சுதந்திரப் போராட்ட வீரர் கம்பம் பீர் முகம்மது பாவலர்

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. தங்களது மக்கள் தொகை விகிதாசாரத்தை விடவும், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்களும் முன்னணியில் இருந்தனர். காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், கள்ளுக்கடை மறியல், உப்புச்சத்தியாக்கிரகம், அன்னியத் துணிகள் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்து இயக்கங்களிலும் முஸ்லிம்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான பீர் முகம்மது பாவலர் அவர்களைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - இளமைப்பருவம்
பீர் முகம்மது பாவலர் மதுரை மாவட்டம் கம்பத்தில் (இன்றையத் தேனி மாவட்டம்) 25.12.1898-ல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் புலவர் மியாகான். தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை கம்பம் நகரிலேயே பயின்ற பாவலர், பின்னர் திருச்சி சென்று அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துத் தேறினார். அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய பிச்சை இப்ராகிம் புலவரிடம் அவர் தமிழ் பயின்றார். தமிழ் இலக்கணத்தையும் ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்தார். புலவரிடம் கல்வி பயின்ற மாணவர்களுள் பாவலர் தவிர, உறையூர் சித்திரக்கவி செய்யது இமாம் புலவர், நாவலர் வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் அடங்குவர்.
பாவலர் இளமையிலேயே பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். சிறந்த பேச்சாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், மிகச்சிறந்த கால்பந்து ஆட்டக்காரராகத் திகழ்ந்தார். இவரது கால்பந்து ஆட்டத்தை ஒரு முறை கண்ணுற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் இவரைக் காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். எனினும் காவல் துறையில் பணியாற்ற பாவலருக்கு விருப்பமில்லை. ஆனால் அவரது பெற்றோர்கள் அவரை காவல் துறையில் சேரும்படி வற்புறுத்தினர். எனவே, பெற்றோரின் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கருதிய அவர் காவல் துறையில் சேர்ந்தார். 1920-ஆம் ஆண்டு அவர் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டார். தனது பதவிக் காலத்தில் அவர் சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டார். திருட்டு வழக்குகளில் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டிபிடித்து அவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டணை வாங்கிக் கொடுத்தார். சமூக விரோதிகளுக்கும், திருடர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். மதுரையில் அவர் பணியாற்றியபோது அங்குள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த அம்மனின் நகைகள் திருட்டு போய்விட்டன. இதனால் நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு பாவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அவர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து அம்மனின் நகைகளை எந்தவிதமான குறைவும், சேதாரமும் இல்லாமல் மீட்டு, அவற்றை கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவரது பணியினை மக்களும், உயர் காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர்.
எனினும் பாவலருக்குக் காவல் துறையில் தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லை. அத்துறையில் நிலவிய லஞ்ச லாவண்யங்களையும், முறைகேடுகளையும் அவர் பெரிதும் வெறுத்தார். அப்போது நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு ஆங்கிலேய ஆட்சிக்குச் சேவகம் புரிய அவரது மனம் ஒப்பவில்லை. அப்போது “கைரேகைச் சட்டம்” என்ற ஒரு கொடுமையான சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இச்சட்டத்தின்படி குற்றப் பரம்பரையினர் என அடையாளப்படுத்தப்பட்ட இந்து பிரமலைக் கள்ளர்கள், கொண்டயங்கோட்டை மறவர்கள் ஆகிய சமூகங்களை சார்ந்த பதினாறு வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் தினந்தோறும் இரவானதும் தாங்கள் வாழும் ஊரிலுள்ள காவல் நிலையங்களுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்து இரவு நேரத்தை அங்கேயே கழிக்க வேண்டும். ஒரு நாள் போகத் தவறினாலும் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவிக்க வேண்டும். பாவலர் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆண்டிப்பட்டியிலும், மதுரையிலும் இந்த சமூகங்களைச் சார்ந்த மக்கள் அதிகமாக வசித்து வந்ததால், இந்த நடைமுறையைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இந்த பணி அவருக்கு உவப்பானதாக இல்லை. எனவே 1923-ஆம் ஆண்டு காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிலிருந்து இராஜினாமா செய்தார். அவரது இச்செயல் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வியப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
காவல் துறையிலிருந்து இராஜினாமா செய்த பின்னர், சிவகெங்கை ஜமீன்தாரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அதே சமஸ்தானத்தில் உதவி தாசில்தாராக சில மாதங்கள் பணியாற்றினார். எனினும் அந்தப் பதவியிலும் பணியாற்ற விருப்பமின்றி இராஜினாமா செய்தார்.
