விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை பற்றி பேசுவதற்கு இதுவே சரியான தருணம்!

Lok Sabha
"இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; அமெரிக்கா உலகின் பழமையான ஜனநாயக நாடு" என்று சொல்லப்படுவது உண்டு;
இது உண்மை அல்ல.
அமெரிக்காவில் அனைவருக்கும்

வாக்குரிமை என்பது 1965ல்தான் நடைமுறைக்கு வந்தது. அதுவரை கறுப்பினத்தவர் தேர்தல் முறையிலிருந்து பல்வேறு வழிகளில் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் 1952லேயே அனைவருக்கும் வாக்குரிமையை அறிமுகப்படுத்திய இந்தியாதான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, மிகப்பழமையான ஜனநாயகமும்கூட.
இப்படி நாம் பெருமைப்பட்டுக் கொள்வது பொருத்தமானதுதானா?
உண்மையில், பழமை, பெருமை என்பதைத் தாண்டி, இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தையும், அமெரிக்காவின் தேர்தல் ஜனநாயகத்தையும், அதற்காக செலவிடப்படும் தொகையைக் கொண்டு ஒப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.
அமெரிக்காவில் 2012ல் அதிபர் தேர்தலுக்காக 7 பில்லியன் டாலர்கள் (தோராயமாக 42 ஆயிரம் கோடி ரூபாய்) செலவிடப்பட்டது. இந்தியாவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இதே அளவு பெருந்தொகை வாரியிறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் 7 ஆயிரம் கோடி ரூபாயும் வேட்பாளர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் செலவிட்டிருப்பதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது. 300 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவரங்கள் நமக்கு சொல்லும் உண்மை என்ன?
பெருவீத ஊழல் - முறைகேடுகளுடன் தேர்தல் நடைபெறுகிறது; ஆள் பலமும், பண பலமுமே அதில் கோலோச்சுகின்றன.
இதை ஜனநாயகம் (Democracy) என்று சொல்வதைவிட பண நாயகம் (Moneyocracy) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
வழக்கமாக, ஜனநாயகம் என்ற போர்வையில் அதிகாரவர்க்க நாயகம் கோலோச்சுகிறது என்றால், தேர்தலின்போது பணநாயகமே கோலோச்சுகிறது.
ஆக ஜனநாயம் பணநாயகமாகவும், அதிகாரவர்க்க நாயகமாகவும் திரிந்து கிடக்கிறது.
அது மட்டுமா?
ஆள் பலம் - பண பலம் என்பது அரசியல் கிரிமினல்மயமானதைக் குறிக்கிறது என்றால், இப்போது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் கார்ப்பரேட்மயமாகும் அரசியல்.
சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு என்ற பிரச்சினையோடு, தற்போது தேர்தலின் வெற்றி - தோல்வியை தீர்மானிப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை ஓங்குவது, அதற்காக ஊடகங்கள் பாரபட்சமாக செயல்படுவது என்ற பிரச்சினையும் சேர்ந்து கொண்டுள்ளது.
இதை எப்படி புரிந்து கொள்வது?
தேர்தலில் செலவழிக்கப்படும் பணம் என்பது வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது, பணம் அதிகமாகச் செலவழித்தால் வெற்றி; இல்லையெனில் தோல்வி என்பதில்போய் முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மையான வேட்பாளர்கள் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை ஏன் செலவழிக்கிறார்கள் என்பதற்கான விடை இதில்தான் ஒளிந்துள்ளது.
வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காகவும், அதற்காக சட்டத்தை வளைப்பதற்காகவும் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுகிறது.
ஆக, பெரும் பணம், ஆள் பலம், கிரிமினல்களின் கூட்டு, சாதிய அடிப்படை இத்தனையும் சேரும்போதுதான் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.
அறநெறிகள், தனிப்பட்ட நேர்மை, அறிவு, பொதுநலம், சமூகத்தைப் பற்றிய புரிதல், மனிதநேயம் என்ற முழக்கங்களின் கீழ்தான் இத்தனை முறைகேடுகளும் நிகழ்த்தப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்கள் ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல என்பது கண்கூடு; அதேசமயம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட முடியாத அளவிற்கு நிலைமை சீரழிந்துள்ளது என்பதும் கண்கூடு.
