மதவாதம் + ஒட்டுண்ணி முதலாளித்துவம் = மோடி!

 - ப.ரகுமான்
புதிய ஒட்டு வீரிய ரக மாம்பழம் ஒன்றிற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் ஒரு சுவையான செய்தியை அண்மையில் வெளியிட்டன. "மதவாதம்+ஒட்டுண்ணி முதலாளித்துவம்" ஆகிய இரண்டின் மூலமும் உருவான புதிய ஒட்டு வீரிய ரக மோசடிக்கு இதைவிட பொருத்தமாக யாராலும்

சிறப்புச் செய்துவிட முடியாது. மோடி ப்ராண்டின் (Brand) கீழ் தேர்தல் சந்தையில் விற்பனையாகியிருக்கும் சரக்கு இதுதான் என்பதை பதவியேற்ற நாளிலிருந்தே அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் தேர்தல் வெற்றி பற்றியும், தாம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் மோடி என்ன சொல்லிக் கொள்கிறார்?
"மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, Narendra-Modi-and-Nawaz-S-011நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட வெற்றி. அது ஒரு திருப்புமுனை. 21ம் நூற்றாண்டின் மீதே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பாரம்பரியமான, சாதி, மதம் சார்ந்த மற்றும் பிற அரசியல் சமன்பாடுகள் அனைத்தும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக 'நம்பிக்கை மற்றும் சாதிப்பதற்கான வேட்கை சார்ந்த அரசியலை' வாக்காளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்".

"டோனி பிளேர் தலைமையின் கீழ் தொழிலாளர் கட்சி பெற்ற முதல் வெற்றியும், பராக் ஒபாமா அதிபராக பெற்ற முதல் வெற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதைப் போன்றதுதான் பாஜகவின் வெற்றியும். அரசியல் நோக்கர்கள், சமூக அறிவியலாளர்கள் மற்றும் தேர்தல் ஆய்வாளர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு முக்கியமான சவால். இதற்கு இந்த நாட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், பல்கலைக்கழகங்கள் முன்வந்தால், இதை ஆவணப்படுத்தி இந்த உலகின் முன்வைக்கலாம். அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் பொதுவாகவே வரலாற்று உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்".

இது, கடந்த ஜூன் 1ம் தேதி, பாஜக தலைமையகத்தில், மோடி பேசிய பேச்சின் சுருக்கம். இதையேதான் வேறு வேறு சொற்களில் ஊடகங்கள் நம்முன்னால் வைக்கின்றன. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டாம் என்ற சொன்ன அதேமோடிதான், அதற்குப் பதிலாக, உலகளவிலேயே தாம் புதிய வரலாறு படைத்ததாக அரசியல் வல்லுநர்கள் ஏராளமான புத்தகங்களை எழுத வேண்டும் வேண்டும் என்கிறார்.
அவர் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். பாஜகவும், அதன் கூட்டணி\யும் பெற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த ரகம் என்பதைக் கண்டுபிடிக்க, தேர்தல் முடிவுகளை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்துவிடுவது உதவக்கூடும்.
             பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பா? வரலாற்றுச் சிறுமையா?
  16வது மக்களவையின் 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக, ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை, 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 66.38 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதாவது, வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் 81 கோடியே 45 லட்சம்; ஆனால் வாக்களித்திருப்பவர்கள், 55 கோடியே 13 லட்சம் பேர்.
26 கோடியே 32 லட்சம் பேர் இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை; எழுத்தறிவுபெற்றவர்கள் விகிதம், ஊடகங்களின் வீச்சு, பிரச்சார வலிமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, பல்வேறு காரணங்களால் புறக்கணித்திருக்கிறார்கள் என்று சொல்வது கூடப் பொருத்தமானதுதான்.
பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக+29 கட்சிகள்) என்று பார்த்தால், 336 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இது உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிதானா? வரலாறு தெரியாமல் அதை மதிப்பிட முடியாது என்பதால், சுருக்கமாக தேர்தல் வரலாற்றைப் பார்த்து விடுவோம்.