சுதந்திரப் போராட்டத்தில்
1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பீர் முகம்மது பாவலர் அக்கட்சி நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். தாமே பாடல்களை இயற்றி மெட்டமைத்து அதனை பொது கூட்டங்களில் பாடினார். இவர் இயற்றிப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் நாட்டு விடுதலையை வலியுறுத்தியும், மது விலக்கு, தேசியக் கல்வி, கதராடை அணிதல் ஆகிய காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வலியுறுத்தியும், அப்போது சுதந்திரப் போராட்டங்களில் முன்னணியில் இருந்த சி.ஆர்.தாஸ். மோதிலால் நேரு, பெரியார் ஈ.வே.ரா, ராஜாஜி, ஹக்கீம் அஜ்மல்கான், மட்டப்பாறை வெங்கடராமன் ஆகிய தலைவர்களைப் புகழ்ந்தும் இயற்றப் பட்டிருந்தன. இவரது கனல் தெறிக்கும் உரைகளையும், உணர்ச்சிமிகு பாடல்களையும் கேட்ட மக்கள் எழுச்சி பெற்றனர். இவர் பேசிய கூட்டங்களுக்கு வெள்ளமெனத் திரண்டு வந்தனர். அக்காலக் கட்டத்தில் சாதாரணப் பொதுமக்கள், காவல் துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் பால் மிகுந்த அச்சம் கொண்டிருந்தனர். இந்த அச்சத்தினைப் போக்கும் வண்ணம் பாவலர் பாடிய கீழ்க்கண்ட பாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
“கலெக்டர் கடவுளுமல்ல! அடிமைப் போலீஸ்
கான்ஸ்டபுள் எமனுமல்ல! அல்லாஹ் ரசூலுல்லாஹ்
இத் தொல்லைகள் தொலைவது மெந்நாளோ? மெந்நாளோ?
கதராடை குறித்தும், மது விலக்கு குறித்தும் அவர் பாடிய பாடல்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.
கதராடையின் சிறப்புப் பற்றி அவர்
அணிவீர் கதராடை வாங்கி - எல்லோரும்
அணிவீர் இதமுடனே
துணிவோடு சீமைத் துணிகளை விலக்கிச்
சுத்த தேசியம் தோன்றிடத் துலக்கி” - என்றும்
மதுவின் தீமையைக் குறித்து
“போதையின் கேடு - நீக்கிப்
புண்ணியம் தேடு - நீக்கிப்
புண்ணியம் தேடு”
“மேதினியோர் பழிக்க வெட்கங் கெட்டு மானங்கெட்டு
ஜாதி கெட்டு மதமும் கெட்டு தான் குடிக்கலாமோ கள்ளை
நேரான புத்தியெல்லாம் நிலை குலையச் செய்யுமிந்த
சாராயக் குடியை விட்டு சர்ப்பத்தைச் சாப்பிடலாம்”; - என்றும்
இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி
“இந்து - முஸ்லிம் ஒற்றுமையால் இன்பமுண்டாமே!
இன்ப முண்டாமே - என - அன்பு கொண்டோமே
திண்டிறல் முஸ்லிம்களுக்கு தேசமொன்றாச்சு
தேசமொன்றாச்சு” - பொது நேசமென்றாச்சு - என்றும் பாடினார்.
1923-ஆம் ஆண்டு கம்பத்தில் அன்னிய நாட்டுத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் நடைபெற்ற போது பாவலர் ஒரு புதிய அணுகுமுறையை மேற்கொண்டார். கம்பம் நகரிலுள்ள துணி வியாபாரிகள் அனைவரையும் ஒன்று கூட்டி அவர்களிடம் அன்னியத் துணிகளை விற்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை வியாபாரிகள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவே கம்பத்தில் போராட்டம் பெரும் வெற்றியடைந்தது.