ஜனநாயகத்தை தோற்கடிக்கும் தேர்தல்கள்!
ஜனநாயகம் என்பது ஒருநாள் கூத்து அல்ல; தேர்தலோடு தொடங்கி தேர்தலோடு முடிந்துவிடுவதும் அல்ல. அது ஒரு நீண்ட நெடிய நிகழ்முறை. ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இதைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை.
எந்த ஒரு முறையிலும் முரண்படும் இரண்டுகூறுகள் முட்டிமோதுகின்றன என சமூகஅறிவியல் நமக்குச் சொல்கிறது. ஜனநாயக முறையில் அப்படி முட்டிமோதும் இரண்டு முரண்பட்ட கூறுகள் எவை? காங்கிரஸ் x பாஜக - வா? அல்லது திமுக x அதிமுக - வா? இப்படிப்பட்ட புரிதலோடுதான் மக்கள் வாக்களித்திருப்பதாக, வாக்களித்து வருவதாக முடிவுகள் காட்டுகின்றன.
உண்மையில், ஜனநாயகத்தில் முரண்படும் இரண்டு சக்திகள், மக்களும் அரசியல் கட்சிகளுமே! (இவை இரண்டும் முரண்பட்ட சக்திகள் என்றாலும், ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவையே) காங்கிரஸ் x பாஜக அல்லது திமுக x அதிமுக என்பது இந்த உண்மையை மூடிமறைக்கும் தோற்றம் மட்டுமே.
மக்கள் x அரசியல் கட்சிகள் என்ற முரண்பாட்டில், இவை இரண்டும் ஒன்றையொன்று தீர்மானிக்க முயல்கின்றன; மேலோங்கி நிற்க முயல்கின்றன.
அரசியல் கட்சிகள் மேலோங்கி நிற்பதற்காகவும் தீர்மானிப்பதற்காகவும் தங்களுக்கு இடையேயான முரண்பாடே பிரதானமானது என்று காட்ட முயல்கின்றன. அதை நம்பி ஏமாறும்போது பலியாவது மக்கள் தரப்புதான். மத்தியில் பாஜக என்ற கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன், எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைத்திருப்பதன் மூலம் பலியாகியிருப்பதும் மக்கள் தரப்புதான்.
ஜனநாயகம் தோற்றிருக்கிறது என்றால், வென்றிருப்பது எது? பணநாயகம் என்பதைத்தான் நடப்பு மக்களவை பற்றி வெளிவந்துள்ள விவரங்கள் காட்டுகின்றன. 543 உறுப்பினர்களில் 82 விழுக்காட்டினர் (449 எம்.பி.க்கள்) கோடீஸ்வரர்கள். அந்த வகையில் இதுவரை அமைந்த மக்களவையில் பணக்கார மக்களவை இதுதான்.
