ஆடு, மாடு, எலி, இந்தியன்... - சோதனைச்சாலை விலங்குகள்...!

மனிதர்கள் தலை துவட்டும் ஷாம்பு வகைகள் கண்ணில் பட்டால் எரிச்சல் தருமா என்று நாயின் கண்களில் விட்டு முதலில் சோதிப்பார்கள். அதன் கண் எரிந்தாலோ, சிவந்தாலோ, கண்ணில் நீர் வழிந்தாலோ மீண்டும் புதிய கலவை செய்யத் தொடங்குவார்கள்.

இப்படி பல்வேறு வேதிப் பொருட்கள் விற்பனைக்கு வரும் முன்பு சோதிப்பதற்கு ஆடு, மாடு, பன்றிகளை சோதனை இடுவது போலவே இந்தியர்களையும் சோதனைப் பன்றியாக நம் அரசு ரொம்ப காலத்துக்கு முன்பே மாற்றி விட்டது.

2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2282 சோதனைகள் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டு இந்தச் சோதனையின் "விளைவுகளாக" 1514 இந்தியர்கள் சோதனைப் பன்றிகளைப் போல் சாகடிக்கப்பட்டுள்ளனர்!

1990 தொடங்கியே சில மருந்துக் கம்பெனிகள் இந்தியா முழுவதும் உள்ள மெத்தப் படித்த மேதாவி டாக்டர்களுக்கு கணிசமாக லஞ்சம், அன்பளிப்பு, வெளி நாட்டுச் சுற்றுலா வசதி, விஸ்கி பாட்டில் எனப் பலவற்றை தந்து அவர்களிடம் நோயாளிகளாக வருவோர் மீது புதிய மருந்துகளை தந்து சோதித்து வந்துள்ளனர்.

ஸீஷீt யீஷீக்ஷீ sணீறீமீ என்ற முத்திரையுள்ள ஏராளமான மருந்துகளை மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள் கனத்த தோல் பையில் அடக்கி வைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க வரிசையில் உட்கார்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

அவர்கள் கொட்டும் மருந்தைத்தான் டாக்டர்கள் தன்னிடம் வரும் நோயாளிக்கு "இலவசமாக". தந்து விட்டு, இத சாப்பிடுங்க "ஒரு வாரம் கழிச்சு வந்து பாருங்க" என அன்புடன் அனுப்பி வைப்பார். நோயாளியின் பெயர், அவருக்குத் தந்த சாம்பிள் மருந்தின் பெயர், அவரின் நோயின் தன்மை ஆகியவற்றைக் குறித்துக் கொள்வார். இந்தக் குறிப்பும் ஒரு வாரம் கழித்து அந்த நோயாளி கூறும் உடல் நல அறிகுறிகளும் குறிப்புகளாக மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட மருந்துக் கம்பெனிக்கு பரிமாறப்படும். இதற்கு ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் டாக்டருக்கு கிடைக்கும். இப்படித்தான் 1990 வரை மருந்துக் கம்பெனிகள் தொழில் செய்தன.

1990 க்குப் பின்னர் முற்றிலும் புதிய புதிய ஃபார்முலாக்களை இதைப் போலவே சுற்றுக்கு விட்டு நோயாளிகள் மீது சோதிக்கப் பட்டது. நம்பகமான கைராசி மருத்துவர் என நம்பி குடும்பம் குடும்பமாக வரும் நோயாளி வாடிக்கையாளிடம் உரிய ஃபீசை பிடுங்குவதுடன் அவர்கள் அறியாமலேயே சோதனை மருந்தைத் தந்து அதன் முடிவுகளை மருந்துக் கம்பெனிகளுக்கு விற்று வந்தனர். இது அத்தனையும் உள் நாட்டு மருந்துக் கம்பெனிகளின் நலனுக்காக நடந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகள் பலவற்றுக்கு அவர்களின் புத்தம் புதிய மருந்தை இந்தியர்கள் மீது பிரயோகித்து சோதனை செய்யும் அனுமதியை இந்திய அரசு வழங்கியது. 'ட்ரக்கஸ்ட் ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா' வின் கண்காணிப்பில் அனுமதி பெற்ற வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்களின் வீரிய மிக்க புதிய கண்டுபிடிப்புகளை இந்தியாவில் சோதிக்க தாராளமயமாக்கல் மூலம் இன்னும் வசதியைப் பெற்றனர்.