1929- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மகாத்மா காந்திஜி, உத்தமபாளையம் நகருக்கு வருகை indian Freedom fightsதருவதாக இருந்தது. இந்நிலையில் கம்பத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரார்களும் பிற முக்கியப் பிரமுகர்களும் காந்திஜியை கம்பம் நகருக்கு அழைத்து வர வேண்டுமென்று பாவலரிடம் வேண்டுகோள் வைத்தனர். பாவலரும் மகாத்மா காந்திஜியின் தனிச் செயலாளரான மகாதேவ தேசாயிடமும்;, தமிழ்நாட்டில் அவரது சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்தவர்களிடமும் “காந்திஜி நிச்சயம் கம்பம் நகருக்கு வரவேண்டும். அவரது வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்” என்று எடுத்துக்கூறி அவர்களைச் சம்மதிக்கச் செய்தார். அதன்படி காந்திஜியின் சுற்றுப் பயணத்தில் கம்பம் நகரும் சேர்க்கப்பட்டது. அவர் தமிழக சுற்றுப் பயணத்தின் போது கம்பம் நகருக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாவலர் சிறப்பான முறையில் செய்திருந்தார். காந்திஜி தனது கம்பம் வருகையின் போது சுதந்திரப் போராட்ட வீரர் சி.ஏ.அப்துல் ரஹ்மானின் இல்லத்தில் தங்கினார்.
பாவலர் ஒரு சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். எனவே நாடகங்கள் மூலமாகவும் மக்களுக்கு சுதந்திர வேட்கையைத் தூண்டினார். 1941-ஆம் ஆண்டு அவரது நாடகம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஆங்கிலேய அரசின் காவல் துறையினர் அவரையும், நாடகத்தில் அவருடன் நடித்த 18 பேர்களையும் கைது செய்து, அலிப்பூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் அவர் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடுமாறு மக்களிடம் அறைகூவல் விடுத்தார். இதனால் ஆங்கில அரசு அவர் பொதுக் கூட்டங்களில் பேசத் தடை விதித்தது. எனினும் தடையை மீறிக் கூட்டங்களில் கலந்து கொண்ட பாவலர் தனது வாயைத் துணியால் கட்டிக்கொண்டு சைகைகள் மூலமாகப் பேசி வரலாறு படைத்தார்.
1942-ஆம் ஆண்டு உத்தம பாளையத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த தனிநபர் சத்யாக்கிரகப் போராட்டத்தில் பாவலர் கலந்து கொண்டார். அவருடன் கோம்பை மைதீன் பிள்ளை, எஸ்.எஸ்.மரைக்காயர், போடி கான் முகம்மது புலவர், கே.சி.முகம்மது இஸ்மாயில், வழக்கறிஞர் கே.எம்.மீரான் ஆகியோரும் கலந்து கொண்டனர். பாவலரைக் காவல் துறையினர் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 38(5) பிரிவின் கீழ் கைது செய்தனர். நீதி மன்றத்தில் அவருக்கு ஆறுமாத சிறைத் தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்ட மறுத்தால் மேலும் ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார். பாவலர் அபராதம் கட்ட மறுக்கவே சிறைத்தண்டனை ஓராண்டாக அதிகரிக்கப்பட்டது. அவர் அலிப்பூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர் விடுதலையானார்.
நூல்கள்
பாவலர் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே “முத்தண்ணா” என்ற நாவலை எழுதினார். அதில் கதாநாயகனாக தன்னையே சித்தரித்திருந்தார்.
1923-ஆம் ஆண்டில் காந்தியக் கொள்கைகளைச் சிறப்பித்துக் கூறும் “காந்தி மாலிகை” என்ற நூலை எழுதி வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியின் சிறப்புகள், காந்திஜியின் கொள்கைகள், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, நாட்டுப்பற்றின் சிறப்பு ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இந்நூலுக்கு அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்த பெரியார் ஈ.வே.ரா. மதிப்புரை வழங்கியிருந்தார்.
1928-ஆம் ஆண்டு “பாமஞ்சரி” என்ற நூலை எழுதினார். இதில் அவர் எழுதிய பல தேசபக்திப் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது முதுபெரும் கவிஞராகத் திகழ்ந்த உடுமலை முத்துசாமிக் கவிராயர் இந்நூல் குறித்து ‘இது பாமஞ்சரி அல்ல நா மஞ்சரி” எனச் சிறப்பித்துக் கூறினார்.
தனிப்பாடல்கள்
பாவலர் பலத் தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். அவரது ஆசிரியர் பிச்சை இப்ராகிம் புலவரின் மகன் செய்யது இப்ராகிம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை ஆதரித்துத் தெருத் தெருவாகச் சென்று பாடல்கள் பாடி பிரச்சாரம் செய்தார். அப்போது
“சட்டசபையினிலே செய்யது இப்ராகிம்
திட்டமிகு வேலைகளை செய்திடுவார் - இட்டமுடன்
ஓட்டுக் கொடுக்கும் உரிமையுளோர் என் வார்த்தைக்
கேட்டுத் தருமின் அவர்க்கே” - என்று பாடினார்.
