கலைஞரின் மரணமும்; திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையும்

- பழனி ஷஹான்
“தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை. சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை. கமழுகின்ற பைந்தமிழே, காவியமே அண்ணா!” என பேரறிஞர் அண்ணா மறைந்தபோது துயருற்றுப் பாடினார் நாகூர் ஹனீபா. இன்றும் அந்த வரிகள் உயிர்பெற்று ‘எங்கே சென்றாய், எங்கே சென்றாய்! எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்!’ என கலைஞருக்காக தொலைக்காட்சிகளில் ஒளிக்கப்பட்டது.
தி.மு.க.வைக் கடந்து பல திராவிட இயக்க ஆதரவாளர்களும் “எழுந்து வா தலைவா” என காவேரி மருத்துவமனை முன்பு தி.மு.க.வின் தொண்டர்கள் எழுப்பிய குரலை அப்படியே உணர்வு மாறாமல் எதிரொலித்தனர்.
“ஈழத்துரோகி என்றும், தமிழனப் பகைவர் என்றும்” ஒரு சாரார் கலைஞரை வசைபாடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், “சமத்துவப் பெரியார் கலைஞர்! சமூகநீதிக் காவலர் கலைஞர்!” என்று இன்னொரு சாரார் கலைஞரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதிர்ப்பின் குரல்களைவிட, ஆதரவின் குரல்கள் பன்மடங்கு சப்தங்களை எழுப்புகின்றன. அவர் வாழ்ந்த காலத்திலும், இறப்பை எய்திய நாளிலும், அதற்குப் பிந்தை இக்குறுநாட்களிலும் எதிர்ப்பையும், பாராட்டையும் சேர்ந்து பெற்று வருகிறார் என்றாலும், பாராட்டுகளின் முன்னால் எதிர்ப்புகள் அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்பதைத் தமிழகம் அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
கலைஞர் அடைந்திருக்கும் இந்த எல்லைக்குப் பின்னால், நூற்றாண்டு கடந்த கருத்தியலும், கோட்பாடும், போராட்டங்களும் அடங்கியிருக்கின்றன. அவற்றைத்தான் ஒற்றை வரியில் “திராவிட இயக்கம்” என்று ஏகோபித்த குரலில் நாம் கூறி வருகின்றோம்.mr14
திராவிடம் என்கிற சொல் உண்மைதானா? எனும் கேள்விகளும், திராவிட இனமென்று ஒன்று கிடையவே கிடையாது என்கிற பரப்புரைகளும் இன்று மூர்க்கத்தை அடைந்திருப்பதைப் போலவே, அன்றும் தீவிரம் பெற்றிருந்தன. ஆனால் அவை கால வெள்ளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் போய்விட்டன. அதே காட்சியைத்தான் இன்றும் காண முடிகின்றது என்றாலும், திராவிட இயக்கத்தின் ஆன்மா என்பது “தமிழ், தமிழர்” என்கிற தேசிய இனவிடுதலையில்தான் உருவெடுத்தது என்பதையோ, அதை அரசியல் சாதுரியங்களோடு ‘திராவிடம்’ என்கிற பெயரில் அது வளர்த்தெடுத்திருக்கிறது என்பதையோ பார்க்கத் தவறிவிடக்கூடாது.
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற ஆய்வு நூலை 1856இல் ஆங்கிலத்தில் எழுதினார் கால்டுவெல். திராவிடம் என்கிற சொல்லின் அரசியல் பயன்பாடு அங்கிருந்துதான் தொடங்குகிறது. அப்படி கால்டுவெல் ‘திராவிடத்தை’ முன்மொழிந்தபோது, அதுதான் தென்னிந்திய மொழிகளின் தலைவன் அல்லது தாய் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். திராவிட மொழிகளென அவர் 12 மொழிகளைக் குறிப்பிடுகிறார். அவற்றில் “துதம், கோதம், கோண்ட், கூ, ஓரியன் மற்றும் இராஜ்மஹால்” ஆகிய ஆறு மொழிகளை ‘திருந்தா மொழிகள்’ என்று குறிப்பிடும் கால்டுவெல்; “தமிழ், மலையாளம், தெலுங்கு, குடகு, கன்னடம் மற்றும் துளு” ஆகியவற்றை ‘திருந்திய மொழிகள்’ என அடையாளப்படுத்தியுள்ளார். அவற்றில் இன்று உயிர்பெற்றிருப்பது அல்லது பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படுவது ‘தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு’ ஆகிய நான்கு மொழிகள் மட்டுமே. இவற்றை ‘திராவிட மொழிக்குடும்பம்’ என்கிற வரையறைக்குள் கொண்டு வந்த கால்டுவெல், அதற்கெல்லாம் ‘தமிழே தோற்றுவாய்’ என்று பல்வேறு ஆவணங்களின் வழியாக, வரலாற்றின் எச்சங்களின் மூலமாக தனது நூலில் நிறுவியிருக்கிறார்.
இதைத்தான் மனோன்மணீயம் சுந்தரனார் : “கன்னடமும் களிதெலுங்கும்; கவின்மலையாளமுந் துளுவும்; உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்” என்று எழுதியிருக்கிறார். அதாவது தமிழிலிருந்தே தென்னிந்திய மொழிகள் பிறந்தது என்கிற கால்டுவெல்லின் கூற்றைத்தான், அவர் வழிமொழிந்திருக்கிறார்.
கால்டுவெல் இன வரையறையாகப் பயன்படுத்திய ‘திராவிடம்’ என்கிற சொல்லை, “திராவிட பாண்டியன்” என்கிற வார இதழின் வழியாக 1885இல் வேறொரு வடிவத்திற்குப் பயன்படுத்தினார் அயோத்திதாசப் பண்டிதர். அவரே பின்னாளில் 1892இல் “ஆதிதிராவிட ஜனசபை” எனவும், “திராவிட மகாஜன சபா” என்றும் இயக்கங்களைக் கட்டமைத்து, ‘திராவிடம்’ என்பதை அரசியல் வடிவமாக்கினார்.
அதன் இன்னொரு நுட்பமான அர்த்தம் “பார்ப்பனர் அல்லாதவர்கள் அல்லது ஆரியர்கள் அல்லாதவர்கள்” என்பதுதான். உண்மையில் திராவிட இயக்கத்தின் ஆணிவேர் இதுதான். ஆரியர்களுக்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக “சமத்துவம்” வேண்டி இம்மண்ணின் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுப்பிய குரலின் கூட்டு வடிவமே “திராவிடம்” என்பதாகும்.
அயோத்திதாசப் பண்டிதரும் இதே அர்தத்தில்தான் திராவிடத்தைக் கையாண்டார். தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களும் இதே கருத்தோடு ஒன்றிப்போய்த்தான், ‘திராவிட இயக்கத்தின்’ முன்னோடிகளில் ஒருவராக நிற்கிறார்.
