சிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...

ஜி.அத்தேஷ்
பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்த மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏறக்குறைய மதிப்புமிக்க எல்லா அரசு அமைப்புகளையும் அசைத்து விட்டது. பொருளாதாரம், அரசியல், மாநில ஆட்சிகள், ஆளுநர் நியமனங்கள், பல்கலைக் கழகங்களின் பிரச்சனைகள், நீதிபதிகள் மற்றும் ஆணையங்களின் தலைமைகள் நியமனம், வங்கிகள் வாராக் கடன், தொழிலதிபர்கள் வங்கிப் பணத்துடன் ஓட்டம் என்று எதுவும் தப்பிக்கவில்லை. இந்த குளறுபடிகளைத் தவிர்த்து எதுவும் நல்லது நடந்ததாகத் தெரியவில்லை. இப்போது, நாட்டின் மதிப்புமிக்க விசாரணை அமைப்பென்று பாராட்டப்படும் சி.பி.ஐ.யையும் மோடி உள்ளங்கையில் வைத்து சொக்கட்டான் உருட்டி விட்டார்.
நாட்டின் உயர்மதிப்பு ஊழல்கள், அரசியல் படுகொலைகள், காவல்துறையால் கண்டறிய முடியாத நுணுக்கமான குற்றப்புலணாய்வு ஆகிய அம்சங்களைத் தோண்டித் துருவி உண்மையைக் கொண்டு வரும் வல்லமை சி.பி.ஐ.க்கு உண்டு. சில இடங்களில் அரசியல் நெருக்கடிகளுக்கு இலக்காகி வழக்குகளில் சுணக்கம் காட்டும். சி.பி.ஐ. மத்திய அரசின் கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. சி.பி.ஐ. அவ்வப்போது சந்திக்கும் நெருக்கடிகள் அதனை நிரூபிக்கிறது
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இருந்த யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர், ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை விசாரணை செய்யும்படி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட அலோக் வர்மா அதன் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இருந்த நிலையில் நள்ளிரவில் விடுப்பில் அனுப்பப்பட்டார்
அலோக் வர்மாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் பதவியை பிடுங்குவதற்காக திட்டமிடப்பட்ட செயல், இது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தான் இது நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி பலமான ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறது. ரஃபேல் ஊழல் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்று மோடி தரப்பில் இருந்து அலோக் வர்மாவுக்கு முதலில் அறிவுறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்புச் செயலருக்கு கடிதம் எழுதி, ரஃபேல் தொடர்பான அதிமுக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார் வர்மா. பாதுகாப்புச் செயலருக்கு அலோக் வர்மா எழுதிய கடிதம் தான் பிரதமர் அலுவலகத்துக்கு பீதியை கிளப்பியதாகச் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் மோடிக்கு நெருக்கமானவர், நம்பிக்கைக்கு உரியவர். அஜித் தோவல் பிரதமர் சார்பில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து விசாரணை முயற்சிகளை கைவிடும்படி கேட்டிருந்தாராம். ஆனால், அதற்கு அலோக் வர்மா மறுப்புத் தெரிவித்ததால், இரவோடு இரவாக இயக்குனர் பொறுப்பில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். இது, சில மணி நேரங்களில் நடந்துள்ளது என அலோக் வர்மாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாக India Section என்ற இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா குற்றச்சாட்டின் பேரில் அலோக் வர்மா நீக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பு சொல்கிறது.
மத்திய கண்காணிப்பு ஆணையர் கே.வி. சௌத்தரி அக்டோபர் 23 பிற்பகலில் டென்மார்க் செல்ல திட்டமிட்டிருந்தார். பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு இரவில் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அழைப்பின் பேரில் இணை இயக்குனர் எம். நாகேஷ்வர் ராவ் இரவில் சி.பி.ஐ. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் துணை ஆணையர்களை அழைத்து தில்லி கான் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கிறது. போலீஸ் படையை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தேசிய பாதுகாப்பு மையத்திடம் இருந்து பெற்ற உத்தரவின்படி இரவில் சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தில்லி காவல் ஆணையர் இதர உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். இவை அனைத்தும் நள்ளிரவில் நடந்திருக்கிறது.
அதற்கு நள்ளிரவில் ஏன் அவசரஅவசரமாக இதனை செய்ய வேண்டும். இதில், தான் மத்திய அரசு நடவடிக்கை மீது சந்தேகம் வருகிறது. மோடி ஆட்சியில் மத்திய அரசு, தோல்விகள், விமர்சனங்கள், அவமானங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. செய்ய நினைத்ததை செய்துவிட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு சிந்தனைகள் இல்லை என்பதாகவே தெரிகிறது. இந்த ராகேஷ் அஸ்தனா மீது பல லஞ்ச ஊழல் புகார்கள் இருக்கின்றன. அஸ்தனாவை கைது செய்யும் முயற்சியில் ஏற்கெனவே அலோக் வர்மா இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அஸ்தனாவிடமே புகார் வாங்கி அலோக் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அலோக் வர்மா இப்போது உச்சநீதிமன்றத்தில் நியாயம் கேட்டு முறையீடு செய்திருக்கிறார்.