தாஜ்மகால் தேயிலை நிறுவனத்தார் தங்களது தேயிலை விளம்பரத்திற்காக இவரிடம் பாடல் ஒன்று கேட்ட போது
“எத்திக்கும் சென்று இணையில்லாப் பேர் பெற்ற
தித்திக்கும் தாஜ்மகால் தேயிலையால் - புத்திக்கு
நல்ல குணமுண்டாம், ஞாபக சக்தியுண்டாம்
சொல்ல முடியாது சுகம்” - என்று எழுதிக் கொடுத்தார்.

பிற பணிகள் வாசகக்சாலை :
1928 ஆம் ஆண்டு கம்பம் பேருந்து நிலையம் அருகே நூல்நிலையம் ஒன்றை ஏற்படுத்தினார். அங்கு படிக்க வருவோரிடம் தான் இயற்றிய சுதந்திரப் பாடல்களைப் பாடுவது அவரது வழக்கம். இந்த நூல் நிலையத்தில் வாசகர்களுக்கு உடற்பயிற்சியுடன் சிலம்பு விளையாட்டும் கற்றுக் கொடுத்தார்.
ஏழைக் களஞ்சியம் :
1943-ஆம் ஆண்டு அலிப்பூர் சிறையில் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்து விட்டு விடுதலையான பாவலர், அப்போது நாட்டில் நிலவிய கடும் உணவுப் பஞ்சம் குறித்தும், அதனால் ஏழைகள் உணவு கிடைக்காமல் அவதியுற்றதையும் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். ஏழை மக்களுக்கு உதவிட “ஏழைக் களஞ்சியம்” என்ற அமைப்பை நிறுவினார். செல்வந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கி அதனைக் குறைந்த விலைக்கு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
குடும்பம் :
பாவலரின் தந்தையார் மியாகான் கேரளாவிலிருந்து வந்து கம்பத்தில் குடியேறியவர். இவரும் மிகச் சிறந்த ஒரு புலவர். தமிழ் இலக்கண இலக்கியங்களை ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்தவர். தனது இல்லத்தில் வைத்து ஏராளமான மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். தக்கலை ஞான மாமேதை பீர் முகம்மது அப்பாவின் பால் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த இவர், அதன் காரணமாகவே தனது மூத்த புதல்வரான பாவலருக்குப் பீர் முகம்மது என்று பெயர் வைத்தார். பின்னர் “பீர் முகம்மது” என்ற indian Freedom fightsaபெயரே இவரது சந்ததியினரின் குடும்பப் பெயராயிற்று. பாவலருக்கு அப்பாவு, அப்துல்லாகான் என இரு புதல்வர்களும், ராபியா என்ற புதல்வியும் உண்டு. இதில் மகள் ராபியா இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அப்பாவு மற்றும் அப்துல்லாகான் வாரிசுகள் தற்போது கம்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். (அப்பாவு தமிழ்நாடு கதர் வாரியத்தில் பணியாற்றினார்). பாவலரின் சகோதரர் முகம்மது இப்ராகிமின் பேரன்கள்தான் சிறப்பிற்குரிய தமிழ் பேராசிரியர்களான பீ.மு.அஜ்மல் கானும், பீ.மு.மன்சூரும் ஆவர். பேரா.அஜ்மல் கான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் உவைஸ§டன் இணைந்து இஸ்லாமிய இலக்கியங்களை தொகுத்து அவற்றை எட்டு தொகுதிகளாக வெளிக் கொணர்ந்த பெருமைக்குரியவர் இவர். பேராசிரியர் மன்சூர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும், அக்கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் சில ஆண்டுகள் திருச்சி வி.மி.ணி.ஜி. கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப் பெரியாறு விவசாயிகள் சங்கத்தலைவர், கம்பம் அப்பாஸ், பாவலரின் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர் ஆவார் (சம்மந்தி). பாவலரின் சந்ததியினர் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக தமிழ்ப் பணியும், பொதுப் பணிகளும் ஆற்றி வருவது அந்தப் பகுதியில் வேறு எந்தக் குடும்பத்தினருக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். பாவலரின் தந்தை மியாகான் வாழ்ந்து வந்த தெரு என அவரது பெயராலேயே மியாகான் தெரு இன்றைக்கும் அழைக்கப்பட்டு வருகிறது.
