கொலைக்கும் அஞ்சாத வட்டித் தொழில்

வரலாற்றில் அய்ரோப்பாக் கண்டத்தில் வட்டித் தொழிலுக்குப் பெயர் போனவர்கள் யூதர்கள். ஜெர்மனியர்களின் யூத வெறுப்பிற்கு யூதர்களின் வட்டித் தொழிலும் ஒரு காரணம் எனக் கூறுவது உண்டு.
இன்றைய சூழலில் மக்கள் எவரும் வட்டியை கேவலமான தொழிலாகவே கருதுவதில்லை.
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுக்குப்புத்தி உள்ளவர்களின் தொழில் பெரும்பாலும் வட்டிக்கு விடுவது.
வட்டிக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, மணி வட்டி என பல பரிணாமங்கள் உண்டு.
பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்து வட்டி மூலம் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நபர்கள் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கையில் எடுத்துக் கொண்டு குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். சிறுதொழில்களில் தொடங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீடு என பல தளங்களில் தங்களின் கொடுங்கரங்களை பரப்பி வைக்கின்றனர். எங்கும் எதிலும் இருப்பது கந்துவட்டிதான்.
வட்டிக்குக் கடன் வாங்காமல் பெரு நகரம், நகரம், கிராமம், குக்கிராமம் என விதிவிலக்கில்லாமல் மக்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒருநாளும் நகராது என்ற நிலை, மனிதர்களின் பொருளாதார சமூக, உறவுகளில் ஒருபுறம் ஆதிக்கத்தையும் மறுபுறம் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தி சமூகத்தை சிதைத்திருக்கிறது வட்டி.
பணமிருப்பவர்களின் பேராசையே வட்டி என்னும் வழிப்பறிக் கொள்ளையின் மூலம்.
வட்டி அடிப்படையில் தொழில் அல்ல. அடாவடி ரவுடித் தனம், வழிப்பறிக் கொள்ளை.
இதை தொழிலாய் செய்பவர்கள் வெளியில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு, வெள்ளைச் சீருடையில் உள்ளே மிருகமாய் உலாவரும் கொள்ளைக்காரர்கள். இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்பை வைத்துக் கொண்டலையும் அரக்கர்கள்.
இந்தியாவில் உழவுத் தொழில் தவிர வேறு எந்தத் தொழிலும் எட்டிப்பார்க்காத கிராமங்களில் உழவுத் தொழில் சிக்கலின்றி வளம் தந்த போது தன்னிறைவு பெற்ற சிற்றூர்களாக பல ஊர்கள் இருந்தன. உணவுப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை போன்றவை மட்டும் பயிரிட்ட காலத்தில் மேலதிக நீர் தேவைப்படவில்லை.
ஏற்றம் கட்டி நீர் இறைத்த போது கிணற்று நீரும் முற்றாக இறைக்கப்பட்டு வற்றிப் போகவில்லை. வானமும் அவ்வப்போது மழை தந்து நிலத்தடி நீரைப் பெருக்கி தேவையை நிவர்த்தி செய்தது. கம்பு, சோளம், கேழ்வரகு, திணை மூட்டைகள் வீடு முழுவதும் நிறைந்து பெருகிக் கிடந்ததை ஒரு பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் கூட என் சிறுவயதில் நான் பார்த்த நினைவுகள் எனக்குண்டு.
மின்சாரமும், அதனை ஒட்டிப் பணப் பயிர்களும் உழவுத் தொழிலுக்குள் நுழைந்த பொழுதுதான் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பணப்பயிருக்கு மாறிய உழவன் இறைவைப் பொறிக்குப் பதிலாக “பம்ப்செட்” பயன்படுத்தி, கிணற்று நீரை உறிஞ்சத் தொடங்கினான். கிணறு வற்றத் தொடங்கியது. மழை பொய்ப்பதும் கூடவே தொடர்ந்தது. கடன் கொண்டு கிணற்றை ஆழப்படுத்தினான், போர்வெல் போட்டு பூமியின் அடி ஆழத்துக்குச் சென்று தண்ணீர் தேடினான். நிலத்தடி நீர் அதள பாதாளத்துக்குச் சென்றது.
விவசாய பூமி வறண்டு வறுமை வளம் பெற்றது.
வறுமை கண்ட உழவன் கடனை கண்டடைந்து கடனிலிருந்து வெளியேற ஒவ்வொரு கதவாகத் தட்டத் தொடங்கினான். எந்தக் கதவும் சரியாக திறக்காத போது அவனுக்கென்று திறந்த ஒரு கதவு வட்டி.
கை நீட்டி வாங்கிய வட்டியை திரும்பக் கட்டம் முடியாமல் வீடு தோட்டம் என தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து பரதேசிகளாக முன்பின் அறியாத ஊர்களுக்குச் சென்று கூலித்தொழில் செய்து பிழைக்கும் கொடுமைக்கு ஆளானவர்கள் கொஞ்சநஞ்சமல்ல!
தான் வளர்க்கும் ஆட்டையோ, மாட்டையோ காப்பாற்ற முடியாமல் போகும்பொழுது உழவன் துடிக்கின்ற துடிப்பு உடன் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்.
அந்த உழவன் வாழமுடியாமல் வக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு மடிந்து போகும் போது ஒரு உணர்ச்சியும் காட்டாத நாம் உணர்வு செத்துப்போன உடலோடு கடந்து விடுகிறோம் எந்த உறுத்தலும் இல்லாமல்...?
உழவுத் தொழில், நெசவுத் தொழில், சிறு தொழில் பொய்த்துப் போன சிறுநகர, கிராம மனிதர்களும், வாழ வழியற்று அங்கிருந்து பெரு நகரம் நோக்கி விரட்டப்படும் மனிதர்களும், குடிக்குப் பழகி கூறுகெட்டுப் போன ஆண்கள் என்ற சடங்களினால் அல்லலுரும் பெண்களும், கைம்பெண்களும் கந்துவட்டியை நோக்கி படையெடுக்கும் விட்டில் பூச்சிகள்.
கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை போதுமாக்கிக் கொள்ளாமல் பேராசைக் காரணமாக வட்டியின் பொறியில் சிக்கி தங்களையும், குடும்பத்தையும் சீரழித்துக் கொள்வோரும் உண்டு.
கிராமங்களிலும், நகர்ப்புறங்களில் புறநகர்களிலும் உழைக்கத் துப்பற்ற ஆண்களால் அல்லது ஆண்களே இல்லாமல் குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பணத்திற்குத் திண்டாடும் பெண்கள் வட்டியின் காரணமாக அடையும் துயரம் வார்த்தைகளுக்குள் கொண்டு வரமுடியாதவை.
