும்பான்மை. அதே போல், நிரந்தர இந்து அமைச்சரவை” என்று கூறினார்.
இதன் பிறகு 1940 ல் பிரிதோர் சந்தர்ப்பத்தில் காந்தி, “இந்துக்களும் முஸ்லிம்களும் அரசியலில் சம பலம் உள்ளவர்கள்” என்று கூறிய போது, ஜின்னா, நிரந்தர பெரும்பான்மை நிரந்தர சிறுபான்மை என்ற கருத்தை கொண்டு திருப்பியடித்தார். “இதில் ஒரே ஒரு முரண்பாடு, அது, சகோதரர் காந்திக்கு 3 ஓட்டு. எனக்கு ஒரே ஒரு ஓட்டு” என்றார்.
இரு நாடுகள் என்ற கொள்கை:
பிரிட்டிஷ் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் அரசியல் சமநிலை என்பது பொய்த்துப் போனது. பிரிட்டஷ் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு சமூக மக்களாக இல்லை, இரண்டு தேசிய மக்களாக இருக்கிறார்கள் என்ற கருத்துக்கு ஜின்னா 1940 க்குப் பிறகு தான் வருகிறார். இந்து முஸ்லிம் அரசியல் சமநிலை உருவாகவியலாத நிலையிலும் 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த பிரிட்டிஷ் அமைச்சர் தூதுக்குழு (Cabinet Mission) கொண்டு வந்த ஐக்கிய இந்தியா என்ற திட்டத்தில் வற்புறுத்தல் காரணமாக ஜின்னா கையெழுத்திட்டார்.
இதன் முடிவில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் இடையான அனைத்து நம்பிக்கைகளும் குலைந்து போயின. இதன் முடிவில் தான் ஜின்னா, தானே நிராகரிந்துக் கொண்டிருந்த, முஸ்லிம்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை பேசத் தொடங்கினார். 1947 ல் நாடு இரண்டாக பிரிந்தது. பிரிவினையின் பழியை ஒட்டு மொத்தமாக ஜின்னாவின் தலையில் சுமத்துகிறது இந்திய வரலாற்று ஏடுகள். அவை ஏடுகள் அல்ல, கேடுகள்.
விடுதலைக்குப் பின்னர் நிரந்தர அடிமையாகி இருக்கும் முஸ்லிம்களுக்கு ஜின்னா சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கி கொடுத்து விட்டு போனார் என்பது தான் இந்துத்துவாவின் ஆதங்கம். அதனால் தான் அவரது புகைப்படம் இந்தியாவில் இருப்பதை கூட அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. இந்தியாவில் தலித் மக்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதை போன்று ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்களாக மாறியிருக்கும் இந்திய முன்னாள் அடிமைகளை பெரும்பான்மை ஜனநாயகம் என்பதன் பேரில் நிரந்தர சிறுபான்மையாகவும், உரிமைகளற்ற நிரந்தர அடிமைகளாகவும் மாற்றிவிட முடியும் என்று கணக்கு போட்டார்கள் அன்றைய காங்கிரஸ்காரர்கள். அந்த கணக்கை துல்லியமாக கணித்து முறித்தவர் முகம்மது அலி ஜின்னா. அது தான் ஜின்னாவின் மீதுள்ள கோபம்.
ஜின்னா ஒரு தீர்க்க தரிசனமாக அதனை உணர்ந்தார். இந்திய முஸ்லிம்கள் நிரந்தர சிறுபான்மை இந்துக்கள் நிரந்தர பெரும்பான்மை என்பதை ஜின்னா மட்டும் தான் வெளிப்படையாக பேசினார். விடுதலை பெறும் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகப் போவது பற்றியும் நிரந்தரமாக உரிமை இழக்கப்போவது பற்றியும் காங்கிரஸில் யாருமே கவலைப்படவில்லை. ஏன், காந்தியும், நேருவும் கூட மௌன சாட்சிகளாய் இருந்தார்கள். அல்லது மௌனமாய் அங்கீகரித்துக் கொண்டார்கள். காந்தி இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி மட்டும் தான் பேசினார். முஸ்லிம் இழக்கப்போகும் உரிமைகள் பற்றிப் பேசவில்லை. நாடு பிரியக்கூடாது என்று நல்லெண்ணம் கொண்டிருந்த காந்திக்கு விடுதலை இந்தியாவில் முஸ்லிம்கள் அடையப்போகும் இழிநிலை பற்றி எந்த அக்கறையும் இல்லை.
ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை வைத்த போது, ஜின்னா அந்த கோரிக்கையை கைவிட வேண்டும் என்று தான் காந்தி சொன்னாரே தவிர முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நேருவையோ, பட்டேலையோ காந்தி வற்புறுத்தவில்லை. இந்திய மாகாணங்களில் காங்கிரஸ் முஸ்லிம்களின் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்க முடியும் என்று நம்பிக்கையளித்த 1937 மாகாண சட்டசபை தேர்தல் தான் நாடு பிரிவினைக்கான முதல் விதை. சட்டசபை அதிகாரத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம பலம் இருப்பது தான் ஜனநாயகம் என்றார் ஜின்னா. அதனால் தான் வாக்களிப்பு ஜனநாயகம் இங்கிலாந்துக்கு பொருந்தும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றார். இந்திய அரசியலில் திணிக்கப்பட்ட இந்த வாக்களிப்பு ஜனநாயகம் தான் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அதிகாரமற்ற சமூகமாக ஆக்கி விட்டது. அன்று ஜின்னா சொன்ன காரணம் இன்றும் அப்படியே இருக்கிறது.