அடிப்படையில் திராவிடம் அரசியல் வடிவம் பெற்றதன் பின்னால், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அயோத்திதாசப் பண்டிதர் முன்வைத்த சொல்லில் இருந்து மாறுபட்டிருந்தாலும், அவரின் கொள்கையைத் தொடரும் விதமாகவே 1909இல் பி. சுப்ரமணியம் மற்றும் எம். புருசோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்களால் “சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பு உருவாகியது. அதுவே 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதவர்களால் “சென்னை ஐக்கிய சங்கம்” என்று வேறொரு தளத்தை அடைந்தது. சிறிது மாதங்களிலேயே, அதாவது அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு “சென்னை திராவிடர் சங்கம்” என்று பெயர் மாற்றம் அடைந்தது. இந்த அமைப்பின் செயல்பாடுகளில் முக்கியமானது, பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நிறுவியது ஆகும். இதுவே திராவிட இயக்கத்தினுடைய சமூகநீதிப் படிக்கட்டுகளின் தொடக்கப்புள்ளி ஆகும்.
பிராமணர் அல்லாதவர்கள் என்கிற சொல்லும், செயல்களும் ஏன் உருவாகின என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றாலும், 1912இல் வெளியான சென்னை மாகாணத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரமொன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அந்தப் புள்ளிவிவரத்தின்படி, மொத்த ஆண் மக்கள் தொகையில் 3.2 சதவீதமே மட்டுமே பிராமணர்கள். ஆனால், அதிகாரமிக்க அரசுப் பதவிகளான துணை ஆட்சியாளர்களில் 77 பேரும், (55%), துணை நீதிபதிகளில் 15 பேரும் (82.5%), முன்சீப்புகளில் 13 பேரும் (72.6%) என பிரமாணர்களே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தனர்.

இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டுதான் பிரமாணர் அல்லாதார் இயக்கம் அல்லது திராவிட இயக்கம் இங்கு கருக்கொண்டது. சென்னை திராவிடர் சங்கத்தைத் தொடர்ந்து, 1916இல் டாக்டர் <https://ta.wikipedia.org/wiki மற்றும் சர் பிட்டி  <https://ta.wikipedia.org/wiki/ ஆகியோரால் “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” உருவெடுத்தது. இக்கட்சி ‘நீதி’ என்ற இதழைத் தொடங்கி நடத்தியது. பின்னாளில் அந்த இதழின் பெயரே கட்சியின் பெயராக உருமாறி, வரலாற்றில் “நீதிக் கட்சி” (Justice Party) என்பதாக நிலைபெற்று நின்றுவிட்டது.
சென்னை திராவிடர் சங்கத்தின் செயலாளரான சி. நடேச முதலியாரும், பனகல் அரசரான பனங்கன்டி ராமராயநிங்கார் ஆகியோரும் நீதிக் கட்சியின் தூண்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். பிராமணர்களின் ஆதிக்கத்தால் நேரடியான பாதிப்புகளைக் கண்டவர்களால் உருவான நீதிக் கட்சி, ஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூர் நகரில் பனகல் அரசரின் தலைமையில் முதல் “பிராமணர் அல்லாதோர் மாநாட்டை” நடத்திக் காட்டியது.
அது தொடர்ந்து தனது செயல்பாடுகளைப் பெருக்கியதன் நீட்சியாக, 1920இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் 98 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. திராவிட இயக்கத்தின் முதல் ஆட்சியமைப்பு என்றே இதைக் குறிப்பிடலாம். பின்னரான காலங்களில் நீதிக் கட்சி தேர்தலில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கவே செய்தது. 1926??? <https://ta.wikipedia.org/wiki/ சுயாட்சிக் கட்சியிடம் தோல்வியடைந்த நீதிக்கட்சி, 1930??? <https://ta.wikipedia.org/wiki/ மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் 1937  <https://ta.wikipedia.org/wiki/  காங்கிரசிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
சுயாட்சிக் கட்சியென்பதும், நீதிக் கட்சி என்பதும் ஒரு கொள்கையின் இருவேறு கிளைகளாகவே இருந்தபட்சத்தில், நீதிக் கட்சியின் முந்தைய தோல்வி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக பிராமணிய ஆதிக்கம் நிறைந்த காங்கிரஸ் 1937இல் சென்னை மாகாணத்தில் ஆட்சியை மீண்டும் பிடித்தது, நீதிக் கட்சிக்குப் பெரிய அடியைக் கொடுத்தது.
நீதிக் கட்சி அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், தந்தை பெரியார் 1925இல் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக “சுயமரியாதை இயக்கத்தை” உருவாக்கிச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இணைந்து செயலாற்றிய பெரியார், பின்னாட்களில் அங்கு நிலவிய பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்து அதிலிருந்து வெளியேறி தனியே அமைப்பைக் கட்டினார். அதேவேளையில், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகச் செயலாற்றும் நீதிக் கட்சிக்கும் தனது கொள்கை வழி ஆதரவை நல்கினார் பெரியார். ஒரு கட்டத்தில் பெரியாரின் ‘சுயமாரிதை இயக்கமும், நீதிக் கட்சியும்’ ஒரே கோட்டில் பயணிக்கவும் செய்தன. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 29, 1938இல் நீதிக் கட்சியின் தலைவராக பெரியார் பொறுப்பேற்றார். அப்போது காங்கிரஸ் ஆட்சியின் காலமாக இருந்ததினால், நீதிக் கட்சிக்கு பெரும் அரசியல் நெருக்கடிக்கள் இருக்கவே செய்தன.
1937இல் நீதிக்கட்சி ஆட்சியை இழந்திருந்தாலும், பன்னீர் செல்வம் போன்ற வெகுசில தலைவர்கள் வென்றிருந்தது அதற்கொரு பக்கபலமாக இருந்தது. இந்தச் சூழலில் நீதிக் கட்சியின் 14ஆவது வருடாந்திர மாநாட்டில் “தமிழருக்கெனத் தனி நாடு உருவாக்கப்பட வேண்டும்” என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் அரசியல் திருப்பத்தை உண்டு பண்ணியது. அதுவரை வாழ்வியல் ரீதியிலான அடிப்படை உரிமைகளை முன்வைத்த திராவிட இயக்கம், முதன்முதலாக தேசிய இன விடுதலைக்கான குரலையும் பதிவு செய்தது.
பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி தேர்தலில் பங்கேற்பதைத் தவிர்த்தது. மாறாக சுயமரியாதை நடவடிக்கைகளில் மட்டுமே அது தனது கவனத்தைச் செலுத்தியது. நீதிக் கட்சியில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்க்கும் போக்கு முனைமழுங்கிப் போய்விட்டது என்கிற வாதங்களும், கருத்துகளும் ஒருங்கே எழும்பலாயின. அதேசமயம் கட்சியின் வருடாந்திரக் கூட்டங்களும் முறையாக நடைபெறவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உருவெடுத்தன.

இப்படியான காலகட்டத்தில்தான் பெரியார் ஆகஸ்டு மாதம் 27,1944ஆம் ஆண்டு சேலம் நகரில் கட்சியின் 16வது வருடாந்திர மாநாட்டை நடத்தினார். இது திராவிட இயக்கத்தின் வேறொரு பாதையை உருவாக்கியது. அதுநாள் வரை நீதிக் கட்சியாக இயங்கிய கட்சியை, இயக்கமாக மாற்றி அதற்கு “திராவிடர் கழகம்” எனப் பெயரைச் சூட்டினார் பெரியார். பிராமண எதிர்ப்போடு நில்லாமல், இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கத்தையும் ஆட்டம் காணச் செய்யும்விதமாக, திராவிடர் கழகத்தார் யாரும் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் “சாதிப் பெயர்களை”ப் பயன்படுத்தக்கூடாது என்கிற தீர்மானத்தை அம்மாநாட்டில் நிறைவேற்றினார். இப்படியாக சமூகத்தின் எல்லா மட்டத்திலும் ‘சமத்துவம்’ என்கிற நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியது “திராவிடர் கழகம்”.
