பிரதமர் மோடி முன்னிலையில் தழுதழுத்த தலைமை நீதிபதி

201604250251333530 Supreme-Court-Chief-Justice-Tears SECVPF
கண்ணீரில் கரையும் உண்மைகள்!
"பிரதமர் முன்னிலையில் கண்ணீர் விட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்!" என்ற தலைப்பில், ஏப்ரல் 24ஆம் தேதி செய்தி இடம்பெறாத தொலைக்காட்சியோ, ஏப்ரல் 25ஆம் தேதி செய்தி இடம்பெறாத நாளிதழோ இருக்கமுடியாது.
"10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்று இருப்பதை 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்று அதிகரிக்க வேண்டுமென்று 1987-ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால் அது தொடர்பாக இப்போது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது 21 ஆயிரம் நீதிபதிகள் உள்ளனர். இதனை 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஆனால் இதற்கான நியமனங்களை மேற்கொள்ளாததால் நீதித்துறைக்கு பெருமளவில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நீதித்துறையின் சுமையை அதிகரிக்கக் கூடாது.
போதிய நீதிபதிகள் இல்லாததால் விசாரணைக் கைதிகளாக பலர் சிறையில் வாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 கோடி வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்படுகின்றன. இப்போதுள்ள நீதிபதிகள் முழுமுனைப்புடன் பணியாற்றுவதன் மூலம் இவற்றில் 2 கோடி வழக்குகளை மட்டுமே தீர்த்து வைக்க முடிகிறது. மீதமுள்ள வழக்குகள் தேங்குகின்றன. நீதிபதிகள் நியமன விஷயத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பரஸ்பரம் குறை கூறிக்கொள்கின்றன. அவை நடவடிக்கைகள் ஏதும் எடுப்பதில்லை.
இப்போது நமது நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக உள்ளது. அன்னிய முதலீட்டை நாம் பெருமளவில் வரவேற்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், நமது நீதித்துறையின் நிலை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. வழக்குகள் மலைபோலக் குவிந்து வருகின்றன. நீதித்துறை சிறப்பாக செயல்படுவதும் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளில் இருப்பதைவிட நமது நாட்டில் நீதிபதிகள் அதிகமாக உழைக்கிறார்கள். நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். நீதித்துறையின் மீது அதிக சுமையை ஏற்றாதீர்கள் என்றார் நீதிபதி டி.எஸ்.தாக்குர்.
இந்தப் பேச்சின்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர், கண்ணீர் மல்க காட்சியளித்தார். பிரதமர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்ணீர் சிந்தியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது." என்ற இந்த செய்தியை எல்லோரும் படித்திருக்கக்கூடும்.
இந்தப் பேச்சை தலைமை நீதிபதி, நா தழுதழுக்க, கண்களைத் துடைத்துக்கொண்டு பேசியிராவிட்டால், இவ்வளவு தூரம் கவனத்தை ஈர்த்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிகரமான வெளிப்பாடு என்பதைத் தாண்டி, இந்த செய்தியை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து பார்த்தால், நமக்கு கிடைக்கும் சித்திரமோ வேறு மாதிரியானது...
நீதித்துறை மீதான நம்பிக்கை குறைவதற்கு என்ன காரணம்?
தமது பேச்சில், நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது என்ற வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப, பெருகி வரும் வழக்குகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் நீதிபதிகள் நியமிக்கப்படாததால், அதாவது நீதித்துறையின் கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.
ஆனால் உண்மை என்ன? "குமாரசாமி கணக்கு" என்று ஒரு கேலி பேசப்படுகிறதே அதற்கும் கட்டமைப்பு வசதிகளுக்கும் என்ன தொடர்பு? பாஜக தலைவர் அமித்ஷாவை விடுவிக்க உதவியதன் மூலம், கேரள ஆளுநர் பதவி முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கிடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதே? அதற்கும் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதற்கும் என்ன தொடர்பு?