இப்போது, எம். நாகேஷ்வர் ராவ் என்பவரை சி.பி.ஐ. இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. இவர் பா.ஜ.க. மீது கருணை கொண்டவர் என்று கூறப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் முன்னர் 1999 ல் இந்த நாகேஷ்வர் ராவ் மத வெறுப்பை தூண்டிபேசியதாக ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில் இவர் மீது பொதுநல வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. அலி கிஷோர் பட்நாயக் என்கிற சி.பி.எம் தலைவர் ஒருவர்தான் இவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்டுகள் தான் நாட்டின் உண்மையான அச்சுறுத்தும் சக்திகள், இந்திய அரசியல் சட்டத்தை வரைந்தவர்கள் சிறுபான்மைக்கு ஆதரவானவர்கள் என்று ஒடிசா கஞ்சம் மாவட்டத்தின் பெர்காம்பூரில் பொது நிகழ்ச்சி ஒன்றில் 1988 டிசம்பரில் பேசியிருக்கிறார். பெர்காம்பூர் வளர்ச்சி ஆணையத்தில் ராவ் துணைத் தலைவராக வேலை செய்து கொண்டிருந்த போது, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ல் தி ஹியூமேன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய சர்வதேச மனித உரிமைகள் விழாவில் பங்கேற்றுக் கொண்ட போது அவ்வாறு பேசியிருக்கிறார்.
அச்சமயம், சி.பி.எம். இளம் தலைவராக இருந்திருக்கிறார் அலி கிஷோர் பட்நாயக். ஒரு ஐ.பி.எஸ். தரத்தில் உள்ள அதிகாரி அவ்வாறு பேசியதைக் கேட்டு துணுக்குற்றேன். உள்ளூர் நாளேடு ஒன்றும் இதனை பதிவு செய்தது. அன்றைய சட்டமன்றத்திலும் கூட எதிர்கட்சிகள் ராவுடைய பேச்சை எழுப்பி விவாதித்தன. எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்பியதால் மாநில அரசு, ராவ் மீது போலீஸ் விசாரணை மற்றும் வருவாய்த்துறை தரப்பில் ஒரு விசாரணை என இரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்கிறார். உடனடியாக ராவ் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதுடன் அவர் மீது போடப்பட்ட பொதுநல வழக்கை மேலும் முன்னெடுக்கவில்லை.

வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் திறந்த உடனேயே வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுபோக உள்ளதாக பட்நாயக் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒருவரைத்தான் இப்போது சி.பி.ஐ. இயக்குனராக மோடி அரசு நியமனம் செய்திருக்கிறது
மாநிலங்களின் முதன்மைச் செயலர்களையும் கவர்னர்களையும் அதிரடியாக நீக்கி தங்கள் விருப்பப்படி செயல்படும் நபர்களை அந்த இடங்களில் அமர்த்திக் கொண்டு வரும் அதே செயலைத் தான் இப்போது சி.பி.ஐ. விவகாரத்திலும் மத்திய அரசு செய்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ. விவகாரத்தில் மோடி அரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஊழல் இல்லாத அரசு என்று நான்கு ஆண்டுகள் பெருமை பேசி வந்த பா.ஜ.க.வுக்கு ரஃபேல் விவகாரம் சரியான சிக்கலாக மாட்டியுள்ளது. மோடி பிரதமரான போது, “நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வோம் ஐந்தாவது ஆண்டு அரசியல் செய்வோம்” என்று கூறினார். இப்போது, ரஃபேலை வைத்து காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக அரசியலை முடுக்கி உள்ளது.

மத்திய அரசின் மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அன்னா ஹசாரே, ஊடகங்கள் அலைக்கற்றை ஊழலை கொண்டு காங்கிரஸ் ஆட்சியை (2004-2014) கவிழ்க்க தீவிரம் காட்டினார்கள். இறுதியில் அது வெடிமருந்து இல்லாத பட்டாசாக நமத்துப் போனது. இப்போது, ராகுலும் காங்கிரசும் மட்டும் தான் ரஃபேல் ஊழல் பற்றிப் பேசுகிறார்கள். மற்றவர்கள் உறங்கப்போய் இருக்கிறார்கள்.
2013 ஜூன் 5 ஆம்நாள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறது என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டார். அப்போது அவர் குஜராத் முதலமைச்சர்.

சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சி.பி.ஐ. கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து சொல்லி இருந்தது. இப்போது பிரதமராக வந்துள்ள மோடியும் கிளி கூண்டை விட்டு பறந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்.