நாம் இன்று திராவிடர் இயக்கம் என்று சுருக்கமாகக் குறிப்பிடும் எல்லையானது பெரியாரால் தொடங்கப்பட்ட ‘திராவிடர் கழகத்தோடு’ மட்டுமே நின்றுவிடுகிறது. ஆனால் இதற்கு முந்தைய வரலாறுகளும் “திராவிட இயக்கத்தின்” வேர்கள்தான் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் திராவிட இயக்கத்தின் பரிமாண வளர்ச்சியை “பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்” என்று பிரித்துப் பார்த்தாலும் அது தகும்.
திராவிடர் கழகத்தின் பல முக்கிய தீர்மானங்களின் பின்னால் அவ்வமைப்பின் பொதுச்செயலாளரான பேரறிஞர் அண்ணாவும் இருந்திருக்கிறார். தமிழகத்தில் 1938இல் உருவெடுத்த முதல் இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் பங்கும் சரிநிகர் இருக்கவே செய்தது. 1937 தேர்தலில் வென்று இராஜகோபாலாச்சாரியர் தலைமையில் தனது ஆட்சியை அமைத்த காங்கிரஸ், பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. மிகச்சரியாக ஏப்ரல் 21, 1938இல் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டார் ராஜாஜி. இதனை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார். <https://ta.wikipedia.org/wiki/ தலைமையிலான <https://ta.wikipedia.org/wiki/ <https://ta.wikipedia.org/wiki/ இணைந்து இந்திக்கு எதிராக ஓர் எதிர்ப்புப் பேரணியை திருச்சியில் இருந்து தொடங்கினார்கள். <https://ta.wikipedia.org/wiki/ பெரியாரும், முஸ்லிம் லீக் தலைவர் கலிபுல்லாவும் இதனைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். இந்தப் பேரணி 'தமிழர் படை' என அழைக்கப்பட்டது.
ஏறத்தாள இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்த இப்போராட்டம் பல்வேறு வடிவங்களுக்கு மாறியது. உண்ணாவிரதப் போராட்டங்களைக்கூட பெரியார் முன்னெடுத்தார் என்கிற அளவிற்கு வலுப்பெற்றிருந்த போராட்டத்தில், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. தாய் மொழிக்காக தன்னுயிரையே ஈகையளித்த முதல் வரலாறு தமிழக மண்ணில்தான் நிகழ்ந்தது.
05.12.1938 அன்று சென்னை செளகார்பேட்டையில் உள்ள தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பாக இந்தித் திணிப்பிற்கு எதிராக ஒரு போராட்டம் உருவெடுத்தது. இதில் 20 வயதைப் பூர்த்தி செய்யாத இளைஞரான நடராசன் பங்குகொண்டார் என்பதற்காக அவரைக் கைது செய்து, ஏழரை ஆண்டுகால தண்டனை அளித்து சிறையிலடைத்தது ராஜாஜி அரசு. சிறைப்பட்ட நடராசனுக்கு உடல்நிலை மோசமாகியதைத் தொடர்ந்து டிசம்பர் 30 அன்று மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். அப்போதுகூட போராட்டத்தில் பங்குகொண்டதைத் தவறு என்று வருந்தி மன்னிப்புக் கேட்டால், விடுதலை அளித்துவிடுவதாக நடராசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் மரணப்படுக்கையிலும் ‘இந்தியை எதிர்ப்பேன்’ என்றே கூறியிருக்கிறார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடராசன், ஜனவரி 15, 1939 அன்று மரணடமடைந்தார். இந்தச் செய்தி தீயெனப் பரவி, இந்தி எதிர்ப்பில் களம் கண்டிருந்தவர்களைக் கொதிப்படையச் செய்தது. இதன் தொடர்ச்சியாக பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா உள்ளிட்டவர்கள் ‘இந்தி எதிர்ப்பிற்கான இயக்கத்தை’ உருவாக்கி, அதன் முதல் மாநாட்டை பிப்ரவரி 27, 1939இல் நடத்தினார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில், அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி, நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து என்கிற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். தாளமுத்து கைது செய்யப்படுவதற்கு மிகச்சமீபத்தில்தான் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தவராக இருந்திருக்கிறார். ஆனால் அவர் தனது இல்லற வாழ்வில் இன்புற்றிருக்காமல், தனது தாய் மொழிக்காக வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவாக தனது உயிரையே கொடையளித்துவிட்டார். பிப்ரவரி 13இல் கைதான தாளமுத்து, சிறைக் கொட்டடிலேயே மார்ச் 1, 1939 அன்று தனது உயிரைத் துறந்து, இந்தி எதிர்ப்பில் உயிரைத் தியாகம் செய்த இரண்டாவது நபராகிப்போனார். இவரது உடலை சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில், இந்தி எதிர்ப்புப் போராளி நடராசனின் கல்லறைக்கு அருகிலேயே அடக்க செய்துவிட்டார்கள். இரண்டு உயிர்களைக் களப்பலியாகக் கொடுத்த தமிழகம், இன்னும் இன்னும் கொதிநிலையை அடைந்தது.
திராவிட இயக்கத் தலைவர்கள் ராஜாஜி அரசிற்கு மிகப்பெரும் நெருக்கடிகளைத் தங்களது தொடர்ச்சியான போராட்டங்களின் வழியாக ஏற்படுத்திக்கொண்டே இருந்தனர். அதன் விளைவாக ராஜாஜி அரசு நீக்கப்பட்டு, சென்னை மாகாணத்திற்கு 1940இல் எர்க்கின்ஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்படி நியமனமான அவர், கல்விக்கூடங்களில் இந்தித் திணிப்பை தடை செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் முடிவிற்கு வந்தது. நடராசன், தாளமுத்து ஆகிய இரண்டு ஈகையர்களின் மூலமாகவும், பெரியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் அயராத போராட்டங்களின் வழியாகவும் தமிழகம் பெற்ற மிகப்பெரும் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
இதற்குப் பின்பான காலத்தில் ‘இந்தியச் சுதந்திரப் போராட்டம்’ வலுப்பெற்றுச் சென்றது. இக்காலகட்டத்தில் திராவிடர் கழகமும் இந்தியச் சுதந்திரப் போரில் பங்குகொண்டும், தனது சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுமாய் இயங்கியது. அதனையடுத்த 1947 ஆகஸ்டு 15இல் இந்தியா சுதந்திரம் பெற்று, தனக்கான குடியரசை அமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. அப்போது இந்தியாவின் ஆட்சி மொழி எதுவாக இருக்க வேண்டும் என்கிற சிக்கல் உருவெடுத்தபோது, இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவினரில் இந்தி பேசுபவர்களே பெரும்பான்மையாக இருந்ததினால், இந்தியே இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்கிற குரல் வலுப்பெற்றிருந்தது. அந்த அவையில் திராவிட இயக்கத்தின் கொள்கைக் குரலாய் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நின்று, ‘இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழே இருக்க வேண்டும்” என்று துணிந்து முன்வைத்தார். அவரது குரலை தமிழகமும் எதிரொலித்தது. தந்தை பெரியார் இந்தி அலுவல் மொழியாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அழுத்தம் கொடுத்தார். இதன் விளைவாக இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு, ஆங்கிலமும் சேர்த்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
அந்தச் சட்டம் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு, அதாவது 1965ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு இந்தியே இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்கப்படும் என்றும் எழுதப்பட்டே இந்தியக் குடியரசு உருவானது. ஆனாலும் தற்காலிகமாக இந்தியை ஒன்றையே அலுவல் மொழியாக ஆக்கவிடாமல், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவருக்கும் சேர்த்தே போராடி ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக்கியது திராவி இயக்கம்தான்.
