ஊழலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு!

ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்குகளில் பிடிபடுவதும், தண்டிக்கப்படுவதும் அதிகமாகிறதா? சில உண்மைகளை ஆராய்வோம்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்கள் சிறை வாசம் இருந்து, 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
நிலக்கரி ஊழல் வழக்கில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மது கோடா, லஞ்சம், கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிபு சோரன் ஆகியோர் பழங்குடி வகுப்பினர்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலித். லாலு பிரசாதும் முலாயம் சிங்கும் யாதவ சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள். அவ்விருவரும் ஊழல் செய்ததாகவும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும் வழக்குகளுக்கு உள்ளானவர்கள்.
ஊழல் வழக்கில் மேல் சாதிக்காரர்களும் சிக்காமல் இல்லை. சுக்ராம், ஜெயலலிதா, சுரேஷ் கல்மாடி முக்கியமானவர்கள். இவர்களைப் போன்ற மேல் சாதிக்காரர்கள் பிடிபடுவது மிகவும் குறைவு. சுக்ராமின் வீட்டுக் கட்டிலிலிருந்தே கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டும், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டும், அவர் சிறைக்கே செல்லவில்லை. இப்போது சுக்ராமுக்கு வயது 90. பாஜகவில் சேர்ந்து புதுவாழ்வு பெற்றுவிட்டார். ஆ. ராசாவுக்கோ அவருடைய குழந்தைகளுக்கோ இப்படிப்பட்ட அதிருஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
சுக்ராமும் ராஜாவும் தகவல்தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தபோதே ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவதாக, சுக்ராம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ராஜா இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பதவியையும் பொறுப்பையும் வகிக்க முடியாது வழக்கமாகவே சந்தேகத்துக்குரியவர்கள்’ என்பதே பொதுப்புத்தியாக இருக்கிறது!
அதுதான் ஊழலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு அல்லது வித்தியாசம்!
சாதி, நிறப் பாகுபாடு நிச்சயம் தொடர்கிறது; தண்டனை விதிக்கப்பட்டாலும் சுக் ராம் என்ற பிராமணரால் சிறைக்குப் போகாமலேயே தப்ப முடிகிறது; வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் ஆ.ராசாவைத் திருடனாகவே பார்க்கும் கண்ணோட்டம் தொடர்கிறது. ஜுதேவ் மறுவாழ்வு பெறுகிறார், பங்காரு லட்சுமண் விலக்கப்பட்டு, சாகவிடப்படுகிறார். இத்தகைய ‘இருட்டுச் சிந்தனைகளோடு’ உங்களுடைய விடுமுறை நாள்களைப் பாழ்படுத்துவதற்காக வருந்துகிறேன்; ஆனால் யதார்த்தம் என்ன என்பதை ஒப்பிட இதைவிடச் சிறந்த நேரம் வேறு இல்லை.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்