ஆக, நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது என்றால், அதற்கான காரணங்கள் வேறு. அந்த உண்மையை தனது கண்ணீரில் கரைக்க முயன்றிருக்கிறார் தலைமை நீதிபதி.
இரண்டாவதாக, நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், வலுப்படுத்தாமல் வைத்திருப்பதில் அரசு எந்திரத்திற்கு ஒரு தந்திரமும் உள்ளது.
காவல்துறையை எடுத்துக் கொண்டால், அளவற்ற பணிச்சுமையும், தாங்கமுடியாத மனநெருக்கடியும் கூட, ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், எளிய மக்களின் நியாயங்களை மிகச் சாதரணமாக காலில் போட்டு மிதிப்பதற்கும், கொட்டடி மரணங்கள் நிகழ்வதற்கும் ஒரு காரணம். காவல்துறையை ஒரு முழுமையான ஒடுக்குமுறை கருவியாக பராமரிப்பதற்கு இந்த நிலை அரசு எந்திரத்திற்கு அவசியமாகவே உள்ளது.
இதேபோன்ற நிலை நீதித்துறையிலும் பராமரிக்கப்படுகிறது என்பதே உண்மை. இதனால் ஏற்படும் பணிச்சுமை, நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டே, அரசு எந்திரம் காரியம் சாதிப்பதற்காக நீதித்துறையின் கையை முறுக்க முடிகிறது. வேறுவழியின்றி மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், "பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல்", கண்ணீரைச் சிந்தி தமது கருத்தை தலைமை நீதிபதி வெளியிட நேர்ந்தது நமக்கு அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுவது அதைத்தான். ஆனால் அந்த உண்மையையும் தனது கண்ணீரில் கரைக்க முயல்கிறார் தலைமை நீதிபதி.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டடியில் வாடிய முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் , 5 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் எத்தனையோ இளைஞர்கள் சிறைகளிலேயே வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். அதேசமயம், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் வசமாகச் சிக்கிய சாத்வி பிரக்யா சிங், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், சுவாமி அசீமானந்தா ஆகியோரை விட்டுவிட்டு, மீண்டும் லஷ்கர்-இ-தொய்பா என்று நீதித்துறை மூலமாகவே கதை கட்ட முயற்சி நடைபெறுகிறது, இதற்கெல்லாம் நீதித்துறை பணியிடங்கள் நிரப்பப்படாததுதான் காரணமா?
2004ஆம் ஆண்டில், குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான் என்ற இளம்பெண், லஷ்கர் இயக்க தீவிரவாதி என்று, ஹெட்லி என்கிற இரட்டை ஏஜெண்ட் பேச்சுவாக்கில் காதில் விழுந்ததாகசொன்ன தகவலை வைத்து, டி.ஜி.வன்சாரா என்ற கொலைகாரன், குஜராத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறானே அதற்கும் நீதிபதிகள் பற்றாக்குறைதான் காரணமா?
இதற்கு முன்னர் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதாவின் கருத்தைக் கொண்டு இதை உரசிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
தோல்வியடைந்த குற்றவியல் நீதிமுறை!
2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15ஆம் நாள், சுதந்திர தினத்தன்று, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அன்றைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பேசியது, இன்றைய தலைமை நீதிபதியின் கண்ணீர் அளவுக்கு ஊடகங்களில் கவனம் பெறவில்லை.
குற்றவியல் நீதிவழங்கும் முறை தோல்வியடைந்துவிட்டது. குற்றவியல் நீதி வழங்கும் முறை என்பதே ஒரு தண்டனையாக மாறிவிட்டது (The criminal justice delivery system had failed so much so that the process itself had become a punishment) என்று குறிப்பிட்டார் அவர்.