இந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்த காலச்சூழலில், திராவிடர் கழகம் ஒரு பிரிவைக் கண்டது. அரசியலில் தீவிர ஈடுபாடுகொண்டு 1935இல் தன்னை நீதிக் கட்சியில் இணைத்துகொண்ட பேரறிஞர் அண்ணா, திராவிடர் இயக்கம் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்புப் பாதையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்பொருட்டு, செப்டம்பர் 17, 1949இல் “திராவிட முன்னேற்றக் கழகத்தை” உருவாக்கினார். இதைப் பெரியாரின் திராவிடர் கழகத்திற்குப் போட்டி இயக்கமாக அல்லாமல், தேர்தல் களத்தில் பயணிக்கப்போகும் திராவிடர் கழகத்தின் கிளையாகவே இதனை முன்வைத்தார் அண்ணா. அதனால்தான் தி.மு.க.வின் தலைவர் பொறுப்பை மானசீகமாகப் பெரியாருக்கே அளித்துவிட்டு, தான் இறக்கும்வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகவே இருந்தார். மேலும், “நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்” என்றும் அண்ணா அழுத்தமாகக் கூறிவிட்டுத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் சென்றார். அதேபோல் திராவிடர் கழகம் கைகொண்டிருந்த, ‘திராவிட நாடு’ கோரிக்கையையும் இணைத்தே தனது பயணத்தை அமைத்துக்கொண்டது தி.மு.க. இது திராவிட இயக்க வரலாற்றின் இன்னொரு பரிணாமம் ஆகும்.
தனது ஆரம்ப கட்டத்தில் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளிலும், போராட்டங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திராவிட முன்னேற்றக் கழகம், 1956ஆம் ஆண்டு மே மாதத்தில் திருச்சியில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் “தேர்தலில் பங்கேற்பது” என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1949இல் கட்சி தொடங்கிய தி.மு.க., தேர்தலில் பங்கெடுக்காத நாட்களில் செய்த போராட்டங்களில் மூன்றை மிக முக்கியமானதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள். 1953இல் குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டுவர முயன்றபோது, அதனை தி.மு.க. எதிர்த்துப் போராடியது; தமிழர்களை ‘நான்சென்ஸ்’ எனச் சொன்ன ஜவஹர்லால் நேருவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது; கல்லக்குடி என்கிற ஊரின் ரயில் நிலையத்தின் பெயரை டால்மியாபுரம் என்று மாற்றுவதற்கு எதிராகப் போராடியது ஆகிய இம்மூன்றும்தான் அது. இதில் கல்லக்குடிப் போராட்டம் மிக முக்கியமானது என்றுதான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் இங்குதான் ‘கருணாநிதி’ என்கிற போராளியை தமிழகம் கண்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி என்கிற ஊரின் ரயில் நிலையத்தின் பெயரை, அங்கு செயல்பட்டு வந்த ‘சிமெண்ட் தொழிற்சாலையின்’ நிறுவனரான டால்மியாவின் பெயரால் அழைக்கும்படி, ‘டால்மியாபுரம்’ என மாற்றியது அன்றைய அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்த தி.மு.க., இதில் நேரடியாகப் போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. கலைஞர் கருணாநிதி முன்னிலை வகித்த இந்தப் போராட்டத்தில், டால்மியாபுரம் என்கிற ரயில் நிலையத்தின் பெயர் பலகையிலிருந்து அப்பெயரை தார் ஊற்றி அழித்தனர். கலைஞர் கருணாநிதியோ அந்த ரயில் நிலையத்தின் தண்டவாளத்திலேயே தலை வைத்துப் படுத்தார்.ட.எம.நயர 1868 - 1919ச.நடசனர 1875-1937

எனவே போராட்டம் தீவிரம் பெற்று, அது கலவரமானது. இதில் போலீஸின் தாக்குதலால் இரண்டு பேர் உயிர் இழந்தனர். மேலும், கலைஞர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் டால்மியாபுரம் என்கிற பெயரை அரசு நீக்கி, ‘கள்ளக்குடி’ என்றே அந்த ரயில் நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இந்த வரலாற்றைப் படைத்த, அதற்காகத் தண்டவாளத்திலே தலையை வைத்த போராளியான கருணாநிதி, பின்னாட்களில் கண்டதெல்லாம் ஏறுமுகங்களே.
1924 ஜூன் 3இல் திருக்குவளை என்கிற சிற்றூரில் பிறந்த கருணாநிதி, தனது 14வது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். நீதிக் கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவரான அழகிரிசாமியின் பேச்சால் கவரப்பட்ட கருணாநிதி, தன்னை நீதிக் கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்றினார். அதேசமயம் உள்ளூரில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு, ஒரு மாணவர் அமைப்பைக் கட்டிச் செயலாற்றி உள்ளார். “மாணவ நேசன்’ என்கிற கைப்பிரதியை வெளியிட்டு, அதன்மூலமே இளைஞர்களைத் திரட்டியிருக்கிறார் கருணாநிதி. அப்படி அவர் கட்டமைத்த மாணவர் அமைப்பு பின்னாளில் “அனைத்து மாணவர்களின் கழகமாக’ உருப்பெற்று, திராவிட இயக்கத்தின் பிரதான மாணவர் இயக்கமாக நிலைகொண்டது. மேலும் மாணவ நேசன் என்கிற கைப்பிரதியின் நீட்சியாக, தனது 18வது வயதில் அதாவது 1942இல் திருவாரூரில் ‘முரசொலி’ என்கிற இதழையும் தொடங்கினார் கருணாநிதி. இதுதான் 66 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இப்படியாக உருவாகி வந்த கருணாநிதி, 1952ஆம் ஆண்டில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் தான் எழுதிய வசனத்திற்காகப் பெரிதும் கவனித்திற்குள்ளாக்கப்பட்டார். திராவிடர் கழகத்தின் திரைப்பட முகமாக எம்.ஆர்.ராதா இருந்ததுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சினிமாத்துறை முகங்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார். திராவிடர் கழகம் திட்டமிட்டு திரைப்படத்தைப் பயன்படுத்தியதாக குறிப்புகளில்லை என்றாலும், தி.மு.க. அப்படி எதார்த்தமாக சினிமாவைப் பயன்படுத்திவிடவில்லை. அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னர், பேரறிஞர் அண்ணாவின் பல்வேறு நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டன. சிலவற்றில் தி.மு.க.வின் கருப்பு-சிவப்பு கொடிகூட காட்சியாகி இருக்கின்றன. அதேபோல வசனத்திற்கு கருணாநிதி, நடிப்பிற்கு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், மேடைப் பாடல்களுக்கு நாகூர் ஹனீபா என பேரறிஞர் அண்ணா எல்லாமட்டத்திலும் தி.மு.க.வின் கொள்கைகளைப் பரவச் செய்தார். இதேகாலகட்டத்தில் கருணாநிதியும் வளர்ச்சி கண்டார்.