1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 48 விழுக்காடுக்கும் குறைவே. பெரும் வெற்றிபெற்றிபெற்ற காங்கிரஸ் 45 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
1957, 1962, 1967, 1971 என வரிசையாக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் பெற்ற வாக்கு கள் முறையே, 47.8%, 44.7%, 40.8%, 43.7%.
1977ல் அக்கட்சி ஜனதாவிடம் தோற்றபோது பெற்ற வாக்குகள் 40.98%. ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் 51.89%
1980ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ் பெரும்பான்மையுடன் பெற்றிபெற்றது. வாக்கு சதவீதம் 42.7%. 1984ல் 50.7%mod
1989ல் காங்கிரஸ் மீண்டும் தோற்றபோது பெற்ற வாக்கு சதவீதம் 39.5%. 197 இடங்களுடன் அதுதான் தனிப்பெரும் கட்சி. ஆட்சியமைத்த ஜனதா தளம் பெற்ற வாக்குகள் 41.3%. ஆனால் 143 இடங்களை மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
1991ல் நரசிம்மராவ் அரசு சிறுபான்மை அரசு. 244 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. ஆனால் அது பெற்ற வாக்கு சதவீதமோ 35.66%
1996 தேர்தலில்கூட தேவகவுடா பிரதமரானபோது, ஜனதா தளம் பெற்ற வாக்கு சதவீதம் 29% (பாஜக 20.29%, காங்கிரஸ் 28.80%)
1999ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தபோது, பாஜக பெற்ற இடங்கள் 270. வாக்கு சதவீதம் 37.6%
2004ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, காங்கிரஸ் 218 இடங்களில்தான் வென்றது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 35.4%. அப்போது பாஜக 181 இடங்களில் வென்றது. வாக்கு சதவீதம் 33.3%
2009ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தபோது, காங்கிரஸ் வென்ற இடங்கள் 262. வாக்கு சதவீதம் 37.22%. அப்போது பாஜக வென்ற இடங்கள் 159. வாக்கு சதவீதம் 24.63%
1984க்குப் பிறகு, அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014ல், ஒரே கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருக்கிறது.பாஜகவிற்கு 17 கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் (வாக்கு சதவீதம் 31%.).
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே 67 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் (வாக்கு சதவீதம் 19.3%).
120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 81கோடி வாக்காளர்களை கொண்ட நாட்டில் இரு கட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு, வெறும் 6 கோடியே 47 லட்சம் வாக்குகள் மட்டுமே.
வேடிக்கை என்னவென்றால் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என 30கோடிக்கும் அதிகமானோர் , சுமார் 61 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். Adani-Enterpriseஅதாவது இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களின் விருப்பம் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். ஆனால் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறாத பாஜகதான் தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது.
இதையும்விட முக்கியம், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 66.38 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஆனால் தேர்தல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த வாக்கு சதவீதத்தில் (31%) பெரும்பான்மை பெற்ற முதல் அரசாக பாஜக அரசு அமைந்துள்ளது. (2004ல் காங்கிரஸிடம் தோற்றபோதுகூட அக்கட்சி, 33.3% வாக்குகளைப் பெற்றதை இத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்).
இதுவரை தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகள், 40 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றே ஆட்சி அமைத்திருக்கின்றன. அத்துடன் ஒப்பிடும்போது, மிக மிகக்குறைவான வாக்காளர்களின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி பாஜகதான். உண்மையில் இது வரலாற்றுச் சிறுமை அல்லவா?
மக்களவைத் தேர்தல் முடிவுகள், ஜனநாயகத்திற்கும் சிறுமை இழைத்திருக்கின்றன. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என ஏதும் இல்லாமல் அமைந்திருக்கிறது 16வது மக்களவை. வென்றது யாராக இருப்பினும் தோற்றிருப்பதோ ஜனநாயகம் என்பதுதான், உண்மையில் கவலையோடு பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.
சார்க் அரசுத் தலைவர்கள் அழைக்கப்பட்டது ஏன்?