1952ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வாக்குப் பதிவு 45.7 விழுக்காடு. கடந்த மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 66.38 விழுக்காடு பேர் வாக்களித்துள்ளனர். தேர்தலில் பங்கேற்று வாக்களிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதற்கேற்ப, கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல, குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. 16வது மக்களவை உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் குற்றப்பின்னணி கொண்டவர். மொத்தத்தில் 34 விழுக்காடு உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இதுவரை அமைந்த மக்களவைகளில், குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள் அதிகம் இடம்பெறுவதும் இந்த முறைதான் (2009ல் 30%, 2004ல் 24%). பாஜக எம்.பிக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள், ஐந்தில் ஒரு பங்கு பேர் கடும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக பணபலமும், ஆள் பலமும் இந்த தேர்தலில் ஓங்கியிருக்கின்றன என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இது ஒருபுறமிருக்க, இதுவரை அமைந்த மக்களவையிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் இடம்பெறுவது இந்த முறைதான். இது முன்னேற்றகரமானதுதானா என்ற கேள்வியுடன், தேர்வு செய்யப்பட்டிருப்பவர்களைப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், மேனகா காந்தி போன்றோரை விட்டுவிட்டு, முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவ், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே போன்ற பெரும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்களையும் விட்டுவிட்டு, ஹேமமாலினி, மூன்மூன் சென் போன்ற நடிகைகளையும் கணக்கில் எடுக்காமல், வனரோஜா, வசந்தி. சத்யபாமா ஆகிய அதிமுக எம்.பி.க்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கும்போது, பெண்கள் பிரதிநிதித்துவம் என்பதற்கு எந்த பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. 61 பேர் இருந்தும் பெண்ணினத்திற்கு குரல்கொடுக்கும் பிரதிநிதித்துவமாக அதைக் கருதமுடியுமா என்பதும் ஐயத்திற்கிடமானது.criminal-neta
இடதுசாரிகளின் இடமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுருங்கியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மதவாதத்தன்மையற்ற, அரசியல் ஆதாயம் கருதியேனும் சமூகநீதி பற்றிப் பேசக்கூடிய, மாநில அளவில் வலுவான கட்சிகளின் இடமும் சுருங்கியிருக்கிறது. பகுஜன்சமாஜ், திமுக ஆகிய கட்சிகளுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவமே இல்லை. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன.
சரி, சிறுபான்மையினர், குறிப்பாக மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன?
கோடீஸ்வரர்கள் நிறைந்திருக்கிறார்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்கூட கோலோச்சுகிறார்கள், பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆனால், முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்திருக்கிறது. 23 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே இந்த முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது 4 விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே.
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், ஆந்திரா (1), அசாம் (2), பீகார் (4), காஷ்மீர் (3), கேரளம் (3), தமிழ்நாடு (1) லட்சத்தீவு (1), மேற்கு வங்கம் (8) ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டுமே முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்வாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் 20 விழுக்காடு முஸ்லிம்கள். ஆனால் ஒரு முஸ்லிம் எம்.பி. கூடத் தேர்வாகவில்லை. இதற்கடுத்து பெரிய மாநிலங்களான, முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கக்கூடிய மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஒரு முஸ்லிம் எம்.பி. கூடத் தேர்வாகவில்லை. பாஜகவின் 282 எம்.பி.க்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 336 உறுப்பினர்களில் ஒரேயொரு முஸ்லிம் எம்.பி. (பீகாரில் லோக்ஜனசக்தி சார்பில் தேர்வான சௌத்ரி மெஹபூப் அலி கெய்சர்) மட்டுமே உள்ளார்.
மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். மாநில சட்டப்பேரவைகளிலும் இதேநிலைதான் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை.
மகாராஷ்டிரம், ஹரியானாவில் 2014ம் ஆண்டு அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, 2014 நவம்பர் 5ம் தேதி அனைத்து மாநில சட்டப்பேரவைகள் தொடர்பாக ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இதன்படி, ஹரியானாவில் 5 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள், ஒரு முஸ்லிம் அமைச்சர் என இருந்ததுபோய் 3 எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களாக முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பாஜக நிறுத்திய 2 முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரத்தில் 3 முஸ்லிம் அமைச்சர்கள், 11 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் என்றிருந்த நிலை மாறி, 9 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களாக முஸ்லிம்கள் இல்லை எனும் நிலை உருவாகியிருக்கிறது.
பாஜக ஆட்சியிலோ ஆளுங் கூட்டணியிலோ உள்ள பிற 7 மாநிலங்களிலும் (காஷ்மீர் தவிர்த்து) இதே நிலைதான். ஹரியானா, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், கோவா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களிலும், இந்திய மொத்த மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் வசிக்கின்றனர். 1359 எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அதில் மொத்தமே 22 பேர்தான் முஸ்லிம்கள். இந்த மாநிலங்களில் 8 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சட்டப்பேரவை பிரதிநித்துவமோ 2 சதவீதத்திற்கும் குறைவு.