இன்றும் இந்திய நாடாளுமன்றத்திலும் இந்திய சட்ட மன்றங்களிலும் முஸ்லிம்கள் வலிமை பெற முடியவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான 16 வது மக்களவையில், 545 இருக்கைகளுக்கு 22 முஸ்லிம் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் 3 ல் 1 பங்கு தான் இருக்கிறார்கள். இந்தியாவின் 14 மாநிலங்களின் சட்டமன்றங்களில் 1 முஸ்லிம் உறுப்பினர் கூட கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெறவில்லை. காரணம் இந்து பெரும்பான்மை முஸ்லிம் சிறுபான்மை. குஜராத் சட்டமன்றத்தின் 182 மொத்த இடங்களுக்கு முஸ்லிம்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 19.2 % விழுக்காடு உள்ளது ஆனால், 404 உறுப்பினர்களில் கொண்ட சட்டமன்றத்தில் முஸ்லிம்கள் 5.9 % விழுக்காடு தான் இருக்கிறார்கள்.
இது மட்டுமின்றி முஸ்லிம்கள் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களில் இருந்தும் துரத்தப்பட்டு விட்டனர். மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு உரிய இடங்களை கொடுப்பதில்லை. முஸ்லிம் கட்சிகளை சேர்த்துக் கொண்டால் இந்துக்களின் ஓட்டு வராமல் போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்று பாஜகவினர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அரசியல் சட்ட சபை அதிகாரம், நிர்வாக அதிகாரம், நீதித்துறை அதிகாரம், குறைந்த பட்சம் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் உள்ளாட்சிகளை ஆளும் அதிகாரம் என்று எதுவுமே இப்போது இல்லை.
வாக்களிப்பு ஜனநாயகம் என்பது ஜின்னா சொல்வது போல ஒற்றை சமூகம் கொண்ட இங்கிலாந்து மாதிரி நாடுகளுக்கு பொருந்தும். பல்லின சமூகங்கள் கொண்ட நாட்டில் ஒரு சாதி அல்லது மதம் பெரும்பான்மையாக இருக்கும் போது மற்றவர் சிறுபான்மை என்று ஒடுக்கப்படுவார்கள். இது, ஜனநாயகத்தின் பெயரால் பெரும்பான்மை வகுப்புவாதம் கொண்ட அனைத்து நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்கிறது. இலங்கையில் வாக்கெடுப்பு ஜனநாயக அரசியல் முறை தான் இருக்கிறது. ஆனால், 2009 ல் என்ன நடந்தது. அங்கு தமிழர்கள் சிறுபான்மை. தமிழர்கள் உரிமைகள் படிப்படியாக உரியப்பட்டு விட்டன. அரசியல் அதிகாரத்திலும், ராணுவத்திலும் அவர்களுக்கு பெரிய பங்களிப்பு இல்லை. என்ன நடந்தது? சிங்கள பேரின வாதம் 2009 மே மாதம் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றது. அப்போது, இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் வேடிக்கை தான் பார்த்தது.
முஸ்லிம்களுக்கு சட்ட அவைகளில் குரல் கொடுக்கும் ஆட்கள் இல்லை. வெளியிலும் இல்லை. அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் கட்ட கடைசி நிலை சமூகமாக மாற்றப்பட்டு விட்டார்கள். இது தான் இறுதியாக நிகழும் என்பது ஜின்னாவின் அச்சம். இதற்காகவே இந்து மதம் என்ற கருத்தியலை உருவாக்கினார்கள். இந்து மகா சபை தலைவராக இருந்த வீர் சாவர்கர் தான் இந்துத்துவா என்ற சொல்லாட்சியை 1923 ல் அறிமுகப்படுத்தினார். இந்து மகா சபையின் 1937 டிசம்பர் 30 ல் தலைமை உரையாற்றும் போது, இந்து நாடு, முஸ்லிம் நாடு என்று இரண்டு நாடுகள் கொள்கையை பற்றிப் பேசினார். . இந்திய துணை கண்டம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று தான் அன்றைய காங்கிரசும் இந்து மகா சபையும் கருதியது.
ஓராண்டு கழித்து 1938 ல் “இந்துக்கள் வாழும் நாடு இந்துஸ்தான். அந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மை சமூகம்” என்றார். அதாவது அரசியல் உரிமைகள் இழந்த சமூகமாக முஸ்லிம்கள் வாழ வேண்டும். இதன் பிறகு தான் இதிலுள்ள ஆபத்தை முஸ்லிம் லீக் தலைவர்கள் உணரத் தொடங்கினார்கள். சாவர்க்கர் பேச்சை சிரத்துடன் கவனித்தார்கள். முஸ்லிம்களை நிரந்தர சிறுபான்மையாகவும் நிரந்தரமாக முடமாக்கவும் இந்து மகா சபை திட்டமிட்டதை உணர்ந்தார்கள். அதில் பாதியளவு முஸ்லிம்களையாவது ஜின்னா காப்பாற்றி விட்டார் என்ற கோபம் தான் இந்துத்துவாவுக்கு இன்றளவும் ஜின்னாவின் மீது கோபமாக கொப்பளிக்கிறது.