அச்சத்தில் அகதிகள் உலகம்.....

ஆப்கன், மியான்மர், சிரியா, சூடான், பர்மா, காங்கோ நாடுகளில் இருந்து சுமார் 1 கோடி 16 லட்சம் பேர் 2017 ஆம் ஆண்டு அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். 2013 ன் மத்திய காலத்தில் இருந்த எண்ணிக்கையை விடவும் 50 லட்சம் பேர் கூடுதல். முகாம்களை நோக்கி வரும் அகதிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் UNHCR மதிப்பீடு செய்திருக்கிறது. 2014 ஜூன் கணக்குப்படி, ஐ.நா.அகதிகள் ஆணையம் வழங்கும் உதவிகளில் இருந்து 24 விழுக்காடு அளவு சிரியா நாட்டு அகதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

ஐ.நா.அகதிகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கணக்கின்படி, ஆப்கன் அகதிகள் உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையாக 20 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சோமாலியர்கள் 10 லட்சத்து 10 ஆயிரம் பேர். சூடான் 6 லட்சத்து 70 ஆயிரம். தெற்கு சூடான் 5 லட்சத்து 9 ஆயிரம். காங்கோ ஜனநாயக குடியரசு 4 லட்சத்து 93 ஆயிரம். பர்மா 4 லட்சத்து 80 ஆயிரம். ஈராக் 4 லட்சத்து 26 ஆயிரம்.

பாகிஸ்தான் 10 லட்சத்து 60 ஆயிரம் ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. லெபனானில் 10 லட்சத்து 10 ஆயிரம் பேர். ஈரானில் 9 லட்சத்து 82 ஆயிரம் பேர். துருக்கியில் 8 லட்சத்து 24 ஆயிரம்பேர். ஜோர்டானில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர். எத்தியோப்பியாவில் 5 லட்சத்து 88 ஆயிரம் பேர். கென்யாவில் 5 லட்சத்து 37 ஆயிரம் பேர். சாடில் 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். இங்கெல்லாம் அகதிகள் பிரச்சனை பெரிய அளவில் இருக்கின்றன.

பர்மாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அரகன் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்களை ரோகிங்கிய இனம் என்று அழைக்கின்றனர். இவர்களின் குடியுரிமையை பர்மிய அரசு 1982 ல் ரத்து செய்தது. அது முதல் அங்கு அரகன் ரோகிங்கிய சால்வேஷன் ஆர்மி (Arakan Rohingya Salvation Army) என்ற பெயரில் ஒரு விடுதலைப் படை இயங்கி வருகிறது. அதை காரணம் காட்டி 2017 செப்டம்பரிலும் ரோகிங்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்பட்டு துரத்தப்பட்டார்கள். அரகான் மாகாணத்தின் குடிசைகள் எரிவதையும் மக்கள் கொல்லப்படுவதையும் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிச் செல்வதையும் ஐ.நா. செயற்கை கோள் படங்கள் மூலம் உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. பெண்கள் மருத்துவ வசதியின்றி குழந்தைகள் பெற்றதையும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த ரோகிங்கியர்களில் 14 ஆயிரம் பேர் ஐ.நா.அகதிகள் ஆணையத்தில் பதிவு செய்தவர்கள். மேலும் பதிவு செய்யாமல் 40 ஆயிரம் ரோகிங்கியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அதிகமான எண்ணிக்கையில் ஜம்முவில் வசிக்கிறார்கள். இன்னும் சொற்ப நாட்களில் எண்ணிக்கையில் காஷ்மீரிகளை காட்டிலும் முஸ்லிம்கள் அதிகரித்து விடுவார்கள் என அங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். இந்திய நகரங்களில் ரோகிங்கியர்கள் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க கூடும் என்று குற்றம்சாட்டும் இந்திய அரசு அவர்களை பர்மாவுக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறது. ரோகிங்கியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள். அவர்கள் வெளியேற வேண்டும். வெளியேற்றுவோம் என்கிறது மத்திய அரசு. காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரோகிங்கியர்கள் கூட்டு வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் நிதியுதவி செய்வதாக அஹின் விராது(Ahin Wirathu) என்கிறார் பர்மிய புத்தமத தேசியவாதி.