2005ஆம் ஆண்டில் அரசின் அனுமதி கிடைத்ததும் மளமளவென பல ஊர்களிலும் தொழில் துறைக்கு நிகராக மருத்துவமனைகள் தனியாரால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டன. பல இடங்களில் இன்றும் கூட 'மெடிக்கல் ரிசர்ச் சென்டர்' என பெயர் பொறிக்கப் பட்ட ஆஸ்பிட்டல்கள் கட்டப்படுவதன் மர்மம் இதுதான்.

அயல் நாட்டு கம்பெனிகள் அனுமதி கேட்டால் தாராளமயம் காரணமாக ஒரிரு வாரங்களில் அனுமதி கிடைத்து விடும் ! இது போல் அனுமதி பெற்ற உள் நாட்டு வெளி நாட்டு மருந்து வகைகளில் 2282 வகைகள் 2005 முதல் 2010 வரை நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் செலுத்தப்பட்டு அதன் மூலம் மட்டும் 1514 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கான இழப்பீடுகள் எவ்வாறு தரப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது.

பொதுவாக ஏழைகள், வறுமை நிலையில் உள்ளவர்கள் நிரம்பிய இந்திய சிறு நகரங்களில்தான் இந்த சோதனைக்கான 'மனிதப் பண்ணை' தேர்வு செய்யப்படும். நோய் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டு சில தாள்களில் உங்களுக்கு இலவசமாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி கையெழுத்து, கை நாட்டுப் போட வலியுறுத்துவார்கள். இலவச சிகிச்சை, இலவச கவனிப்பு, இலவசமாக மருந்து என்ற மகிழ்ச்சியில் ஒத்துக் கொள்கிறவர்களுக்கு தாங்கள் யாருடைய கம்பெனிக்கு பலியாகப்போகிறோம் என்பதே தெரியாது !

இந்த மக்களின் ஏழ்மையை, அறியாமையை மெத்தப் படித்த இரக்கமற்ற மருத்துவர்கள் தங்கள் செல்வத்தைப் பெருக்க பயன் படுத்திக் கொள்ளும் போக்கும், புரோக்கர்களின் கணிசமான கமிஷனும் வெட்கக்கேடானது . வேதனைப்பட வேண்டிய ஒன்று. இன்னும் இந்த மருந்து உட்கொண்டவர்களின் உடல் நிலை மாற்றம், அதன் விளைவு தொடர்பான டேட்டாக்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு பரிமாறப்படும் இந்த தகவல்தான் மிக மிக மதிப்பு வாய்ந்தது. இதன் அடிப்படையில்தான் அந்த மருந்தின் தரம் அந்த நிறுவனத்தால் சரி செய்யப்பட்டு பின்பு விற்பனைக்கு விடப்படும்.

ஐரோப்பாவில் இது போன்ற சோதனை நடத்த அங்குள்ள சுகாதார அமைச்சகங்கள் பல எச்சரிக்கைகளுடன் அனுமதித்தாலும் இதில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்களால் அவ்வளவு எளிதாக சோதனைக்கு ஒரு நபரை தேர்வு செய்திட முடியாது. அங்குள்ள சட்ட திட்டங்கள் தெளிவானவை. அத்துடன் ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டு இழப்பு நடந்தால் இழப்பீடுகள் அதிகம். ஆறு மாதங்கள் முயற்சித்தாலும் ஐந்து மனிதர்கள் கிடைப்பது அரிது.

ஆனால் இந்தியாவில் அரசுகள் நடத்தும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகை உண்டு. இதில் இலவசமாக சிகிச்சை, மருந்து தருகிறோம் என்றால் விளைவு தெரியாமல் சம்மதிப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. இதில் பல அரசு மருத்துவ மனைகளுக்கு சில குறிப்பிட்ட மருந்துகளை லட்சக் கணக்கான நோயாளிகளிடம் சோதிக்ககும் திட்டத்தை இலக்காகவே வைத்து செயல்பட்டுள்ளனர்.

ஏன் இவ்வாறு அரசு இதற்கு அனுமதிக்கிறது ?மக்கள் நலனுக்காக செலவிடும் நிதியின் அளவை குறைக்கவும் உடல் நல சிகிச்சை என்பதை இது போன்ற சோதனை அனுமதிகள் வழியாக அரசு தன் சுமையை குறைத்திடவும் மருந்து நிறுவனங்களையே அந்த செலவை ஏற்க வைக்கவும் மொத்தத்தில் அரசு மக்கள் நலன் என்ற பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிடவுமே இந்த தாராளமய திட்டத்தின் கீழ் பெரிய பெரிய கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்காக இது போன்ற சோதனைகளை அனுமதிக்கிறது.

