நவீனம் முதல் சர்வாதிகாரம் வரை!

   King Abdullah of Saudi Arabiaசவூதி மன்னர் அப்துல்லாஹ் 2005 – 2015 வரை எண்ணை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். அவருடைய ஆட்சி காலம் பற்றிய ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை.
மன்னர் அப்துல்லாஹ்வின் கீழ் சவூதிஅரேபியாவின் அரசியல் நிலைபாடுகள் சில முன்னேற்றங்களையும் பலவிதமான விமர்சனங்களையும் கொண்டது.
சவூதியை நவீன கட்டமைப்புக்குள் கொண்டு வந்த முன்மாதிரி ஆட்சியாளர் என்ற நிலையிலிருந்து 'பயங்கரமான சர்வதிகாரி' என்ற நிலை வரை மன்னர் அப்துல்லாஹ் பற்றிய விமர்சனப் பார்வைகள் அவரது மரணத்தைத் தொடர்ந்து ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும் பரவலாக இடம் பெற்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன் அப்துல்லாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அறிவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்', அவரது 'நவீனத்துவ சிந்தனைக்கு' ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.
சமூகத்தளத்தில் பெண்கள் பங்களிப்பு செய்வது பற்றிய சவூதிஅரேபிய அரச வம்சம் மற்றும் மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு கடுமையானதாகும்.
இந்த நிலையில் சவூதிஅரேபியா சட்டத்தை உருவாக்கம் செய்யும் சபையான 'மஜ்லிஷூ ஷூரா' வில் 30 பெண்களை மன்னர் அப்துல்லாஹ் இடம்பெறச் செய்தார். மேலும், உள்ளுர் அளவிலான தேர்தல்களில் வாக்களிப்பதற்கு பெண்களுக்கு அனுமதியளித்தார். இன்னும், புதிதாக திறக்கப்பட்ட 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அறிவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்தில் ஆண்களும், பெண்களும் கற்பதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார். இப்படி பெண்கள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தை நோக்கிய ஒரு சில எட்டுக்களை மன்னர் அப்துல்லாஹ் எடுத்து வைத்தார். இதற்குக் காரணம் அரபுலகத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகளும் மற்றும் அரபு வசந்தமுமே மன்னர் அப்துல்லாஹ்வை சவூதியில் சில சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதை நோக்கி நகர்த்திச் சென்றன என்று சில அரசியல் ஆய்வாளர்கள் வாதிக்கின்றனர். எப்படியாயினும் இது அவரது நவீன சிந்தனைக்கு எடுத்துக் காட்டு.
நவீனத்துவவாதி என்று பெயரெடுத்த அவரது ஆட்சி காலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சவூதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அரசியல் எதிரிகளுக்கெதிரான அடக்குமுறைகள் , ஊடகங்களின் மீதான கெடுபிடிகள், அரசியல் எதிரிகளை அடக்கி மன்னராட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கான கருவியாக 'கடுமையான மார்க்க நிலைப்பாடுகளை' பயன்படுத்திக் கொள்வது போன்றவை 'மன்னர் அப்துல்லாஹ் பயங்கர சர்வதிகாரி' என்ற பார்வயை ஏற்படுத்தின.
மேலும் வெளிநாட்டுக் கொள்கையில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது இன்னும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. எகிப்தில் ஜனாதிபதி முர்ஸியின் அரசாங்கத்திற்கு எதிரான இராணுவப் புரட்சிக்கு தூபமிட்டது முதல் அதனை கச்சிதமாக சாதித்து முடிக்கும் வரையான அனைத்தும் மன்னர் அப்துல்லாஹ்வின் கண்காணிப்பிலேயே நடைபெற்றன. உண்மையில், எகிப்திய ஜனநாயகத்தினை வீழ்த்துவதில் மன்னர் அப்துல்லாஹ்வின் பங்கை நிலையான காட்சிகளாக முஸ்லீம்கள் தங்களது உள்ளங்களில் பதிவு செய்து விட்டார்கள்.
கடந்த வருடம் நடைபெற்ற காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனத்தையேனும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது மன்னர் அப்துல்லாஹ் மீதிருந்த முஸ்லீம் உலகின் கொஞ்ச மதிப்பையும் நீக்கிவிட்டது. என்றாலும், இஸ்லாத்தின் இரண்டு புனித மஸ்ஜிதுகளினதும் பாதுகாவலர் என்ற உயர்பட்டத்தினை சுமந்து கொண்டு இத்தகைய முஸ்லீம் சமூக விரோத வெளிநாட்டுக் கொள்கைகயை மன்னர் அப்துல்லாஹ் பின்பற்றியதை பலரது உள்ளங்கள் ஏற்கத் தயங்குகிறது.
மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் மீதான குற்றச்சாட்டுகளை முஸ்லீம் சமூகம் மறக்க வேண்டுமானால் சவூதி அரேபிய அரச குடும்பத்திற்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் காத்திருக்கிறது. தனது நாட்டிலும், மத்திய கிழக்கிலும் 'நல்லாட்சியை' ஏற்படுத்துவதில் அடுத்த மன்னராக பொறுப்பேற்றுள்ள ஸல்மானுக்கு ஒத்துழைப்பதாகும். மேலும், நடுநிலை இஸ்லாமிய இயக்கங்கள் , நிறுவனங்கள் ஏற்று புத்திஜீவிகள் , சிந்தனையாளர்களை அங்கீகரிப்பதும், ஷீயா - ஸூன்னி கொள்கை மோதல்களுக்கு அப்பால் நின்று மத்திய கிழக்கை புதிய திசைவழியில் செலுத்தும் வகையில் வியூகங்களை வகுப்பதற்கு துணை நிற்க வேண்டும். முஸ்லீம் உலகின் பொருளாதார வளத்தினை ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்குதவதற்கு கடனாகக் கொடுக்காமல் , உம்மத்தின் அரசியல் , பொருளாதார , சிந்தனா எழுச்சிக்கு முதலீடு செய்ய வேண்டும். இவற்றை மன்னர் ஸல்மான் உத்தரவாதப்படுத்தினால், சிலவேளை அரேபிய மன்னர்களை முஸ்லீம் சமூகம் மன்னித்துவிடலாம். சவூதி அரேபிய நாட்டின் மன்னர் 90 வயதான அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் உடல் நலக் குறைவு காரணமாக 23/01/2015 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 1 மணி்க்கு மரணம் அடைந்தார்.