மத்திய கிழக்கு, ஆசிய, ஆப்ரிக்கா நாடுகளில் குறைவான பொருளாதார வருவாய் உடைய நாடுகளுக்கு அகதிகளின் செலவினம் பெரிய சுமையாக இருப்பதாக ஐ.நா.கூறுகிறது. உலகின் 2 கோடி 10 லட்சம் அகதிகளை வெறும் 10 நாடுகள் மட்டும் சுமப்பதாகத் தெரிகிறது. அந்த நாடுகள் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் தான் என ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. ஜோர்டானில் 20 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் அகதிகளாக உள்ளனர். துருக்கியில் 20 லட்சத்து 50 ஆயிரம், பாகிஸ்தானில் 10 லட்சத்து 60 ஆயிரம், லெபனானில் 10 லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அகதிகள் இருக்கிறார்கள். உலகின் மிக்பெரிய பணக்கார நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் அகதிகள் உள்ளனர். இந்திய உள்துறை தரும் தகவல்படி 30 நாடுகளை சேர்ந்த 3 லட்சம் பேர் இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது வங்கதேசம்) ராணுவத்துக்கும் மக்கள் புரட்சி படைக்கும் (முக்திவாஹினி) இடையில் உள்நாட்டு சண்டை நடந்த போது இந்தியாவுக்குள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் அகதிகளாக வந்து கொண்டிருந்தார்கள். சுமார் 1கோடிப் பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை மேற்கு வங்கத்தின் அன்றைய அரசு சுமக்க நேர்ந்தது. நாள் ஒன்றுக்கு 1கோடிப் பேருக்கு உணவு உடை கொடுக்க வேண்டும். இந்திய ராணுவம் 1972 ல் கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து சண்டை போட்டதில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. பின்னர் அகதிகளாக 60 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் 1972 மார்ச் 25க்குள் நாடு திரும்பினார்கள். மிச்சமுள்ளவர்கள் இந்தியாவில் தங்கிவிட்டார்கள். இன்று பர்மாவில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சம் அடைகின்றனர். அன்று பாகிஸ்தானை அடக்கி அகதிகள் நாடு திரும்ப உதவிய இந்திய அரசு இன்று பர்மாவுடன் சண்டை போடுமா? இந்தியாவுக்கு அதில் என்ன அரசியல் லாபம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய நாடுகளிடையே நட்பு சூழல் மாறியிருக்கிறது.

இன்று ரோகிங்கிய அகதிகளுக்கு இந்திய செல்வத்தில் இருந்து செலவிடமுடியாது என்று இந்திய மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. ஆனால் அன்று கிழக்கு பாகிஸ்தான் மக்களின் உணவு மற்றும் உடை வகைக்கு 700 கோடி ரூபாய் இந்திய அரசு செலவிட்டு இருக்கிறது. அப்போது வெளிநாட்டு உதவி வெறும் 30 கோடி ரூபாயாக மட்டும் இருந்தது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது பற்றி ஐ.நா.மன்றத்தில் விவாதம் எழுந்த போது அகதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக இந்தியா கூறியது. அந்த ஆண்டில் (1972) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அளவு 116 பில்லியன் டாலர் தான்.