இந்தச் சூழலில்தான் தேர்தலில் பங்கேற்பது என்கிற முடிவிற்கு தி.மு.க. வருகிறது. அதன்படி 1957 மார்ச்சில் நடைபெற்ற ‘சென்னை மாநில’ சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது. 151 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆளும் கட்சியாகி, பெருந்தலைவர் காமராஜர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்களில் பிரதானமானவர்தான் கலைஞர் கருணாநிதி. திருச்சிக்கு அருகே உள்ள குளித்தலையில் போட்டியிட்டு 1957இல் வெற்றி கண்ட கலைஞர், அவர் இறக்கும் வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறார்.
தேர்தலில் கணிசமான இடங்களில் வென்ற தி.மு.க. தனது கொள்கைகைப் போராட்டங்களை சட்டமன்றத்திலும் தொடர்ந்தது. 1958ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதோடு, அதன் சின்னமான உதயசூரியனும் அங்கீகாரம் பெற்றது. 1957 முதல் 1962 வரையிலான இந்த ஆட்சிக் காலத்தில், தமிழகம் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போருக்குத் தன்னை தயார்படுத்தத் தொடங்கியது. 1950இல் இயற்றப்பட்ட ஆட்சிமொழி சட்ட வரைவு 1965ஆம் ஆண்டு வரைக்குமே என்றும், அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்குமென்றும் சட்டம் இயற்றப்படும் என்பதையெல்லாம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். எனவே அதற்கான காலம் நெருங்கியதுவே, இந்தி எதிர்ப்புப் போர் மீண்டும் உருவெடுக்க காரணமாகும். இதே சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ரீதியாக முதல் பிளவைச் சந்தித்தது. சரியாக ஏப்ரல் 19, 1961இல் ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க.விலிருந்து விலகி ‘தமிழ்த் தேசியக் கட்சியை’ உருவாக்கினார். எனினும் 1962இல் நடைபெற்ற சென்னை மாநிலப் பொதுத்தேர்தலில் தி.மு.க. முன்பைவிட அதிக இடங்களைப் பெற்று, 50 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் வலுவான கட்சியாக நுழைந்தது. இத்தேர்தலில் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரகரான நடிகர் எஸ்.எஸ்.ஆரும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். மேலும் இந்தத் தேர்தலின் மூலம் காமராஜர் மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் என்பதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
இதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைக்கூட்டத்தில் பேசிய அண்ணா; “திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.எனவே நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு ” என்று குறிப்பிட்டார். ஆனால் பிற்காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசு அளித்தது. இதனால் திராவிட நாட்டுக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது. அதேசமயம் “திராவிட நாட்டுக் கோரிக்கையைத்தான் கைவிடுகிறோமே தவிர, அதற்கான தேவைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன” என்றும் கூடுதலாகக் குறிப்பிட்டார் அண்ணா.
இன்னொருபுறம் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மெல்ல மெல்ல முளைத்துக்கொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் சென்னை கோடம்பாக்கத்தில் ‘இந்தித் திணிப்பிற்கு எதிரான மாநாட்டினை’ இரண்டாவது முறையாக தலைமையேற்று நடத்தினார் பேரறிஞர் அண்ணா. இதில் ‘தமிழகம் வரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது’ என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவற்றையெல்லாம் கண்ட நேரு, 1963ஆம் ஆண்டில் வெளியான அரசுப் பணி மொழிச் சட்டத்தில் ‘1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் இந்தியுடன்? <https://ta.wikipedia.org/wiki அரசு மொழியாகவே விளங்கும்’ என்றார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கைவிட்டது. இருப்பினும் நேருவின் வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்று அறிவித்த தி.மு.க., எதற்கும் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போரை எதிர்நோக்கியே இருந்தது. இச்சூழலில் அண்ணாவின் இந்தித் திணிப்பிற்கு எதிரான உரைகள் முக்கியமானவையாக மாறின.
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டதற்குக் காரணம், அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதான் என்கிறார்கள். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையான பறவை காகம் தானே?” என்று அண்ணா எழுப்பிய நறுக் கேள்விகள் இந்தித் திணிப்பிற்கு எதிரான உணர்வை மேலும் தீவிரப்படுத்தின.
ஜனவரி 26, 1965 நெருங்க நெருங்க தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்கொள்ள உக்கிரமானது. இந்தியைத் திணித்தால் 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாளை ‘துக்க தினமாக’ அறிவித்து, போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தது தி.மு.க. அதன்நீட்சியாக தமிழகம் போராட்டக் களத்திற்கு அணியமானது. “தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்” என்ற அமைப்பு 18 நபர்களைக்கொண்டு உருவாகி, பலம்பெற்ற மாணவர் அமைப்பாக மாறியது. சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் கால வரையின்று மூடப்பட்டன. ஜனவரின் 25இல் இந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்ற போராட்டக்காரர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே மதுரையில் நிகழ்ந்த வாக்குவாதம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. அஞ்சல் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன. போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தி எழுத்துகள் தார் பூசி அழிக்கப்பட்டன. இந்தி புத்தகங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவின் சட்டல் நகலையும் மாணவர்கள் எரித்தனர். ரயில்கள் மறிக்கப்பட்டன. அண்ணா, கலைஞர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், ஏராளமான தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களை அடக்க போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரைப் பயன்படுத்தியது பக்தவச்சலத்தின் தலைமையிலான அரசு. இதனால் ஆங்காங்கே மக்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன.
ஜனவரி 25 அன்று “ஏய் தமிழே நீ வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று எழுதி வைத்துவிட்டு தன்னுயிரை ஈகம் செய்தார் கீழப்பழூர் சின்னச்சாமி. இவரை அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம் உயிரைத் துறந்தார். மாணவர்களான ராஜேந்திரனும், சிவலிங்கமும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியது. இத்தோடு நிற்கவில்லை உயிர்பலி. “சாரங்கபாணி, சிவலிங்கம், வீரப்பன், முத்து மற்றும் அரங்கநாதன்” ஆகியோர் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். “தண்டாயுதபாணி, சண்முகம் மற்றும் முத்து” ஆகிய மூவர்கள் விசமருந்தி இறப்பை எய்தினார்கள். இன்னும் போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 70 பேர் இறந்ததாக அரசே அறிக்கை வெளியிட்டது. அதைத் தவிர்த்து கலவரங்களின்போதும், கணக்கில் வராததுமான உயிர்பலிகள் நூறைக் கடந்து இருக்கக்கூடும் என்கிற அச்சம் பரவலாக அப்போது எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல்கள் எழுந்தியிருக்கின்றன. இப்படியான நெருக்கடிகள் கழுத்தைச் சுற்றி வளைக்கவே வேறு வழியின்றி, இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்கிற சட்டத்தை இயற்றியது லால் பகதூர் சாஸ்திரியின் மத்திய அரசு. இப்படியாக இந்தித் திணிப்பிற்கு எதிரான இரண்டாவது போர் முடிவிற்கு வந்தது. இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் நாம் எதிர்கொண்டிருக்கும் இந்தித் திணிப்பு முயற்சிகள், மூன்றாம் கட்டத்தைச் சேர்ந்தது.