மே 26ம் தேதி பதவியேற்பு விழாவிற்கு, தெற்காசிய நாடுகளின் (சார்க்) அரசுத் தலைவர்களை அழைத்ததன் நோக்கம், "உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்வதற்குத்தான். இது எப்படி நடந்தது , என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் உலகமே வியப்புடன் பேசிக்கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சரியான முடிவு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையே இது காட்டுகிறது". இதுவும் மோடியே அளித்த வாக்குமூலம்தான்.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டு அரசுத் தலைவர்களை அழைக்கும் வழக்கமில்லை. அதுவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவுகள் என 7 நாடுகளின் அரசுத் தலைவர்களை அழைப்பது என்பது புதுமையான நடவடிக்கைதான். இதில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை அதிபரின் வருகை புழுதியைக் கிளப்பியதையும் பார்த்தோம்.
தமிழகத்திற்கு வந்து ஈழத்தமிழர்களை சகோதரர்கள் என்று குறிப்பிட்ட மோடி, அந்த இனத்தையே கொன்றொழித்த ராஜபக்சேவை ஏன் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க வேண்டும்? 'எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதத்தை ஏவிவிடும் பாகிஸ்தான் பிரதமருக்கு விருந்தளித்து உபசரிப்பதா' என கொந்தளித்த மோடி, அதே பாகிஸ்தான் பிரதமரை அழைத்து ஏன் கௌரவிக்க வேண்டும்? தன்னுடைய வலிமையை அண்டை நாடுகளுக்கு பறைசாற்றவா? அல்லது அவர்களை அச்சுறுத்தி ஈழத்தமிழர் நலனை சாதிக்கவும், தமிழக மீனவர்களை காக்கவும், எல்லைக்கு அப்பாலிருந்து வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவுமா? இல்லை என்பதை, இலங்கை கடற்படையினரால் வரிசையாக அள்ளிச்செல்லப்படும் மீனவர்களின் நிலையிலிருந்தும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் துப்பாக்கிச்சூட்டிலிருந்தும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இதன் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்ள, புறத்தோற்றத்திலிருந்து சாராம்சத்தை பிரித்துப்பார்க்க வேண்டும்; அதன் மூலமே, மோடியின் உண்மை முகத்தையும் விளங்கிக் கொள்ள முடியும்.
பதவியேற்ற மறுநாளே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன், மோடி பேச்சு நடத்தினர் அல்லவா? வழக்கம்போல மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து தூண்டிவிடப்படுவதை தடுக்க வேண்டும் என பழைய பல்லவியே பாடப்பட்டது என்பதைத்தான் ஊடகங்கள் தெரியப்படுத்தின. ஆக, இந்த வழக்கமான பல்லவியைப் பாடுவதற்காக மோடி இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எதற்காகத்தான் பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சார்க் அரசுத் தலைவர்களை அழைத்தார் மோடி?
மோடி-நவாஸ் ஷெரீஃப் சந்திப்பு குறித்து, வெளியுறவு செயலர் சுஜாதா சிங் வெளியிட்ட விவரங்களில், மேற்குறிப்பிட்ட வழக்கமான பல்லவியை மட்டுமே ஊடகங்கள் தூக்கிப்பிடித்தனவே ஒழிய மற்ற விவரங்களை புறக்கணித்துவிட்டன. ஆனால் சார்க் தலைவர்களை மோடி ஏன் அழைத்தார் என்ற புதிருக்கான விடை அதில்தான் இருந்தது. ஒரு சில நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மட்டுமே அதையும் குறிப்பிட்டிருந்தன. '2012 செப்டம்பரில் இருநாட்டு வர்த்தக செயலர்கள் மேற்கொண்ட உடன்படிக்கையினை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும்' என நவாஸ் ஷெரீஃபிடம் மோடி வலியுறுத்தியதுதான், புதிருக்கான விடை. அப்படி என்ன உடன்படிக்கை?
மிகவும் விரும்பத்தக்க நாடு (Most Favoured Nation- MFN status) என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இந்தியா வழங்கிவிட்டது. இரு நாட்டு வர்த்தகம் செழிக்க இந்த அங்கீகாரம் மிகவும் முக்கியம். ஆனால் பாகிஸ்தானோ, இந்தியாவிற்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற அந்தஸ்தை வழங்க மறுக்கிறது. 2012-13ம் ஆண்டில், இந்தியாவிற்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் ஈட்டிய வருவாய் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 3 ஆயிரம் கோடி ரூபாய்). பாகிஸ்தான் அடம்பிடித்தாலோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தாலோ, இந்த வர்த்தகத்தை நிறுத்திவிட்டாலே போதும். பாகிஸ்தானுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம். ஆனால் அதைச் செய்யாமல், மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற அந்தஸ்தை வழங்குமாறு, மன்மோகன் சிங் முதல் மோடி வரை, பாகிஸ்தானிடம் காதலாகிக் கசிந்துருகுவது ஏன்?