சத்தீஸ்கர், கோவாவில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களே இல்லை. பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்தில் தலா ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ.வே உள்ளனர். அமைச்சர்கள் நிலையில் பார்த்தால், பாஜக ஆளும் 9 மாநிலங்களில் கேபினட் அமைச்சர்களும், இணையமைச்சர்களும் 151 பேர் உள்ளனர். அதில் ஒரேயொருவர்தான் (யூனுஸ்கான், ராஜஸ்தான்) முஸ்லிம்.
பாஜக ஆட்சியில் இல்லாத, 13 பெரிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அமைச்சர்கள் நிலையில் 16 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஜம்மு-காஷ்மீர், கேரளம், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகியவை இதில் முக்கியமானவை.
பாஜக ஆளாத மாநிலங்களில் 300 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது அந்த மாநிலங்களின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் 13 சதசவீதம். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 17 சதவீதம் என்பதோடு ஒப்பிட்டால் இந்த பிரதிநிதித்துவமும் குறைவுதான்.
தொகுதிகள் பிரிக்கும்போது, முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைந்துவிடாத அளவுக்கு பார்த்துக்கொள்வதும் அரசு எந்திரத்தின் சதியாக உள்ளது. மற்றொரு வகையில் கட்சிகளாலும், இயக்கங்களாலும் முஸ்லிம் வெறுப்பும் முன்னெடுக்கப்படுகிறது.
எங்கே கோளாறு?GUPTA R US-elections-and-India-WEBSITE
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 44.3 விழுக்காடு வாக்குகளை அதாவது 1 கோடியே 80 லட்சம் வாக்குகளை, பெற்ற அதிமுகவுக்கு 37 இடங்கள். 5.5% வாக்குளைப் பெற்ற பாஜகவும், 4.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பாமகவும் கூட ஆளுக்கு ஓரிடத்தைப் பெற்றுள்ளன. ஆனால், சுமார் ஒரு கோடி பேரின் வாக்குகளை (23.6%) பெற்ற திமுகவிற்கு ஒரு இடம்கூட இல்லை.
இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், சுமார் 55 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதில் 17 கோடி பேரின் வாக்குகளை (31%) பெற்ற பாஜகவிற்கு 282 இடங்கள். (பாஜகவிற்கு எதிராக 35 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்).
சுமார் 11 கோடி பேர் (19.3%) வாக்களித்த காங்கிரசுக்கோ 44 இடங்கள்தான், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அக்கட்சியால் பெற முடியவில்லை.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி 14 விழுக்காடு உள்ள முஸ்லிம்களோ 17 விழுக்காடு உள்ள தலித்துகளோ அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துத்தைப் பெறமுடியவில்லை.
ஆக, முதலில் வருபவருக்கே வெற்றி என, ஓட்டப் பந்தயம் போல வெற்றிபெற்றவரைத் தேர்வு செய்யும் தேர்தல் முறையிலேயே கோளாறு உள்ளது. ஜனநாயகத்தில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தை இந்த முறை மறுக்கிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத வேட்பாளரும், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத கட்சியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிட வழிவகுக்கிறது. இதற்குத் தீர்வாக, ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation system)கொண்டுவர வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ள கோரிக்கை.
(இதேபோல, வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையும் (Right to Reject), தேர்ந்தெடுத்த பிரதிநிதியை திரும்ப அழைக்கும் முறையும் (Right to Recall) இல்லாதது ஜனநாயகத்தை ஊனமாகவே வைத்திருக்கிறது).
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகள் அதற்கான உள்ளடி வேலைகள், கீழறுப்பு வேலைகள் வேக வேகமாக 'களை ' கட்டத் தொடங்கியுள்ளன. கூட்டணிக்குள் சிக்கி எப்போதும் அலைக்கழிக்கப்படும் சிறு கட்சிகள்,. மிக முக்கியமாக சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகள் உட்பட, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற புதிய முழக்கத்தை வைத்து ஆழம் பார்த்து வருகின்றன. அதையும்விட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பதே முதன்மையாக வலியுறுத்தப்பட வேண்டியதாகும். வேறு எப்போதையும்விட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றி பேச இதுவே சரியான தருணம். சிறுபான்மையினர், தலித்துகள் நலனுக்கானவை என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகளாவது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துமா?

- ப.ரகுமான்