ஆக இந்தித் திணிப்பை வலுவாக எதிர்த்து நின்று தடுத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழுமையாகக் கிடைத்தது. இந்தச் சூழலில் 1967ஆம் ஆண்டி பொதுத்தேர்தல் வந்ததும், அதில் தி.மு.க. 138 இடங்களில் வென்று, மார்ச் 6ஆம் தேதி பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக சட்டமன்றத்தில் அடையெடுத்த வைத்த கலைஞர், கட்சியில் பொருளாளராகப் பதவி உயர்வைப் பெற்றதோடு, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில்தான் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக நுழைந்தார் எம்.ஜி.ஆர்.nagore-haniffa-2


அண்ணாவின் தலைமையில் அமைந்த தி.மு.க. அரசு மிக முக்கியமான சட்டங்களை இயற்றியது. அவற்றுள் தலையானது “மெட்ராஸ் ஸ்டேட்” என்பதனை நீக்கி, “தமிழ்நாடு” என பெயர் சூட்டியது. இது 1969, ஜனவரி 14 அன்று நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சடங்குகளின்று, சாதி மறுத்துத் திருமணம் புரிவர்களின் “சுயமரியாதைத் திருமணங்கள்” சட்டப்படி செல்லும் என்று அரசாணை பிறப்பித்தார். மேலும், இந்திய மாநிலங்கள் அதுவரை கடைப்பிடித்து வந்த மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் ரத்து செய்த பேரறிஞர். தமிழக அரசின் மொழிக்கொள்கையாக இருமொழிக் கொள்கையாக அறிவித்தார். அதன்படி ‘தமிழும், ஆங்கிலமும்’ மட்டுமே தமிழகத்தின் அலுவல் மொழியாக இருக்கும்படி சட்டம் இயற்றினார். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களையும், மத்திய அரசையும் உலுக்கிப் பார்த்தது. இந்தியா முழுவதும் இந்தி அலுவல் மொழியாக இருக்கும்பட்சத்தில், ‘இந்தியையும், ஆங்கிலத்தையும்’ மத்திய அரசு அலுவல் மொழியாகக்கொண்டிருக்கும்போது, தமிழகம் மட்டும் ‘இந்தியின் இடத்தில் தமிழை வைத்தது’ மிகப்பெரும் துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து மாநில உரிமைகள், இன மீட்சிக்கான பாதைகள் என அரசமைத்த அண்ணாவின் ஆயுள் மிகச் சீக்கிரத்தில் முடிந்துபோனது நம் துரதிர்ஷ்டவசம் என்றுதான் சொல்ல வேண்டும்,
கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, பிப்ரவர் 3, 1969ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அவருக்கான இறுதி மரியாதை செலுத்தும் கூட்டத்தில் ஒன்றரை கோடி மக்கள் கூடியதும், அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதும், அண்ணாவின் இழப்பை எத்தகையது என்பதை சிறிதளவேனும் நமக்கு உணர்த்துகின்றன. திராவிட இயக்க வரலாற்றில் இது பெரும் இடியாக அமைந்தது என்றாலும், அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் உருவெடுத்தது மீண்டும் தி.மு.க.வை மட்டுமல்ல, திராவிட இயக்கத்தையே வலுவாக்கியது. அண்ணாவின் மறைவையொட்டி தி.மு.க.வில் சில சர்ச்சைகள் எழுந்தன. தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் கோஷ்டி பூசல்களால் தள்ளாடின. இருப்பினும் அவை குறுங்குழுவாதமாகவே இருந்தன. அந்தச் சூழலில் தந்தை பெரியார் தலையிட்டு கலைஞரை தி.மு.க.வின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பிற்குப் பரிந்துரைந்த்தார். அதன்படியே கலைஞரும் 1969 ஜூலை 26இல் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இப்போதுதான் முதல்முறையாகத் தி.மு.க.வில் தலைவர் பதவி உண்டாக்கப்பட்டது.
தந்தை பெரியாரை தனது மானசீக தலைவராக பேரறிஞர் அண்ணா முன்மொழிந்தாலும், பெரியார் முன்வைத்த கடவுள் எதிர்ப்புக் கோட்பாட்டினை அண்ணா தேர்தல் பாதையில் புறக்கணித்தார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனவும், கடவுள் ஒன்று மனிதநேயமும் ஒன்றுதான்” எனவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் தி.மு.க.வில் தலைவர் பதவியை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட கலைஞரோ, கடவுள் கோட்பாட்டில் பெரியாரின் வழியிலேயே நின்றார்.
1969இல் அண்ணாவின் மறைவையொட்டி, கலைஞர் முதலமைச்சர் ஆனார். ஆனால் இந்த ஆட்சி சில மாதங்களிலேயே கலைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஜனவரி 3, 1971இல் நடைபெற்ற தேர்தலில் 184 தொகுதிகளில் வென்றும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கலைஞர் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். இந்தக் காலகட்டம் தி.மு.க.வின் வரலாற்றில் இரண்டாவது பிளவை உண்டு பண்ணியது. தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.ஆர். கலைஞருடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அக்டோபர் 17, 1972இல் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்கிற கட்சியை உருவாக்கினார். இதற்குப் பிறகும் தொடர்ந்த கலைஞரின் அரசு மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியது. அதில் பிரதானமானது ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்கிற சட்டமாகும். மேலும் அரசு விழாக்களிலும், அரசு கல்விநிலையங்களிலும் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்கிற சட்டத்தையும் கலைஞர் தலைமையிலான திராவிட இயக்கம் சட்டமாக்கியது. இதன்மூலம் ‘இந்திய தேசிய கீதம்’ மட்டுமே ஒலித்த இடங்களில், தமிழ்த் தாய் வாழ்த்தும் சேர்ந்து ஒலித்தது. இது அண்ணாவின் இருமொழிக் கொள்கைத் திட்டத்திற்கு இணையானது என்றே குறிப்பிட வேண்டும்.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 1969இல் கலைஞர் பதவியேற்றது, ‘மத்திய மாநில அரசுகள் குறித்து ஆராய ஒரு குழு ஏற்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். அதன்படியே நீதிபதி ராஜமன்னார் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு 1971 மே 27இல், 383 பக்கங்களை தனது ஆய்வறிக்கையாக தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி, 1.மாநிலங்களுக்கும் சட்டம் இயற்றும் உரிமையை அளிக்க வேண்டும்; 2.மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிக்கும் பொருட்டு வரிச் சீர்திருத்தம் வேண்டும்; 3.நெருக்கடி நிலையின் போது மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்; 4.அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், மூன்றில் இரண்ட மடங்கு மாநில சட்டமன்றங்கள் அதை ஏற்க வேண்டு; 5.மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நியமனம் நடைபெற வேண்டும்; 6.மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கை அளிக்கப்பட வேண்டும்” என்கிற தீர்மானங்களை ராஜமன்னார் குழுவின் அறிக்கையை முன்வைத்து இயற்றிய கலைஞர் அரசு, அதை பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தது. அவரும் இதைப் பரிசீலிப்பதாகக் கூறினார். இதன்பிறகு இந்த முயற்சியை மத்திய அரசே பலமுறை செய்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில்கூட மத்திய மாநில உறவுகள் குறித்த ஆய்வறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனினும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இவ்வளவு துணிச்சலாகச் செயல்பட்டது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே இன்றளவும் உரித்தானதாக இருக்கிறது. அதேபோல் கலைஞர் இந்தக் காலகட்டத்தில்தான் ‘மாநிலங்களுக்கான தனி இலட்சினை பொருந்திய கொடி வேண்டும்’ என்கிற கோரிக்கையையும் முன்வைத்தார். அதில் ஆளுநர்களுக்குப் பதில் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையையும் சேர்த்தே கேட்டிருந்தார். அதன் நீட்சியாகவே மாநில முதல்வர்களுக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை அளித்தது மத்திய அரசு.