காரணம், இந்தியா பல்வேறு பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டும் வருவாய், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய்). அதாவது பாகிஸ்தான் ஈட்டுவதைவிட மும்மடங்குக்கும் அதிகம். மிகவும் விரும்பத்தக்க நாடு என்னும் அந்தஸ்து கிடைத்துவிட்டாலோ, இந்த வருவாய் இன்னும் பல மடங்கு உயரும். அதுதான் தேர்தலின்போது மோடியை ஊதிப்பெருக்கிய பெருநிறுவனங்களின் விருப்பம். அதற்கு கைமாறாகத்தான் பதவியேற்ற அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோடி பேசுகிறார்.
மும்பை தாக்குதல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என நவாஸ் ஷெரீஃபிடம் மோடி எதிர்ப்புக் காட்டியதாக நமக்குப் புறத்தோற்றம் காட்டுகிறது. ஆனால் சாராம்சத்திலோ, மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை தருமாறு நவாஸ் ஷெரீஃபிடம் காதலாக உருகியிருக்கிறார் மோடி.
ராஜபக்சே போட்டுடைத்த ரகசியம்
சரி, ராஜபக்சேவை ஏன் மோடி அழைக்க வேண்டும்? அவருடன் என்ன பேசியிருப்பார்? அதை இலங்கைக்கு சென்ற மறுநாளே ராஜபக்சே போட்டுடைத்துவிட்டார்.
"மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சரை அழைத்து, சம்பூர் அனல்மின் நிலைய திட்டப் பணிகளை முடுக்கிவிடுமாறு உத்தரவிட்டதாக", ட்விட்டரில் ராஜபக்சே தெரிவித்தார். சம்பூர் மின்திட்டம் என்பது, மத்திய அரசு நிறுவனமான என்டிபிசி (தேசிய அனல்மின் கழகம்) இலங்கை அரசுடன் சேர்ந்து நிர்மாணிக்கும் 500மெகாவாட் நிலக்கரி மின்திட்டம். என்டிபிசி இந்தியாவில் மத்திய அரசு நிறுவனம் என்றாலும், இலங்கையைப் பொறுத்தவரை தனியார் நிறுவனம்தான். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின்னுற்பத்தி என்ற பெயரில் அடிக்கிற கொள்ளைக்கும், இதற்கும் வேறுபாடு கிடையாது. இதைவிட முக்கியம், சம்பூரில் 800 ஈழத் தமிழ்க்குடும்பங்களை விரட்டியத்த இடத்தில்தான் அனல்மின் நிலையம் அமைய உள்ளது. "கடந்த 2005ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே சம்பூரில், 500 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் இதுவரை இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டாத ராஜபக்சே, தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப்பின், திட்டத்தை உடனடியாக துவக்கும்படி உத்தரவிட்டுள்ளார்" என நாளிதழ்கள் எழுதியது தற்செயலானது அல்ல. திரிகோணமலையில் தங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்க, இந்த 800 குடும்பங்கள் மட்டுமல்ல, 30 ஆயிரம் ஈழத் தமிழ்க்குடும்பங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. அதில் மண்ணை அள்ளிப் போடுவதற்குத்தான் ராஜபக்சேவிற்கு சிவப்புக் கம்பளம்.adani-group modi
சார்க் நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (SAFTA- South Asian Free Trade Area agreement) செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய அளவிற்கு பலனை ஈட்டப்போவது இந்திய முதலாளிகள்தான். சாராம்சத்தில், அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வேலையை பதவியேற்பு விழாவிலேயே தொடங்கிவிட்டார் மோடி. மற்றபடி, ஈழத் தமிழர் நலன், தமிழக மீனவர் நலன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதெல்லாம் புறத்தோற்றங்களே!