1300 வகை மருந்துகள் இந்த வகையில் உள் நாட்டு கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகள், வெளிநாட்டு கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகள் சோதனை நடத்தி 1 பில்லியன் டாலரை மட்டுமே இதற்காக செலவழித்துள்ளன.

ஆக சொற்ப தொகைக்கு ஆயிரக்கணக்கான மருந்துகளை சோதிக்க வேறெங்கும் மனிதக் கூட்டம் கிடைக்காது என்பதால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது.

ஒரு சம்பவம். இந்தூரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் நலம் பாதித்த வினோத் என்ற படித்த இளைஞர் வருகிறார். அவர் எந்த ஆவணத்தையும் படித்து புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அரை மயக்கத்தில் அவரிடம் கையெழுத்து பெறப்படுகிறது. சில வாரங்களில் அவர் ஒரு மன நோயாளியாகவே மாறி விடுகிறார். அவருக்குத் தரப்பட்ட மருந்து சிகிச்சை குறித்து ஏனைய குடும்பத்தினர் அரசு மருத்துவரையும், அரசு மருத்துவமனை நிர்வாகத்தையும் கேட்கின்றனர். எல்லாம் அவர் சம்மதத்துடன் தான் நடந்துள்ளது என அலட்சியமாக பதில் கூறப்படுகிறது. வினோத் குடும்பம் இப்போது நடுத்தெருவில் !

இந்திய மக்களில் பெரும்பான்மையினரிடம் உள்ள வறுமை, அறியாமை, உடல் நலத்தின் மீதான அக்கறை இன்மை இவற்றின் காரணமாகத்தான் இந்தக் குற்றம் நடந்து வருகிறது. அதை சரி படுத்த வேண்டிய அரசு, அரசியல் சாசனப்படி மக்கள் நலனைப் பேண வேண்டிய அரசு உலக மயம், தாராளமயம் ஆகியவற்றால் மக்கள் நலன் மீதான தன் அக்கறையை தளர்த்திக் கொண்டுள்ளது.

இந்த மருந்து சோதனை பல ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்துள்ளதும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மருத்துவர்கள், மருத்துவமனை நடத்தும் கார்ப்பரேட்கள் கொழுத்துள்ளனர். மருந்துக் கம்பெனிகள் அபார வளர்ச்சி கண்டுள்ளன.

2000 மாவது ஆண்டிலேயே இப்படி ஒரு திட்டம் நம் நாட்டில் தொடங்கப்போவது பற்றிய தகவல் வழிகாட்டு நெறி என்ற பெயரில் இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பு வெளியிட்டது. அதில் மனித உயிரின் தர்ம நியாயங்கள் எல்லாம் பேசப்பட்டன. இதன் அடிப்படையில் பல்வேறு கண்காணிப்புக் குழுக்களும் போடப்பட்டன. எனினும் இதை ஒருவரும் சட்டை செய்யவில்லை என்பதுடன் வீரிய மிக்க மருந்துகளின் ஆய்வுக்கு இந்தியர்களை பயன்படுத்துவது தொடர்கிறது. இதில் லெபாடினிப், ரிஸ்பெரிடோன், க்யூடியாபைன் போன்ற புற்று நோய், மன நிலைக் குறைபாடுகளுக்கான மருந்துகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன.

மனச்சிதைவுக்கு ஏற்கனவே ஆளானவர்கள் மீது இந்த க்யூடியாபைன் மருந்து சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஒருவர் 173 நாட்கள் சோதனை காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மருந்து அவர் உட்கொள்ளும் முன்பு இருந்த நிலையில் இருந்ததை விட அவர் மன நிலை தற்கொலைக்கு தூண்டி அவரைத் தள்ளியது. இதற்கு நட்ட ஈட்டை கூட தர இயலாது என்று கூறிவிட்டனர். இது ஒரு விவாதமாகவே மாறியது.

ஆக இப்படிப்பட்ட தில்லு முல்லுகள், முறைகேடாக சட்டவிதிகளின் போர்வையில் சராசரி இந்தியனின் உயிருக்கு உலை வைக்கும் சோதனையில் காசுக்காக விலை போன 11 மருத்துவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். இவர்கள் குடும்பம் குடும்பமாக மருந்து கம்பெனிகளின் விருந்தாளிகளாக ஐரோப்பிய சுற்றுலா பயணம் சென்று குஷியாக திரும்பியுள்ளதை பிரதமரின் அலுவலகத்திற்கு சான்றுகளை அனுப்பி உள்ளனர். இன்னும் என்னென்ன முறைகேடுகள் வெளி வரப்போகின்றதோ தெரியவில்லை.

- க. குணசேகரன்