இப்படித் தொடர்ச்சியாக மத்திய அரசின் அதிகாரப் போக்குகளை நீர்த்துப் போகச் செய்த திராவிட இயக்கம் கண்ட தலைவரான கலைஞர், 1974 ஏப்ரல் 20ஆம் தேதி “மத்தியில் கூட்டாச்சி; மாநிலத்தில்ச் சுயாட்சி” என்கிற முழக்கத்தை முன்வைத்து ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இது இந்தியாவின் பிற மாநிலங்களை மேலும் மேலும் விழி தூக்க வைத்தன. இப்படியாகத் துணிச்சலாக சென்றுகொண்டிருந்த ஆட்சியை, 1975 ஜுன் 25இல் கொண்டு வந்த ‘அவசரநிலைப் பிரகடனம்’ மூலம் அசைத்துப் பார்த்தார் இந்திரா காந்தி. ஆனால் கலைஞரோ அதற்கு இசைந்துகொடுக்காமல், மேற்கொண்டு அவசரநிலைப் பிரகடனத்தை மிகக்கடுமையாக எதிர்த்துப் பேசினார். கூட்டங்கள் போட்டார். இதன்விளைவாக ஜனவரி 31, 1976இல் தி.மு.க.வின் ஆட்சியைக் கலைத்தார் பிரதமர் இந்திரா காந்தி. ஆனாலும் கலைஞரும் சளைக்காமல், மத்திய அரசை எதிர்த்துக் களம் கண்டார். இதில் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் கைதிற்குள்ளாகினர். அதில் தி.மு.க.வின் இன்றைய தலைவரான மு.க.ஸ்டாலினும் அடக்கமாவார்.
இதன்பிறகு நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டதையடுத்து, தமிழகத்திற்கு ஆறாவது பொதுத்தேர்தல் ஜூலை 1977இல் நடத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அதிக இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆரும் தமிழகத்தில் முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதிலிருந்து எம்.ஜி.ஆர். இறக்கும்வரை, அதாவது டிசம்பர் 27, 1987 வரையிலும் எம்.ஜி.ஆர்.தான் தமிழகத்தின் முதல்வராக நீடித்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் முதலமைச்சர் பதவியை வகித்தார். எனவே இந்த 13 ஆண்டுகளை திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலமாக எடுத்துக்கொள்ள இயலாது. திராவிடத்தின் பெயரால் கட்சியை எம்.ஜி.ஆர். நடத்தியிருந்தாலும், அது திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளில் தன்னை இணைத்துக்கொள்ளவே இல்லை. வெகுசில மட்டுமே அப்படி திராவிட இயக்க மரபில் ஒத்துப்போயின. நீதிக்கட்சியின் தலைவராக சர் பிட்டி தியாகராய் இருந்தபோது 1912இல் சென்னையின் பள்ளிகளில் இலவச மதிய உணவை அளித்தார். அது காமராஜர் காலத்தில் தமிழகம் முழுமைக்கும் மேம்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை இன்னும் கூடுதலாகக் கவனம் எடுத்துக்கொண்டு விரிவுபடுத்தினார் எம்.ஜி.ஆர். அதேசமயம் எம்.ஜி.ஆருக்குப் பிறகான கலைஞரின் அரசிலும் சாப்பாட்டுடன் முட்டையும் சேர்த்தும் வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் இங்கு கவனத்தில் நிறுத்தவேண்டும். அடுத்ததாக எம்.ஜி.ஆர். ஆட்சியில் செய்த ஒன்று, தமிழகத் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்குகிற சட்ட அறிவிப்பை முக்கியமான ஒன்றாகக் குறிப்பிடலாம். இது திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் தங்களது பெயருக்குப் பின்பு சாதிப் பெயர்களை இடக்கூடாது என்கிற பெரியாரின் அறிவிப்பிற்கு இணையானதாகே கருத வேண்டும். இவற்றைக் கடந்து எம்.ஜி.ஆரின் ஆட்சியை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகக் காண இயலாது.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அவருடைய மனைவியான ஜானகி சில மாதங்கள் முதலமைச்சராகப் பொறுப்பில் இருந்தார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். இதற்கு அடுத்த கட்டமாக 1989 ஜனவரியில் தமிழகத்தின் பொதுத்தேர்தல் வந்தது. இதில் தி.மு.க. 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கலைஞர் மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். ஆனால் இந்த ஆட்சியும் முழுமையாக ஐந்தாண்டுகள் நீடிக்கவில்லை. இலங்கையில் ‘தனி ஈழம்’ கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த, ‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு’ ஆதரவு அளித்ததாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததாகவும் தி.மு.க.வை நோக்கி சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும் காங்கிரஸுடன் ஜெயலலிதா நெருக்கம் கொண்டார். மத்தியில் அமைந்த வி.பி.சிங் அரசு பெரும்பாமையோடு இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததினால், ஜனவரி 1991இல் தி.மு.க.வின் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது, மே 21, 1991இல் படுகொலை செய்யப்படுகிறார். இதன்விளைவாக ஜூன் 1991இல் நடைபெற்ற தமிழகத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்படிப் பொறுப்பேற்ற அவர் 1991 முதல் 1996 வரை முழுமையான ஐந்தாண்டுகளை ஆட்சி புரிந்தார்.
இதன்பிறகு மீண்டும் கலைஞர் 1996இல் வென்றதும், அதனையடுத்து ஜெயலலிதா 2001இல் வென்றதும், அதற்கும் அடுத்து ஐந்தாவது முறையாக கலைஞர் 2006இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதையும், பின்னர் 2011இல் இருந்து இன்றளவும் அ.தி.மு.க. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் மிக அண்மைக்கால வரலாறுகள் என்பதால் நாம் பரவலாக இவற்றை அறிந்தே வைத்திருப்போம்.