இன்று இந்தியாவின் பொருளாதாரம் மிகை வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2014 ல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அளவு 2,066.90 பில்லியன் டாலர்கள். இருந்தும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ரோகிங்கியர்களுக்கு செலவிட முடியாது என்கிறது பாஜக அரசு. தற்சமயம் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்கிய மக்கள் இந்தியாவிடம் எந்த வசதியையும் எதிர்பார்க்கவில்லை பிழைப்பதற்கான இருப்பிடத்தைத் தவிர. உதாரணமாக பழைய ஐதராபாத் பகுதியில் வசிக்கும் ரோகிங்கியர்களுக்கு அங்குள்ள மதரஸாவில் இருந்து வாராவாரம் உணவு தானியங்கள் மற்றும் துணிமணிகள் கொடுக்கப்படுகிறது. அம்மக்கள் அக்கம் பக்கத்தில் கூலி வேலை செய்து சொற்பமாக சம்பாதிக்கிறார்கள். அதில் இருந்து வீட்டு வாடகை கொடுக்கிறார்கள். மிகச் சிறிய அறைகளில் போதிய இடவசதிகள் இல்லாமல் நெருக்கமாக வசித்து வருகிறார்கள். இந்தியா வந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் ரோகிங்கியர்களுக்கு உள்ளூர் முஸ்லிம்கள் இரக்கப்பட்டு உதவிகள் செய்து வருகிறார்கள்.

இந்தியா அளவில் பெரிய நாடு பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு என்பதால் அண்டை நாடுகளில் இருப்பவர்கள் மதவேறுபாடு பார்க்காமல் இந்தியா வரவே விரும்புகிறார்கள். இந்தியர்கள் அனைவரையும் வரவேற்று அரவணைக்கும் பண்புடையவர்கள். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பு கிட்டும் என்று கணக்கிடுகிறார்கள். 1981,1991, 2001, 2011 ஆகிய பத்தாண்டுகளில் எடுத்த மக்கள் தொகை கணக்கின்படி வங்கதேசத்தில் இருந்து 1கோடி 50 லட்சம் பேர் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக Carnegie India என்ற அமைப்பு கூறுகிறது. இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிஜோரம் மாநிலங்களில் 4,096 கிலோ மீட்டர்(சுமார் 2500 மைல்) நீளத்துக்கு வங்க தேசம் எல்லையை கொண்டிருக்கிறது. வங்காள தேசம் உண்டான பிறகு கொஞ்சம் பேரே நாடு திரும்பினார்கள் என்றாலும் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் விரும்பி இருந்து கொண்டார்கள்.
வங்கதேச எல்லையை ஒட்டியிருக்கும் இந்திய மாநிலங்களில் சில அகதிகள் குடியேறினார்கள். பெரு நகரங்களில் குடியேறியவர்கள் மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலைகளை செய்து கொண்டு வாழ்கின்றனர். எனினும் இந்திய அரசு இவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்று கண்காணிக்கிறது. குறிப்பாக இங்குள்ள மதரஸாக்களை கண்காணித்து வருகிறது. இவர்களால் இதுவரையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டதாக இல்லை. நகரங்களின் சுகாதாரப் பணிகளில் இவர்கள் ஈடுபடுவதால் இவர்களை அப்புறப்படுத்துவது சிக்கலான காரியமாகும். பல நூறு ஆண்டுக்கணக்கில் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இந்த சுகாதாரப்பணிகளில் பிழைப்புத் தேடி வரும் அகதிகள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. அப்படித்தான் அவர்கள் சிறுபான்மை மக்களாக தங்கிவிடுகிறார்கள்.

அகதிகளை ஒரு பிரச்சனையாக முன்வைத்து பா.ஜ.க. அரசியல் செய்வது வழக்கமானது. ஒவ்வொரு முறை தேர்தலிலும் வங்கதேசத்து அகதிகளை வெளியேற்ற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளியேற்றுவோம். அவர்களுக்கு குடியுரிமை இல்லை. ரேசன் அட்டைகள் வங்கி கணக்குகள் கொடுக்க கூடாது என்று பிரச்சாரம் செய்யும். இந்த முறை வங்கதேச அகதிகளை வைத்து அச்சுறுத்தல் செய்து அஸ்ஸாமில் முதன்முறையாக ஏப்ரலில் (2017) ஆட்சியை பிடித்து கொண்டது பா.ஜ.க. வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதன்முதலாக ஆட்சி அமைத்த போதே அந்த அரசின் உள்துறை அமைச்சர் வங்கதேச அகதிகள் பற்றி கணக்கெடுக்கவும் திருப்பி அனுப்பவும் அறிவிப்பு செய்தார். அந்த அரசு கூட்டணி கட்சிகள் பலத்தில் இருந்தது. கூட்டணி கட்சிகள் நிர்ப்பந்தம் கொடுக்க அன்று அந்த முயற்சி கைவிடப்பட்டது.

பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இருந்து வந்திருக்கும் அகதிகளில் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க பாஜக அரசு விருப்பம் தெரிவித்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் என பிரிந்தபோது காஷ்மீரில் குடியேறிய இந்துக்களுக்கு இன்றுவரையில் முழுமையான குடியுரிமையும் வேலைவாய்ப்பு உரிமையும் வழங்கப்பட வில்லை. இந்த உரிமைகளை அவர்களுக்கு வாங்கி கொடுக்க நரேந்திரமோடி அரசு களமிறங்கி இருக்கிறது. காஷ்மீரில் ஜக்மோகன் கவர்னராக இருந்த 1991 ல் காஷ்மீரில் இருந்து தில்லிக்கு புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் தில்லியில் சகல வசதிகளோடு இருப்பதனால் அரசு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தும் ஜம்மு போக மறுக்கிறார்கள். உலகில் பண்டிட்டுகள் போல சகல சௌபாக்கியம் பெற்ற அகதிகள் வேறெங்கும் இல்லை என்பார்கள்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அரசு ஒடுக்குமுறைக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ரஷ்யாவில் இருந்து குறிப்பாக செச்சின்யா நாட்டை சேர்ந்தவர்கள் ஜெர்மன் நாட்டுக் கதவை தட்டுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் குடியேறத்தான் அதிகம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். ரஷ்ய ராணுவத்திடம் தப்பிய காகசஸ் நாடுகளை சேர்ந்த சலபி முஸ்லிம்கள் பலர் அடைக்கலம் கேட்டு ஜெர்மன் நாட்டுக்கு விண்ணப்பம் செய்வதாக ஜெர்மன் நாளிதழான டை வெல்ட் (Die welt) தெரிவிக்கிறது. ரஷ்யாவில் இருந்து வெளியேறிய 80 விழுக்காடு மக்கள் செச்சன்ய மக்களாம். சிரியா, ஆப்கான், ஈராக், ஈரான் நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜெர்மனியிடம் அடைக்கலம் கேட்டுள்ளார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது பெரிய குழுவாக ரஷ்யாவின் 2,770 பேர் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
ஆண்டுக்கு 20 கோடி 32 லட்சம் மக்கள் சர்வதேச அளவில் நாடு விட்டு நாடு புலம்பெயர்கின்றனர் என்று இண்டர்நேஷனல் ஆர்கனிசேஷன் ஆப் மைகிரேஷன் (International Organisation of Migrants) அமைப்பு கணக்கிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் மார்ச் மாத இடைவெளியில் 134 நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அடைக்கலம் கேட்டு முதன்முறையாக விண்ணப்பித்து இருந்தார்கள். முதல் மூன்று இடத்தில் சிரியா, ஆப்கான் மற்றும் நைஜீரியா நாட்டவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு ஆப்ரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஜெர்மனியிடம் அடைக்கலம் கேட்டு நிற்கிறார்கள். இவற்றைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக வெனிசுலா நாட்டவர்கள் அடைக்கலம் கேட்டிருக்கிறார்களாம். இந்தியாவில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது என்றாலும் இந்தியர்கள் பல ஆண்டுகளாக அடைக்கலம் கேட்டு 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஐ.நா.அகதிகள் ஆணையர் (Unaited Nations High Commissioner for Refugees) தெரிவிக்கிறார்.