இறுதிக் காலம் :
தனது நாவன்மையாலும், பாவன்மையாலும் மக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்து கொண்டிருந்த பாவலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். அவருக்கு வாத நோயும், வயிற்று வலியும் ஏற்பட்டு அவதியுற்றார். தனது நோய் குறித்து அவர்
அய்யோ! கொடிய தலைவிதியே
யாரிடம் சொல்வதென் கதியே
கையோ வருவதில்லை மடக்க
இருகாலும் விளங்கவில்லை நடக்க - என மனம் நொந்து பாடினார்.
உடல் நலிவுற்றிருந்த பாவலரைப் பார்ப்பதற்காக கோட்டாறு சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் 02.03.1945 அன்று கம்பம் வந்தார். இரு பாவலர்களும் சந்தித்துப் பேசி அளவளாவினார். அன்று கம்பம் நகரில் நடைபெற்ற மீலாது விழாக் கூட்டத்தில் இரு பாவலர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். நாற்காலியில் அமர்ந்து கொண்டு இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பாவலர் “அவி அகத்தோ, புறத்தோ என்று அல்லலுற்றிருக்கும் இவ்வேளையிலே நான் பேச முற்படுகின்றேன். அநேகமாக இது தான் என் இறுதிப் பேச்சாக இருக்குமோ? என ஐயுறுகிறேன்” என்று தொடங்கி தொடர்ந்து உரையாற்றினார்.
ஆம்! பாவலர் கூறியபடி அதுதான் அவரது இறுதி உரையாக இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு 12.07.1945 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பாங்கு சொல்லப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது. சுதந்திர இந்தியாவைப் பார்க்காமலேயே அவர் தனது 47 வயதில் மரணமுற்றார்.
முடிவுரை :
நிதானமான உயரம், நேரிய பார்வை, நிமிர்ந்த நன் நடை, நன்கு மழிக்கப்பட்ட முகத்தில் முறுக்கான மீசை, தூயக் கதர் ஜிப்பா, வெண்ணிறக் கதர் வேட்டி, கணீரென்ற குரல், கையில் கம்பு, இத்தகைய தோற்றப் பொலிவைப் பாவலர் பெற்றிருந்தார். நேர்மையானவராகவும், தவறு கண்டவிடத்து தட்டிக் கேட்பவராகவும் திகழ்ந்தார்.
பாவலரின் சிறப்புகள் குறித்து உத்தமபாளையம் காமாட்சிப் பிள்ளை என்ற புலவர் பாடியிருப்பதாவது
“பீர் முகம்மது அண்ணன் செய்யும்
பிரசங்கம் செவிக்கு அமிர்தம்
ஊர்க்கு உழைக்க இவ்வுலகில்
உடலெடுத்த பூங்குமுதம்
பெயர் வாய்ந்த இன்ஸ்பெக்டர் உத்தியோகமும்
பெருமையாய் வகித்த தீரன்
உயர்வான தமிழ்தனில் பிரக்யாதியும் பெற்ற
உத்தம முள்ள மாரன்
உண்மை உடைய கணியன்
உரித்து மிகுந்த புண்ணியன்
ஒத்துழையாமையெனும் தத்துவமதை
இத்தரையில் நடத்திய தீரன்
காசினியோர் புகழும் கம்பமா நகர் தனிலே
களிப்புடன் வசிக்கும் யோகன்
மாமறுவில்லாத தேச பக்தர்கள் மீதிற்பா
மஞ்சரி வரைந்த யூகன்”
பாவலரின் அருஞ்சேவைகளை அறிகின்றபோது காமாட்சிப் பிள்ளைப் புலவரின் மேற்கண்ட பாவரிகள் புகழுரைகள் அல்ல, பொருளுரைகளே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அவரின் நீடு புகழ் என்றும் நிலை பெற்றிருக்கும்.
துணை நின்ற நூல்கள் :
1. அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் ஆண்டு சிறப்பு மலர் - கயத்தாறு
அல்ஹாஜ் அமீர் பாட்சா எழுதியுள்ள கட்டுரை.
2. இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் - பன்னூலாசிரியர் விஸிவி அப்துல் ரஹீம்
3. தினத்தந்தி நாளிதழில் 15.08.2017 அன்று வெளியான “காக்கிச் சட்டையைக் கவர்ந்திழுத்த
கதராடை” என்ற கட்டுரை.
4. நன்றி. பாவலரின் குடும்பம் குறித்த தகவல்களைத் தந்திட்ட உத்தமபாளையம் கருத்த
இராவுத்தர் கல்லூரிப் பேராசிரியர் ஸி.முகம்மது ரபீக் அவர்களுக்கு.

கட்டுரையாளருடன் தொடர்புக்கு
கைபேசி எண் : 9976735561