குடும்ப பாரத்தை சுமக்க அல்லாடும் பெண்களை வட்டியின் பக்கம் கொண்டு வரும் கைங்கரியத்தை பெண்களே முன்னின்று நடத்துவது வேதனை. ஏன் ரொம்ப சிரமப்படுற எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு வட்டிக்கு கொடுக்குறாரு இப்போ வாங்கிக்க சின்ன சின்ன வேலைகளை செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்துடலாம் என ஆறுதல் சொல்வது போல பெண்களை வட்டிக்குப் பணம் வாங்கத் தூண்டுவதன் மூலம் வீடுகளுக்குள்ளும் நுழைந்து விடுகிறது வட்டி.
ஒளி கிடைக்கும் என்ற நப்பாசையில் உயிரை பணயம் வைத்து பறக்கும் விட்டில் பூச்சிகள் போல வட்டி நெருப்பில் விழுந்து தங்களையே கரித்துக் கொள்கிறார்கள் வட்டிக்கு வட்டி கட்டி வாழ்க்கையே சூன்யமாகிப் போனவர்கள்.
வட்டியும் அரசாங்கமும்
அமலில் உள்ள வரைவுச்சட்டம் தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை ஏற்றுக் கொள்கிறது. அதன்படி, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்துக் கடன் பெற்றால், ஆண்டுக்கு 9 சத வட்டியும், சொத்துப்பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சத வட்டியும் வசூலித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாபம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி போட்டு வயிறு வளர்த்தார்கள் வட்டித் தொழில் வழிப்பறிக் கொள்ளையர்கள்.
அரசு ஊசி கொண்டு குத்தச்சொன்னால் வட்டிக் கொடை வள்ளல்கள் குறுவாள் கொண்டு வயிற்றைக் கிழித்து குடலை அறுக்கிறார்கள்.
இதை ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை: “அநியாய வட்டிக் குற்றங்களில் காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும்போது, இந்த தில்லு முல்லு வெளியாகி வழக்குப்பதிவு வரை செல்கிறது” என தெரிவிக்கிறது.
1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில் கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு செய்வாராயின் அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நடக்கும் கொலைகளில் 90 விழுக்காடு சம்பவங்கள், பணத்தைப் பின்னணியாகக் கொண்டவையே. வட்டியும் இதில் உள்ளடங்கும்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற தென்மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்தன.
கந்து வட்டிக் கும்பல்களால் தற்கொலைகள் மட்டுமல்ல அதிகமாக கொலைகளும் நடைபெற்று வருகின்றன என எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பியபோது, சட்டப்பேரவையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுக்கும் என்றார்.
அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே வட்டிக் கொடுமையால் பாதிப்பைத் தடுக்க 2001-2006 ஆம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் தான் கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act), கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பான ஆணை, கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதிஅரசிதழில் வெளியிடப்பட்டது.
அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சட்டமெல்லாம் இருக்கும் நிலையில்தான் வட்டித் தொழில் வழிப்பறிக் கொள்ளையர்களால் கடுமையாக மிரட்டப்பட்ட இசக்கிமுத்து என்பவர் அது குறித்து ஆறு முறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களைப் பெறவும், அதை துறைவாரியாக பிரித்து அனுப்பவும் பணியாட்கள் இருந்தும்! எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இசக்கிமுத்துவின் குடும்பம் தங்களையே மாய்த்துக் கொண்ட கோரக் காட்சிகள் பார்த்த மனித மனங்களில் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நாம் எந்தச் சூழலிலும் தன்னையே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது. பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிப்பதே அறம்.
பணமிருப்பவர்களின் ஆதிக்க லாபவெறிக்காக பிற மனிதர்களின் உணர்வை, உணர்ச்சியை சுரண்டி இயந்திரங்களாக மாற்றி மனித மனங்களில் மனப்பிறழ்வை விதைக்கும் வட்டியை தொழிலாக அரசுகளே அங்கீகரிப்பதும், அரசின் பணியாளர்களே குற்றவாளிகளுக்கு குடைபிடிப்பதும் அவலத்தின் உச்சம்.
வட்டி வாங்கி அரசாங்கம் நடத்தும் அரசுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இதை நாம் கேள்விக்கு உட்படுத்தியே ஆக வேண்டும்.
மனித உணர்வும் சமூக அக்கறையும் உள்ள ஒவ்வொருவரும் “வட்டிப் பொருளாதாரம்“ ஈவு இறக்கமின்றி மனிதர்களிடம் ஏற்படுத்தி இருக்கும் வடுக்களை ரணங்களை, வட்டி சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமூக சீரழிவை ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்து விரைவாக மனிதநேயமிக்க மாற்றுப் பொருளாதார முறையை செயல்படுத்த முன் வரவேண்டும்.
1950 ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்களிப்பு, இப்பொழுது 16 அல்லது 17 சதவிகிதம் வரை சரிந்துவிட்டது. இந்த சரிவுக்குப் பின்னால் எத்தனை லட்சம் குடும்பங்களின் சீரழிவு உள்ளடங்கி இருக்கிறது என்பது கணக்கில் வராதவை.