மத ஒடுக்குமுறை, ராணுவ ஒடுக்குமுறை, இன அழிப்பு போன்ற காரணங்களால் தான் மக்கள் பிறந்து வளர்ந்த பாரம்பரியமும் பூர்வீகமும் உடைய நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான நாடுகளைத் தேடி ஓடுகிறார்கள். இதற்காக ஆபத்தான கடலையும் கடந்து செல்கிறார்கள். இந்தியாவில் சமீப ஆண்டுகளாக நடந்து வரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் பலரையும் அச்சுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது. பெரிய இன அழிப்பு வரும் முன்னர் தப்பிக்க நினைக்கிறார்கள் போலும். ஆனால் இந்தியா அப்படியான சூழலில் விழப்போவது கிடையாது. ஆட்சிகள் மாறும் போது சூழலும் மாறிக்கொள்ளும். உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய மக்கள் பெரிய எண்ணிக்கையில் பண்பட்டவர்கள். விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்தாலும் அது தன்னெழுச்சியானது இல்லை. அது தூண்டிவிடப்பட்டே நடக்கிறது. மற்ற வகையில் இந்தியா அமைதியான நாடாக இருப்பது பெருமைக்குரிய விசயம்.

அடைக்கலம் தேடும் மக்கள் ஜெர்மனியில் வாழ விரும்புவது ஒரு வினோதம். இரண்டு உலகப் போர்களுக்கு ஜெர்மன் காரணம். இட்லர் பிறந்த மண். சிறுபான்மையாக வாழ்ந்த யூத இன மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த நாடு. யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஜெர்மானியர்கள் அமைதி காத்தனர். அச்சம்பவங்கள் நடந்து இன்னும் நூறு ஆண்டுகள் கூட கடக்கவில்லை. ஆனால் உலக மக்கள் ஜெர்மனியில் குடியேற விருப்பம் கொள்கிறார்கள். பல நூறாண்டுகளுக்கு முன்னர் பர்மாவில் குடியேறிய வங்கத்தவர்கள் என்று ரோகிங்கியர்கள் மீண்டும் வங்கத்துக்கு விரட்டப்படும் அவலம் நடக்கிறது. புலம் பெயர்பவர்கள் இது போன்ற இன ஒடுக்குமுறையையும் இன அழிவையும் கூட எதிர் காலத்தில் சந்திக்க நேரிடலாம். அடைக்கலமாகும் நாடுகளின் மதம், கலாச்சாரம் போன்றவைகளை ஏற்கும் நெருக்கடி கூட ஏற்படலாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஜெர்மன் உகந்த நாடு என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். சிரியா நாட்டு அகதிகளுக்கு ஐரோப்பா கதவை இழுத்து சாற்றியபோது, குழந்தை அய்லன் குருதியின் இறப்பால் நெகிழ்வுற்று ஜெர்மானிதான் சிரியா அகதிகளுக்கு முதலில் கதவைத் திறந்தது. முஸ்லிம் நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் அகதிகள் குடியேறும் போது ஐரோப்பாவின் கலாச்சாரம் மாறிவிடும் என்று அங்குள்ள வலதுசாரி மத அமைப்புகள் அச்சப்படுகிறார்கள். அதனால் முஸ்லிம்கள் அச்சுறுத்தலானவர்கள் என்பதை நிரூபிக்க ஐரோப்பா நகரங்களில் குண்டுகள் வெடிக்க செய்து மக்களை அச்சுறுத்துகின்றனர்.
இஸ்லாம் அச்சுறுத்தும் ஆபத்தான மதம் என்பதை மக்களுக்கு கற்பிக்க இஸ்லாமோஃபோபியா என்ற பீதிமயத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறார்கள். இது தொடர்பாக ஏராளமான விவாதங்கள் மேற்கு உலகில் நடக்கின்றன. இருப்பினும் சொந்த நாட்டில் வாழ அச்சப்பட்டே மக்கள் ஐரோப்பாவில் சேர்கிறார்கள். குறிப்பாக ஜெர்மனியில்