இதில் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலுமான கலைஞரின் ஆட்சியில் செயல்படுத்திய நிறைய சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள் கவனிக்கத்தக்கவை. சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம்; பெண்களுக்கு வாக்குரிமை என்று நீதிக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டத் திட்டத்தை புணரமைத்து “பெண்களுக்குச் சொத்துரிமையை” அளித்தது; தமிழகமெங்கும் புதிய பாலங்களைக் கட்டியது; 50க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியது; கல்வி வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்தியது; மதச்சிறுபானமையினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தது; சுடுகட்டின் வெட்டியான் வேலையைச் செய்பவர்களை அரசுப் பணியாளர்கள் ஆக்கியது; எல்லாச் சமூகத்தினரும் இணைந்து வாழும் பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியது; தாழ்த்தப்பட்டோருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை கட்டணங்களை ரத்து செய்தது; விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்து இலவச மின்சாரம் அளித்தது; பொறியியல் கல்லூரி மாணவர்களின் கடனை ரத்து செய்தது; இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தது; 7000 கோடி கூட்டுறவு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது; உழவர் சந்தைகளை அமைத்தது; குடிசை மாற்று வாரியத்தை உண்டாக்கியது; கை ரிக்‌ஷாவை ஒழித்தது; அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி மூன்றாம் பாலினத்தவராக அவர்களை அங்கீகரித்தது; திருநங்கையர் என்ற சொல்லை உருவாக்கியது; அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடமளித்தது; நாகம்மையார் பெயரிலான ஏழை மகளிருக்கு இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்; மூவலூர் இராமாமிர்தம் பெயரிலான திருமண உதவித் தொகைத் திட்டம்; ஆதரவற்றப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை அளிக்கு அன்னை தெரஸா திட்டம்; ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் விதவைத் தாயின் மகளுக்கான திருமண உதவித் திட்டம்; சாதி மறுப்புத் திருமணம் புரியும் பெண்களுக்கு தங்கம் அளிக்கு திட்டம்; அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கென 30 சதவீத இடஒதுக்கீடு அளித்தது; உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கியது; காவி கொடி பறக்கும் கன்னியாகுமரியில் ஆத்தமிழரான வள்ளுவருக்கு பிரமாண்ட சிலை எழுப்பியது, பெரியார் அண்ணா காமராஜர் போன்ற முனோடித் தலைவர்களின் பெயர்களை தமிழமெங்கும் நிறுவியது; தமிழுக்கு உயர்தனிச் செம்மொழி அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்து, அதற்கென நினைவுப் பூங்காக்களை அமைத்தது; தமிழ்ப் புத்தாண்டை ‘தை முதல் நாள்’ என்று மாற்றியது; உயிர் காக்கும் இலவசக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தியது; தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் தடம் பதிக்க டைடல் பூங்காவைத் திறந்தது; பேருந்துகளிலும் அரசு அலுவலகங்களிலும் திருக்குறளை எழுதி வைக்க உத்தரவிட்டது” என கலைஞரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சமூகநீதி நடவடிக்கை நீண்டுகொண்டே செல்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெரியாரின் கொள்கைகளுக்கு பெருமளவில் சட்ட வடிவத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதன் வழியாக திராவிடக் கருத்தியலின்படியான ஆட்சியையும் இங்கு பாதுகாத்திட எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்திருக்கிறார். அதில் எம்.ஜி.ஆரின் பிரிவு முக்கியமானது என்றால், அதே அளவில் வைகோவின் பிரிவும் முக்கியமானதாகும். இது தி.மு.க. கண்ட மூன்றாம் பிளவு. 1993 அக்டோபர் 11இல் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, மே 6, 1994இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார். பின்னர் 1999ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உடன் வைகோ கூட்டணியை அமைத்துக்கொண்டார். அதனால் அது அ.தி.மு.க. போன்றதொரு நேரெதிர் கட்சியாக தி.மு.க.விற்கு அமைந்துவிடவில்லை. என்றாலும் “நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க.வை கட்டிக் காப்பாற்றினார் கலைஞர்” என்கிற சொல் அவ்வளவு உண்மையானது என்பதை வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
13 முறை தமிழகத்தின் சட்டமன்றத் தலைவராகவும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும், ஐந்து முறை தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராகவும், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக எல்லையைக் கடந்து இந்திய அரசியலின் தனிப்பெரும் ஆளுமையாக, தி.மு.க.வின் அரைநூற்றாண்டு கால தலைவராக, 75 ஆண்டுகளைக் கடந்த முரசொலி இதழின் ஆசிரியராக, சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளைக் கண்ட தனிப்பெரும் சாதனையாளராக என எண்ணவென்னவாகவோ இருந்த கலைஞரை ஆகஸ்டு 7, 2018இல் இயற்கை அரவணைத்துக்கொண்டது. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட இயக்கத்தின், அரை நூற்றாண்டுகால வரலாறை நாம் இன்று இழந்திருக்கிறோம். millath
இனி திராவிட இயக்கத்தின் நிலை என்ன? பெரியார் அண்ணா காலத்திலான திராவிட இயக்கக் கருத்தியல்கள் அரை உயிரில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சூழலில், தி.மு.க.வின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப்போகிறது? தி.மு.க.வின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் “இந்தியா முழுமைக்கும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்” என்று பேசியது தொடரும்? அப்படியான அவரின் பேச்சு இந்துத்துவவாதிகளையும் சாதியவாதிகளையும் எதிர்த்து நிற்குமா? தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மத்திய அரசின் அடிமை ஆட்சியை நீக்கி, தமிழகத்தில் சுயாட்சியை நிலைபெற வைக்குமா? என்கிற எண்ணற்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, திராவிடக் கட்சிகள் தமிழர்களை ஏமாற்றிவிட்டன என்று கிளம்பியிருக்கிற இளைஞர் கூட்டம் இங்கு ‘தமிழ் தேசியத்தை உருவாக்குவார்கள் அல்லது பார்ப்பன பனியா கும்பல்களிடம் ஏமாற்றப்பட்டு தமிழகத்தைக் காவு கொடுத்துவிடுவார்களா? என்கிற அச்சம் இன்னொரு பக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில் திராவிடர் இயக்கம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது? கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம் மீண்டும் அவை நடக்காது என்று பேட்டியளித்த ஸ்டாலின் ஈழம், தமிழர்கள் மீது திணிக்கப்படும் அழிப்புப் பொருளாதாரத் திட்டங்கள், காவேரி முல்லைப் பெரியாறு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினைகள், நீட் தேர்வு இப்படி எண்ணற்ற தமிழகத்தின் வாழ்வுசார் உணர்வுசார் சிக்கல்களில் நேர்மறையான முடிவுகளை எடுத்து, அதேசமயம் தமிழின்பால் கிளம்பியிருக்கும் புதிய இளைஞர் கூட்டத்தை அரவணைத்துக் கொண்டுபோனால் மட்டுமே எதிர்காலத்தில் திராவிட இயக்க ஆட்சி நீடிக்கும். அப்படி இல்லாமல் போனால் அது திராவிட ஆட்சிக்குள் வராது. ஒரு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்கள் தேர்தல் வெற்றியை ஒட்டியா ஆட்சி என்பதாகவே அது அமைந்துவிடும்.
- பழனி ஷஹான்