விவசாயம் ஒன்றும் காலத்துக்கு ஒவ்வாத உதவாக்கரை தொழில் அல்ல. உயிர்கள் வாழும் வரை விவசாயமும் இருக்கும்.

மழை பொய்த்து விவசாயம் இல்லாமல் போனாலும் நட்டம். மழை பெய்து விவசாயம் செழித்து விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்தால் விவசாயப் பொருளுக்கு விலையில்லாமலும் நட்டம் என "ஒரு கால்பந்து போல எல்லா பக்கமும் சுற்றி வளைத்து உதைக்கப்படும் விவசாயிகளின் நிலை பரிதாபகரமானது.”
இன்று விற்கப்படும் எவ்வளவு சிரிய பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலை இருக்கிறது. விவசாயி உற்பத்தி செய்யும் எந்தப் பொருளுக்கும் விலையை விவசாயி நிர்ணயிக்க முடியாது.

அரசும் அரசியல்வாதிகளும், அதிகார மையங்களும் விவசாயிகளை சுரண்டுவதை நிறுத்தாத வரை விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வும் கிடையாது.

விவசாயக் கடன்களும், கடன் தள்ளுபடியும் விவசாயிகளின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அல்ல.

அரசு விவசாயிகளுக்கு பணமாக நிவாரணம் வழங்குவதை விட இடு பொருட்களாக வழங்குவதும், அவர்களின் விளை பொருட்களுக்கு நிறைவான விலையை நிர்ணயிப்பதும் ஓரளவுக்கு விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வைத் தரலாம்.
வட்டியில்லா கூட்டுறவுத் திட்டமும் விவசாயிகள், நலிந்தோர்கள், ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருப்போர், கைம்பெண்களுக்கு பெரும் பயனாக அமையும். வட்டியை அடியோடு வெறுக்கும், வேரறுக்க நினைக்கும் முஸ்லிம்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வருவார்களா?