"குற்றவியல் நீதி வழங்கும் முறையானது, குறிப்பாக சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு வேதனை, துயரம், மனித உரிமைச் சுரண்டல், சுதந்திரம் பறிப்பை தவிர வேறு எதையும் வழங்கவில்லை. (It offers nothing more than pain, suffering, human rights exploitation and deprivation of liberty, especially to the most vulnerable sections of the society)
ஒரு வருந்தத்தக்க, ஆர்வமூட்டும் முரண்மெய் என்னவென்றால், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் இருப்பவர்களைவிட, விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பெரும்பாலும் அனைத்து மத்தியச் சிறைகளிலும், 50 சதவீதத்திற்கு மேல் இருப்பவர்கள் விசாரணைக் கைதிகளே. மாவட்டச் சிறைகளில் 72 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். ஆக இந்த நிகழ்முறையே தண்டனையாக மாறிவிட்டது. நீதித்துறையின் தலைவராக எனக்கு இதைவிட அதிக வேதனை தரத்தக்கது எதுவும் இல்லை.
நாடு முழுவதும், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 2 லட்சம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பவை 40,000 என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். உச்சநீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், ஆண்டு முடிவிற்குள் 65,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது நாடு முழுவதும் உள்ள நிலைமையை எடுத்துக் கொண்டால் இதெல்லாம் சுண்டக்காய்க்கு சமம்தான்.
உள்ளூர் விசாரணை அதிகாரி உள்ளிட்டு, சட்ட அமலாக்க முகமைகளின் (law enforcement agencies) ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக, குற்றத்தை உறுதிப்படுத்தும் தீர்ப்புகளின் எண்ணிக்கையும் அதலபாதாளத்திற்கு சரிந்துவிட்டது. 1972ஆம் ஆண்டில் 62.5% ஆக இருந்த இந்த விகிதம், 2012ஆம் ஆண்டில் 32% ஆக குறைந்துவிட்டது.
வழிப்பறிக் கொள்ளை சிறுதிருட்டு ஆகவும், பாலியல் வல்லுறவு பாலியல் சீண்டலாகவும், ஆள் கடத்தல் இழுத்துக்கொண்டு ஓடியதாகவும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதேபோல பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவாகவும், சிறுதிருட்டு, வழிப்பறிக் கொள்ளையாகவும், இழுத்துக்கொண்டு ஓடுதல் ஆள் கடத்தலாகவும் பதிவு செய்யப்படுகிறது. இதன் விளைவாக, குற்றத்தை உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பதற்கான சட்டபூர்வ சான்றுகள் ஏதும் இல்லாமல் போய்விடுகிறது. (“A robbery is implicated as theft, a rape is implicated as molestation, a kidnapping is registered as elopement. Conversely, molestation is registered as rape, a theft is registered as robbery and elopement becomes kidnapping. The result is there is no legal evidence to sustain the conviction”)
குற்றவியல் நீதி வழங்கும் முறையில் உள்ள தாமதத்தை வழக்கறிஞர்கள் வாய்ப்பாக பார்க்கிறார்களே ஒழிய, களங்கமாகப் பார்ப்பதில்லை (lawyers who treat the delay in criminal justice delivery as an opportunity instead of a blemish)" என்று பேசினார் ஆர்.எம்.லோதா.
இதை அன்றைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கண்கலங்கி சொல்லவில்லை.
ஆக வேரிலிருந்து விழுது வரை புரையோடிப் போயிருக்கும் இந்திய குற்றவியல் நீதிவழங்கும் முறையை, நீதிபதி பணியிடங்களை உயர்த்துவதன் மூலம் மட்டுமே சரி செய்துவிட முடியும் என்று உங்கள் கண்ணீர் கூறுமானால் அது எவ்வளவு ஆபத்தான கண்ணீர் தலைமை நீதிபதி அவர்களே?
இதையும்விட, நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலீஜியம் முறைக்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவரப்பட்டபோது, அதுதொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகளின் யோக்கியதைகள் பற்றி மத்திய அரசு வாதங்களை எடுத்து வைத்ததே? அதை நினைத்துத்தானே கண்ணீர் விட்டீர்கள் தலைமை நீதிபதி அவர்களே?